No menu items!

விருமன் – சினிமா விமர்சனம்

விருமன் – சினிமா விமர்சனம்

சொத்து, சுயநலம், ஆணவம் மட்டுமே வாழ்க்கையென நினைக்கும் அப்பாவுக்கும், உறவு, குடும்பம், பாசம் இருந்தால்தான் அது வாழ்க்கை என நினைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சென்டிமெண்டான போராட்டம்தான் ‘விருமன்’ படத்தின் ஒன் லைன்.

சினிமாவில் இதற்கு மேலும் இந்த கான்செப்ட்டை வைத்து படமெடுக்க முடியுமா, என்று யோசிக்குமளவிற்கு எடுத்து எடுத்து சலித்துப் போன அப்பா – அம்மா – மகன் சென்டிமெண்ட் பார்முலாவைதான் மீண்டும் கையிலெடுத்து இருக்கிறார் இயக்குநர் முத்தையா.

’சிங்கம்’ பட வரிசையில் இன்னும் ஒன்றிரண்டு படங்கள்தான் பாக்கி. அவற்றில் நடித்துவிட்டால் போதும், இந்தியப் பிரதமரே சூர்யாவைக் கூப்பிட்டு சென்னை மாநகரத்தின் அஸிஸ்டெண்ட் கமிஷனராக நியமித்துவிடுவார். அந்தளவிற்கு இப்படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவின் அண்ணனுமான சூர்யா ஒரு பக்கம் அசல் போலீஸை போல பெர்ஃபார்மன்ஸ் காட்டி வருகிறார். மறுபக்கம் கிராமப்புறங்களில் குடும்ப உறவுகளுக்கும் அவர்களது வாழ்க்கைக்கும் தன்னையே அர்ப்பணிக்கும் கிராமப்புற நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வரும் கார்த்தியை, அதே பிரதமர் நேரில் அழைத்து ’சென்டிமெண்ட் சாதனையாளர்’ என்னும் விருதைக் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்தளவிற்கு பி & சி சென்டர் படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் கார்த்தி.

நகர்ப்புறத்து ரசிகர்களை குறி வைத்து நாலைந்து ஆக்‌ஷன் படங்கள், இடையிடையே பி & சி சென்டர்களுக்காகவே சென்டிமெண்ட்டில் ஆக்‌ஷனை கலக்கும் கிராமத்து கதை என தனது சினிமா பயணத்தை புத்திசாலித்தனமாக தொடர்கிறார் கார்த்தி. அந்த வகையில் இப்போது வெளிவந்திருக்கிறார் இந்த ‘விருமன்’.

பருத்திவீரன் படத்தின் மூலம் கிராமத்து நாயகனாக அறிமுகமான கார்த்தியின் அந்த ‘legacy’ இந்தப்படத்திலும் தொடர்கிறது. ஆக்‌ஷனில் அதிர வைக்கிறார். கார்த்தியின் நடிப்பு பரிமாணம் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே வருகிறது.
அறிமுக நாயகியாக களமிறங்கியிருக்கும் தமிழ் சினிமாவின் முக்கிய வீட்டுப்பிள்ளை அதிதி ஷங்கரிடம் எனர்ஜி துள்ளலாட்டம் போடுகிறது. குறும்புத்தனம், ரியாக்‌ஷனில் ரசிக்க வைக்கிறார். தொடர்ந்து பார்க்க பார்க்க அதிதியை ஆடியன்ஸ் அரவணைக்க வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.

பிரகாஷ் ராஜ் நல்ல நடிகர்தான். ஆனால் எல்லாப் படங்களுக்கும் ஒரே மாதிரியான நடிப்பைக் கொடுத்தால் என்ன செய்வது/?. பிரகாஷ் ராஜ் தனது ஆக்டிங் மெத்தட்டை மாற்ற வேண்டியநேரம் வந்துவிட்டது. இதை அவருக்கு நெருக்கமானவர்கள் சொன்னால் தமிழ் சினிமா ஒரு நல்ல நடிகரை இழக்காது.

ராஜ்கிரணை மனதில் வைத்து, அவருக்கென்றே உருவாக்கப்பட்டது போல இருக்கிறது கார்த்தியின் மாமா கதாபாத்திரம். அதை இயக்குநர் எதிர்பார்த்தபடியே ராஜ் கிரண் செய்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் இருக்கும் ஒரு வித்தியாசம் இந்த முறை நல்லி எலும்பு மிஸ்ஸிங்.

பொதுவாக பேசிக்கொண்டே இருக்கும் கருணாஸை அதிகம் பேசவிடாமல், அமைதியாக, திரையில் காட்டியிருக்கிறார்கள். இளவரசு, வடிவுக்கரசி. சரண்யா பொன்வண்ணன், ஒஏகே சுந்தர் தங்களது படங்களுக்கு என்ன பெர்ஃபார்மன்ஸை கொடுப்பார்களோ அதை அழகாக கொடுத்திருக்கிறார்கள்.

வசுமித்ர, மனோஜ், அருந்ததி மூவருக்கும் வாய்ப்புகள் அதிகமில்லை. ஆனால் கிடைத்த ஒன்றிரண்டு காட்சிகளை முடிந்தவரை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

பிரகாஷ் ராஜின் இரண்டாவது மருமகளாக, மனோஜின் மனைவியாக வரும் மைனா நந்தினிக்கு சிறிய கதாபாத்திரம்தான் என்றாலும் ரசிக்க வைத்திருக்கிறார்.

படத்தில் கார்த்திக்கு தோள் கொடுத்திருக்கிறார் சூரி. சில காட்சிகளில் சூரி அடிக்கும் கமெண்ட்களுக்கு கிடைக்கும் கைத்தட்டல்கள், சூரி கம் பேக் என்று சொல்ல வைக்கின்றன.

ஒரு சில ஆக்‌ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவு அவுட் ஆஃப் போகஸ் ஆக இருந்தாலும், கதையில் சரியாக ஃபோகஸ் ஆகியிருக்கிறது. எடிட்டிங்கில் சென்டிமெண்டுக்கு கொஞ்சம் தாராளம் காட்டியிருக்கிறார்கள். அதனால் சில காட்சிகள் பூமர் போல கொஞ்சம் இழுக்கின்றன. ஆக்‌ஷன் படம் என்று சொல்லவேண்டுமென நினைத்திருப்பார்கள் போல. ஒவ்வொரு சண்டைக்காட்சியும் பல நிமிடங்கள் டால்ஃபி சவுண்ட்டில் அதிர வைக்கின்றன.

இன்றைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் கிராமத்து கதைகளுக்கு யுவன் ஷங்கர் ராஜாதான் ஒரு குட்டி இளையராஜா என்று பேச வைத்திருக்கிறார்.

மில்லினியல்கள் மத்தியில் உறவுகளும், அன்பும் அரைகுறையாக வேக வைத்த ஃபாஸ்ட் ஃபுட் போல மாறி வருகையில், குடும்பம் உறவுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை தூக்கிப் பிடித்திருக்கிறார் இயக்குநர் முத்தையா. தாத்தா பாட்டி காலத்து சென்டிமெண்ட் என்றாலும், அதை போரடிக்காமல் கொடுத்திருக்கிறார்கள்.

விருமன் – சென்டிமெண்ட் மேன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...