No menu items!

வாவ் டூர்: பர்மாவில் விஜய் ரசிகை!

வாவ் டூர்: பர்மாவில் விஜய் ரசிகை!

நோயல் நடேசன், ஆஸ்திரேலியா

பர்மாவில் உள்ள புத்த ஆலயங்களில் எவற்றிலும் உண்டியல் இருப்பதில்லை. மேடையில் பெரிய தட்டு திறந்தபடியே இருக்கும். எல்லோரும் அதில் பணத்தை வைப்பார்கள். உண்டியல் வைத்து பூட்டு போடுவது மட்டுமல்லாமல், கேமரா வைத்து கண்காணிக்கும் கோயில்கள் எனது மனதில் வந்து போனது.

சந்தனம் பூசிய பெண்கள்!

பர்மாவை நினைத்தவுடன் பர்மாவில் இருந்து வெளியேறிய தமிழர்களால் சென்னையில் உருவாகிய பர்மா பஜார்தான் எனது நினைவுக்கு வரும். பர்மாவிலிருந்து இந்தியர்கள் வெளியேறியதை வைத்து அலங்கோலமாக எடுக்கப்படம் சமீபத்திய தமிழ்ப் படம் ஒன்றும் சிலருக்கு நினைவுக்கு வரலாம். ஆனால், பர்மா சென்றதும் எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது, ஆங்கிலேயரினது காலனி நாடுகளில் எல்லாம் காணப்படும் இடது பக்கமாக வாகனங்கள் ஓடும் பாதை பர்மாவில் இல்லாதிருந்ததுதான். யங்கோனில் இறங்கியவுடனே அவர்கள் வாகனத்தை செலுத்தும்விதம் ஆச்சரியத்தை கொடுத்தது.

யங்கூனின் சர்வதேச விமான நிலையம் மிகவும் சிறியது. இலகுவான சுங்கச் சோதனைகள், வரவேற்கும் புன்னகைகளின் பின்பாக, பர்மா பணமாகிய கயற் (Kyat) பெறுவதற்காக சென்றபோது கை நிறைந்த பணம் கிடைத்தது. ஒரு அமெரிக்கன் டாலர் கிட்டத்தட்ட ஆயிரம் பர்மா கயற்கள்.

வெளியே சென்றபோது புதிதாக விமானநிலையம் நிர்மாணிப்பது தெரிந்தது. மற்றைய தென்கிழக்காசிய நாடுகளோடு ஒப்பிடும்போது கால்நூற்றாண்டு அல்லது அதற்கு மேலாக பர்மா பின்தங்கித்தான் உள்ளது.

எங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக பர்மாவில் எங்கும் இராணுவமோ பொலிசோ தென்படவில்லை. எங்கும் கட்டிடங்கள் கட்டிக் கொண்டிருந்தார்கள். கட்டப்படும் உயர்ந்த கட்டிடங்களை இரும்பு சிலாகை கொண்டு மறைத்திருந்தார்கள். பாதையோரங்களில் லொறிகளும் உயரமான பாரம் தூக்கிகளும் நின்றன. சீமெந்தும் தண்ணீரும் கலந்து பாதையில் ஓடியது. சில பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. கட்டிடத் தொழிலாளர்களை எங்கும் பார்க்க முடிந்தது. யங்கூன் தொலைத்த காலங்களை அவசரமாக தேடுவதுபோல் தெரிந்தது. பர்மாவின் மத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட நய்பிடோ (Naypyidaw) அரச தலைநகரமாக ஆக்கப்பட்டதால், ரங்கூன் தற்பொழுது யங்கூன் என்ற பெயரில் வர்த்தக தலைநகரமாக இயங்குகிறது.

யங்கூன் வீதி வழியாக சென்றபோது வழியில் சந்திந்த பெண்கள் யாவரும் வயது வித்தியசமின்றி முகத்தில் சந்தனம்போல் எதனையோ பூசி கன்னத்தை அலங்கரித்திருந்தார்கள். அதைப் பற்றிக் கேட்டபோது அது அலங்காரத்திற்கு மட்டுமல்ல வெய்யிலின் தாக்கத்தை தடுக்கும் சன் கிரீமாகவும் பாவிக்கிறார்கள் என்றார் எமது வழிகாட்டி

தனகா எனப்படும் இந்த மரம் சந்தனமரத்திற்கு ஒப்பானது. ஆனால், சிறிது விலை குறைந்தது. சந்தைகளில் மரத் துண்டுகளாகவும் கிரீமாக குப்பிகளிலும் விற்கப்படுகிறது.

