kaathal the core (காதல் – தி கோர் – மலையாளம்) – அமேசான் ப்ரைம்
மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் கேரளாவில் கடந்த மாதம் திரைக்கு வந்த காதல் – தி கோர் திரைப்படம் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
ஊரில் பெரிய மனிதராக கருதப்படும் மம்முட்டியை உள்ளூர் பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளராக நிறுத்துகிறார்கள். இந்த நேரத்தில் அவரது மனைவி ஜோதிகா, அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறார். விவாகரத்துக்கான காரணமாக மம்முட்டி ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் (gay) என்று குற்றம் சாட்டுகிறார். இது மம்முட்டியின் இமேஜையும், தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பையும் கடுமையாக பாதிக்கிறது. இதிலிருந்து மம்முட்டி மீண்டு வந்தாரா? தேர்தலில் அவரால் வெற்றி பெற முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.
மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் மம்முட்டி, தனது இமேஜைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இந்த படத்தை தயாரித்து நடித்திருக்கிறார். தமிழில் படபடவென பேசி நடித்த ஜோதிகா, இப்படத்தில் அமைதியான ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பரபரப்பான மசாலா படங்களின் மத்தியில் மென்மையான தென்றலாக இப்படம் இருக்கிறது.
குய்கோ (தமிழ்) – நெட்பிளிக்ஸ்
அருள் செழியன் இயக்கத்தில் யோகி பாபு, விதார்த் உள்ளிட்டோர் நடித்த குய்கோ, இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
அரபு நாட்டில் ஒட்டகம் மேய்க்கும் வேலை பார்ப்பவர் யோகிபாபு. தன் காதலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பணம் சம்பாதிக்க அவர் அரபு நாட்டுக்கு செல்கிறார். யோகிபாபு அங்கு பணியாற்றி வரும் சூழலில் அவரது அம்மா இறந்து போகிறார். யோகிபாபு வரும்வரை அவரது அம்மாவின் உடலை பாதுகாப்பாக ப்ரீஸர் பாக்சில் வைக்கிறார். இந்தியா திரும்பும் யோகிபாபு, தனது அம்மாவை அடக்கம் செய்த பிறகு, அவரது உடலை வைத்த ப்ரீசர் பாக்ஸை அம்மாவின் அடையாளமாக வீட்டிலேயே வைக்க விரும்புகிறார். ஒரு கட்டத்தில் அவரது காதல் கைகூட அந்த ப்ரீஸர் பாக்ஸ் உதவுகிறது.
மென்மையான இந்த கதையை அலட்டல் இல்லாத நகைச்சுவையுடன் சில்லியிருக்கிறார் இயக்குநர் அருள் செழியன்.
Mangalavaram (மங்களவாரம் –தெலுங்கு) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ளும் ஜோடிகள் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் மர்மமான முறையில் இறக்கிறார்கள். ஊர்க்காரர்கள் இதை சாமி குத்தம் என்று சொல்ல, ஊருக்கு வரும் பெண் போலீஸ் அதிகாரி, அவை கொலையாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு விசாரிக்கிறார். இந்த சாவுகளுக்கான மர்ம முடிச்ச்சுகளை அவிழ்ப்பதுதான் படத்தின் கதை.
கொஞ்சம் க்ரைம், கொஞ்சம் அமானுஷ்யம், கொஞ்சம் காதல் என்று சரிவிகிதமாக கலந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் அஜய் பூபதி.
லைசன்ஸ் (தமிழ்) – ஆஹா
கணபதி பாலமுருகன் இயக்கத்தில் சூப்பர் சிங்கர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி நாயகியாக நடித்திருக்கும் படம் லைசன்ஸ்.
பாலியல் அத்துமீறல்களை சிறுவயதில் இருந்தே தட்டிக் கேட்கும் குணம் கொண்ட பாரதி (ராஜலட்சுமி), அப்பாவின் அறிவுரைப்படி ஆசிரியர் பணியில் சேர்கிறார். ஒரு கட்டத்தில் தன் பள்ளியில் படிக்கும் மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக அதைக் கண்டு கோப்ப்படுகிறார். பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு துப்பாக்கி கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டு பொதுநல மனு தாக்கல் செய்கிறார். அதன் முடிவு என்ன ஆனது என்பதே லைசென்ஸ் திரைப்படத்தின் கதை.