No menu items!

சாய் பல்லவி – லேடி பவர் ஸ்டாரானது எப்படி?

சாய் பல்லவி – லேடி பவர் ஸ்டாரானது எப்படி?

முகத்தில் அரும்பு அரும்பாக ஆக்ரமித்திருக்கும் பருக்கள்.

எண்ணெய் பளபளப்பான பளிங்கு முகம்.

எந்தவொரு ஸ்டைலிலும் படியாமல், ஓழுங்கற்று சுருண்டு இருக்கும் கூந்தல்.

பெண்களின் வழக்கமான குரலிலிருந்து மாறுபட்ட கரகரப்பான ’டாம் பாய்’ குரல்.

இதுவரையில் கவர்ச்சியாக ஒரு காட்சியில் கூட நடித்தது இல்லை.

இதுதான் கவர்ச்சிகரமான சினிமா உலகில் சாய் பல்லவியின் அடையாளம்.

ஒரு சினிமா ஹீரோயினுக்கு அவசியமாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்கப்படும் எந்தவிதமான அழகியல் அம்சங்களும் இல்லாவிட்டாலும், ஒரு கமர்ஷியல் ஹீரோயினுக்கான ஈர்ப்பை, ரசிகர்களிடையே ஆண்ட்ரோஜெனை சுரக்கச் செய்யும் கவர்ச்சி இல்லையென்றாலும், இன்று தனக்கென ஒரு அடையாளத்தையும், கூடவே மாபெரும் ரசிகர் பட்டாளத்தையும் தன் வசம் வைத்திருக்கார் சாய் பல்லவி.

இன்று தெலுங்கு சினிமாவுலகில் சாய் பல்லவியை ‘லேடி பவர் ஸ்டார்’ என்று தூக்கி வைத்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

சாய் பல்லவியைக் கொண்டாடும் இந்த மேஜிக் உருவானது எப்படி, எதனால்?

மே 9, 1992 அன்று ஜில்லிடும் நீலகிரி மலைத்தொடர்ச்சியின் ஆதி குடியான ’படுகா’ குடும்பத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையாய், சாய் பல்லவி இந்த பூவுலகிற்கு அறிமுகமானார். 2015 வரை பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பில் கழிந்தது. ஜார்ஜியாவில் டில்ஸி ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் டாக்டராக படிப்பை முடித்தவர், இங்கே வந்த வேகத்தில் ஒரு ஆக்டராக நடிப்பைத் தேர்ந்தெடுத்தார்.

2005-ல் ‘கஸ்தூரிமான்’, 2008-ல் ‘தாம் தூம்’ என இரண்டுப் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், கல்லூரிப் பெண்ணாகவும் தலைக்காட்டினார். அது யாருக்கும் தெரியவில்லை. யார் இந்த சுட்டி என்று தெரிந்து கொள்ள தேவையும் இல்லாமல் போனது.

காலையில் பெட் காஃபியை ரசித்து, ருசித்து குடிக்கும் போது கிடைக்கும் அந்த அலாதியான உணர்வை ரசிப்பதைப் போலவே, ஒரு சேட்டிலைட் சேனல் நடத்திய ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ டான்ஸ் ஷோவில் நடனத்தை ரசித்து ஆடினார். ’தி அல்டிமேட் டான்ஸ் ஷோவில்’ சாய் பல்லவியின் துள்ளலான ஆட்டம் அதைப் பார்த்த பார்வையாளர்கள் மத்தியில் கொண்டாட்டாமாகி போனது.

இப்படியொரு ஆட்டமா என்று மிரண்டுப் போன இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ‘ப்ரேமம்’ படத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு அழைப்பு விடுத்தார். ஆரம்பத்தில் யாரோ ஒருத்தர் தன் நடனத்தைப் பார்த்துவிட்டு கிண்டலடிக்கிறார் என்று சாய் பல்லவி அதைக் கண்டுக்கொள்ளவே இல்லை.

