No menu items!

பாஜக போகும் அதிமுக அமைச்சர்கள் – மிஸ் ரகசியா

பாஜக போகும் அதிமுக அமைச்சர்கள் – மிஸ் ரகசியா

”ச்சே நம்ம நாடு ரொம்ப மோசமாகிட்டு வருது” என்று கோபமாய் உள்ளே நுழைந்தாள் ரகசியா.

“என்னாச்சு? ஏன் இத்தனை கோபம்?”

“ஹோலி கொண்டாடுறோம்னு ஃபாரின் பொண்ணுங்களையெல்லாம் அசிங்கப்படுத்தியிருக்காங்க…நீங்களே பாருங்க” என்று வீடியோக்களை காட்டினாள். பயங்கரமாக இருந்தது.

“என்ன பண்டிகையோ இது போற வர்றவங்களையெல்லாம் இழுத்து கட்டிப்பிடிச்சு கலர் பூசறது”

“நார்த் பத்தி எதுவும் பேசாதே…வம்புல மாட்டிப்போம் நம்ம ஊருக்கு வா.. பாஜகவுலருந்து கிளம்பிக்கிட்டே இருக்காங்களே. நட்டா வந்து இறங்கும்போதே கிருஷ்ணகிரில பாஜகவிலிருந்து விலகியிருக்காங்களே?”

“ஆமாம். ஆனா அதிமுகவிலருந்தும் பாஜகவுக்கு போக இருக்கிறவங்க பட்டியலும் நீளமா இருக்கு”

“யாரெல்லாம் போகப் போறாங்க?”

”செங்கோட்டையன் மகன் கதிர் ஈஸ்வரன்கிட்ட அண்ணாமலையே பேசி இருக்காராம். ‘பாரதிய ஜனதாவுக்கு வாங்க. உங்களுக்கு நல்ல எதிர்காலம் நிச்சயம்’னு உறுதி கொடுத்திருக்காராம்.”

“இவர் ஒண்ணும் பெரிய மீனா தெரியலையே?”

“பெரிய மீன்களுக்கும் அண்ணாமலை வலை விரிச்சிருக்கார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் அவங்களோட முதல் டார்கெட். அடுத்த டார்கெட் விஜயபாஸ்கர். கடந்த சில நாட்களாவே கட்சிப் பணிகள்ல விஜயபாஸ்கர் அதிக ஈடுபாடு காட்டாம இருக்கார். ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்துக்குகூட சரியா போகல. பாஜகவுக்கு வந்தா பெரிய பதவி தர்றதா அவர்கிட்ட பேசிட்டு இருக்காங்க. வழக்குகள்ல இருந்து தப்பிக்க இது ஒரு வாய்ப்பா இருக்கும்னு விஜய பாஸ்கரும் போற மூடுக்கு வந்துட்டாராம்.”

“இப்படியே மாத்தி மாத்தி தலைவர்களை இழுத்துட்டு இருந்தா நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் கூட்டணி தாங்காது போல இருக்கே.”

“அப்படித்தான் அதிமுக தொண்டர்களும் நினைக்கறாங்க. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துல இதைப்பத்தி விவாதம் நடந்திருக்கு. இந்த கூட்டத்துல பேசின கே.பி.முனுசாமியும், சி.வி.சண்முகமும், “பாரதிய ஜனதாவோட நாம நெருக்கமாக இல்லைன்னாலே திமுகவுக்கு மாற்று நாமதாங்கிற பழைய நிலைக்கு வந்துடுவோம். திமுக மேல மக்களுக்கு இப்ப அதிருப்தி இருக்குது. அவங்களோட கூட்டணியிலயும் குழப்பம் இருக்கு. அதனால நாம நாடாளுமன்றத் தேர்தல்ல கவனம் செலுத்துவோம். எல்லா நாடாளுமன்ற தொகுதிக்கும் சீக்கிரம் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவாங்க’ன்னு பேசி இருக்காங்க. இவங்க ரெண்டு பேரும் எடப்பாடியோட மனசாட்சியா செயல்படறதால மாவட்டத் தலைவர்கள் இதை உன்னிப்பா கேட்டிருக்காங்க.”

“இந்த கூட்டத்துல பாஜக பத்தி எடப்பாடி எதையும் பேசலியா?”

“கூட்டத்துல பேசின எடப்பாடி பழனிசாமி, ‘பாரதிய ஜனதா தொடர்ந்து பத்தாண்டுகள் ஆட்சி செஞ்சதால மக்களுக்கு அலுப்பு தட்ட ஆரம்பிச்சிருக்கு. அதனால அவங்களுக்கு இந்த தேர்தல்ல பெரும்பான்மை கிடைக்காது. மாநிலக் கட்சிகளோட ஆதரவுலதான் அவங்களால ஆட்சி அமைக்க முடியும். கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடியட்டும். அதுக்குப் பிறகு நாம கூட்டணி பத்தி முடிவு செய்வோம் இப்போதைக்கு நாம் யாரும் பாரதிய ஜனதா பற்றி எதுவுமே பேச வேண்டாம்’னு சொல்லி இருக்கிறார்.”

“அங்க பாஜக தோத்தா இங்க அதிமுகவோட கை ஓங்கும்னு சொல்லு.”

