திமுக அரசின் ஊழல் குறித்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாக கூறப்பட்டிருந்தது. இந்த விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பிடிஆர் பேசியதாக 2ஆவது ஆடியோவை நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி விளக்கமளித்துள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “சமூக வலைத்தளத்தில் பரவி வரும் ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை. ஆடியோ ஜோடிக்கப்பட்டது. நவீன தொழில் நுட்பத்தை மலிவான யுக்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். எண்ணங்களை நிறைவேற்ற துடிக்கும் பிளாக் மெயில் கும்பலின் இதுபோன்ற கோழைத்தனமாக முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. முதலமைச்சரிடம் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டி, ஆலோசகர், உறுதுணையாக இருப்பவர் சபரீசன். அமைச்சர் உதயநிதி, சபரீசன் மீது களங்கம் சுமத்த ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனைகளை விட, இரண்டே ஆண்டுகளில் நாங்கள் அதிகம் செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூர் கஞ்சா வழக்கில் தமிழர் தங்கராஜு சுப்பையா தூக்கிலிடப்பட்டார்
சிங்கப்பூரில் கஞ்சா கடத்தியதாக தங்கராஜூ சுப்பையா (வயது 46) என்ற தமிழருக்கு இன்று காலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தங்கராஜு, 2013ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சாவை டெலிவரி செய்யும் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டார். டெலிவரி செய்யும் போது அவர் பிடிபடவில்லை என்றாலும், அந்த கஞ்சா கைமாறும் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அவர் வகித்தார் என்று அரசு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர். மேலும் தங்கராஜுவுக்காக டெலிவரி செய்த நபர் பயன்படுத்திய இரண்டு செல்பேசிகளும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் தாம் இல்லை என்று தங்கராஜு வாதிட்டார். தமது ஒரு செல்பேசி தொலைந்து போய்விட்டதாகவும் போலீஸார் கண்டுபிடித்த மற்றொரு செல்பேசி தன்னுடையது இல்லை என்றும் தங்கராஜு மறுத்தார். இந்நிலையில், விசாரணை முடிவில் 2018-ம் ஆண்டு தங்கராஜூ சுப்பையா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு எதிராக அவரது குடும்பத்தினர் செய்த கடைசி நேர மேல் முறையீடுகளை சிங்கப்பூர் நீதிமன்றங்கள் நிராகரித்து விட்டன.
நெல்லையில் கொட்டித் தீர்த்த கனமழை: அரசு அலுலகத்திற்குள் மழைநீர் புகுந்தது
தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், நெல்லை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பிற்பகல் நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பால்வளத்துறை அலுவலகத்திற்குள் மழை நீர் புகுந்தது. இதன் காரணமாக அலுவலகத்தில் இருந்த கணிணிகள், ஆவணங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
இந்தியில் பேசாதீங்க, தமிழில் பேசுங்க: மனைவிக்கு ஏ.ஆர். ரகுமான் அன்பு கட்டளை
‘இந்தியில் பேசாதீங்க, தமிழில் பேசுங்க’ என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுக்கு அன்பு கட்டளையிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரகுமனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் ஏ.ஆர். ரகுமான் பேசி கொண்டிருந்தபோது, தனது மனைவியையும் மேடைக்கு பேச வரும்படி அழைத்துள்ளார். அப்போது ஏ.ஆர். ரகுமான் என் பேட்டிகளை நான் திரும்பி பார்க்க விரும்ப மாட்டேன். ஆனால் என் மனைவி திருப்பி, திருப்பி விரும்பி பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து அவரது மனைவி கூட்டத்தினரின் முன் பேச தயாரானார். அப்போது மனைவியிடம், “இந்தியில் பேசாதீங்க, தமிழில் பேசுங்கள் ப்ளீஸ்” என்று ஏ.ஆர். ரகுமான் அன்பு கட்டளை விடுத்தார். இதன்பின் பேசிய அவரது மனைவி, “மன்னிக்கவும், தமிழில் சரளமாக பேச எனக்கு வராது. அதனால், தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவருடைய குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது குரலில் சொக்கி போய் விடுவேன்” என்று கூறினார்.