மக்களின் மீதான கொரோனாவின் பிடி இறுகினாலும், அதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. ஒருபுறம் கொரோனாவால் சரிந்த உலகப் பொருளாதாரம் அதிலிருந்து மீள முடியாமல் திணறிக்கொண்டு இருக்க, மறுபுறம் கொரோனா வந்தவர்கள் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். மொத்தத்தில் கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் என்று பலரது வாழ்க்கை இரண்டு விதமாக பிரிந்து கிடக்கிறது.
கொரோனாவால்தான் இத்தனை பாதிப்புகள் என்றால் அது தாக்காமல் தடுப்பதற்காக போட்டுக்கொண்ட தடுப்பூசிகளாலும் பல பாதிப்புகள் ஏற்படுவதாக வெளியான செய்திகள் மக்களுக்கு கிலியூட்டி வருகின்றன. கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வருவதாக வதந்திகள் பரவ, தடுப்பூசிக்கு கொரோனாவே பரவாயில்லை போல என்று மக்கள் பேசிக்கொள்ளும் நிலை வந்தது.
இந்த குழப்பத்தையும், பயத்தையும் தெளிவுப்படுத்தும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 1, 2021 முதல் மார்ச் 31, 2023 வரை நடந்த திடீர் மரணங்களுக்கு, முக்கியமாக 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கு காரணம் கொரோனா தடுப்பூசி அல்ல என்று இந்த அறிக்கையில் ICMR தெளிவுபடுத்தி உள்ளது.
இந்தியாவில் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் உள்ள 47 மருத்துவமனையில் கொரோனா வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யபட்டு பின் இறந்தவர்களின் எண்ணிக்கை மோத்தம் 29,171. இதில், ஆராய்ச்சிக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 729. இந்த 729 நபர்களும் கொரோனா சிகிச்சைக்குப் பின் நன்றாக இருக்கிறார்கள் என்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின் அடுத்த 24 மணி நேரத்தில் இறந்து போனவர்கள்.