பெண்களிடம் அதிலும் மத்திய மற்றும் முதிய பெண்களிடம் பாக்கு வெற்றிலை போடும் பழக்கத்தை அதிகமாக பார்த்தேன். மேற்கத்தைய அழகு சாதனங்கள் இன்னும் ஊடுருவாத நாட்டிற்கு போயிருந்தேன் என்பது எனக்கு சந்தோசமாகவும் இருந்தது. எந்தவொரு தென் கிழக்காசிய நாடுகளிலும் இந்த நிலமையில்லை.

பாதையோரத்துக் கடைகள் அதிக பொருட்களற்று இருந்தன. நடைபாதைக் கடைகளில் இருந்த பொருட்கள் சீனாவில் இருந்து வந்தவை. அதிக அளவில் புத்தகங்களோ அல்லது புத்தகக் கடைகளோ அங்கு இல்லை.

பர்மாவில் விஜய் ரசிகை

யங்கூனின் மத்திய பகுதியில் உள்ள பூங்காவில் சுதந்திர சதுக்கம் இருந்தது. அதன் மத்தியில் உயரமான தூண் அமைந்திருந்த ஸ்தம்பத்தினருகே நின்றபோது ஒரு இந்திய இளம்பெண் வந்து பர்மா சம்பந்தமான வர்ணப் புகைப்படங்களை எங்களுக்கு விற்க முனைந்தாள். அந்தப் பெண்ணுடன் பேசிய போது அவள் இந்தியப் தமிழ்ப் பெண் என்றாள். நடிகர் விஜய்யின் ரசிகை என்றும் கடைசியாக ‘வேட்டைக்காரன்’ பார்த்ததாக சொல்லியதுடன் தனக்கு தமிழ் பேசத் தெரியாது என்றும் சொன்ன அவள், ஆங்கிலம் நன்றாகப் பேசினாள். மாதுரி என்ற பெயருடைய அந்தத் தமிழ்ப் பெண் எங்களுக்கு பர்மாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை போட்டோக்களாக விற்றாள். எங்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டாள்.

இந்தியப் படங்கள் தியேட்டர்களில் ஓடுவதைப் பார்க்க முடிந்தது. தற்போது பர்மாவில் வாழும் இந்தியர்கள் பர்மீய அடையாளத்துடன் வாழ்வதாகத் தெரிகிறது.

இந்திய மொழிகள் எதுவும் அங்கு கல்வித் திட்டத்தில் இல்லை. தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்கு இரவு மற்றும் வார விடுமுறை நாட்களில் தமிழ் கற்பிப்பதாக ஒருவர் சொன்னார்.

எங்களது ஹோட்டலின் மிக அருகில் இஸ்லாமிய பள்ளிவாசல், அதற்கு எதிரே பகோடா இருந்தது. சிறிது தூரத்தில் கிருஷ்ணர் கோவிலும் மேலும் சற்றுத் தூரத்தில் முத்துமாரியம்மன் மற்றும் சுப்பிரமணியர் கோவில்களும் இருந்தன. இந்தியா, இலங்கையில் தென்படும் சமூக சூழ்நிலையை காணமுடிந்தது. என்னுடன் வந்த மனைவியும் நண்பர்களும் கோவில் உள்ளே பிரார்த்தனைக்காக சென்றபோது நான் வெளியில் நின்றவர்களிடம் இந்தச் சிலைகள் உள்ளுரில் செய்ததா அல்லது இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டதா எனக்கேட்டேன். உள்ளுரில் கலைஞர்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.

கோவிலின் அறிவிப்புப் பலகையில் இந்தியத் திருத்தலங்களின் யாத்திரை பற்றிய விடயம் தமிழில் எழுதப்பட்டிருந்தது. கோவில் பூசை பற்றி தமிழில் எழுதியிருந்தார்கள். கோவில்கள் உள்ளும் புறமும் மிகவும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருந்தன.

