இஸ்ரேல் – பாலஸ்தீனம் இந்த இரண்டு நாடுகளுக்கிடையே மூண்டிருக்கும் போரினால், அஜர்பைஜானில் நடைபெறவிருக்கும் ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் பாதிக்கப்படுமா என்ற பரபரப்பு அப்படக்குழுவினரிடையே இருந்து வருகிறது.
இப்போது துபாயில் ஆக்ஷன் காட்சிகளை எடுத்துகொண்டிருக்கிறார்கள். இதனால் இன்னும் சில நாட்களில், என்னவாகும் என்ற எதிர்பார்புடன் ஷூட்டிங் போய் கொண்டிருக்கிறது.
ஷூட்டிங் ஆரம்பித்திருப்பதால், ‘விடாமுயற்சி’ பற்றிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. அந்த தகவல் இப்போது கிசுகிசுவாகி இருக்கிறது.
‘விடாமுயற்சி’ படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பதே அந்த கிசுகிசு.
ஒரு வாலிபராகவும், வயது மூத்த ஒருவராகவும் இரண்டு கதாபாத்திரங்கள். இப்படக்குழுவில் ரெஜினா கசண்ட்ரா இணைந்திருப்பதாகவும், இவருக்கு இளம் அஜித் கதாபாத்திரத்துடன் காட்சிகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
சீனியர் அஜித் கொஞ்சம் உடல் எடையுடன் இருப்பது போன்ற தோற்றத்திலும், ஜூனியர் அஜித் ஆக்ஷனுக்கு ஏற்ற தோற்றத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
‘வாலி’, ’வரலாறு’, ‘வில்லன்’ படங்களுக்குப் பிறகு அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி அதிகரித்து இருப்பதால் சமூக ஊடகங்களில் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் கமெண்ட்களை அள்ளிவிட்டப்படி இருக்கிறார்கள்.
ஷங்கருக்கு கதை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்!
ஷங்கர் பொதுவாகவே ஒரு படத்தை இயக்கும் போது மற்றொரு படத்தை இயக்குவது வழக்கமில்லை.
கமல் நடிப்பில் அவர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ படம் பல காரணங்களால் இடையில் தடைப்பட்டு நின்றுவிட்டது. இதனால் முதல் முறையாக நேரடி தெலுங்குப் படமொன்றை இயக்க ஹைதராபாத் பக்கம் பறந்தார் ஷங்கர். அந்தப் படம்தான் ‘ஆர்’ஆர்.ஆர்.’ படப்புகழ் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’.
ஆனால் கமலின் ‘விக்ரம்’ படம் பெரும் வெற்றி பெற்றதால், கிடப்பில் இருந்த ‘இந்தியன் 2’ படத்திற்கு மீண்டும் உயிர் வந்தது. இதனால் ஓரே நேரத்தில் இந்த இரண்டுப் படங்களையும் இயக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார் ஷங்கர்.
’இந்தியன் 2’ பட வேலைகளால், ’கேம் சேஞ்சர்’ ஷூட்டிங் இழுத்துகொண்டே போனது. இப்போது ஒரு வழியாக தனது கவனத்தை ‘கேம் சேஞ்சர்’ படம் பக்கம் திருப்பியிருக்கிறார் ஷங்கர்.
‘கேம் சேஞ்சர்’ படக்கதையின் கரு, ஷங்கருடையது அல்ல. உண்மையில் இப்படக்கதையானது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூவுடையது.
‘நான் டைரக்ட் பண்ண, உங்ககிட்ட ஏதாவது ஒரு கதை இருக்கா என்று ஷங்கர் கேட்டபோது ஒரு இயக்குநராகவும், எழுத்தாளாராகவும் எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. அப்பதான் ‘கேம் சேஞ்சர்’ கதையை ஷங்கரிடம் சொன்னேன். அவருக்கு கதையைக் கேட்டதும் பிடிச்சுப் போச்சு.
அந்த கதைக்களத்துக்கு பெரிய பட்ஜெட் தேவை. பிரம்மாண்டமாக எடுத்தால்தான் நல்லா இருக்கும். அதனால அந்த கதையை ஷங்கர் மாதிரி ஒரு மிகப்பெரும் இயக்குநர் எடுத்தால்தான் அந்த கதைக்கு நியாயமானதாக இருக்கும். ‘கேம் சேஞ்சர்’ ஒரு ஷங்கர் படமாக இருக்கும்.’ என்று உற்சாகத்தில் இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
ஷங்கர் பக்காவான கமர்ஷியல் படங்கள் எடுப்பதில் கில்லாடி. கமர்ஷியல் படங்கள் என்றாலும் அதில் சமூக கருத்தை பின்னிப்பிணைந்து எடுப்பதால், இந்தப்படமும் ஷங்கரின் பாணியில் வரும் ஒரு படமாக இருக்கும் என்பதால் ராம் சரண் சந்தோஷத்தில் இருக்கிறார்.