அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவைச் சந்தித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போரால் உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பணவீக்கமும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று மதியம் ரூபாயின் மதிப்பு 77.48 ரூபாயாக கடுமையாக சரிந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை – ஆளுநர் தமிழிசை
புதுவை ஜிப்மரில் இந்தி திணிக்கப்படுவதை கண்டித்து பல கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் சென்னையிலிருந்து ஆளுநர் தமிழிசை நேரடியாக புதுவை ஜிப்மருக்கு வந்து இயக்குனர் ராகேஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. பின்னர் ஜிப்மரில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அதில் அவர், “ ஜிப்மரில் தமிழிலேயே பெயர் பலகைகள் இருக்கிறது. இயக்குனர் அலுவலகத்தில்கூட அவரின் பெயர் தமிழில்தான் முதலில் எழுதப்பட்டுள்ளது. அடுத்தபடியாக ஆங்கிலம், 3-வதாக இந்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தி மட்டும் தெரிந்த பணியாளர் சேவை புத்தகத்தில் இந்தியை பயன்படுத்தும்படி கூறியுள்ளனர். அதே நேரத்தில் நோயாளிகளுக்கான மருத்துவ சேவை, குறிப்புகள் தமிழில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜிப்மரில் இந்தி திணிப்போ, வெறியோ இல்லை. ஜிப்மரின் மருத்துவ சேவைகள் தொடர நாம் அனுமதிக்க வேண்டும்” என்றார்.
முதல்வர் ஸ்டாலின் லண்டன் பயணம்
முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக்குக்கு இங்கிலாந்தில் உள்ள அவரது ஊரில் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இச்சிலையை திறப்பதற்கு லண்டனுக்கு வருமாறு முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று முதல்வர் ஸ்டாலின் லண்டன் செல்லவுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடர் நாளையுடன் (10-ம் தேதி) முடிவடைவதால் அதன்பிறகு மு.க.ஸ்டாலினின் சுற்றுப்பயண விவரங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பிறகு முதல்வரின் லண்டன் பயணத்துக்கான பயணத்திட்டம் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் ஜூலை மாதம் அமெரிக்காவிலுள்ள வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை விழாவில் கலந்துகொள்ளவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதிலும் முதல்வர் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த பயணங்களின்போது அந்நாட்டு முதலீட்டாளர்களை முதல்வர் சந்திப்பார் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் 1,648 சதவீதம் அதிகரிப்பு
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் 1,648 சதவீதம் அதிகமாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்றும் நாளையும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு இத்துறைகளின் அமைச்சரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
இந்நிலையில் காவல்துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், “2011-ம் ஆண்டு இணையதள குற்ற புகார்களின் எண்ணிக்கை 748-ஆக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டு 13,707 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1,648 சதவீதம் அதிகமாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவர்கள் இழந்த பணம் ரூ.6.75 கோடி காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.