காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பர்மிங்காமில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாட உள்ளனர். இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இருந்து இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக விலகியுள்ளார்.
முன்னதாக அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடைபெற்ற 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றது. ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதனால் உலக தடகள போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கம் வென்றது. வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியின் போது காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதி பெற சில நாட்கள் ஆகும் என்பதால், அவர் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.
மோடியை தனித்தனியே சந்திக்கும் ஈபிஎஸ் – ஓ.பி.எஸ்.
இந்திய பிரதமர் மோடி நாளை மறுநாள் (28-07-2022) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்னை வர உள்ளார். அன்று இரவு 8 மணி வரை அந்த நிகழ்ச்சியில் இருக்கும் மோடி அதன்பிறகு அவர் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று அங்கு இரவு தங்க உள்ளார். அன்று இரவு 8.30 மணியில் இருந்து முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்த அவர் திட்டமிட்டு உள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்து பேசுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பிரச்சினையில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் மதில் மேல் பூனையாகவே உள்ளது, பாஜக. இந்நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஸ்விஸ் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல – நிர்மலா சீதாராமன்
ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள பணம் தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூா்வமாக பதில் அளித்த மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன், ”2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-ஆம் ஆண்டில் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனினும், அதைக் கருப்புப் பணமாகக் கருதக்கூடாது.
ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்கள் குறித்து அதிகாரபூா்வ கணக்கீடுகள் ஏதுமில்லை. வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில் காட்டாமல் சேமித்துவைத்துள்ள தொகைகள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ரூ.8,468 கோடிக்கும் அதிகமான வரியைச் செலுத்துமாறும் ரூ.1,294 கோடியை அபராதமாகச் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட நபா்களிடம் கோரப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டி கொலை: பெண்ணின் தந்தை வெறிச்செயல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் சேவியர் நகரை சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 50). இவரது மகள் ரேஸ்மா (19). கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மாணிக்கராஜ் (28). வெளிநாட்டில் வேலை பார்த்த மாணிக்கராஜ் ஊருக்கு திரும்பி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். முத்துக்குட்டிக்கு மாணிக்கராஜ் மருமகன் முறை என்று கூறப்படுகிறது. மாணிக்கராஜும் ரேஸ்மாவும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இந்த காதலுக்கு முத்துக்குட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறிய மாணிக்கராஜ், ரேஷ்மா இருவரும் திருமணம் செய்துள்ளனர். திருமணம் செய்த பிறகு ஊருக்கு வராமல் இருந்த தம்பதியினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் மாணிக்கராஜ் – ரேஷ்மா வீட்டில் தனியாக இருந்த போது, முத்துக்குட்டி இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தம்பதி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இது குறித்து தகவல் கிடைத்தும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக முத்துக்குட்டியை கைது செய்த பின்னர் தான், இந்த கொலைக்கான முழு விபரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு மனைவியை நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கணவர்: கேரளாவில் கொடூரம்
கேரளா மாநிலம் திருச்சூரில் 35 வயதான பெண் ஒருவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் இருந்ததால் மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விசாரணையில், பெண்ணின் கணவரே நண்பருடன் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தெரிய வந்துள்ளது.
‘பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே சண்டை இருந்து வந்துள்ளது. இதனால் கடந்து இரண்டு ஆண்டுகளாகவே கணவர் அவரிடம் கொடூரமான முறையில் நடக்கத் தொடங்கியுள்ளார். மனைவியை அவரது விருப்பத்தை மீறி பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அந்தரங்க உறுப்புகளில் கடுமையாக தாக்கவும் செய்துள்ளார். மனைவியை சங்கிலியில் கட்டி வைத்து கணவரும் சென்னையை சேர்ந்த கணவரின் நண்பரும் இணைந்து பாலியல் வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். சில நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் பீர் பாட்டிலை செலுத்தி துன்புறுத்தியுள்ளனர்.
இந்த பாலியல் வன்கொடுமைகளை செல்போனில் படம் பிடித்து வெளியே விட்டுவிடுவோம் எனவும் பிளாக் மெயில் செய்துள்ளார், கணவர். இதனால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லாமல் பொறுத்த வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான பாதிப்புக்கு ஆளான நிலையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ள காவல்துறையினர் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான கணவரையும் அவரது நண்பரையும் கைது செய்துள்ளனர்.