No menu items!

சென்னை செஸ் ஒலிம்பியாட்: உங்களுக்கு தெரிய வேண்டியவை

சென்னை செஸ் ஒலிம்பியாட்: உங்களுக்கு தெரிய வேண்டியவை

சென்னையில் நடைபெற உள்ள 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் குறித்த தகவல்கள் உங்களுக்காக:

1924 மற்றும் 1926 ஆகிய ஆண்டுகளில் அதிகாரபூர்வமற்ற முறையில் பல நாடுகள் கலந்துக் கொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டன.

1924-ம் ஆண்டில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளில்தான் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE-Fédération Internationale des Echecs) தொடங்கப்பட்டது. அதன்பின்னர் அந்த கூட்டமைப்பு செஸ் போட்டிகளில் பல்வேறு புதிய விதிகளைப் புகுத்தியது.

அதிகாரபூர்வமான முதலாவது செஸ் ஒலிம்பியாட் போட்டி 1927-ம் ஆண்டு லண்டன் நகரில் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 16 அணிகள் கலந்துகொண்டன.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இரண்டாம் உலகப் போர் காரணமாக 1939-ம் ஆண்டுமுதல் 1950-ம் ஆண்டுவரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படவில்லை.

1957-ம் ஆண்டுவரை ஆண்களுக்கான பிரிவில் மட்டுமே செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த ஆண்டில் இருந்துதான் பெண்களுக்கான பிரிவிலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டன.

சென்னையில் தற்போது நடக்கவுள்ளது 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி. இப்போட்டி முதலில் ரஷ்யாவில்தான் நடப்பதாக இருந்தது. ஆனால் உக்ரைன் போர் காரணமாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை அங்கு நடத்துவது சாத்தியமில்லாமல் போனது. இந்த சூழலில் தமிழக அரசும் மத்திய அரசும் எடுத்த நடவடிக்கைகளால் இப்போட்டியை தமிழகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.

இதுவரை நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளிலேயெ தமிழகத்தில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில்தான் அதிக வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் ஆண்கள் பிரிவில் அமெரிக்கா ஜெர்மனி இங்கிலாந்து பிரான்ஸ் உள்ளிட்ட 187 நாடுகள் கலந்துகொள்கின்றன. பெண்களுக்கான பிரிவில் 162 நாடுகள் கலந்துகொள்கின்றன.

போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடும் தலா ஒரு அணியை மட்டுமே போட்டிக்கு அனுப்ப முடியும். ஆனால் போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் ஏ, பி என தலா 2 அணிகளை இந்தியா அனுப்ப முடியும்.
ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்களும் ஒரு மாற்று வீரரும் இருப்பார்கள். ஒவ்வொரு அணிக்கும் ஒரு கேப்டனும் இருப்பார். அவர் போட்டியில் பங்கேற்கும் வீரராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

ஒவ்வொரு அணியும் 11 சுற்று போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் அணிக்கு 1 புள்ளியும், டிரா செய்யும் அணிக்கு அரை புள்ளியும் வழங்கப்படும்.

போட்டிக்கு வரும் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தங்குவதற்காக ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் 1,800 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத்தவிர 4 நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் 650 அறைகளும், 3 மற்றும் 2 நட்சத்திர ஓட்டல்களில் 500 அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பாதுகாப்பு பணியில் 100 இன்ஸ்பெக்டர்கள், 380 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 4,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 17 நாட்கள் அவர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் உணவுச் செலவுக்காக 1.7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்காக மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரியில் 2 பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அரங்கம் 22,500 சதுரடியிலும், இரண்டாவது அரங்கம் 45,000 சதுரடியிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் அமர்ந்து போட்டியில் பங்கேற்கும் வகையில் இந்த 2 அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், போலீஸார், அரசு அதிகாரிகள் போட்டி அமைப்பாளர்கல் ஆகிய அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது. அடையாள அட்டை இல்லாத யாரும் போட்டி நடக்கும் இடங்களுக்கு அருகே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் அணிகள் மோதும் போட்டிகள் முதலாவது ஹாலிலும், தரவரிசையில் சற்று பின்னால் இருக்கும் அணிகள் மோதும் போட்டிகள் இரண்டாவது அரங்கிலும் நடக்கும்.

முதல் ஹாலில் போட்டிகளைக் காண்பதற்கான கட்டணங்கள் அதிகம். இங்கு அமர்ந்து போட்டிகளைக் காண்பதற்கான ஒரு டிக்கெட்டின் விலை ரூ.3000, அதேசமயம் வெளிநாட்டவர்கள் ரூ.8,000 செலுத்த வேண்டும். 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள், பெண்கள் மற்றும் தமிழக அரசு ஊழியர்களுக்கு சலுகை விலையில் டிக்கெட் வழங்கப்படுகிறது. அவர்கள் ரூ.300 செலுத்தி டிக்கெட்களை வாங்கிக்கொள்ளலாம்.

இரண்டாவது ஹாலில் போட்டிகளைக் காண்பதற்கான ஒரு டிக்கெட்டின் விலை ரூ.2,000. வெளிநாட்டவர்களுக்கான கட்டணம் ரூ.6,000. மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.200.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக திங்கள்கிழமை முதல் 5 ஹாப்-ஆன்-ஹாப்-ஆஃப் பேருந்துகளை தமிழக அரசு இலவசமாக இயக்கி வருகிறது. இந்தப் பேருந்துகள் மத்திய கைலாஷில் கிளம்பி கிழக்குக் கடற்கரை சாலை வழியாக மகாபலிபுரத்துக்கு செல்கின்றன.

படம்: புவனேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...