No menu items!

தெய்வநாயகி கே.ஆர்.விஜயாவான கதை!

தெய்வநாயகி கே.ஆர்.விஜயாவான கதை!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமச்சந்திர ராவுக்கும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கல்யாணி குட்டிக்கும் மகளாகப் பிறந்தவர்தான் தெய்வ நாயகி. ஆனால் அப்படிச் சொன்னால் உங்களுக்கு தெரியாது. கே.ஆர்.விஜயா என்று சொன்னால்தான் தெரியும். ஆமாம்… கே.ஆர்.விஜயாவின் உண்மையான பெயர் தெய்வநாயகி.

11 வயதிலேயே நடிக்க வந்துவிட்டார் தெய்வநாயகி. பழனியில் அம்மன் கோயில் அருகில் ஒரு தமிழ் நாடகத்தில் முதலில் நடனமாடினார். இதைத்தொடர்ந்து வால்பாறை எஸ்டேட், தாராபுரம், காங்கேயம் போன்ற இடங்களில் நாடகங்களில் நடித்தார். அப்போது பழனிக்கு நாடகம் நடத்தவந்த கே.ஏ.தங்கவேலுவிடம், தனது மகளுக்கு நாடகங்களில் நடிக்க வாய்ப்பு தருமாறு கேட்டார் ராமச்சந்திர ராவ். தங்கவேலுவும் தன்னை சென்னைக்கு வந்து பார்க்குமாறு அவர்களிடம் கூறினார்.

அவரைப்போலவே பழனி பொருட்காட்சியில் நாடகம் நடத்தவந்த திரைப்பட நடிகர் எஸ். கே.குமரேசனும் தெய்வநாயகியின் குடும்பத்தை சென்னைக்கு அழைக்க, 1961-ம் ஆண்டின் இறுதியில் அவர்கள் சென்னைக்கு வந்தனர். முதலில் விருதை ந. ராமசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்துகொண்டார் தெய்வநாயகி. சில காலம் நாடகங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த நிலையில், ‘மகளை உன் சமத்து’ என்ற படத்தில் அவருக்கு ஒரு சிறிய வேடம் கிடைத்தது. இதில் எம்.ஆர்.ராதா வரும் காட்சியில் அவருக்கு 2 பக்கமும் 2 பெண்கள் இருப்பார்கள். அதில் ஒருவராக தெய்வநாயகி நடித்தார்.

படப்பிடிப்பின்போது ‘உன் பெயர் என்ன?’ என்று எம் ஆர் ராதா கேட்டார். அதற்கு தெய்வநாயகி என்று அவர் பதில் சொல்ல, ‘ இதெல்லாம் ஓல்டு மாடல். சினிமாவுக்கு எடுபடாது. விஜயா, கிஜயா இப்படி ஏதாவது பெயர் வச்சுக்கோ’ என்றார் எம் ஆர் ராதா நீங்களே ஒரு பேர் வைங்க என்றார் தெய்வநாயகி. அப்போது தெய்வநாயகிக்கு எம்.ஆர்.ராதா வைத்த பெயர்தான் கே. ஆர். விஜயா.

பல போராட்டங்களுக்குப் பிறகு கே.எஸ்.கோபாலகிருஷணன் இயக்கிய ‘கற்பகம் ’படத்தில் அவருக்கு நாயகியாக வாய்ப்பு கிடைத்தது. 1963-ல் வெளிவந்த ‘கற்பகம்’ மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளியது. இதைத்தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

இதுபற்றி கூறும் கே.ஆர்.விஜயா, “கற்பகம் படத்தில் நான் அறிமுக நடிகை. ஆனால் ஜெமினி கணேசன். முத்துராமன். சாவித்திரி. எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ் என அன்றைய முக்கிய நட்சத்திரங்கள் பலரும் அப்படத்தில் இருந்தனர். அதனால் எனக்கு பயமாக இருந்தது. ஆனால் கே.எஸ்.ஜி எனக்கு பொறுமையாக நடிப்பு சொல்லிக்கொடுத்து நடிக்கவைத்தார். அவர் சொல்லித்தந்த நடிப்பால்தான் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இன்றைக்கு நான் ஒரு நடிகையாக 400 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் குருநாதர் கே.எஸ்.ஜிதான்” என்கிறார்.

