தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை முதுபெரும் தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பாராட்டியுள்ளது வைரலாகியுள்ளது. இபாவே எதிர்பார்க்காத இந்த வரவேற்புக்கு என்ன காரணம்? அவரிடம் பேசினோம்.
2022 – 2023 நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை 18-03-2022 அன்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அன்றே எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி இந்த பட்ஜெட்டை பாராட்டி ட்விட் செய்திருந்தார்.
‘1952 முதல் வாக்களித்து வருகிறேன். நான் பார்த்த மிகச் சிறந்த மாநில பட்ஜெட் இது.
அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி, நுணுக்கமான மற்றும் பரந்த அடிப்படையிலான, மக்கள் சார்ந்த பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறது’ என்று கூறியிருந்தார்.
உடனே திமுகவினர் இபா ட்விட்டை சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இந்திரா பார்த்தசாரதி ட்விட்டை ரீ-ட்விட் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,
“தமிழின் தனிப்பெரும் படைப்பாளியாக விளங்கும் திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்களின் இந்தப் பாராட்டைப் பெரிதும் மதிக்கிறேன்.
தமிழ்நாடு அரசுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இப்பாராட்டு அமைந்துள்ளது. வெளிப்படையாகப் பாராட்டிய அவரது பெருந்தன்மைக்கு நன்றி!” என்று கூறியுள்ளார்.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் இந்திரா பார்த்தசாரதி ட்விட்டை ரீ-ட்விட் செய்து, ‘இபா போன்ற பொது அறிவுஜீவிகளிடம் இருந்து வரும் இதுபோன்ற விமர்சனங்கள் எங்களை பெருமைப்படுத்துகின்றன. வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை ஒதுக்குவதற்கும் சமூக நல திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கவதற்கும் இடையே சரியான சமன்பாட்டை ஏற்படுத்த இது எங்களுக்கு உற்சாகமளிக்கும். ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படுவோம் ?‘ என்று தெரிவித்திருந்தார்.
இந்திரா பார்த்தசாரதி ட்விட்டை திமுகவினர் இந்தளவு கொண்டாட காரணம், இதுவரையான அவரது அரசியல் நிலைப்பாடுதான். ஆரம்பத்தில் கம்யூனிஸ ஆதரவு நிலைப்பாடு கொண்டிருந்த இபா, கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்த பின்னர் அதிலிருந்து விலகினார்.
பெரியார் மீதும் அவரது சமூக சீர்த்திருந்த செயல்பாடுகள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், இபா.
ஆனால், திமுக – அதிமுக இரண்டு கட்சிகள் பற்றியும் மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார். தமிழ்நாட்டு அரசியலில் காங்கிரஸ் மீது, குறிப்பாக ப. சிதம்பரம் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளதாக எழுதி வந்தார். இந்நிலையில், இபா போட்ட பட்ஜெட் ஆதரவு ட்விட் திமுகவினரை மகிழ்ச்சியடைய வைத்ததில் ஆச்சர்யம் இல்லை.
இந்திரா பார்த்தசாரதியுடன் பேசினோம்.
‘‘நான் எந்தக் கட்சியும் சார்ந்தவன் இல்லை. பொருளியல் மேதையும் இல்லை. ஆனால், இலவசங்கள் இல்லாத ஒரு பட்ஜெட் இது என்று பட்டது.
எனவேதான் வரவேற்று ட்விட் செய்தேன். இப்படியொரு விவாதத்துக்குள்ளாகும் என்று எதிர்பார்க்கவில்லை.
பெரும்பாலும் நிதிநிலை அறிக்கைகள் நிதித்துறைச் செயலர்களால் உருவாக்கப்பட்டதுபோல தோன்றும். ஆனால், இந்த பட்ஜெட் நிதித்துறை நுணுக்கங்களை விரல்நுனியில் வைத்திருக்கும் அரசியல் நிபுணரால் தயாரிக்கப்பட்டதுபோல இருந்தது. கல்வி, கலை, இலக்கியம், பெண் கல்வி, அறிவுத்துறை ஆகியவற்றுக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் ரசனை மேம்பட இது மிக அவசியம். அறிவுசார் நகரம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு சிறந்த திட்டம்” என்றார்.