No menu items!

சாதிக்குமா சந்திராயன்-3?

சாதிக்குமா சந்திராயன்-3?

மோகன ரூபன்


‘நிலவுக்குப் போவோம், இடமொன்று பார்ப்போம், மாளிகை அமைப்போம்’ என்று நம்மவர்கள் சினிமா பாட்டு எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால், நிலாவுக்கு ஆளனுப்பி, கால்பதிப்பது அல்ல, நிலாவில் ஒரு கலத்தை தரையிறக்கிக் காட்டுவதே கூட பெரிய வேலைதான். ரஷியா, லூனா-9 என்ற கலத்தை நிலவில் தரையிறக்கிக் காட்டியது. 1966ல் அமெரிக்கா அதன் பங்குக்கு சர்வேயர்-1. சீனா அதன் பங்குக்கு சேங்-3. இப்போது இந்தியாவின் முறை. சந்திராயன்-3! இது மூன்றாவது முறையாக நிலவைத் தேடிப் போகும் இந்தியாவின் முயற்சி.

2008ஆம் ஆண்டு சந்திராயன்-1. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அப்போது பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஒரு விண்கலத்தை நிலாவின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. நிலாவை சந்திராயன்-1 வெற்றிகரமாக வலம் வந்த நிலையில், விண்கலத்தில் இருந்து இம்பாக்டர் துருவி ஒன்று நிலாவில் தரையிறங்க அனுப்பப்பட்டது. நிலாவில் நீர் மூலக்கூறுகள், ஹைட்ரோக்சில் இருப்பதை அந்த இம்பாக்டர் துருவி உறுதிப்படுத்தியது. அவ்வளவுதான் முற்றுப்பெற்றது சந்திராயன்-1.

அடுத்தகட்டமாக 2019ஆம் ஆண்டு ஜூலையில் சந்திராயன்-2. இந்தமுறை விக்ரம் என்கிற தரையிறங்கி லேண்டர் கருவி, விண்கலத்துடன் அனுப்பப்பட்டது. நிலவை 100 கி.மீ., தொலைவில் வெற்றிகரமாக விண்கலம் சுற்றிவந்தநிலையில் விக்ரம் தரையிறக்கப்பட்டது.

நிலாவில் பூமியைப் போல வாயுமண்டலம் இல்லை. அதனால், பாராசூட் மூலமாக பதமாக, மெதுவாக, பத்திரமாக ஒரு பொருளை தரையிறக்க முடியாது. நிலவின் தரையைத் தொட 2.1 கி.மீ. தூரம் இருந்தபோது விக்ரம் லேண்டரின் வேகக்குறைப்புக் கருவிகள் சரிவர வேலை செய்யவில்லை. விளைவு? விக்ரம் மோதி தரையிறங்கி செயலிழந்தது. நிலவின் தூசி வேறு விக்ரமின் சென்சர்களின் கண்களை மூடியிருக்க வேண்டும். விக்ரமிடம் இருந்து பேச்சுமூச்சு இல்லை. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது இந்தியாவுக்கும், இஸ்ரோவுக்கும் ஒருவகை யில் பெரிய ஏமாற்றம்தான்.

இந்தநிலையில், மூன்றாவது கட்டமாக நிலவில், ஓர் ஆய்வுக்கலத்தைத் தரையிறக்கியே தீருவது என்ற முடிவோடு களமிறங்கியது இஸ்ரோ. நிலவை நோக்கி, 7 விதமான ஆய்வுக் கருவிகளுடன் 3,895 கிலோ எடையுள்ள ஒரு விண்கலம், அதை சுமந்து செல்ல அசுர சக்தியுள்ள ஜியோ சின்குரோ னைஸ் சேட்டிலைட் லாஞ்சர் எனப்படும் பாகுபலி எம்.கே.111 (எல்.வி.எம்.-3-எம் 4) ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வு மையத்தின் 2ஆவது தளத்தில இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு சீறிப்பாய்ந்தது இந்த ராக்கெட். புறப்பட்ட 16ஆவது நிமிடத்தில் ராக்கெட்டில் இருந்து புரபல்சன் மாட்யூல் என்கிற உந்துகலன் பிரிந்து கொண்டது. பிறகு பூமியை ஒரு ஐந்தாறு முறை வட்டம் அடித்து விட்டு நேராக நிலவை நோக்கி விரைய உள்ளது இந்த உந்துகலன்.