ஆனால் விதி வலியது. தென்னிந்திய சினிமாவிற்குள் சாய் பல்லவி வந்தே ஆகவேண்டுமென ஏற்கனவே முடிவு செய்திருந்தது. 2015-ல் வெளியான ‘ப்ரேமம்’ படத்தில் ‘மலர்’ டீச்சராக அறிமுகமானார் சாய் பல்லவி.

அப்போது அவருக்கு வயது 23. முகத்தில் முத்து முத்தாய் முளைத்த பருக்களால் ரொம்பவே கூச்சப்பட்டு கொண்டிருந்தார். மேலும் படத்தில் மொத்தம் மூன்று பெண்கள். அதிலும் மலர் கதாபாத்திரம் கடைசியில் கதாநாயகனுடன் சேராமல் போய்விடும். இதில் என்ன சாதித்துவிட முடியுமென அவருக்கே ஒரு சந்தேகம் இருந்தது.

’‘ப்ரேமம் படத்தில் நடிக்கும் வரையில், எனக்கு நடிப்பு என்றால் என்னவென்று தெரியாது. சினிமா பற்றி எதுவும் தெரியாது. இந்தப் படம் நன்றாக வரும் என்று மனதில் தோன்றியதால், ஒப்புக்கொண்டேன். படம் சரியாக ஓடவில்லை அல்லது நான் நன்றாக நடிக்கவில்லையென்றால், என்னுடைய நண்பர்களுக்கு இந்தப்படம் பற்றி தெரிய வாய்ப்பில்லை. என்னுடைய நண்பர்கள் எல்லோருமே தமிழ் நாட்டில் இருந்ததால், மலையாளப் படம் பார்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏதாவது ஒரு விஷயத்தில் சொதப்பினாலும், யாருக்கும் தெரியாமல் ஜார்ஜியாவுக்கு மருத்துவப் படிப்பை முடிக்க கிளம்பி விடலாம் என்று தோன்றியது.’’ என்று ப்ரேமம் வெளியானதும் சாய் பல்லவி சொன்னார்.

இளசுகளுக்கு பள்ளியில் படிக்கும் போது ஏதாவது டீச்சர் மீது மட்டும் உண்டாகுமே ‘க்ரஷ்’, அதைவிட அமோகமான க்ரஷ், மலர் டீச்சர் மீது முன்னாள் பள்ளி மாணவர்கள் முதல் இந்நாள் பள்ளி மாணவர்கள் மத்தியில் உண்டானது. மலர் மீது ப்யார் ப்ரேமம் காதல் என சாய் பல்லவியின் எண்ட்ரீயே உணர்வுப்பூர்வமாக அமைந்தது.

சாய் பல்லவிக்கு அவரது தோற்றத்தின் மீது இருந்த ’இன்செக்யூரிட்டி’யை ’மலர்’ டீச்சர் தகர்த்தெறிய செய்தார்..

அடுத்து 2016-ல் வெளியான படம் ‘காளி’. துல்கர் சல்மானுக்கு ஜோடி. ரோட்டில் தனியாக போக பயப்படும், தன்னுடைய கணவர் வாழ்க்கை ஆபத்தில் இருக்கிறதோ, யாரோ தன்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்களோ என்று ஒவ்வொரு விநாடியும் பயந்து பயந்து வாழும் ‘அஞ்சலி’ கதாபாத்திரத்தில் நடித்தார்.

சாய் பல்லவியின் அம்மா நன்றாக கார் ஓட்டுவார். ஆனால் ஒருநாளும் அம்மா சாரதா, சாய் பல்லவியை கார் ஓட்ட அனுமதித்தது இல்லை. இதனால் நமக்கு கார் ஓட்ட வராதோ, அப்படியே ஓட்டினாலும் ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்ற எண்ணம் சாய் பல்லவிக்குள் இருந்தது. இந்த உணர்வை அப்படியே ’அஞ்சலி’ கதாபாத்திரத்தில் பிரதிபலிக்க செய்தார் சாய் பல்லவி. இதனால் அவருடைய நடிப்பு விமர்சனங்களில் பாராட்டைப் பெற்றது.

