நமது சமையலில் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது வெங்காயம். சைவம், அசைவம் என்று என்ன உணவு சமைத்தாலும் வெங்காயம் கட்டாயமாக இருக்கிறது.
தினமும் மூன்று வேலை சமையலில் ஏதோ ஒரு உணவிலாவது வெங்காயத்தை சேர்த்து சமைப்பது நம் அனைவரது வழக்கமாகவே இருக்கிறது. பொரியல், குழம்பு என்று ஏதாவது ஒன்றில் கண்டிப்பாக வெங்காயத்தை சேர்த்து விடுவோம்.
சுவைக்காக மட்டுமல்ல அதில் இருக்கும் சத்துகளுக்காகவும் நாம் வெங்காயத்தை சமையலில் சேர்த்துக் கொள்வோம்.
வெங்காயத்தில்… அது சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் எதுவாக இருந்தாலும், இரண்டிலுமே மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது. சிறிய வெங்காயம் இதய நோய் இருப்பவர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கக் கூடியது. பெரிய வெங்காயம் நம் இரத்ததில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
புரதச்சத்து, நாற்சத்து , கார்போஹைட்ரேட், எனர்ஜி என்று பல்வேறு சத்துக்களும் வெங்காயத்தில் இருக்கிறது.
சரி, இத்தனை சத்துகளுக்காவும் உணவின் சுவையையும் கூட்டுவதற்காகவும் நாம் வெங்காயத்தை சமையலில் சேர்க்கிறோம், நல்லது. ஆனால், அதை சரியாக பயன்படுத்துகிறோமா?
இல்லை என்பதுதான் இதில் சோகமானது.
வெங்காயத்தை, நேரத்தை சேமிப்பதற்காக முன்னதாகவே நறுக்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து சமைக்கும் பழக்கம் பெரும்பாலனோர் மத்தியில் உள்ளது. இது வெங்காயத்தை எதற்காக சமையலில் பயன்படுத்துகிறோமோ அதற்கே எதிரானது.
வெங்காயத்தை சமைப்பதற்கு முன்னதாகவே நறுக்கி குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அதில் இருக்கும் சத்துக்கள் குறைந்துவிடும். மேலும், பாக்டீரியா மற்றும் சுற்று சூழலில் உள்ள நோய்கிருமிகளால் எளிதில் பாதிக்கப்படும். உரித்த அல்லது வெட்டிய வெங்காயத்தை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பொது குளிர்சாதன பெட்டியில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் குளிர்ந்த தன்மையால் எளிதில் பாக்டீரியா உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மேலும், சமைப்பதற்கு வெகு நேரத்திற்கு முன்பு வெட்டி வைத்துவிட்டால் துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
இதனால் நிபுணர்கள் பரிந்துரைப்பது என்னவென்றால், முடிந்தவரையில் வெங்காயத்தை நறுக்கிய உடனே பயன்படுத்துங்கள் என்பதுதான்.
நேரமின்மை காரணமாக சமைப்பதற்கு முன்னதாகவே வெங்காயத்தை உரித்து வைக்கும் நபர் என்றால், ஒரு எளிய வழியை கூறுகிறது யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மென்ட் ஆஃப் அக்ரிகல்சர் (USDA). உரித்த வெங்காயத்தை உலர்ந்த காகிதம் அல்லது டவள் கொண்டு சுற்றி வைப்பது ஒரு சிறந்த வழியாகும்.
மேலும், வெங்காயத்தை 40 டிகிரி பாரன்ஹீட் அல்லது 4.4 டிகிரி செல்சியஸ் – ல் சீல் செய்யப்பட்ட கன்டைனரில் வைப்பதும் ஒரு சிறந்த வழியாகும்.