எம்ஜிஆர், சிவாஜி, நாகேஸ்வரராவ், ராஜ்குமார், என்டிஆர் போன்ற சூப்பர் ஸ்டார்களின் கதாநாயகியாக நடித்தவர், கடந்த தலைமுறையின் கனவுக்கன்னி ரத்னகுமாரி என்கிற வாணிஸ்ரீ உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை, கண்ணன் என் காதலன், நிறைகுடம் என்று 33 தமிழ்ப் படங்கள் உட்பட 290 படங்களில் நடித்தவர்.
தன் திரையுலக பயணத்தைப் பற்றிக் கூறும் வாணிஸ்ரீ, “ ஆந்திராவில் நெல்லூரில் டிவிஎஸ்எம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு சினிமா. டிராமா பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது. என் அக்கா காந்தம்மா சென்னையில் உள்ள ஆந்திரா மகிளா சபாவில் மெட்ரிக் வகுப்பில் படிக்கச் சென்றாள். அவர் அழைத்ததால் நானும் படிப்பதற்காக சென்னை வந்தேன். அந்தப் பள்ளியில் படித்தபோது என் தோழி ஒருவர் டான்ஸ் கிளாஸ் சென்றதால், நானும் டான்ஸ் கிளாசுக்கு போனேன்.
நான் குடியிருந்த வீட்டின் மாடியில் ராஜூராவ் என்பவர் இருந்தார். அவர் சரித்திர நாடகம் போட்டுக்கொண்டிருந்தார். அவர் என்னிடம், ‘ ரத்னகுமாரி நீ ஏன் சினிமாவில் நடிக்க கூடாது?’ என்று கேட்டார். என்னால் நடிக்க முடியுமா என்று நான் கேட்க, நிச்சயம் நடிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தந்தார். அப்படித்தான் எனக்கு சினிமா மீதான ஈர்ப்பு வந்தது.
அப்போது பி.ஏ.சுப்புராவ், ‘பீஷ்மர்’ என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் அவரைப் போய் பார்த்தேன். ‘ஒடிந்து விழுபவள் போல ஒல்லியாக இருக்கிறாயே… உனக்கு என்ன வேஷம் தர முடியும்?’ என்று கிண்டலாக கேட்டார். ‘எந்த வேஷம் கொடுத்தாலும் நடிப்பேன்’ என்று நான் உறுதியாக சொல்ல, என் தைரியத்தைப் பார்த்து ஒரு சிறிய வேடத்தைக் கொடுத்தார். ஆனால் நான் நடித்த காட்சி படத்தில் வரவே இல்லை.
டைரக்டரிடம் போய் கேட்டபோது, ‘படத்தின் நீளம் கருதி நீ நடித்த காட்சியை எடுத்துவிட்டோம். கவலைப்படாதே… அடுத்த படத்தில் பார்க்கலாம்’ என்றார். என்னால் அந்த ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை. இவரைப் போன்றவர்களுக்கு முன் ஒரு பெரிய நடிகையாக வந்து காட்ட வேண்டும் என்று சபதம் எடுத்தேன்.
1962 ல் ஆந்திர சங்கத்தினர் நடத்திய நாடகப் போட்டியில் ‘தொங்கா’ நாடகத்தில் நடித்தேன். பாராட்டும் பரிசும் கிடைத்தது. பிறகு நானே சொந்தமாக ஒரு நாடகக் குழுவை தொடங்கி ‘சில்லா கொட்டு சிட்டம்மா’ என்ற நாடகத்தை சென்னையில் அரங்கேற்றினேன். அந்த நாடகத்துக்கு வந்திருந்த தயாரிப்பாளர் ஹீந்தூர் கிருஷ்ண மூர்த்தி, நாடகத்தை பாராட்டியதோடு, தான் தயாரித்த’வீர சங்கல்பா. என்ற கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார்.
வீர சங்கல்பா. படப்பிடிப்பில் என் நடிப்பை பார்த்த தயாரிப்பாளர் பாவா நாராயணா. தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். தெலுங்கில் என் முதல் படம்’ பங்காரு சிம்மராச’. .2 படங்களுக்குப் பிறகு ஸ்ரீ வாணி பிலிம்ஸ் பேனரில் நடித்த போது என் பெயர் அவ்வளவு கவர்ச்சியாக இல்லை என்று சொல்லி, அதை வாணிஸ்ரீ என்று மாற்றினார்கள். நான் வாணிஸ்ரீ ஆனது இப்படித்தான்.
ஜெய்சங்கரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய ஜோசப் தளியத்தான் என்னையும் தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். என் முதல் படம் ‘காதல் படுத்தும் பாடு’ ஹீரோ ஜெய்சங்கர். அதைத் தொடர்ந்து தங்க தம்பி. நம்ம வீட்டு லட்சுமி. காதலித்தால் போதுமா. எம்ஜிஆருடன் கண்ணன் என் காதலன். சிவாஜியுடன் உயர்ந்த மனிதன், ஜெமினியுடன் தாமரை நெஞ்சம் என தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.