கடைத்தெருக்களில் பார்த்தபோது பல இந்தியர்கள் இரும்புக் கடைகளை வைத்திருந்தார்கள். எமது வழிகாட்டி, ‘‘இரும்பு மற்றும் கனரக வியாரங்களை இந்தியர்கள் செய்கிறார்கள். அவர்களே சிறந்த மெகானிக்குகள்’” என்றான். நாங்கள் தேடிப் பேசிய பல இந்தியர்கள் தமிழர்களாகவும் முஸ்லீம்கள் வங்களிகளாகவும் இருந்தார்கள். பெரும்பாலானவர்கள் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பதாக கூறினார்கள். அடுக்குமாடி குடியிருப்புகள் பலவற்றில் அவர்கள் இருப்பதாக தெரிந்தது. இரங்கூன் வீதியில் தலையை மூடியபடி இந்திய முகத்துடன் ஒரு இஸ்லாமிய பெண் எதிரில் வந்தாள்.

பல வருடங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அங் சான் சூ சி வீடு யங்கூனில் இருந்தது.

நாங்கள் அங்கு போனபோது சீனாவில் இருந்து வந்த பயணிகள் கூடி நின்றார்கள். அதிகமாக பர்மாவுக்கு உல்லாசப் பிரயாணிகளாக வருபவர்கள் சீனர்கள். இரண்டாவது மூன்றாவது இடத்தில் தாய்லாந்து, ஜப்பான் என அதிகமானோர் ஆசியர்கள்தான் வருகிறார்கள். மேற்கு நாட்டவர்களது தொகை இன்னமும் குறிப்பிடும் அளவில் இல்லை என்றார் எமது வழிகாட்டி.

ங் சான் சூ சியின் வீடு

அங் சான் சூ சியின் வீட்டின் முன்பாக நின்று பலர் படம் எடுத்துக் கொண்டார்கள். நாங்கள் வந்த சிறிது நேரத்தில மூடியிருந்த அந்த வீட்டின் கம்பவுணட் கதவு திறந்துகொண்டது.

பின்னர், நாங்கள் அருகாமையில் இருந்த பிரபலமான புத்தர் சயனத்தில் இருக்கும் பகோடாவுக்கு சென்றோம் (The Chauk Htut Gyi pagoda in Yangon)). 230 அடி நீளமான இது பர்மா சுதந்திரமடைந்த பின்பாக கட்டப்பட்டது. புத்தரின் பாதத்தில் உள்ள ரேகைகளை பெரிதாக்கியிருந்தார்கள். அது மற்ற இடங்களில் பார்க்காத விடயம்.

பர்மாவில் உள்ள புத்த ஆலயங்களில் எவற்றிலும் உண்டியல் இருப்பதில்லை. மேடையில் பெரிய தட்டு திறந்தபடியே இருக்கும். எல்லோரும் அதில் பணத்தை வைப்பார்கள். உண்டியல் வைத்து பூட்டு போடுவது மட்டுமல்லாமல், கேமரா வைத்து கண்காணிக்கும்

அவுஸ்திரேலியா போன்ற செல்வந்த நாடுகளில்கூட உண்டியல்கள் திருடுவது நடக்கிறது. ஆனால், வறியநாடான பர்மாவில் ஆலயங்களில் பணம் திருட்டுப் போவதில்லை என்பதில் இருந்து, வறுமை மட்டும் குற்றங்களுக்கு காரணம் அல்ல என்பது புரிந்தது. திருட்டு கலாச்சாரத்தின் கூறு என்பதை புறக்கணிக்க முடியாது.

பர்மா ஏழைநாடாக இருந்தபோதும் மிகவும் சுத்தமான நாடு. அதிலும் பகோடா அமைந்த இடங்கள் தொடர்ச்சியாக சுத்தப்படுத்தப்படுகின்றன. நாங்கள் சென்றபோது பல பெண்கள் புல்லால் உருவாக்கப்பட்ட துடைப்பங்களால் பளிங்குத் தரையை சுத்தமாக்குவதை, ஒரு பிரார்த்தனையாக, வரிசையில் நின்று தேவதைகளின் நடன அசைவு போல் செய்தார்கள். தமிழக இந்துக் கோயில்களிலும் இப்படியான பிரார்த்தனை வடிவம் இருந்தால் நன்றாக இருக்கும். குறைந்தபட்சம் புதிய சாமியார்களாவது கோயில்களை சுத்தப்படுத்துவதை பிரார்த்தனையாக செய்தால் மேலதிக புண்ணியம் கிடைக்கும்.

