No menu items!

கொஞ்சம் கேளுங்கள் : டெல்லியே..! தலைநகரமே! என் குரல் எட்டுகிறதா?!

கொஞ்சம் கேளுங்கள் : டெல்லியே..! தலைநகரமே! என் குரல் எட்டுகிறதா?!

“தலைநகரம் சூடாகத்தான் இருக்கிறது. வெயில் காரணம் மட்டுமல்ல… அரசியல் சூடும்தான். அதோடு அரசியல் களத்தில் ஒருவித பதற்றத்தை பார்க்க முடிகிறது” – டெல்லியில் தங்கிவிட்டு திரும்பிய முன்னாள் இதழாளர் கூறினார்.

புதிய நாடாளுமன்றம் மிக வேகமாக தயாராகி வருகிறது என்றார். இன்றைய நாடாளுமன்றத்துக்கும், புதிய நாடாளுமன்றத்துக்கும் அதிக தூரம் இல்லை. இடையில் 10 கார்கள் நிற்கும் அளவிற்கே இடைவெளி.

இதழாளர் முகத்தில் புன்னகை. “நான் இளம் நிருபராக இருந்த சமயம் அது. அறிஞர் அண்ணா ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். ஒருமுறை எங்கோ உள்ள டெல்லியின் தூரத்தை காரிலேயே கடக்க விரும்பினார். காரில் பாரத தரிசனம்! க.ராசாராம், இரா.செழியன், வேறு சிலரும் மாற்றி மாற்றி கார் ஓட்ட பல நாட்கள் பயணித்து டெல்லியை அடைந்தார் அண்ணா.”

“டெல்லியை பார்த்த பிறகுதான் புரிந்தது – காந்தியார் எப்பேர்பட்ட வலிமைமிக்க சாம்ராஜ்யத்தை எதிர்த்து போராடி இருக்கிறார் என்று தெரிந்தது’ என்று சென்னை திரும்பிய பிறகு நிருபர்களிடம் கூறினார் அவர். “அன்று கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகளை கடந்து ஒருவித நட்பு இருந்திருக்கிறது.”

இதழாளர் பேசினார்.

நிதியமைச்சர் டிடிகே திடீரென்று ராசாராம், இரா.செழியன் அறைக்கு வருவார். ‘நாளைக்கு பார்லிமெண்டில் சற்று வேகமாக தெற்கு புறக்கணிக்கப்படுவது பற்றி புள்ளி விவரங்களை அடுக்கி பேசுங்கள். நெய்வேலி நிலக்கரி திட்டம் பிரதமர் நேரு மேஜையில் இருக்கிறது’ என்பார்.

பிரதமர் நேருவுக்கு ஏனோ நெய்வேலி நிலக்கரி திட்டம் பற்றி நல்ல கருத்து இல்லை. விரும்பவில்லை! இப்படி அன்றே தமிழ்நாட்டின் நன்மைக்கு உரக்க குரல் கொடுத்து தலைநகரை அசைக்க வேண்டி இருந்தது. டிடிகே சொன்னவாறு திமுகவின் எம்.பி.க்கள் முழக்கமிட்டதால் நெய்வேலி, சேலம் உருக்காலை.. இப்படி பல திட்டங்கள் இங்கே வந்தன.

இந்தி ஆட்சி மொழி விஷயத்தில் நேருவின் உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்படுகிறதே இன்னமும்! ‘தயிர்’ -‘தஹி’ ஆக பார்த்தது! தமிழ்நாட்டில் இந்தி திணிக்க முடியாது என்கிறார் கவர்னர் இப்போது. “வேறு எப்படி கொண்டுவரப் போகிறார்களாம்” என்றார் இதழாளர் தமாஷாக.

“புதிய நாடாளுமன்றத்தில் ஒரு பக்கம் வானிலை ஆய்வு மையங்களில் இருப்பதுபோல பிரம்மாண்ட டெலஸ்கோப் – தொலைநோக்கி வைத்தால் என்ன? மத்திய அமைச்சர்களும், வடஇந்திய பார்லிமெண்ட் உறுப்பினர்களும் அங்கே சென்று டெலஸ்கோப் வழியாக இந்திய திருநாட்டின் தொலைதூர மாநிலங்களை பார்க்கலாமே! வெவ்வேறு மாநில மக்களின் நடை உடைகளை காணலாம்! அப்படி தஞ்சை மாவட்டத்தை பார்த்திருந்தால் – டெல்டா பகுதிகளின் – வயல்வெளிகளில் நெற்பயிர்கள் செழிக்க உழவர்கள் முயற்சி செய்யும் காட்சிகள், காவிரி பாய்ந்து பூமியை வளப்படுத்தும் காட்சிகள் இவற்றை பார்த்திருக்க முடியுமே! அப்படி பார்த்தால் டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்ட வளமான பூமியை ஏலம் விட எப்படி கண்மூடித்தனமாக முடிவெடுப்பார்கள்?” – இதழாளர் கேட்டார்!