பாராட்டுகளைப் பெற்ற சாய் பல்லவி சொன்ன முதல் விஷயம், கார் ஓட்டுவதில் இருந்த பயம் இந்தப் படத்துடன் போய்விட்டது. என்பதே. காளியின் ‘அஞ்சலி’ சாய் பல்லவிக்கு இருந்த பெரும் பயத்தை விரட்டியடித்தார்.

இரண்டே இரண்டு படங்கள்தான். சட்டென்று சாய் பல்லவியை தெலுங்கு சினிமா ப்ளைட் பிடித்து டோலிவுட்டுக்கு பறந்து வர செய்தது.

2017-ல் தெலுங்குப் படமான ‘ஃபிதா’வில் சாய் பல்லவி ஒப்பந்தமானார். தனது படங்களில் பெண் கதாபாத்திரங்களை ஃபவர்புல்லாக காட்டுவதில் வித்தைக்காரரான பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா படைத்த ‘பானுமதி’ கதாபாத்திரம், சாய் பல்லவியின் நடிப்புக்கு கிடைத்த ஜாக்பாட்டாக அமைந்தது. எந்தவொரு விஷயத்திலும் தன்னுடைய பார்வையை, கோணத்தை மிகத் தைரியமாக எடுத்து வைக்கும் தெளிவு, வயலில் டிராக்டர் ஓட்டும் தைரியம், ஓடிப் போய் ரயிலைப் பிடிக்கும் வேகம் என பானுமதி கதாபாத்திரத்தை நன்றாகவே பயன்படுத்தி கொண்டார் சாய் பல்லவி.

’மலையாள சினிமா வேறு. தெலுங்கு சினிமா வேறு. தெலுங்கு சினிமா நடிகைகளுக்கான அம்சங்கள் எதுவும் எனக்கு இல்லை. அதனால் ஒரு பயத்துடனேயே முதல் நாள் ஷூட்டிங்கிற்கு போனேன். ஆனால் அடம்பிடிக்கும் பானுமதியின் கேரக்டர் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. என் அப்பா அம்மா தங்கையுடன் எனக்கு இருக்கும் பிடிவாதத்தை பானுமதி பிரதிபலிப்பது போலவே உணர்ந்தேன். இதே பிடிவாதத்துடன் பப்ளிக்கில் இருப்பேனா என்று தெரியாது. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் ஒன்றிப் போய் நடிக்க முடிந்தது’ என்றார் சாய் பல்லவி.

’பானுமதி’யின் பிடிவாதமே இன்று நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்கிற சாய் பல்லவியின் பிடிவாதத்திற்கு அடித்தளமிட்டது என்று சொல்லலாம்.

இதற்கு பிறகு 2018-ல் ’மாரி -2’ படத்தில் ரவுடி பேபியாக தெறிக்க விட்டார் சாய் பல்லவி. ‘ரவுடி பேபி’ பாடலில் தனுஷை கொஞ்சம் கூட பார்க்காமல், சாய் பல்லவியின் ஆட்டத்தின் மீதும் அவரது எக்ஸ்பிரஷன்கள் மீதும் மட்டும் வைத்த கண்களை எடுக்காமல் பார்த்தவர்களின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும்.
’ரவுடி பேபி’ பாடலில் வரும் டான்ஸ் மூவ்மெண்ட்களை திருப்திகரமாக வராத வரை எடுத்து கொண்டே இருப்பார் ஜானி மாஸ்டர். சில ஸ்டெப்கள் நூறு ரீடேக்குகள் வரை போயிருக்கின்றன. மறுபக்கம் தனுஷ். இதனால் திரையரங்குகளில் பார்க்கும் போது, நான் சோர்ந்துப் போன மாதிரியோ, சொதப்பிய மாதிரியோ தெரிய கூடாது என்பதில் சாய் பல்லவி தெளிவாக இருந்தாக பின்னாளில் கூறியிருக்கிறார்..
டான்ஸ் என்று வந்துவிட்டால் சாய் பல்லவி மாபெரும் ரசனைக்காரி. ரசித்து ஆடவேண்டும். பார்ப்பவர்களும் ரசித்து பார்க்க வேண்டும். என்பதில் தெளிவாக இருக்கிறார். இந்த ‘ரவுடி பேபி’ சாய் பல்லவியின் அசத்தும் ஆட்டத்திற்கு ரத்ன கம்பளம் விரித்தது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவிக்குள் இருந்த ப்ளஸ்களையும், மைனஸ்களையும் அவர் உணரவும், அவற்றை வெளிப்படுத்தவும் அவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு வழியில் கைக்கொடுத்திருக்கின்றனவோ என்று கூட்டிக்கழித்து பார்த்தால், ஆச்சர்யம் எழுகிறது.

