No menu items!

நியூஸ் அப்டேட்: பெகாசஸ் உளவு – உறுதியான ஆதாரம் இல்லை

நியூஸ் அப்டேட்: பெகாசஸ் உளவு – உறுதியான ஆதாரம் இல்லை

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் அரசியல்வாதிகள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை மத்திய அரசு அமைப்புகள் உளவு பார்ப்பதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இது நாட்டில் அரசியல் புயலை கிளப்பியது. இதையடுத்து உச்ச நீதிமன்றம், பெகாசஸ் விவகாரம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையில் குழு அமைத்து கடந்த 2021 அக்டோபரில் உத்தரவிட்டது. இந்த குழுவுக்கு உதவ தொழில்நுட்ப குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, இந்த அறிக்கையை நேற்று நீதிமன்றத்தில் வாசித்தது. அப்போது, ‘தொழில்நுட்பக் குழு அறிக்கையை பொறுத்தவரை, அக்குழு ஆய்வு செய்த 29 மொபைல் போன்களில் பெகாசஸ் உளவு மென்பொருளுக்கான உறுதியான ஆதாரம் இல்லை. 5 போன்கள் ஏதோ ஒரு மென்பொருளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவை பெகாசஸ் உளவு மென்பொருளால்தான் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இணைய பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளே 5 போன்களின் பாதிப்புக்கு காரணம் என தொழில்நுட்பக் குழு கூறியுள்ளது’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு – பள்ளி தாளாளர் உள்பட 4 பேருக்கு ஜாமீன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி கடந்த மாதம் 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம் எழுப்பி இருந்த நிலையில் மாணவியின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா உள்ளிட்ட 5 பேரையும் கடந்த 17ஆம் தேதி போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், பள்ளி தாளாளர் உள்பட நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முக்கிய நிர்வாகியாகியுமான குலாம் நபி ஆசாத், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

குலாம் நபி ஆசாத் மத்திய அமைச்சர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் உள்பட பல பதவிகளை வகித்துள்ளார். காங்கிரஸின் தலைமை மாற்றம் தொடர்பாக நீண்ட காலமாகவே குலாம் நபி ஆசாத் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதை பலமுறை வெளிப்படையாகவும் அறிவித்துள்ளார். தலைமை மாற்றம் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவிலும் குலாம் நபி ஆசாத் இடம் பெற்றிருந்தார். முன்னதாக கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில், இவர் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை – முதல் முறையாக நேரலையில் ஒளிபரப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு. லலித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், அவர் இன்று விசாரிக்கும் வழக்குகள் இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதை https://webcast.gov.in/events/MTc5Mg– என்ற இணையதளத்தில் காணலாம்.

உச்ச நீதிமன்ற வரலாற்றில் வழக்கு விசாரணை நேரலையில் ஒளிபரப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வில் அடுத்து தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள யு.யு. லலித் உள்ளிட்ட நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர்.

அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது தொடர்பான வழக்கு, பெகாசஸ் உள்பட முக்கிய வழக்குகளில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் விவகாரம்: ஐ.நா.வில் முதல்முறையாக ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த இந்தியா

நேடோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளது. இந்தியா நடுநிலை வகித்து வந்தது.

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் முதல் முறையாக உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை எதிர்த்து இந்தியா வாக்களித்துள்ளது. ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி காணொளி கட்சி வாயிலாக உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்து ரஷ்யா தீர்மானம் கொண்டுவந்தது. அதற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.

இது தொடர்பாக எழுதப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ‘ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. ஜெலன்ஸ்கி உரையாற்றவே ஆதரவு வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...