அறிஞர் அண்ணா சென்றது போல எம்.பி.க்களை பாரத தரிசனம் என்று இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் ரயிலில் அழைத்து செல்ல வேண்டும் என்றார் அவர். வேற்றுமையில் ஒற்றுமையை புரிந்துகொள்ள இதுவே வழி என்றார். ‘வந்தே பாரத்’ என்று உதட்டளவில் உற்சரிப்பதுடன் நின்றுவிடக்கூடாது அல்லவா.

“புதிய கட்டிடம் பற்றி மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் நிருபர்களிடம் பேசும்போது, ஏன் அதை தெற்கில் அமைத்திருக்கக்கூடாது என்று ஒரு நிருபர் கேட்டார். ‘முகமது பின் துக்ளக் தலைநகரை மாற்றியது போலவா! அவரை பற்றி அப்புறம் தனியாக கூறுகிறேன். டெல்லிதான் தலைநகருக்கு ஏற்றது. இங்குதான் அதற்கு எல்லா சூழலும் உள்ளது’ என்றார் திட்டவட்டமாக மத்திய அமைச்சர்.”

ஐதராபாத் நகரில் ஒரு ஜனாதிபதி மாளிகை இருக்கிறது. குடியரசு தலைவர் அடிக்கடி அங்கே போய் தங்க வேண்டும் என்ற திட்டம் உண்டு. அப்படி முன்பு நடந்தது. இப்போது?

அதுபோல ஆகஸ்ட் 15-ம் தேதி குடியரசு தலைவர் தென்னக மாநிலங்களில் ஏதோ ஒரு தலைநகரில் தங்கி கொடியேற்றி சுதந்திர தினத்தை அம்மாநில மக்களோடு கொண்டாட வேண்டும் என்று முடிவாகியது. ராஜேந்திர பிரசாத் சென்னையில் அப்படி கொடியேற்றினார்.

பின்னர் இந்த வழக்கங்கள் அரசியல் களேபரங்களால் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது. டெல்லி தூரத்தே இருக்கிறது என்ற நினைப்பு வரக்கூடாது என்பதற்கே இந்த ஏற்பாடுகள் இருந்தன. தானாக அமைந்த ஒற்றுமை என்ற சங்கிலி பிணைப்பை மேலும் உறுதிப்படுத்த இப்படி சில திட்டங்கள் அன்று சிந்திக்கப்பட்டது.

அன்றைய தலைவர்கள் பெருந்தன்மையோடு சின்ன சின்ன விஷயங்களிலும் மக்களின் ஒற்றுமை உணர்வுகள் பாதிக்கக்கூடாது என்பதில் அக்கறை காட்டினார்கள். இவை மிக முக்கியம்.

வீரம், பெருமிதம், அன்பு, நிதானம் என்பதுதான் நமது அரசு முத்திரையான நான்கு சிங்கங்கள் காட்டுகிறது. அசோக சக்கரத்தில் உள்ள இந்த சிங்கங்களின் பொருள் இதுதான்.

ஜனநாயகத்தின் சின்னமாக இதை தேர்ந்தெடுத்த அன்றைய தலைவர்கள் அற்புதமானவர்களே.

உச்சநீதிமன்றத்தின் கிளை தெற்கே வரவேண்டும். தாய்மொழியில் வாதங்கள் அங்கு நடக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெறுகிற நேரம் இது. நாடாளுமன்றத்தை ஏன் தெற்கே ஒருமுறை நடத்தகூடாது? தலைநகர் டெல்லிக்கு தமிழர் குரல் மட்டுமல்ல, தெற்கத்திய குரல் – உணர்ச்சிகள் எட்டுகிறது என்பது மக்கள் திருப்தி அடைவதுபோல வெளிப்படையாக தெரியவேண்டும். கட்சி வேறுபாடுகளை கடந்து நம் குரல் அங்கே போய் சேரவேண்டும்.”

இதழாளர் கருத்துக்கு எதிராக பேச என்ன இருக்கிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...