No menu items!

நியூஸ் அப்டேட்: பொருளாதாரத்தில் தமிழ் நாடு முதல் மாநிலம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

நியூஸ் அப்டேட்: பொருளாதாரத்தில் தமிழ் நாடு முதல் மாநிலம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

கோவையில் இன்று கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட தொழில்முனைவோருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய முதல்வர், ”நமது மாநிலம் தொடர்ந்து தொழில் வளர்ச்சி பெற்று, அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ வேண்டும். அதுமட்டுமல்ல தெற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்வதற்கு உகந்த மாநிலமாக தமிழகம் விளங்க வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். அரசு ஏற்படுத்தியுள்ள வசதி வாய்ப்புகளை தொழில்துறையினர் பயன்படுத்தி மென்மேலும் வளர்ச்சி பெற உங்களை கேட்டுகொள்கிறேன்.

உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சி இவை மூன்றும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. இவை மேம்பட்டால் ஒரு மாநிலத்திற்கு ஒட்டுமொத்தமான வளர்ச்சி தானாக வந்து சேரும். இவை மூன்றையும் வலுப்படுத்துவற்கான வழிகளை இதுபோன்ற சந்திப்புகளின் மூலமாகத் தான் பெற முடியும். இதுதான் இந்த சந்திப்புக்கான உண்மையான நோக்கம்” என்று கூறினார்.

நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறை: உச்சநீதிமன்றம் உத்தரவு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே 1988-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி அன்று மூத்த குடிமக்கள் மீது இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரும் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சித்துவும், சந்து என்பவரும் வாகன விபத்தை ஏற்படுத்தினர். இந்த விபத்து தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு  உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் முடிவில் நவஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அண்ணன் இல்லையென்றால் இது சாத்தியமில்லை: வைகோவுக்கு நேரில் நன்றி தெரிவித்த பேரறிவாளன்

சிறையில் இருந்து விடுதலையான பேரறிவாளன் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பேரறிவாளன் ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வைகோ பேசுகையில், “பேரறிவாளன் நல்ல ஈழ உணர்வாளர். நிரபராதி, குற்றமற்றவர். அவருடைய இளமை காலம், வசந்த காலம் எல்லாம் அழிந்துவிட்டது. இருந்தபோதிலும் அவரது தாயார் அற்புதம்மாள் மிகப்பெரிய வீராங்கனையாக இருந்து போராடி தன் மகனுக்கு விடுதலை பெற்று தந்துள்ளார். இந்த தீர்ப்பு அடிப்படையிலேயே மற்ற ஆறு பேரும் விடுதலை ஆவார்கள்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேரறிவாளன் பேசுகையில், “நீண்ட காலமாகவே அண்ணனை (வைகோவை) எனக்கு தெரியும். சிறைக்கு போவதற்கு முன்பே இவரை இதே வீட்டில் சந்தித்து உள்ளேன். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது, 2000-ம் ஆண்டில் அப்போதைய பாஜக தலைவர்களான அத்வானி, வாஜ்பாயை சந்தித்து அண்ணன்தான் எனக்காக மனு கொடுத்தார். எனது வழக்கை பொறுத்தவரை, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி இந்த வழக்கில் வந்த பிறகு தான் இது பலராலும் கவனிக்கப்பட்டது. அவர் இந்த வழக்கில் வர முழு காரணம் வைகோ தான். இவர் இல்லையென்றால் இது சாத்தியம் இல்லை” என தெரிவித்தார்.

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் விடுதலை செய்தது. இந்த விடுதலையை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் தங்கள் பகுதியில் வாயில் வெள்ளை துணி கட்டி மெளனப் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே கருணாநிதி சிலை அமைக்க இடைக்கால தடை

திருவண்ணமலையில் கிரிவலப்பாதையையும் மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கப்பட இருந்தது. இதை எதிர்த்து, திருவண்ணாமலையை சேர்ந்த ஜி.கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், “வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கி, அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து சிலை அமைக்கப்பட உள்ளது. கிரிவலப்பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர். மேலும், அப்பகுதியில் கால்வாய் அமைந்துள்ளதால், அங்கு கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும்” என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தும், வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்தும் அறிக்கை தாக்கல் செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...