ரன் பேபி ரன் (தமிழ்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
மருத்துவ உலகில் நடக்கும் கோல்மால்களை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஜெயன் கிருஷ்ணகுமார்.
தன்னை கொல்ல வருபவர்களிடம் இருந்து த காத்துக்கொள்ள ஆர்.ஜே.பாலாஜின் காரில் ஒளிந்துகொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆர்.ஜே.பாலாஜியும் அவருக்கு உதவுகிறார். ஆனால் அது அவருக்கு ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. அந்த சிக்கலில் இருந்து ஆர்.ஜே.பாலாஜியும், ஐஸ்வர்யா ராஜேஷும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
வழக்கமாக காமெடியில் கலக்கும் ஆர்.ஜே.பாலாஜி, இந்த படத்தில் அதற்கு நேர்மாறாக சீரியஸான பாத்திரத்தில் நடித்துள்ளார். சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என்று தெரிந்த பிறகு வெளிப்படுத்தும் பயம், சாக துணியும் விரக்தி, கோபம், வில்லன்களை தேடிப்பிடித்து பந்தாடுவது என்று புதிய பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷும் அவருக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார்.
த்ரில்லர் படத்தை பார்க்க விரும்புபவர்களுக்கான வீக் எண்ட் ட்ரீட் இந்தப் படம்.
தாஜ்- டிவைடட் பை பிளட் – வெப்சீரிஸ் (Taj: Divided by Blood – இந்தி) – ஜீ5
சலீம் – அனார்கலியின் அமர காதலை சக்ரவர்த்தி அக்பர் பிரிக்கும் பழைய காதல் கதைதான். ஆனால் இதில் அவர்களின் காதலை அக்பர் பிரித்ததற்கு ஒரு புது காரணத்தைச் சொல்கிறார்கள். அக்பரின் அரண்மனை தாசியாக இருந்தவள் அனார்கலி. அவள் மூலம் அக்பருக்கு ஒரு மகன் இருக்கிறான். சலீமுக்கு அனார்கலி சித்தி முறை என்பதால்தான் அந்த காதலை அக்பார் எதிர்த்தார் என்கிறது இந்த வேப்தொடர். நஸ்ருதீன் ஷா அக்பராக நடித்துள்ளார்.
சலீம் – அனார்கலியின் காதலுடன் அக்பர் புதிய மதத்தை தொடங்கியபோது நாட்டில் ஏற்பட்ட சலசலப்பு, சக்ரவர்த்தி பதவியை அடைய மொகாலய இளவரசர்களிடம் நடக்கும் போட்டி, அக்பரை எதிர்த்து நிற்கும் ராணா பிரதாப்பின் வீரம் போன்றவற்றையும் இந்த தொடரில் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக நம் குழந்தைகள் இந்த தொடரைப் பார்த்து சரித்திரத்தை தெரிந்துகொள்ளட்டும் என்று அவர்களை பக்கத்தில் வைத்து இத்தொடரை பார்க்க வேண்டாம். தொடரில் பல இடங்களில் அளவுக்கு மீறிய ஆபாச காட்சிகளும், வன்முறைக் காட்சிகளும் உள்ளன. அதனால் குழந்தைகள் அருகில் இல்லாத சூழலில் மட்டும் இந்த வெப் தொடரைப் பார்க்கலாம்.
இரட்டா – (IRATTA – நெட்பிளிக்ஸ்)
ஒரே காவல் சரகத்தில் வேலை பார்க்கும் 2 சகோதரர்கள் காவல் அதிகாரியாக பணியாற்றுகிறார்கள். இதில் ஒருவர் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துபோகிறார். அவரை கொல்ல முயன்றது யார் என்ற விசாரணை நட்க்கிறது. அருகில் இருந்த 3 போலீஸார், சகோதரர், மனைவி ஆகியோர் சந்தேக வளையத்தில் இருக்கிறார்கள். அவர்களில் யார் கொலை செய்தது. அந்த போலீஸ் அதிகாரி எப்படி இறந்தார் என்பதுதான் கதை.
பரபரப்பான க்ரைம் த்ரில்லரை சென்டிமெண்டாக முடித்திருக்கிறார்கள். படத்தின் உயிர் மூச்சே க்ளைமேக்ஸ்தான். ஜெகமே தந்திரம், ஜோசப் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜோஜு ஜார்ஜ்தான் ஹீரோ. நாயகனுக்கான உடற்கட்டு கொஞ்சமும் இல்லாமல் நடிப்பால் மட்டுமே ரசிகர்களை கட்டிப்போட முடியும் என்று இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறார் ஜோஜு ஜார்ஜ்.
தாதா ( Dada -தமிழ்) – அமேசான் ப்ரைம்
பிக் பாஸ் தொடர் மூலம் பிரபலமான கவின் நடித்துள்ள திரைப்படம் டாடா.
கவின் – அபர்ணா தாஸ் இருவரும் காதலர்கள். திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகும் அப்ர்ணா தாஸ், கருவைக் கலைக்க மறுத்து குழந்தை பெற்றுக்கொள்கிறார். ஆனால் குழந்தை பிறந்த பின்னும் கவின் ஊதாரித்தனமாக இருப்பதால் அவரிடமே குழந்தையை விட்டுவிட்டு பெற்றோருடன் செல்கிறார் அபர்ணா தாஸ். அவரால் குழந்தையை வளர்க்க முடிந்ததா…. அவர்கள் மீண்டும் இணைந்தார்களா என்பதுதான் படத்தின் கதை.
லவ் டுடே படத்தின் வரிசையில் இளம் தலைமுறையினரின் காதலைச் சொல்லும் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.