பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “உலகத்தில் எந்நாளும் போற்றப்படக் கூடியவர்கள் பெண்கள். அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இயக்கம் திராவிட இயக்கம். மகளிர் தினம் மனிதகுலத்துக்கும் மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாள். மகளிரை வாழ்த்துவதன் மூலம் இந்த நாட்டை வாழ்த்துகிறோம்.
மன்னனையே கேள்வி கேட்கும் துணிச்சல் கண்ணகிக்கு இருந்தது. இடையில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்பால் பெண்கள் முடக்கப்பட்டார்கள். முடக்கப்பட்ட பெண்களை மீட்க தொடங்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்கம். பெரியாருக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கியவர்கள் பெண்கள்தான். இலவச பேருந்து சலுகை என்பது மகளிருக்கான உரிமை. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு” என்றார்.
மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணியில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் தமிழ்மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அகமதாபாத் கிரிக்கெட் டெஸ்ட் – மோடி, ஆஸி. பிரதமர் பங்கேற்பு
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்குமிடையே இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நாளை தொடங்குகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் நேரில் பார்க்க உள்ளனர்.
இதை முன்னிட்டு மைதானத்தில் 2 ஆயிரம் போலீஸாரைக் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
திரிபுரா முதல்வராக மாணிக் சகா பதவியேற்பு
திரிபுரா முதல்வராக மாணிக் சகா பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து திரிபுராவின் முதல்வராக 2-வது முறையாக மாணிக் சகா பதவியேற்றுக்கொண்டார். அகர்தலாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா மற்றும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பலரும் கலந்துகொண்டனர். ரத்தன் லால் நாத், பிரணாஜித் சிங்கா ராய், சந்தனா சக்மா மற்றும் சுஷந்தா சவுத்ரி ஆகியோர் திரிபுரா அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து கரு.பழனியப்பன் விலகல்
இயக்குநர் கரு.பழனியப்பன், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ‘தமிழா தமிழா’ என்ற நிகழ்ச்சியை நடத்திவந்தார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கரு.பழனியப்பன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட “தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்தது…!
சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் விரைவில் சந்திப்போம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.