இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தேச சேவையில் பயணத்தை தொடருவேன் – வெங்கையா நாயுடு
துணை ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்தவுடன், தேச சேவையில் மீதியுள்ள பயணத்தை தொடருவேன் என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
வெங்கையா நாயுடுவின் துணை ஜனாதிபதி பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த வெங்கய்யா நாயுடு, “ஊடகங்கள் எனக்கு அளித்த ஆதரவுக்காக எனது இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றி கூறுகிறேன். துணை ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்தவுடன், தேச சேவையில் இன்னும் முடிவடையாத பயணத்தை தொடருவேன். இனிவரும் நாட்களில் மக்களுடன் உரையாடுவேன். குறிப்பாக, இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோர் மீது கவனம் செலுத்துவேன்” என்றார்
சர்வதேச போட்டிகள் நடத்த வாய்ப்பு: பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்
சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தமிழகத்துக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக தமிழகத்துக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டர் பதிவை வெளியிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, தங்களது கனிவுமிகு பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. விருந்தோம்பலும் தன்மானமும் தமிழர்களின் இணைபிரியா இருபெரும் பண்புகள் ஆகும்! தொடர்ச்சியான உங்களது ஆதரவையும், இதுபோல இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளையும் தமிழ்நாட்டுக்கு வழங்குமாறு தங்களைக் கோருகிறேன். யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக சார்பில் திரையரங்குகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் திரைப்படம்
தமிழக பாஜக சார்பில் 50 திரையரங்குகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்ற பிரதமரின் வேண்டுகோளை செயல்படுத்துமாறு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியினரைக் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, மாநிலம் முழுவதும் 50 திரையரங்குகளில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை குறித்த திரைப்படங்கள், வரும் 15-ம் தேதி வரை இலவசமாகத் திரையிடப்படுகின்றன.
தடையை மீறி இலங்கை துறைமுகத்தில் நுழைந்த சீன கப்பல்
சீனாவின் உளவுக் கப்பலான ‘யுவான் வாங் 5′ தடையை மீறி இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தை வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா, தனது ‘யுவான் வாங் 5’ என்ற ஆராய்சி கப்பலை இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தில், 6 நாட்கள் நிறுத்தி செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தது. இதற்கு இலங்கை அரசும் ஒப்புதல் அளித்திருந்தது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்தியாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து உளவுக் கப்பலின் வருகையை தள்ளிவைக்குமாறு சீனாவை இலங்கை கேட்டுக்கொண்டது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய இலங்கையை சீனா வலியுறுத்தியது. ஆனால் இலங்கை அதை ஏற்கவில்லை. இந்தநிலையில் தடையை மீறி சீனாவின் ‘யுவான் வாங் 5’ கப்பல் இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தை நோக்கி புறப்பட்டது. இந்திய நேரப்படி இன்று (வியாழக்கிழமை) காலை 9:30 மணிக்கு, அந்த கப்பல் ஹம்பன்தொட்டா வந்து சேர்ந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தநிலையில், சீனா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது என்று எச்சரித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாகிறது
சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா, குரங்கு அம்மை என அச்சுறுத்தல்கள் வர தொடங்கியுள்ளதால், பல்வேறு இடங்களில் மாஸ்க் மீண்டும் கட்டாயமாக மாற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அனைத்து வழக்கறிஞர்களும் வாதாடும் போதும் மாஸ்க் காட்டயம் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.