தொடர்ந்து 2019-ல் ’அதிரன்’, 2020-ல் ‘ பாவக்கதைகள். 2021-ல் ‘லவ் ஸ்டோரி’ மற்றும் ’ஷ்யாம் சிங்கா ராய்’, 2022-ல் ‘கார்கி’ மற்றும் ‘விராட்டா பர்வம்’ படங்களில் சாய் பல்லவியின் நடிப்பும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.

சாய் பல்லவியின் நடிப்புக்கும், நடனத்திற்கும் அவர் நடித்த இந்தப் படங்களும், அவர் நடித்த கதாபாத்திரங்களூம் சொல்லி வைத்தது போல அழகாய் அமைந்தன.

சாய் பல்லவி தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்தாலும்,. இதுவரையில் அவருக்கு யாரும் வாய்ஸ் டப் செய்தது கிடையாது. தனது சொந்தக் குரலிலேயே பேசி நடிப்பதை முதல் படம் முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறார் என ஆச்சர்யப்படுகிறது தென்னிந்தியா சினிமா உலகம்.

கதாபாத்திரத்தின் உணர்வுகளை முக வெளிகாட்டும் போது, குரலும் அந்த உணர்வுகளுடன் ஒன்றிப் போயிருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு முழுமை கிடைக்கும் என்பதில் சாய் பல்லவி பிடிவாதம் பிடிப்பார். இதுவே அவரது நடிப்பை யதார்த்தமானதாக எல்லோரிடமும் நெருங்க செய்திருக்கிறது.

தன்னுடைய படங்களில் தான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் வேண்டாம் என்று சாய் பல்லவி அடம்பிடிப்பதைப் போலவே, தனது மேக்கப் விஷயத்திலும் ரொம்பவே கறாராக இருக்கிறார்.

’’முகத்தில் பருக்களோடு இருக்கும் ஒரு பெண்ணாகவே என்னை மக்கள் ஏற்றுக் கொண்டபோது, நம்பிக்கைதான் உண்மையான அழகு என புரிந்து கொண்டேன். பருக்கள் வந்தால் வீட்டை விட்டு வெளியே வர மறுக்கும் டீன் ஏஜ் பெண்களில் ஒருவளாகதான் நானும் இருந்தேன். ஜார்ஜியாவில் படிக்கும் போது முகத்தை துப்பட்டாவில மறைத்து கொண்டுதான் வெளியே செல்வேன். ஆனால் ’ப்ரேமம்’ படமும், டைரக்டர் அல்ஃபோன்ஸ்ஸூம்தான் என்னுடைய கேரக்டருக்காகதான் மக்கள் என்னை விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள உதவினார்கள். அன்றிலிருந்து மேக்கப் பயன்படுத்த போவது இல்லை என்று முடிவெடுத்தேன்.’ என்று சொல்லும் சாய் பல்லவி இன்றும் கூட மேக்கப்பை உபயோகிப்பது இல்லை. ஹேர் கலரிங் செய்து கொள்வது இல்லை. தன்னுடைய உண்மையான கூந்தலுடனே நடிக்கிறார்.