“கிட்டத்தட்ட அப்படித்தான். மாவட்ட செயலாளர் கூட்டத்துக்கு முன்தினம் தலைமை கழகத்தில அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டவங்களோட ஆலோசனை நடத்தியிருக்கார் எடப்பாடி. அப்ப பொதுச்செயலாளர் தேர்தல் இப்ப தேவையான்னு அவர் கேட்டிருக்கார். அதுக்கு அவங்க கண்டிப்பா நீங்க பொதுச் செயலாளர் ஆகணும். அதுதான் நல்லது. நாம யாருங்கிறத ஓபிஎஸ், பாஜக மற்றும் திமுகவுக்கு காட்டணும்னு சொல்லி இருக்காங்க. அவங்க வற்புறுத்தினதுக்கு பிறகுதான் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த எடப்பாடி சம்மதம் சொல்லி இருக்கார்.”

“ஜெயலலிதா, கருணாநிதிக்கு இணையா தன்னை ஒப்பிட்டு அண்ணாமலை பேசினதுக்கு இந்த கூட்டத்துல ஏதும் எதிர்வினை வரலியா?”

“அதிமுகல விடுங்க… பாரதிய ஜனதா கட்சியிலயே இதை நிறைய பேர் ரசிக்கலை. அதனாலதான் அவங்க யாரும் அண்ணாமலைக்கு ஆதரவா கருத்து தெரிவிக்காம இருக்காங்க. அண்ணாமலைதான் தலைவர்னா மோடியும், அமித் ஷாவும் யாருன்னு அவங்க கேட்கறாங்க. இன்னும் கொஞ்சம் பேரு வாஜ்பாய் அரசு முன்ன கவிழ்ந்ததுக்கு காரணமே ஜெயலலிதாதான். ஆனா அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவோட ஒப்பிட்டு பேசறாரேன்னு மேலிடத்துல வத்தி வச்சிருக்காங்க. அண்ணாமலைக்கு கஷ்ட காலம்தான்”

“அண்ணாமலைக்கு கஷ்ட காலம்னு சொல்ற. ஆனா அவர்தான் ஜெ,பி.நட்டாவோட ஹெலிகாப்டர்ல வந்து இறங்குறார். கஷ்டம்காலம்னா அவரை கூட சேர்த்துப்பாரா நட்டா?”

“உடனடியா எதுவும் தெரியாது. இன்னும் கொஞ்ச நாள் பாருங்க. என்ன நடக்குதுனு”

“உதயநிதி ஸ்டாலின் மேல காங்கிரஸ்காரங்க ஏதோ வருத்தத்துல இருக்கறதா கேள்விப்பட்டேனே?”

“உதயநிதியோட டெல்லி பயணம்தான் இதுக்கு காரணம். இந்த பயணத்துல பிரதமரைச் சந்திச்சு சுமார் அரை மணிநேரம் பேசியிருக்கார் உதயநிதி. ஆனா பிரதமரை சந்திக்கறதுல காட்டற அக்கரையில பாதிகூட காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கறதுல அவர் காட்டலைங்கிறதுதான் தமிழக காங்கிரஸ் தலைவர்களோட வருத்தம். இதை முதல்வர் காதுக்கும் அவங்க கொண்டு போயிருக்காங்க.”

“ஆமாம்ல. அவரு சோனியாவையோ ராகுலையோ சந்திக்கலையே?
ஸ்டாலின்கிட்ட கேட்காம உதயநிதி இப்படி இருந்துருப்பாரா?”

“சோனியாவுக்கு அப்ப உடம்பு சரியில்லை. ராகுல் லண்டன்ல இருந்தார்னு திமுககாரங்க சொல்றாங்க. இன்னொரு விஷயம் சொல்றேன் கேட்டுக்குங்க, ஸ்டாலினை பிரதமராக்கலாம்னு பரூக் அப்துல்லா சொன்னதுக்கு பின்னால ஒரு கதை இருக்கு. முதல்வரோட மைண்ட் வாய்ஸைத்தான் பரூக் அப்துல்லா சத்தமா ஒலிச்சிருக்கார்னு சொல்றாங்க. எதிர்கட்சித் தலைவர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கோஷ்டியா செயல்படறாங்க. ஆனா எல்லாருக்கும் ஏத்த நண்பரா ஸ்டாலின் இருக்கார். அதனால அவர் முதல்வராக பல தலைவர்களும் ஆதரவு தருவாங்கன்னு உடன்பிறப்புகள் பேசிக்கறாங்க. இந்த சமாச்சாரத்தை திமுக முக்கிய தலைவர்கள் பரூக் அப்துல்லாகிட்ட சொல்லியிருக்காங்க. அதைதான் அவர் திருப்பி சொல்லியிருக்காங்க. கட்சிகளை இணைக்கிறதுக்கு ஸ்டாலின் மையப்புள்ளியா இருப்பார்னு நினைக்கிறாங்க”

“அப்பா எட்டடி பாய்ந்தா பிள்ளை பதினாறு அடி பாய்கிறாரா?”

“ஆமாம் அதற்கான முயற்சிலதான் திமுக இருக்கு. அதை தெரிஞ்சிக்கிட்டு ஸ்டாலினோட வேகத்தை குறைக்கிறதுக்குதான் வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டுல தாக்கப்படுறாங்கன்ற வீடியோவை பரப்பியிருக்காங்க. இது மாதிரி செய்திகள் வந்தா வட நாட்டவர்களுக்கு ஸ்டாலின் மீது எரிச்சல் வரும்ல”

“எரிச்சல் வந்துச்சா?”

“அது வதந்தினுதான் வெளுத்துப் போச்சே. எங்கருந்து எரிச்சல் வர்றதுனு” சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...