அசானி புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் புறகர் பகுதிகளில் இன்று காலை பலத்த மழை பெய்தது.
எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், மாதவரம், வியாசர்பாடி, கோயம்பேடு, வடபழனி, மயிலாப்பூர், அடையாறு, அண்ணாநகர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் 10 மணிவரை கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த நில நாட்களாக கடும் வெப்பத்தால் தவித்துவந்த சென்னை மக்கள் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அசானி புயல் மேலும் மேலும் வலுவிழந்து வட ஆந்திர கடற்கரையோரம் காக்கிநாடா – விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது. இதனால் சென்னையில் இன்னொரு மழைக்கு வாய்ப்பிருக்கிறது. வரும் 13-ம் தேதி அசானி புயல் கரையை கடந்தவுடன் வெப்பநிலை அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை நூற்றாண்டு விழா சிறப்பு மலர்- முதல்வர் வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டசபை நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். சட்டப்பேரவை மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா குறித்த சிறப்பு மலரையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது : முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் துப்பாக்கிச்சூடு மற்றும் கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் துப்பாக்கிச்சூடு மற்றும் கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. திமுக ஆட்சியில் வன்முறை, ஜாதி சண்டை, மதமோதல், துப்பாக்கிச்சூடு, அராஜகம் இல்லை. இது தான் ஆட்சியின், உள்துறையின் சாதனை. தமிழக மக்கள் அமைதியாக வாழ அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளோம்.
மததுவேஷங்களுக்கு உருவாக்குவோரை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. அப்படி செய்பவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள். விரைவில் 3 ஆயிரம் போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழகத்தில் மின்சாரம் சீராக வழங்கப்படுகிறது – அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
தமிழகத்தில் மின்தேவை உயர்ந்தாலும் எவ்வித தடையும் இல்லாமல் சீரான மின்விநியோகம் வழங்கப்படுகிறது என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், “தமிழகத்தில் எந்த வித தடையும் இல்லாமல் மின்சாரம் சீராக வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த காலங்களை விட தற்போது கூடுதலாகவே மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடிக்க தடை இல்லை – உச்ச நீதிமன்றம் உத்தரவு
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை அகற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “முதலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நோட்டீசை பெற்று கொள்ளுங்கள். வேண்டுமெனில் நாங்கள் தற்காலிகமாக மாற்று இடம் வழங்க அறிவுறுத்தல் வழங்குகிறோம். ஆனால் ஆக்கிரமிப்பு விசயங்களில் நீதிமன்ற உத்தரவு கடைபிடிக்கப்பட வேண்டும், அமல்படுத்தப்பட வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தடை விதிக்க போவதில்லை. ஏற்கனவே பல குடும்பங்கள் காலி செய்த பின்னரும் தற்போது இருப்பவர்கள் ஏன் காலி செய்ய மறுக்கின்றனர்?
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த இடைக்கால மனுக்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கடந்த 2011ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தடுத்து நிறுத்தும் நோக்கிலானது என்றே கருதுகிறோம்.
எனவே ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்ற இடைக்கால மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.