No menu items!

ராஜபக்சே ராஜினாமா – இலங்கையில் இனி என்ன நடக்கும்?

ராஜபக்சே ராஜினாமா – இலங்கையில் இனி என்ன நடக்கும்?

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்களுக்கு பொறுப்பேற்று ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரி மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்றுடன் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் திடீர் திருப்பமாக மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இனி என்ன நடக்கும்?

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் தொடங்கி பால்மா போன்ற உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தமிழர்கள் மட்டுமல்லாமல் சிங்களர்களும் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

ராஜபக்சே குடும்பத்தினரின் தவறான முடிவுகளும் ஊழல்களுமே இந்த நெருக்கடி நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பு காலிமுகத் திடலில் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கிய ‘கோட்ட கோ கம’ மக்கள் போராட்டம் இன்றுடன் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் மக்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பின்னர் மதத் தலைவர்கள், வழக்கறிஞர்கள், நிபுணர்கள், எதிர்கட்சியினர், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட உலகளவில் கவனிக்கப்படும் போராட்டமாக இலங்கை மக்கள் போராட்டம் மாறியது.

இலங்கையில் நடைபெறும் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாடுகளில் வசிக்கும் சிங்களர்களும் அந்தந்த நாடுகளில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்து வந்தது. ஆனால், இதற்கு ராஜபக்சே சகோதரர்கள் மறுப்பு தெரிவித்து வந்தனர். மட்டுமல்லாமல் ஆங்காங்கே தங்கள் ஆதரவாளர்கள் மூலம் போராட்டக்காரர்களை தாக்கும் அராஜக நடவடிக்கைகளிலும் இறங்கினர்.

கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு வழக்கம்போல் இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது, மகிந்தவின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் போராட்டக்காரர்களை மகிந்த ஆதரவாளர்கள் தாக்கினர்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் தாக்க முயன்றதால் பெரும் பதற்றம் உருவானது. இத்தாக்குதல்களில் 75-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில், கொழும்புவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் கோபம் இன்னும் அதிகமானது.

இந்நிலையில், தற்போது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனர். முன்னதாக மகிந்த ராஜபக்சே வெளியிட்ட அறிக்கையில், “அரசியல் லாபங்களுக்காக இலங்கையை நான் அராஜகமாக்க விரும்பவில்லை. நாட்டை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. தற்போதைய சவால்களை எதிர்கொண்டு அவற்றை சமாளிப்பதுதான் எமது கொள்கை. இந்த சவால்களில் இருந்து தப்பித்து ஓடும் வழக்கம் எமக்கும் இல்லை. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் சொந்த அரசியல் லாபங்களை முன்னெடுக்கின்றன. அந்த எதிர்க்கட்சிகளுக்கு தேவையானது அதிகாரம் மட்டுமே.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவைப் பொறுத்தவரையில் என்ன மாதிரியான முடிவும் எடுக்க முடியும். பொதுநலன் கருதி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். என் மீது பொதுமக்கள் வைத்த நம்பிக்கைதான் என்னை அரசியலுக்கு வர வைத்தது’’ என்று தெரிவித்திருந்தார்.

‘தப்பித்து ஓடும் வழக்கம் எமக்கும் இல்லை’ என்று மகிந்த ராஜபக்சே கூறியிருந்தாலும், அவரது 2-வது மகன் யோஷித ராஜபக்சே தமது மனைவியுடன் இன்று காலை கொழும்பில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார். கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு ராஜபக்சே மகன் யோஷித தப்பி ஓடிய அதேநேரத்தில்தான் மகிழ்ந்த ராஜபக்சே பதவி விலகக் கூடாது என கொழும்பில் அவரது ஆதரவாளர்கள் உக்கிரமான போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிந்த பதவி விலகல் மக்கள் போராட்டத்தின் முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. மக்களின் இரண்டாவது கோரிக்கையான கோத்தபய ராஜபக்சே பதவி விலகுவது வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...