சாய் பல்லவியிடம் இருக்கும் மற்றுமொரு பிடிவாதம் என்று அதை சொல்ல முடியாவிட்டாலும், கறாரான பாலிஸியாக இருப்பது ரீமேக் படங்களில் நடிப்பது.

சமீபத்தில் சிரஞ்சீவி ‘போலா ஷங்கர்; படத்தை ரீமேக் செய்ய விரும்பினார். லேடி லீட் ஆக யாரை நடிக்க வைப்பது என்று யோசித்தபோது சிரஞ்சீவியின் சாய்ஸாக இருந்தவர் சாய் பல்லவி. ஆனால் ரீமேக் என்பதால், இப்படத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டார்.

’ரீமேக் படங்களில் நடிக்க எனக்கு பயமாக இருக்கிறது. ஏற்கனவே யாரோ ஒருவரால் நடித்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பதில் எனக்கு பெரிய விருப்பமில்லை’ என்று வெளிப்படையாக ஒரு நடிகை பேட்டி கொடுக்கிறார் என்றால் அதுதான் சாய் பல்லவி.

அடுத்து 2019-ல் நடந்த மற்றுமொரு சம்பவம் இது. சாய் பல்லவியை ஒரு ஃபேர்னெஸ் க்ரீம் நிறுவனம் தொடர்பு கொண்டு, எங்களது ப்ராண்ட் விளம்பரத்தில் நீங்கள் நடித்தால், ஒரே பேமெண்ட்டாக 2 கோடி தருகிறோம் என்றது.

ஆனால் சாய் பல்லவியோ, ‘இந்த மாதிரியான விளம்பரத்தில் நடிப்பதால் எனக்கு கிடைக்கும் பணத்தை வைத்து கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். வீட்டிற்குப் போனால் மூன்று சப்பாத்தியோ அல்லது கொஞ்சம் சாதமோ சாப்பிடப் போகிறேன். எனக்கு இதைத் தவிர வேறெந்த பெரிய தேவைகளும் இல்லை.

என்னைச் சுற்றியிருக்கும் மக்கள் சந்தோஷமாக இருக்க என்னால் ஏதும் செய்யமுடியுமா என்று யோசிப்பேன். இதுதான் இந்திய சருமத்தின் நிறம். வெளிநாட்டு மக்களிடம் போய், நீங்கள் ஏன் வெள்ளையாக இருக்கிறீர்கள் என்று நாம் கேட்க முடியாது. வெள்ளையாக இருப்பது அவர்களது சருமத்தின் நிறம். நம்முடைய நிறம் இது. அதை ஏன் தவறாக பார்க்கிறீர்கள்’ என்று நெத்திப் பொட்டில் அறைவது போல் கேட்கிறார்.

இவையெல்லாவற்றையும் தாண்டி, எந்த நடிகையும் செய்ய முன்வராத விஷயத்திலும் தான் யாரென்று காட்டியிருக்கிறார் சாய் பல்லவி. தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படங்கள் வந்த போது, அவர் கமிட் செய்த படம் ‘படி படி லேச்சே மனசு’. இந்தப் படத்தில் நடிப்பதற்காக முன்பணமாக குறிப்பிட்ட சம்பளத்தை வாங்கிவிட்டு நடித்து முடித்து கொடுத்துவிட்டார். படம் வெளியானது. ஆனால் பாக்ஸ் ஆபீஸ் பதுங்கி விட்டது. தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம்.

இதை கேள்விப்பட்ட சாய் பல்லவி செய்த காரியம்தான் இவரை மற்ற நடிகைகளிடமிருந்து தனித்து காட்டியிருக்கிறது. இந்தப் படம் தோல்வியடைந்திருப்பதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் நிச்சயம். அதனால் அவருக்கு மேலும் சுமை வைக்க கூடாது என்று, வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுக்கிறேன் என்று சொல்ல., தயாரிப்பாளர் சுதாகர் அதை வாங்க மறுத்துவிட்டார்.

