வதந்தி (தமிழ் வெப் சீரிஸ்) – அமேசான் ப்ரைம்
அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ள இந்த வலைதளத் தொடரில் எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா, விவேக் பிரசன்னா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார்.
கன்னியாகுமரியில் சினிமா படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். ஆரம்பத்தில் அவர் அந்த படத்தின் ஹீரோயின் என்று கருதப்படுகிறார். பின்னர்தான் அவர் ஹீரோயின் அல்ல, அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் என்பது தெரியவருகிறது. அந்த பெண்ணின் கொலைவழக்கை விசாரிக்க எஸ்.ஜே.சூர்யா நியமிக்கப்படுகிறார். அவர் எப்படி இந்த கொலையை கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இத்தொடரின் கதை. பரபரப்பான க்ரைம் தில்லர்களை விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற வெப் தொடராக இது இருக்கிறது.
காட்ஃபாதர் (தெலுங்கு) – நெட்பிளிக்ஸ்
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் ஹிட் அடித்த ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு பதிப்புதான் ‘காட்ஃபாதர்’. ஆனால் மலையாள லூசிபரைவிட இதில் காரமும் மசாலாவும் அதிகம். சிரஞ்சீவி, சல்மான்கான், நயன்தாரா என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளது.
மக்களுக்கு பிடித்த மாநில முதல்வர் மரணமடைய அதை தனக்கு சாதமாக்கிக்கொள்ள நினைக்கிறார் மாஃபியா கும்பலைச் சேர்ந்த அவரது மருமகன். அவரது அந்த முயற்சிகளை முதல்வரின் வளர்ப்பு மகனாக கருதப்படும் அரசியல்வாதி எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. வசூல் ரீதியாக சிரஞ்சீவிக்கு பெரும் வெற்றியைக் கொடுத்துள்ள இப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்போது வெளியாகி இருக்கிறது. தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படம் ஆக்ஷன் பிரியர்களுக்கான விருந்து.
அப்பன் (மலையாளம்) – சோனி லைவ்
இடுப்புக்கு கீழ் செயலிழந்து படுத்த படுக்கையாகக் கிடக்கும் அப்பா. அவர் எப்போது சாவார் என்று காத்துக் கிடக்கும் குடும்பம். சிறுவயதில் ஒரு தாதாவாக ஊருக்கெல்லாம் கெட்டது செய்த அவரை போட்டுத்தள்ள காத்திருக்கும் ஊர் மக்கள் ஆகியோரைச் சுற்றி நகர்கிறது கதை.
பொதுவாக சினிமாக்களில் செண்டிமெண்டான அப்பாவைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இதில் வரும் அப்பா, அதற்கெல்லாம் நேர் மாறானவர். குடும்பம் என்ன ஆனாலும் தான் மட்டும் சவுக்கியமாக வாழவேண்டும் என்று நினைப்பவர். மரணப்படுக்கையில் கிடக்கும் நிலையிலும், தன் சின்ன பழைய ஆசை நாயகியை படுக்கை அறைக்குள் கொண்டுவந்தால்தான் சொத்தை எழுதிக் கொடுப்பேன் என்று வீம்பு பிடிப்பவர். இப்படிப்பட்ட அப்பா கதாபாத்திரத்தை தத்ரூபமாக செய்துள்ளார் அலென்சியர் லே லோபஸ்.
அப்பாவைக் கொல்லவும் மனமில்லாமல், அதேநேரத்தில் அவர் போட்டும் ஆட்டங்களால் மனம் வெதும்பும் மகனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சன்னி வெய்ன். வித்தியாசமான கதையை விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற படம் இது.
Mickey: The Story of a Mouse (ஆங்கிலம்) (டிஸ்னி ஹாட்ஸ்டார்)
குழந்தைகளின் மனம்கவர்ந்த கார்ட்டூன் கதாபாத்திரங்களில் ஒன்று மிக்கி மவுஸ். மிக்கி கதாஅபாத்திரம் உருவாகி 100-வது ஆண்டை எட்டும் நிலையில், அது கடந்துகடந்துவந்தை பாதையை மையமாக வைத்து இந்த டாக்குமெண்டரி படத்தை எடுத்துள்ளனர். இந்த டாக்குமெண்டரி படம் இப்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
டிஸ்னி கதாபாத்திரத்தின் தொடக்கம். ஆரம்பம் முதல் இதுவரை இந்த கதாபாத்திரம் சந்தித்த மாற்றங்கள் என பல விஷயங்களை இந்த டாக்குமெண்டரி எடுத்துச் சொல்கிறது.