கே.ஆர்.விஜயா பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். பணமும் புகழும் வந்து குவிந்தது. ஆனால் குடும்பத்தினர் பொன்முட்டையிடும் ஒரு வாத்தாகத்தான் அவரை பயன்படுத்தினர்.

இதுபற்றிக் கூறும் கே.ஆர்.விஜயா, “ சினிமா நடிகைகளில் சிலர் மட்டும்தான் தங்கள் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதற்காக அவர்கள் கடுமையாக போராடவேண்டி இருந்தது. அதுவரை நான் சேர்த்து வைத்திருந்த எல்லாவற்றையும் என் குடும்பத்தாரிடம் விட்டுவிட்டு .கட்டிய புடவையோடு என் கணவர் வீட்டுக்கு வந்தேன்.

என் திருமணத்தைப் பற்றி பல கதைகளை என் குடும்பத்தார் கிளப்பினார்கள். ‘நீ நல்லா இருக்கமாட்டே, நாசமாத்தான் போவ. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வாழ்வுன்னு பார்ப்போம். கூடிய சீக்கிரம் அவரால் கைவிடப்பட்டு திரும்பி வரத்தான் போறே’ என்று என் குடும்பத்தினர் சாபம் விட்டார்கள். அவர்கள் நினைத்து போல நடக்க பூஜையும் செய்தார்கள்” என்கிறார் கே.ஆர்.விஜயா.

எம்.ஜி.ஆரைப் பற்றி கூறும் கே.ஆர்.விஜயா, “எம்ஜிஆருடன் நான் நடித்த முதல் படம் ‘பணம் படைத்தவன்’ அவருடன் நடிப்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. அதனால் அவர் படங்களில் துணை நாயகி வேடம் கிடைத்தாலும் செய்தேன். ‘பணம் படைத்தவன்’ படப்பிடிப்பு கொல்கட்டாவில் நடந்தது. எல்லோரும் விமானத்தில் போய்க் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு லேசான ஜுரம், பேசாமல் உட்கார்ந்திருந்தேன். என் அருகில் வந்து பலமுறை விசாரித்த எம்ஜிஆர். எனக்கு ஜுரம் என்று தெரிந்தவுடன் தன் மனைவியின் பெட்டியை குடைந்து ஒரு மாத்திரையைத் தேடி எடுத்து எனக்கு கொடுத்து, சாப்பிட வைத்தார். அவருடன் விவசாயி’ நான் ஏன் பிறந்தேன், நல்ல நேரம் உட்பட 8 படங்களில் நடித்திருக்கிறேன்” என்கிறார்.

ஏ.பி.நாகராஜனைப் பற்றிக் கூறும்போது “சரஸ்வதி சபதம் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். காலையில் 7 மணிக்கு ஷூட்டிங் வந்தவுடனே எல்லா ஆர்டிஸ்ட்களையும் வரிசையாக உட்கார வைத்து. ஜெமினி சாரிடம் எப்படி பேசணும், சிவாஜி சாரிடம் எப்படி பேசணும் என்று எடுத்துச் சொல்வார்.

குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல நடிக்கச் சொல்லித் தருவார். அந்த படத்தில் நான் முதலில் பாவப்பட்ட பெண்ணாக இருப்பேன். யானை மாலை போட்டு அரசியாக மாறியவுடன் ஒரு வில்லி போல மாறி விடுவேன் அந்த படத்தின் போது எனக்கு 18 வயசு. ரொம்பவும் பயப்படுவேன். கூச்ச சுபாவம் வேறு. இந்த மாதிரி ஒரு போல்டான கேரக்டரில் நடிப்பது ரொம்ப கஷ்டம். என்னை சிறப்பாக நடிக்கத் தூண்டி விட்டவர் சிவாஜிசார். அதற்கு வித்திட்டவர் ஏபி நாகராஜன்” என்கிறார் கே.ஆர்.விஜயா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...