No menu items!

நியூஸ் அப்டேட்:இலங்கை வன்முறை-கடலோரத்தில்  தீவிர கண்காணிப்பு

நியூஸ் அப்டேட்:இலங்கை வன்முறை-கடலோரத்தில்  தீவிர கண்காணிப்பு

இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் தமிழக கடலோர பகுதிகளை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது. இதனால், பதற்றம் நிலவுகிறது. இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலால், அகதிகளுடன் தேச விரோத கும்பல்கள் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது என்பதால்   தமிழக கடலோர பகுதிகளிகல் கண்காணிப்பை பலப்படுத்துமாறு மாநில காவல் துறைக்கு மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து தமிழக கடலோர பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 ‘அசானி’  புயல் வலுவிழந்தது

வங்கக் கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த அசானி வலுவிழந்து புயலாக நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது ஆந்திராவின் மசூலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே 60 கி.மீ தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளது என்றும், இது நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. ஆந்திரா நோக்கி நகரும் அசானி புயல் பின்னர் ஒடிசா கடற்கரை பகுதியை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை  ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்டதாக  மாற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் விருப்பம்

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் இன்று நடந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றுமதி மிக மிக அவசியம். இந்தியாவின் ஏற்றுமதியில் தென்மண்டலம் 27 விழுக்காட்டுக்கு அதிகமாக பங்களிப்பை தருகிறது. 5 ஆண்டுகளுக்குள் இந்த பங்கு 35 விழுக்காட்டை தாண்டும் என்று நான் நம்புகிறேன்.

தென் மண்டலத்தில் தமிழகத்தின் பங்கு மிக மிக அதிகமானது. தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும். இந்த இலக்கை அடைய ஏற்றுமதி வர்த்தகம் அதிகம் ஆக வேண்டும். தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு 26 பில்லியன் டாலர். இதை 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும்” என்றார்.

பில் கேட்ஸ் கொரோனாவால் பாதிப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில் கேட்ஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “லேசான காய்ச்சல் அறிகுறியுடன் உள்ள எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி என் உடல்நிலை தேறும் வரை என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்தது

சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 472 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் 38 ஆயிரத்து 296 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 787 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை  38 ஆயிரத்து 768 ரூபாயாக இருந்தது. வெள்ளியின்  விலை இன்று கிராமுக்கு  64.80 ரூபாயாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...