No menu items!

நியூஸ் அப்டேட்: கண்டெய்னரில் இருந்து 46 உடல்கள் மீட்பு

நியூஸ் அப்டேட்: கண்டெய்னரில் இருந்து 46 உடல்கள் மீட்பு

அமெரிக்காவில் கண்டெய்னர் லாரியில் இருந்து 46 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சாண்டியாகோவின் புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே நேற்று சந்தேகத்துக்குரிய வகையில் கண்டெய்னர் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. இதுகுறித்த தகவலறிந்த போலீஸார், கண்டெய்னரை திறந்து பார்த்தனர். அப்போது அதற்குள் ஏராளமான நபர்கள் இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும் பலர் மயங்கிய நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டது. உடனடியாக அந்நாட்டின் மருத்துவ துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவத் துறையினர் கண்டெய்னரில் இருந்தவர்களை பரிசோதித்ததில் 46 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 4 குழந்தைகள் உள்பட 16 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த கண்டெய்னர் லாரி மெக்சிகோவில் இருந்து வந்ததும் லாரிக்குள் இருந்த அனைவரும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் நோக்கத்தோடு வந்த அகதிகள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடுமையான வெப்பம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் கண்டெய்னரில் இருந்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

டி20 கிரிக்கெட்: இந்தியாஅயர்லாந்து இன்று மோதல்

இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

இந்தியா – அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் நேற்று முன்தினம் நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது.

அயர்லாந்துக்கு எதிராக இதுவரை மொத்தம் 4 டி20 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி, அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. அந்த வெற்றியை தொடருவதுடன் தொடரை கைப்பற்றவும் இந்திய அணி தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை கோயில் யானைக்கு தாய்லாந்து மருத்துவர்கள் சிகிச்சை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி (வயது 26). இதற்கு 2016-ல் இடது கண்ணில் புரை ஏற்பட்டு பார்வை பாதிக்கப்பட்டது. தற்போது வலது கண்ணிலும் பரவியதால் பார்வையிழப்பால் யானை சிரமப்படுகிறது. யானைக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற தாய்லாந்து மருத்துவர்கள் வீடியோகான்பரன்ஸ் மூலம் கடந்த 9 மாதங்களாக சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், ஜூன் 26-ம்தேதி (நேற்று முன்தினம்) தாய்லாந்து நாட்டில் உள்ள கசிசார்ட் பல்கலைக்கழக கால்நடை இணை பேராசியர் நிக்ரோன் தோங்திப் தலைமையில் 7 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், கோயிலுக்கு வந்து யானையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அக்குழுவினரோடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை செய்தார். தாய்லாந்து மருத்துவக் குழுவினர் நேற்று 2-வது நாளாகவும் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

விளையாட்டுத் துறையில் தமிழகம் முன்னேற்றம்முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “விளையாட்டுத் துறையில் முன்னோக்கியப் பாய்ச்சலில் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. வரும் ஜூலை 28-ம் தேதியன்று, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடக்கவிருப்பது நமக்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய பெருமை.

நானும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவன்தான். கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை நான் தவறவிடமாட்டேன். பள்ளிக் காலம் முதல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பவன். மேயராக இருந்தபோதும், கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு நான் விளையாடி இருக்கிறேன்.

விளையாட்டுப் போட்டிகள் என்பது விளையாடுபவர்களை மட்டுமல்ல போட்டிகளை பார்க்கக்கூடியவர்களையும் உற்சாகமூட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. விளையாடுபவர்களை விளையாட்டு வீரர்கள் என்று கூறுகிறோம். அத்தகைய கம்பீரமான துறைதான் இந்த விளையாட்டுத்துறை. இத்தகைய விளையாட்டுத்துறையில் ஏராளமான முன்னெடுப்புகளை தமிழக அரசு செய்து வருகிறது” என்றார்.

கர்நாடகாவில் லேசான நில அதிர்வு

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கமானது காலை 7.45 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்து உள்ளது. அதே போல அங்குள்ள தட்சிண கன்னடா மாவட்டத்திலும் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. இங்கு 2.3 ரிக்டர் அளவில் நில அதிர்வானது ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...