யங்கூன் என்ற இரங்கூனில் இரண்டு இரவுகள் தங்கிவிட்டு மண்டலே போனோம். மற்றைய நாடுகளில் காணப்படும் விமானப் போக்குவரத்து ஒழுங்குகள் இங்கு இருக்கவில்லை. காய்கறிச் சந்தைக்குள் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டது. எங்கள் பொதிகள் ஒரு இடத்தில், நாங்கள் வேறு ஒரு இடத்தில். எங்களுக்கென தனியான விமான சீட்டு இல்லை. யாரிடம் கேட்பது எனப் புரியவில்லை. ஆங்கிலத்தில் கேட்டாலும் புரியுமா? கண்ணைக் கட்டி காட்டில் விட்டது என்பார்களே! அதேபோல் திகைத்த எங்களுக்கு, சில நிமிட நேரத்தில் எங்கள் பயண முகவர் நற்பேறு அளிப்பதற்கு வந்த அவதாரமாக தோன்றினார். ஆறுதல் அடைந்தோம்.

மண்டலே, பர்மாவின் இரண்டாவது பெரிய நகரம். நாங்கள் சென்றபோது கோடை வெப்பத்தால் ஊர் காய்ந்திருந்தது.

மண்டலே அரண்மனை, இரண்டு மைல் நீளமான நான்கு சுற்று மதில்கள், அவற்றை சுற்றி நீர் நிறைந்த அகழி என்பவற்றின் மத்தியில் மிகப் அழகான பெரிய மாளிகையாக இருந்தது. அதில் நீதிமன்றம், அரசனது கொலுமண்டபம், நாணயசாலை எனப்பல பிரிவுகள் இருந்தது. ஆனாலும், தற்போது பார்ப்பது பழைய மாளிகையின் மாடல் மட்டுமே என்று எமது வழிகாட்டி சொன்னார். அழிந்ததை புதுப்பிக்க முடியாத போதிலும் அதனது மாதிரியை வைத்திருந்ததில் இருந்து அக்கால வாழ்வை புரிந்து கொளளமுடிந்தது.

உலகின் மிகப் பெரிய புத்தகம்

மண்டலே அரண்மனையில் முதலாவது மனைவி, இரண்டாவது மனைவிக்கு எனப் பல அறைகள் இருந்தன. மின்டோன் அரசனுக்கு பல மனைவியர் எண்ணற்ற பிள்ளைகள் இவர்களையெல்லாம் ஒரு அரண்மனையில் வைத்திருந்ததே அரசின் வீழ்ச்சிக்கு காரணம் என வழிகாட்டி சொன்னார். பிற்காலத்தில் பர்மாவை கைப்பற்றிய ஜப்பானியர் தங்களது ஆயுதக் கிடங்காகவும் மற்றும் பண்டக சாலையாகவும் மண்டலே அரண்மனையை வைத்திருந்தபோது,

முழு தேக்கு மரத்தால் கட்டப்பட்டிருந்த அரண்மனையை, இரண்டாம் உலக யுத்தத்தில் பிரிட்டீஷ்காரர்கள் குண்டு வீசி அழித்தார்கள்.

காவல்கோபுரம், நாணயசாலை மட்டும் அழிவில் இருந்து தப்பியது.

நாங்கள் மண்டலேயில் சென்ற இன்னுமொரு இடம் குத்தோடோ விகாரையும் அதைச் சுற்றி சிறிய விகாரைகளும் அமைந்த இடம். அதுவும் மின்டோன் அரசனால் உருவாக்கப்பட்டது. 729 பளிங்குகற்களில் புத்தரின் போதனைகள் (திரிபீடகம்) பளிங்கு கற்களில் எழுதப்பட்டு அவற்றை விஹாரைகளாக்கி இருக்கிறார்கள். அவை ஒவ்வொன்றாக வரிசையில் அமைக்கப்பட்டிருக்கிறது. (Kuthodaw). அதை உலகின் மிகவும் பெரிய புத்தகம் என்கிறார்கள்.

மண்டலேயில் உலக புத்த கலாச்சார நிலையம் உள்ளது. அதில் பாகிஸ்தான், ஜப்பான், சீனா என உலகம் முழுவதும் உள்ள புத்தரின் உருவங்கள் சித்திரங்களாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் இருந்த புத்தரின் முகங்கள் வேறு வகையானவை. பர்மாவில் ஆரம்பகால புத்தரின் சிலைக்கும் பிற்காலத்தில் அமைந்த சிலைக்கும் வித்தியாசம் உள்ளது.

