No menu items!

சீமான் அவங்களுக்கு குரல் கொடுப்பாரா? – கே.பாண்டியராஜன்

சீமான் அவங்களுக்கு குரல் கொடுப்பாரா? – கே.பாண்டியராஜன்

சென்னையை அடுத்த ஆவடியில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் தமிழக போலீஸாரை சில வட மாநில தொழிலாளர்கள் தாக்கினர். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்காளுக்கு பர்மிட் முறை கொண்டுவர வேண்டும் என்று சீமான் கூறியிருந்தார். வடமாநில தொழிலாளர்களால் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். இதுபற்றி தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், மாஃபா நிறுவனத்தின் நிர்வாக தலைவருமான கே.பாண்டியராஜனிடம் கேட்டோம்…

வடமாநில தொழிலாளர்களின் வருகையால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?

நாம் இப்படி நினைப்பது தவறு. வட மாநில தொழிலாளர்கள் எப்படி அங்கிருந்து இங்கு வந்து வேலை பார்க்கிறார்களோ, அதேபோல் தமிழர்களும் இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வேலை பார்க்கிறார்கள். வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, வேறு நாடுகளுக்கும் வேலைக்காக செல்கிறார்கள். உதாரணமாக அமெரிக்காவில் இருக்கும் 6 லட்சம் இந்தியர்களில் 1 லட்சம் பேர் தமிழர்கள் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பல தமிழர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள். இங்குள்ள மற்ற மாநிலங்களில் வேலை பார்க்கும் தமிழர்களின் எண்ணிக்கை 50 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும். அதே எண்ணிக்கையில்தான் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்த குடிமகனுக்கும், மற்ற எந்த மாநிலத்துக்கும் சென்று வேலைபார்க்கும் உரிமை இருக்கிறது. இதனால் தமிழர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய வேலைக்கு தமிழே தெரியாதவர்களை நியமிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் வேலை செய்ய வருபவர்கள் தமிழை கற்றுக்கொண்டு வரவேண்டும் என்பதே என் கருத்து. அதிலும் தமிழ் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள வேண்டிய பணியில் இருப்பவர்கள் கட்டாயம் தமிழ் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

வட மாநில தொழிலாளர்களை நம் மாநிலத்தில் உள்ள முதலாளிகள் exploit செய்கிறார்களா? அதிக நேரம் வேலை பார்க்க அவர்களை கட்டாயப்படுத்துகிறார்களா?

இந்த காலகட்டத்தில் யாரும், யாரையும் exploit செய்ய முடியாது. வடமாநில தொழிலாளர்களுக்கு நிறைய optionகள் இருக்கின்றன. குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் அவர்களுக்கு வேலைகள் நிறைய கிடைக்கின்றன. அதனால் இங்குள்ள முதலாளிகள் அவர்களை அதிகம் வேலைவாங்குவதாகச் சொல்ல முடியாது. திருப்பூரில் உள்ள மில்களில் நம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எவ்வளவு மணி நேரம் வேலை பார்க்கிறார்களோ, அதே அளவுதான் வடமாநில தொழிலாளர்களும் வேலை பார்க்கிறார்கள். அங்குள்ள தொழில் நிறுவனங்களிலும் தொழிற்சங்கங்கள் உள்ளன. வடமாநில தொழிலாளர்களை அதிக நேரம் வாங்க அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

வடமாநில தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை பார்ப்பதால் தமிழகம் உற்பத்தி துறையில் சிறந்து விளங்குகிறது. அதனால் அவர்கள் இங்கு வந்து வேலை பார்க்க கூடாது என்று சொல்லக் கூடாது. அதேநேரத்தில் மற்ற மாநிலங்களில் சென்று வேலை பார்க்கும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளிகளின் நலனையும் காக்க வேண்டும். கேரள அரசு பிற மாநிலங்களில் வேலை பார்க்கும் மலையாள தொழிலாளர்களின் நலனுக்காக நார்கோ என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோன்ற அமைப்பை தமிழக அரசும் ஏற்படுத்தி பிற மாநிலங்களில் வேலை பார்க்கும் தமிழர்களின் நலனை பாதுகாக்க வேண்டும். அதேபோல் இங்கு வந்து வேலை பார்க்கும் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களின் நலனுக்கான அமைப்பை அம்மாநிலங்கள் ஏற்படுத்த வேண்டும். இதெல்லாம் பொருளாதார ரீதியாக இந்தியா வலுப்படுவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தும்.

இங்கு வந்து வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களுக்கு பர்மிட் முறையை கொண்டுவர வேண்டும் என்று சீமான் சொல்லி இருக்கிறாரே?

அவருடைய இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இங்கிருக்கும் தமிழர்களுக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர் சொல்கிறார். நான் அவரிடம் கேட்பதெல்லாம், நீங்கள் ஏன் வெளிமாநிலங்களில் வேலை பார்க்கும் தமிழர்களின் நலனைப் பற்றி பேசுவதில்லை என்றுதான். அவர்களும் தமிழ்ர்கள்தானே? அவர்களின் நலனைக் காக்கச் சொல்லி தமிழக அரசிடம் சொல்லுங்கள் அப்படிச் செய்தால், தமிழர்களின் நலனை உளகளாவிய அளவில் காக்க நீங்கள் போராடுவதாக நான் சொல்லுவேன்.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வேலைக்காக வரும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உருவாக்கி கொடுக்கவேண்டும். அவர்கள் தனியாக வந்து வேலை பார்ப்பதற்கு பதில் குடும்பத்தோடு வந்து வேலை பார்ப்பதற்கு வழி செய்ய வேண்டும். அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்கள் குடும்பத்தோடு வந்து தங்கி வேலை பார்த்தால் அவடியில் நடந்ததைப் போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பது குறையும்.

நம் நாட்டின் மிகப்பெரிய வலிமையே மனித வளம்தான். அந்த வளத்தை சிறப்பாக பயன்படுத்தி, நம் பொருளாதாரத்தை உயர்த்த, யாரும் எந்த மாநிலத்திலும் நிம்மதியாக வேலை பார்க்கலாம் என்ற சூழல் ஏற்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...