சமையல் எரிவாயு சிலிண்டர் விலைதான் மத்திய வர்க்க மக்களுக்கு மிக முக்கியமான ஒன்று. அதன் விலையேறும்போது அவர்களின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. எந்த ஆட்சி வந்தாலும் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள மக்களின் இன்றியமையாத கோரிக்கையாக இருப்பது சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டுமென்பதுதான். வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாத ஒன்றாக எல்பிஜி சிலிண்டர் மாறியுள்ளது.
வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள மக்களால் மாதம்தோறும் விலை கொடுத்து வாங்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது எல்பிஜி சிலிண்டர்.
மே 1, 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்தர மோடியால் கொண்டு வரப்பட்ட திட்டம் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம்.
பொருளாதாரதில் பின்தங்கியவர்களுக்கும், பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கும் பிற்படுத்தபட்ட வகுப்பை சேர்ந்த 8 கோடி மக்களுக்கு எரிவாயு கொண்டு செல்லவேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். அரசு சார்பில் எரிவாயு , அடுப்பு போன்றவை கொடுக்கப்பட்டது.
இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதற்கு முக்கியமான காரணம் ஏழை, எளிய மக்கள் இன்றும் விறகு அடுப்புகளில்தான் சமைக்கின்றனர். பெண்கள் தான் மிகவும் அவதிப்படுகின்றனர், இதனை கருத்தில் கொண்டு PMUY SCHEME கொண்டுவரப்பட்டது.
இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக, PMUY திட்டத்தின் கீழ், உஜ்வாலா 2.0 கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்படி மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்த மக்களுக்கும் (1.6 கோடி ) இந்த திட்டம் போய் சேரவேண்டும் என்று உஜ்வாலா 2.0 அறிமுகப் படுத்தப்பட்டது.
உஜ்வாலா 2.0 திட்டத்தின்படி அரசே அடுப்பு வாங்கிக் கொடுத்துவிடும். முதல் சிலிண்டர் இலவசமாகவும் வழங்கப்படும். அதன் பிறகு ஒவ்வொரு சிலிண்டர் வாங்குவதற்கும் மானியம் கொடுக்கப்படும். 200 ரூபாய். இப்படி செய்தால் விறகு அடுப்பில் புகைக்குள் வாடிக் கொண்டிருக்கும் ஏழை எளிய மக்கள் பயன் பெறுவார்கள் என்பது திட்டம்.
ஆனால் அப்படி சேர்ந்ததா? ஏழை மக்களுக்கு பயனளித்ததா? என்ற கேள்விகளை எழுப்பினால். வருத்தமாக ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
PMUY திட்டத்தின் கீழ் பயன்பெற்ற, 1.18 கோடி மக்கள் முதல் மாதத்திற்கு பிறகு எரிவாயுவை பயன்படுத்தவில்லை. மேலும், 1.51 கோடி மக்கள் முதல் எரிவாயு நிரப்புதலுக்கு பிறகு எரிவாயுவை மீண்டும் வாங்கவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.
மூன்று பெரிய எரிவாயு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(BPCL),இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(HPCL), இந்த நிறுவனங்களிடமிருந்து தகவல் அறியும் உரிமை சட்டம்(RTI) மூலம் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஏன் வாங்கவில்லை? எளிய காரணம்தான். அரசு மானியம் கொடுத்தப் பிறகும் சமையல் எரிவாயு வாங்கும் நிலையில் அவர்கள் பொருளாதராம் இல்லை, சமையல் எரிவாயுவின் விலையும் இல்லை.
சமையல் எரிவாயுவில் விலையை இப்போது 200 ரூபாய் குறைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த சிறு விலை குறைப்புகளெல்லாம் ஏழை எளிய மக்களுக்கு உதவாது.