இந்த உந்துகலனுக்குள்தான் 1,752 கிலோ எடையுள்ள சின்ன கார் அளவுள்ள லேண்டர் தரையிறங்கும் கலன் இருக்கிறது. இந்த லேண்டர் கருவியின் பெயரும் விக்ரம்தான். பழைய விக்ரமைவிட, புதிய விக்ரம் 280 கிலோ கூடுதல் எடையுள்ளவர். பழைய விக்ரம் நிலவில் மோதி தகர்ந்து போனதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய விக்ரமில் அதிக எரிபொருள், கூடுதலாக 2 சென்சர்கள். பிறகு எடை கூடாதா என்ன?

நிலவை நோக்கிப்போன பிறகு நிலாவைச்சுற்றி உந்துகலன் வட்டமடிக்க இருக்கிறது. பிறகு நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட இருக்கிறது. அது அலுங்காமல் குலுங்காமல் தரையிறங்கியதும் லேண்டருக்கு உள்ளே இருந்து ரோபோட்டிக் ரோவர் கருவி வெளியே வரும்.

லேண்டர் கலம் ஆடாமல் அசையால் அப்படியே இருக்க, ரோவர் கருவி மட்டும் வளைக்குள் இருந்து வெளிவரும் எலியாக, நிலாத் தரையில் தட்பவெப்பம், நில அதிர்வு, மின்னோட்டம், கனிமம் போன்றவற்றை ஆராயும். அந்த தகவல்களை இஸ்ரோவுக்கு அனுப்பும். கடந்தமுறை லேண்டர் தரையில் மோதி செயல் இழந்ததுபோல இந்தமுறை ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஏராளமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உயரத்தை அளக்கும் கருவி, வெலாசிட்டி மீட்டர், நவீன கேமராக்கள், சென்சர்கள் என இந்தமுறை பக்கா ஏற்பாடு.

சரி. நிலவின் தென்துருவத்தில் ஏன் தரையிறங்க வேண்டும்? நிலவின் தென்துருவம் 14 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான ஒன்று. சூரிய ஒளி படவே படாத பெரிய பள்ளங்கள் இங்கே அதிகம். அதிக குளிர்நிறைந்த, இதுவரை ஆராயப்படாத பகுதி இது. இங்கே விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கினால், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் ஆய்வுக்கலம் விக்ரம்தான் என்ற பெயர் கிடைக்கும். இந்திய மக்களும், இஸ்ரோவும் சட்டைக்காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

ரஷியா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் தடம் பதித்த நான்காவது நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்குக் கிடைக்கும். சந்திராயன்-3ன் வெற்றி என்பது இந்தியாவின் விண்வெளி ஆய்வு நடவடிக்கையில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வாக மாறும். ஒட்டுமொத்த நாடும் அதற்காகத்தான் காத்திருக்கிறது.

சந்திராயன்-1, தமிழரான மயில்சாமி அண்ணாதுரையின் மேற்பார்வையில் நடந்தேறிய ஒன்று. சந்திராயன்-2, தமிழரான வனிதாவின் கண்காணிப்பில் நடைபெற்ற ஒன்று. தற்போது சந்திராயன்-3 விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழரான பி.வீரமுத்துவேலின் மேற்பார்வையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்று. சந்திராயன் நடவடிக்கைகளில் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரான கே.சிவனுக்கும் கணிசமான பங்கு உண்டு. இதனால் தமிழர்கள் இன்னும் அதிகமாக பெருமைபட்டுக் கொள்ளலாம்.

சந்திராயன்-3க்கான செலவு ரூ. 615 கோடி. அதிக செலவு பிடிக்கும் இதுபோன்ற விண்வெளி ஆய்வுகள் தேவையா என்ற கேள்வி ஒருபக்கம் இருக்கிறது. இதற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகள் பதில் வைத்திருக்கிறார்கள். ‘உலக அளவில் விண்வெளி ஆய்வுக்காக மொத்தம் 600 பில்லியன் டாலர்கள் அளவுக்கான தொகை செலவு செய்யப்படுகிறது. அதில் இந்தியாவின் பங்கு வெறும் 2 சதவிகிதம்தான்’ என்கிறார்கள் அவர்கள்.

எது எப்படியோ? சந்திராயன்-3 விண்ணதிர வெற்றிவாகை சூடட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...