No menu items!

பேரறிவாளன் தீர்ப்பு – ஐந்து திருப்புமுனை அம்சங்கள்

பேரறிவாளன் தீர்ப்பு – ஐந்து திருப்புமுனை அம்சங்கள்

பேரறிவாளன் விடுதலை அனைவரது பார்வையையும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் 142வது பிரிவை நோக்கி திருப்பியிருக்கிறது. இந்த 142வது பிரிவு உச்ச நீதிமன்றத்துக்கு வானளவிய அதிகாரங்களை வழங்கியிருக்கிறது, அந்த அதிகாரம்தான் பேரறிவாளனுக்கு விடுதலையைக் கொடுத்திருக்கிறது.

Article 142 in The Constitution Of India 1949

142. Enforcement of decrees and orders of Supreme Court and unless as to discovery, etc ( 1 ) The Supreme Court in the exercise of its jurisdiction may pass such decree or make such order as is necessary for doing complete justice in any cause or matter pending before it, and any decree so passed or orders so made shall be enforceable throughout the territory of India in such manner as may be prescribed by or under any law made by Parliament and, until provision in that behalf is so made, in such manner as the President may by order prescribe

(2) Subject to the provisions of any law made in this behalf by Parliament, the Supreme Court shall, as respects the whole of the territory of India, have all and every power to make any order for the purpose of securing the attendance of any person, the discovery or production of any documents, or the investigation or punishment of any contempt of itself

சற்று கடினமாக இருக்கும் இந்தப் பிரிவை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு வழக்கில் முழுமையான நீதி கிடைக்க உச்ச நீதிமன்றத்துக்கு பரந்து விரிந்த அதிகாரத்தை இந்திய அரசமைப்பு சட்டத்தின் 142வது பிரிவு கொடுத்திருக்கிறது.

நீண்ட கால வழக்குகளில் ஏற்கனவே இருக்கும் சட்டப் பிரிவுகள் மூலம் தீர்வுகள் கிடைக்காத நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த 142 பிரிவை கையிலெடுத்து தீர்ப்பு வழங்குகிறது. அதை முழுமையான நீதிக்கான பிரிவாக அரசமைப்பு சட்டம் குறிப்பிடுகிறது.

இதற்கு முன்பும் உச்ச நீதிமன்றம் இந்தப் பிரிவை பயன்படுத்தி தீர்ப்புகள் அளித்திருக்கிறது. அதில் முக்கியமானவை போபால் விஷ வாயு வழக்கும் அயோத்தியா வழக்கும்.

போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைட் நிறுவனம் 470 மில்லியன் டாலர்   நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று இந்தப் பிரிவை பயன்படுத்தி உத்தரவிட்டது. அயோத்தியா வழக்கில் 2.77 ஏக்கர் நிலத்தை இஸ்லாமிய அமைப்புக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதும் இந்தப் பிரிவின் அடிப்படையில்தான்.

பேரறிவாளன் வழக்கில் 142வது பிரிவு பயன்படுத்தப்பட்டது முக்கியமான செய்திதான். ஆனால் அதைவிட முக்கியமான செய்தி ஆளுநரின் அதிகாரம், வரம்புகள் குறித்து அதன் கருத்துக்கள் வருங்கால இந்திய அரசியலில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

பேரறிவாளன் கருணை மனு குறித்து ஆளுநர் மிகுந்த கால தாமதம் எடுத்ததால் இந்தப் பிரிவை பயன்படுத்தி தீர்ப்பு வழங்கியதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசமைப்பு சட்டத்தின் 161வது பிரிவின்படி ஆளுநருக்கு கருணை மனுக்களின் மீது முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. ஆனால் பேரறிவாளன் மனுவின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் கால தாமதம் செய்து உச்ச நீதிமன்றத்தின் அழுத்தங்கள் வந்த பிறகுதான் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது. தமிழ் நாட்டு ஆளுநரின் இந்த செயலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. 161வது பிரிவின்படி  தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தாமல் ஆளுநர் அமைதி காப்பது நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டதுதான் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

அரசு நிர்வாகத்தின் தலைமைப் பதவியில் ஆளுநர் இருந்தாலும் அரசு நிர்வாகத்தை வழி நடத்தி செல்வது அமைச்சரவைதான் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

அரசமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் என்பவர் மாநிலத்தின் தலைவராக இருந்தாலும் அவர் அமைச்சரவையின் ஆலோசனைபடிதான் செயல்பட முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

ஆளுநர் என்பவர் மாநில அரசின் சுருக்க வடிவம் என்று மருராம் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டியிருக்கிறார்கள் நீதிபதிகள்.

மருராம் வழக்கும் மன்னிப்பு குறித்ததுதான்.  இந்த வழக்கில் குடியரசுத் தலைவர் தன்னிச்சையாக செயல்பட இயலாது. மத்திய அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டுதான் அவர் செயல்பட இயலும் என்று நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

பேரறிவாளன் வழக்கைப் பொறுத்தவரை ஐந்து அம்சங்களை உச்ச நீதிமன்றம் தெளிவாக, அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது.

விடுதலை, தண்டனை குறைப்பு போன்ற விவகாரங்களில் ஆளுநருக்கு ஆலோசனை அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது.

மாநில அமைச்சரவையின் ஆலோசனைபடிதான் ஆளுநர் நடக்க வேண்டும்.

குடியரசுத் தலைவரின் முடிவுக்காக ஆளுநர் காத்திருக்க அவசியமில்லை. ஆளுநரே முடிவெடுக்கலாம்.

மனுக்கள் மீது ஆளுநர் தேவையின்றி கால தாமதம் செய்யக் கூடாது.

ஆளுநர் கால தாமதம் செய்யும்பட்சத்தில் நீதிமன்றம் தலையிடும். முடிவெடுக்கும்.

இந்தத் தீர்ப்பை வரவேற்று தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை’ என்று மாண்புமிகு நீதியரசர்கள் சொல்லி இருப்பது மிகமிக முக்கியமானது ஆகும். ‘ஆளுநர் செயல்படாத நேரத்தில் நீதிமன்றம் தலையிடும்’ என்று சொல்லி இருக்கிறார்கள் நீதிபதிகள். ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் கேட்கத் தேவையில்லை’ என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் நீதிபதிகள்.

இதன் மூலமாக மாநில அரசின் அரசியல், கொள்கை முடிவுகளில் தனது அதிகார எல்லைகளைத் தாண்டி ஆளுநர்கள் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் மேலும் உறுதி ஆகியிருக்கிறது. இது தமிழக அரசால், இந்தியா முழுமைக்குமான மாநில சுயாட்சி – கூட்டாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உண்மைதான். மாநில சுயாட்சிக்கும் கூட்டாட்சித் தத்துவத்தையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.

அடுத்து வரும் பல வழக்குகளுக்கும் இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக மாறப்போகிறது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...