சகங் குன்று (Sagaing Hill) என்ற பகுதியில், ஐராவதி நதியின் மேல் இரண்டு கிலோமீட்டர் நீளமான தேக்கு மரத்திலான ஒரு மரப்பாலம் அமைந்துள்ளது. அதன் மீது நடந்து கொண்டு உல்லாசப் பிரயாணிகள் சூரிய அஸ்தமனம் பார்க்கிறார்கள். நாங்கள் செல்லும் போது சற்றுத் தாமதமாகிவிட்டது. பாலத்தில் நடக்காமல் கீழிருந்து பார்த்தோம்.

பெரும்பாலான இடங்களில் குறைந்தது ஒரு கிலோ மீட்டர் அகலமானதும் 2170 கிலோமீட்டர் நீளமான ஐராவதி நதி பர்மாவை இரண்டாக பிரிக்கிறது. இமயமலையின் தென்பகுதியில் இருந்து வரும் இந்த ஆறு முழுமையாக பார்மாவூடாக பாய்ந்து இந்து சமுத்திரத்தில் விழுகிறது.

கோடையிலும் பெருகி ஓடும் ஐராவதி நதி

ஐராவதியின் முக்கியமான விடயம் இன்னமும் ஆற்றுக்கு குறுக்கே அணைகள் கட்டுப்படாத படியால் ஆறு பெருகி அகலமாகவும் ஆழமாகவும் ஓடுவது. பல ஆறுகள் கோடையில் வறண்டு நதி என பெயரெடுக்க, மழைக் காலத்திற்காக காத்திருக்க வேண்டிய வேளையில், கோடையிலும் பெருகி ஓடுகிறது ஐராவதி நதி. புதிய அரசாங்கம் அபிவிரித்தி என்று வந்து அணைகள் பெருகினால் எங்வளவு காலம் நீடிக்குமோ?

அடுத்து பகான் சென்றோம். அதற்கு முன்பு ஒரு விஷயம்… மண்டலே, இரங்கூன் இரண்டு நகரங்களும் கோடைகாலத்தில் அதிக வெப்பமானவை. எனவே, வருவதாக இருந்தால் கோடைகாலத்தை தவிர்த்துவிடுங்கள்.

மண்டலேயில் இருந்து பகான்வரை கரையெங்கும் புத்தவிகாரைகள்; புத்த குருமார்க்கான மடாலயங்களும் சிறிதும் பெரிதுமாக வெள்ளையிலும் மஞ்சளிலும் நிறைந்திருக்கிறது.

கரையெங்கும் பெண்கள் குறுக்கு கட்டியபடி குளிப்பதும் அவர்களை சுற்றி ஆடு, மாடுகள் மற்றும் நாய்களும் என நிற்பதும் தென்னிலங்கையை நினைவுக்கு கொண்டு வந்தது.

இரவில் ஆற்றில் பயணம் செய்தால் புத்தகுருமார் பாலி மொழி பாடல் உச்சரிப்பது கேட்குமென்றார்கள். அந்த அதிஸ்டமில்லை எங்களுக்கு.

ஆற்றில் பல உல்லாசப பிரயாணிகளுக்கான சொகுசுப் படகுகள், மீனவர்களின் படகுகள்; அத்துடன் பெரிய கப்பல்களும் தேக்கு மற்றும் கரி போன்ற தாதுப்பொருட்களை ஏற்றியபடி நிறைமாதப் பெண்ணாக மிதந்தன. இந்த ஆற்றின் வழியாக சீனாவின் எல்லையிலிருந்து இரங்கூன் வரையும் கப்பல் போக்குவரத்து செய்ய முடியும். வீதிப் போக்குவரத்தை விட இலகுவானதாகவும் அமைதியாகவும இந்த ஆற்றப் பயணம் இருநதது.

பர்மாவே பிரித்தானியர் காலத்தில் உலகத்தில் அதிக அளவு அரிசியை ஏற்றுமதி செய்த நாடு. அதற்கு காரணம் இந்த ஐராவதியே. நாங்கள் பார்த்தபோது பல இடங்களில் கரையெங்கும் கடலை, அவரை என ஏராளமான மரக்கறி வகைகள் பயிரிடப்பட்டிருந்தன.

நதிக்கரையில் இறங்கியதும் வரிசையாக இளம்பெண்கள் நெக்லசுகளை விற்பதற்கு காத்திருந்தார்கள். அவர்களைத் தவிர்த்து ஹோட்டேலுக்கு சென்றோம்.

