திருமண நிகழ்ச்சிகளில் மணமக்களைச் சுற்றி நின்று புன்னகையோடு புகைப்படம் எடுப்பது வழக்கம். ஆனால் கேரளாவில் உள்ள ஒரு வீட்டில் இறந்த பாட்டியம்மாவின் உடலை ப்ரீஸர் பாக்ஸில் கிடத்தி, அதைச் சுற்றி நின்று மகிழ்ச்சியோடு போஸ் கொடுத்துள்ளனர் அவரது குடும்ப உறுப்பினர்கள். சமூக வலைதளங்களில் இச்சம்பவம் மிகப்பெரிய விவாதத்தையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில்தான் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள மலப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த 95 வயது பாட்டியான மரியம்மா கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி இறந்துள்ளார். நம் ஊரில் கல்யாணச் சாவாக கருதப்படும் மரியம்மாவின் இறப்பை, மிகச்சிறப்பாக கொண்டாட அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் ஏதோ விருந்தில் கலந்துகொள்வதுபோல் அலங்கரித்து உற்சாகமாக இருந்து மரியம்மாவின் இறுதிச் சடங்கை நடத்தி முடித்துள்ளனர். இதன் உச்சகட்டமாக மரியம்மாவின் உடல் கிடத்தப்பட்டிருந்த ப்ரீசர் பாக்ஸை சுற்றி நின்று திருமணத்தில் எடுப்பதுபோல் குரூப் போட்டோ எடுத்துள்ளனர். மருந்துக்குகூட ஒருவரும் அழவில்லை. அனைவரும் மகிழ்ச்சியாக புன்னகையுடன் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
இப்படி ஆகஸ்ட் 17-ம் தேதி அவர்கள் எடுத்த படம், ஆகஸ்ட் 19-ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்து கிடக்கும்போது, இத்தனை சந்தோஷமாக அவரது உறவினர்களால் எப்படி இருக்க முடிந்தது என்று இதுபற்றி பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மரியம்மாவின் மகன்களில் ஒருவர், “மரியம்மாவுக்கு 9 குழந்தைகள். எங்களை மிகுந்த பாசத்துடன் அவர் வளர்த்தார். எல்லோரையும் நல்ல நிலைக்கு கொண்டுவந்தார். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக எங்கள் குடும்பங்களுடன் வாழ்கிறோம். கடந்த ஓராண்டாக அவர் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். எங்கள் அம்மா உயிருடன் இருந்தவரையில் அவரை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டோம்.
வாழும்போது எப்படி அம்மாவை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டோமோ, அதேபோல் அவரை மகிழ்ச்சியாக வழியனுப்பிவைக்க வேண்டும் என்று விரும்பினோம். அதனால்தான் நாங்கள் அழவில்லை. இறுதிச் சடங்குக்கு முன்னர் நாங்கள் அம்மாவின் படத்துக்கு முன்னால் பிரார்த்தனை செய்தபோது எதேச்சையாகத்தான் இந்த படத்தை எடுத்தோம்” என்கிறார்.
இறந்துபோன ஒருவரின் உடலுடன் இப்படி மகிழ்ச்சியாக போஸ் கொடுக்கலாமா என்று கேட்டதற்கு, “எங்கள் அம்மா சொர்க்கத்துக்குதான் போவார் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் சொர்க்கத்துக்கு போகும்போது நாங்கள் எதற்காக அழவேண்டும்? அதனால் அவரது உடலைச் சுற்றி மகிழ்ச்சியாக நின்று போஸ் கொடுத்ததற்காக நாங்கள் வருந்தவில்லை” என்று பதில் அளித்துள்ளார்.