ஆனால் மறுநாளே சாய் பல்லவி தனது அம்மா மூலம், வாங்கிய அட்வான்ஸ் மட்டும் போதும். நீங்கள் தரவேண்டிய மீதி சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லும் மெச்சூரிட்டியான நடிகையாக சாய் பல்லவியை கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். அதற்கு சமீபத்திய உதாரணம், தனது ‘விராட்டா பர்வம்’ படத்தின் ப்ரமோஷனின் போது ’காஷ்மீரி ஃபைல்ஸ்’ குறித்து அவர் கூறிய கருத்துகள்.

இதனால்தான் சமூக ஊடகங்களில் ‘லேடி பவர் ஸ்டார்’ என சாய் பல்லவியைத் தூக்கி வைத்து கொண்டாடி மகிழ்கிறது ரசிகர்கள் பட்டாளம்.

கடந்த பிப்ரவரி 27-ம் தேதியன்று ‘ஆடவாலு மீக்கு ஜோஹர்லு’ படத்தின் ப்ரமோஷனுக்காக ஒரு பெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது அப்படக்குழு. இவ்விழாவில் புஷ்பா பட இயக்குநர் சுகுமார், கீர்த்தி சுரேஷ் உட்பட தெலுங்கு சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த முக்கிய விருந்தினர்களில் சாய் பல்லவியும் ஒருவர்.

சமீபத்தில் வரவேற்பைப் பெற்ற ‘புஷ்பா’ படத்தின் இயக்குநர் சுகுமார் இவ்விழாவில் பேச ஆரம்பித்தார். அப்போது மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்கள் பெயர்களை சொல்லிக் கொண்டே வர, அவர் ‘சாய் பல்லவி’ என்று சொன்னதும் அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. கைத்தட்டல்கள் அடங்க நேரமாகியது. விசில்கள் தொடர்ந்து பறந்தன. இயக்குநர் சுகுமாரால் அடுத்த சில நிமிடங்களுக்கு பேசவே முடியவில்லை. அந்தளவிற்கு ரசிகர்கள் கூட்டம் சாய் பல்லவிக்கு மாஸ் காட்டியது.

ஒரு வழியாக பேச்சைத் தொடர்ந்த சுகுமார், ‘இந்தளவிற்கு ரசிகர்களிடையே மாஸ் இருப்பது நம்முடைய பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு மட்டும்தான். அடுத்து அதே மாஸ் இங்கே இருக்கிற சாய் பல்லவிக்கு இருக்கிறது. சாய் பல்லவி, ’லேடி பவர் ஸ்டார் ’என்றார்.

இப்படி பல்வேறு தளங்களில் கம்பீரமாக வலம் வரும் சாய் பல்லவி, தனக்கு கிடைத்திருக்கும் இத்தனை க்ரெடிட்களுக்கும் காரணம் தனது அம்மாதான் என்று புன்னகைக்கிறார்.

’சின்ன வயதில் நிறைய நடனப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். பலவற்றில் வெற்றி பெற்றிருக்கிறேன். சிலவற்றில் தோல்வியடைந்திருக்கிறேன். அப்படி நான் தோல்வியடைந்த நாளொன்றில், என் அம்மா என்னிடம் கூறியது இன்றும் என் நினைவில் இருக்கிறது. நீ எப்போது டான்ஸை என்ஜாய் செய்து ஆடுகிறாயோ, அது உன்னுடைய முகத்தில் பிரகாசமாக தெரிகிறது. அந்த நாட்களில் எல்லாம் நீதான் டான்ஸ் போட்டிகளில் ஜெயித்து இருக்கிறாய் என்றார். அது முதல் நான் ஆடும் போதெல்லாம் என்ஜாய் செய்து ஆடுவதை பழக்கப்படுத்தி கொண்டேன்.

கடைசியில் அதுவே என்னுடைய வாழ்க்கையாக மாறியிருக்கிறது. நடிப்போ அல்லது டான்ஸோ நான் என்ஜாய் பண்ணும்போது அது திரையில் நன்றாக வருகிறது. இதற்கெல்லாம் காரணம் என் அம்மா’ என்று புன்னகைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...