குடும்பத்தலைவிகளுக்கு விரைவில் மாதந்தோறும் ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் என்று நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலின்போது தி.மு.க சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இந்த திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்காக விவரங்கள் சேகாிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் ரூ.1,000 வழங்கப்படும் என்று நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொிவித்துள்ளாா்.
ஓற்றைத் தலைமை : ஓபிஎஸ் – இபிஎஸ் தனித்தனியே ஆலோசனை
அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில் அக்கட்சியின் , ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
ஓ.பன்னீர் செல்வம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல், பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
மதுரை – காசி இடையே தனியார் ரயில் இயக்க திட்டம்
பாரத் கவுரவ் திட்டத்தின்கீழ் மதுரை – காசி இடையே தனியார் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
தேனி – போடி இடையே அகல ரயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன. இதனை தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையா பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேனி-போடி இடையிலான அகல ரயில் பாதை திட்டம் ஆகஸ்ட் மாதம் முடிவடையும். பாம்பன் புதிய மேம்பால பணிகள், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடியும். பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் மதுரை-காசி இடையே தனியார் ஆன்மிக சுற்றுலா ரயிலை இயக்குவது தொடர்பாக விண்ணப்பம் வந்துள்ளது. அது இப்போது பரிசீலனையில் உள்ளது.
காரைக்குடி-திருவாரூர் இடையே கேட் கீப்பர் பணிகளுக்கு முன்னாள் ராணுவத்தினரை பணியமர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் பிறகே இந்த பகுதியில் கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
61 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்துக்குப் பிறகு மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
மீன்களின் இனப் பெருக்கத்துக்காக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி கடந்த 61 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளை கடல் கரையோரத்தில் நிறுத்தி பாதுகாத்து வந்தனர். மேலும் இந்த மீன்பிடி தடைக்காலத்தில் படகுகளை சீரமைப்பது, மீன்பிடி சாதனங்களை புதுப்பிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததால் பாம்பன், சென்னை காசிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
காஷ்மீரில் வங்கி மேலாளரை படுகொலை செய்த தீவிரவாதி சுட்டுக் கொலை
காஷ்மீரில் கடந்த 2ஆம் வங்கி மேலாளரை படுகொலை செய்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் அரே மோகன்போரா பகுதியில் எலக்கி டெஹாட்டி வங்கிக் கிளை உள்ளது. கடந்த 2ஆம் தேதி தீவிரவாதி ஒருவர் இந்த வங்கிக் கிளைக்குள் நுழைந்து, மேலாளர் விஜய்குமாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் படுகாயம் அடைந்த விஜய்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் இன்று காலை நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த ஜன் முகமது லோன் எனத் தெரியவந்துள்ளது. இந்தத் தீவிரவாதிதான் வங்கி மேலாளரை சுட்டுக் கொன்ற நபர் என்பதும் உறுதியாகியுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு தீவிரவாதியின் அடையாளம் இன்னும் உறுதியாகவில்லை.