ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட உள்ளார். தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஈரோட்டில் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார். அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் என்றும், இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது எனவும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முடிவை தேர்தல் ஆணையம் ஏற்கக்கொள்ள உத்தரவிடக்கோரியும் முறையிடப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் தமிழில் மந்திரங்கள் சொல்லி கும்பாபிஷேகம்
பழனி முருகன் கோவிலில் கடந்த 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து 2019இல் பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கின. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த அறங்காவலர் குழு, அலுவலர்கள் கூட்டத்தில் ஜனவரி 27-ல் (இன்று) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகபூஜை நடைபெற்றது. அப்போது பல்வேறு வகை பொருட்கள், மூலிகைகளால் சிறப்பு யாகம், தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து திருமுறை, கந்தபுராணம், கட்டியம், திருப்புகழ் பாடப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து வாத்திய இசை முழங்க ராஜகோபுரம், தங்கவிமானத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ராஜகோபுரம், தங்கவிமானம் மற்றும் பக்தர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. கும்பாபிஷேகம் விழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.
தமிழ்நாடு கடலோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், அதனை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்
தமிழில் சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் படங்களில் கதாநாயகியாகவும் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் நடிகர் கமலுக்கு தாயாகவும் நடித்துள்ளவர், பழம்பெரும் நடிகை ஜமுனா. மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜமுனா, 1980ஆம் ஆண்டு தேர்தலில் ஆந்திராவின் ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானவர். பின் 1990களில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
நடிகை ஜமுனா (வயது 86) உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.