பர்மியரின் உணவில் நம்மைப போல் அரிசி முக்கியமானது. கறி வகைகள் உண்டு. ஆனால், காரம் குறைவு. நாம் அதிகம் போடும்படி கேட்டால் போடுவார்கள். பகானில் ஒரு ரெஸ்டாரண்டில் இருந்தபோது ஐரோப்பிய இளம் பெண் அதிக காரத்தை தின்றதால் கண்ணீர மல்கி மூச்சுத் திணறியபடி இருந்தாள். தனது நிலையை அவளால் பர்மியருக்கு சொல்லிப் புரியவைகக முடியவில்லை. அந்த சந்தர்பத்தில் இனிப்புகளை தின்னும்படி சொல்லி நான் உதவினேன். உறைப்பை கேட்டால் எவ்வளவு போடுவது என்பது பர்மியருக்கு தெரியவில்லை அதேபோல் ஐரோப்பியர் பலர் உறைப்பை விரும்பி உண்டு அவஸ்தைப்படுவதை பார்த்திருக்கிறேன்.

குடிபானங்கள் அதிகமில்லாத நாடு பர்மா. ஆனால், தற்பொழுது இளைஞர்களிடையே பியர் பிரபலமாகி உள்ளது. பியர் கடைகள் பல உள்ளன. பியர்கள் பல உள்ளுரில் வடிக்கப்பட்டாலும் மியான்மார் பியரே எனக்கு பிடித்தது.

பகானில் எனக்குப் பிடித்தது ஆனந்தாவிகாரை (Ananda Temple). 1090ல் அமைக்கப்படட இது கவுதம புத்தரின் பிரதம சீடன் ஆனந்தவின் பெயரில் கட்டப்பட்டது. இதனது கட்டுமானமத்தைப் பார்த்தால் அக்காலத்து இந்திய கோயில்களை நினைவுக்கு கொண்டுவரும். இதை ஆராய்ச்சியாளர்கள், பர்மாவில் கட்டப்பட்ட இந்திய விகாரை என்கிறார்கள். இந்த விகாரையை கட்டிய கட்டடிடக் கலைஞர்கள் நிச்சயமாக இந்திய கலைஞர்களாக இருக்கவேண்டும். வேறு எங்கும் இதேபோல் ஒன்றைக் கட்டாமலிருக்க இந்தக் கலைஞரகள் பர்மிய அரசனால் கொலை செய்யப்பட்டதாக கதை உள்ளது. விகாரையின் உள்ள நான்கு புத்தர்களின் சிலைகள் வெவ்வேறு முத்திரைகளுடன் உள்ளன. பார்ப்பதற்கு மிகவும் அழகான கட்டிடம்.

பகானில் ஒரு கிரமத்திற்கு அழைத்து சென்றபோது அங்கு கண்ட காட்சிகள் இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் காட்சிகளை காட்டியது. ஐம்பது வருடங்கள் முன்பாக நான் சிறுவயதில் எழுவைதீவில் கண்டது, கொல்லன் துருத்தி. பர்மா, பகானில் தோட்ட செய்கைக்கான ஏர் போன்றவற்றையும் வண்டி சக்கரத்தின் வளையங்களையும் தயாரிப்பதில் ஆணும் பெண்ணுமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அதேபோல் வெள்ளி, தங்கம் மிகவும் அதிகமாக கிடைப்பதால் இந்த தொழிலாளர்கள் இன்னமும் கைளால் செய்கிறார்கள். இந்த கிராமமும் உல்லாசப் பிரயாணிகளுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் பலநாடுகளில் மறைந்துவிட்ட விடயங்கள் இங்கே பார்க்க முடிந்தது.

பர்மாவில் அதிசயிக்க வைத்த மற்றொரு விஷயம் மிகவும் அமைதியாக வரவேற்கும் அவர்கள் தன்மை. பர்மியர்கள் பேசும்போது உரத்துப் பேசுவதில்லை. எல்லாவற்றிற்கும் மேல், தமிழ்நாடு மற்றும் இலங்கை தமிழர்களுக்கு ஒரு சௌகரியம் பர்மாவில் இருக்கிறது, அதாவது நமது ஊர் போன்று சாரம் (லுங்கி) அணிந்தபடி எங்கும் செல்லமுடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...