No menu items!

நியூஸ் அப்டேட்: மின் கட்டணத்தை உயர்த்த நீதிமன்றம் இடைக்கால தடை

நியூஸ் அப்டேட்: மின் கட்டணத்தை உயர்த்த நீதிமன்றம் இடைக்கால தடை

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை மின் கட்டணத்தை உயர்த்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் இல்லை. இந்நிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில், தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்று, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும் நிலையில் ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம். தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவமிநாதன், முன் விசாரணைக்கு வந்தது. “மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தொடரும். அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம். மனுதார்கள் தங்களின் ஆட்சேபனைகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கலாம்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

அமெரிக்காவில் 80 லட்சம் மாணவர்கள் கல்விக் கடன் ரத்து: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று 2020ஆம் ஆண்டு தேர்தலின் போது அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். 1 லட்சத்து 25 ஆயிரம் டாலருக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வரையிலான கல்வி கடன் (இந்திய ரூபாய் மதிப்பில் 8 லட்சம் ரூபாய்) ரத்து செய்யப்படும்; குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு அவர்களது கல்வி கடன் 20 ஆயிரம் டாலர் வரை (இந்திய ரூபாய் மதிப்பில் 16 லட்சம் ரூபாய்) தள்ளுபடி செய்யப்படும். மேலும், 10 ஆண்டுகள் கல்வி கடனை செலுத்தியவர்களுக்கு நிலுவை தொகையில் 12 ஆயிரம் டாலர் வரை ரத்து செய்யப்படும்” என்று பைடன் அறிவித்துள்ளார். இதனால் 80 லட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 28 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயருகிறது

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதியும் செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். இதன்படி, கடந்த ஏப்ரல் 1-ந்தேதி 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் சேவை வழங்குவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் லாபம் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் இந்த கட்டண உயர்வு அவசியமானது என்று சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – 3-வது சுற்றில் சாய்னா நேவால்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியின் 3-வது சுற்றுக்கு இந்திய வீராங்கனை சாய்னா நெவால் முன்னேறியுள்ளார். 2ஆம் சுற்று ஆட்டத்தில், ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாராவுடன் சாய்னா நேவால் ஆடவிருந்தார். எனினும், காயம் காரணமாக நொசோமி விலகியதால் சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

சென்னையில் சேர்ந்து வசிக்கும் கேரளா தன்பாலின இளம்பெண்கள் – அடையாளத்தை மறைக்காமல் வீடு வாடகைக்கு எடுத்ததாக பேட்டி

கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்த ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவரும் தோழிகள். தன்பாலின சேர்க்கையில் உள்ள இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் பெற்றோர்களால் பிரிக்கப்பட்டனர். இதனையடுத்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு படி மீண்டும் இணைந்துள்ளனர். சென்னை வந்த இருவரும் கடந்த 3 மாதங்களாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இருவரும், ‘கோர்ட்டு படியேறி சட்ட உரிமையை நிலைநாட்டியதன் மூலம் தற்போது யாருடைய தலையீடும் இல்லாமல் பறவையைப் போல சுதந்திரமாக வாழ்கிறோம். சென்னையில் எங்கள் அடையாளத்தை மறைக்காமல் தான் வீடு தேடினோம். இருவரும் வேலை பார்ப்பதால், பொருளாதார சுதந்திரம் இருக்கிறது. அனைத்து விஷயங்களிலும் தன்பாலின தம்பதியினர் சமம் தான். ஒரே பாலின உறவு குறித்த புரிதலில் மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் தேவை இருக்கிறது. பெரும்பாலான பெற்றோருக்கும் இதுகுறித்து புரிதல் இருப்பதில்லை” என்று கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...