No menu items!

மாநிலங்கள் அரிசிக்கு பிச்சை எடுத்தன: ஜெ. ஜெயரஞ்சன் பேச்சு – 1

மாநிலங்கள் அரிசிக்கு பிச்சை எடுத்தன: ஜெ. ஜெயரஞ்சன் பேச்சு – 1

தூத்துக்குடியில் நடைபெற்ற 4-வது புத்தகத் திருவிழா மற்றும் 2-வது நெய்தல் கலை விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், பொருளியல் அறிஞரும் தமிழ்நாடு அரசின் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு துணைத் தலைவருமான ஜெ. ஜெயரஞ்சன் பேசியதன் சுருக்கம் இது.

“தமிழ்நாட்டில் நடந்த சமூக மாற்றங்கள் பற்றி இங்கே பேச விரும்புகிறேன். ஏனெனில், தமிழ்நாட்டின் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம் நாம் கடந்த 60 – 70 ஆண்டுகளில் ஏற்படுத்திய சமுதாய மாற்றங்கள்தான்.

வறுமையை ஒழிப்பது என்பது ஒருபக்கம் இருக்க பசிப் பிணி அகற்றுவது என்பதே நமக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. 2000 ஆண்டுகள் கனவு அது.

எழுத்தாளர் புதுமைப்பித்தன் ‘பொன்னகரம்’ என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அந்தக் கதையில் பெண்ணின் கணவருக்கு உடல்நலமில்லை. அவருக்கு மருந்து வாங்க வேண்டும். ஆனால், வீட்டில் கஞ்சி காய்ச்சவே வழியில்லாமல் இருக்கிறது. அது தெரியாமல் அவள் கணவன், “எனக்கு பால் கஞ்சி வேணும்; வச்சி தர்றியா” என்று கேட்கிறான். என்ன செய்வதென்று தெரியாமல் அவள் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். நீண்ட நாட்களாக அவள் மீது ஆசை வைத்திருக்கும் ஒருவன் அப்போது அந்த வழியாக வருகிறான். “நான் பணம் தருகிறேன், நீ வர்றியா” என்று கேட்கிறேன். இவள் சரி என்று அவனுடன் போகிறாள்.

இப்படிப்பட்ட நிலைதான் அக்காலத்தில் இங்கே இருந்தது. அதாவது, உடல்நலமில்லாதவனுக்கு கஞ்சி கூட கொடுக்க முடியாத நிலை.

இதுபோல் அக்கால வறுமையை சொல்லும் ஒரு கதையை விந்தன் எழுதியுள்ளார். அந்தக் கதையில் சென்னையில் இருக்கும் தஞ்சாவூரை சேர்ந்த ஒருவர் ஊரில் அறுவடை நடக்கும்போது ஊருக்கு வருகிறார். ஒரு நண்பர் வீட்டுக்கு செல்கிறார். அந்த வீட்டில் இலை போட்டு, இவர் சாப்பிடும் அளவு தெரியாமல், நிறைய பரிமாறிவிடுகிறார்கள். அதனால், முடிந்த அளவு சாப்பிட்டுவிட்டு, மீதியை இலையோடு சேர்த்து வெளியே கொண்டுபோட செல்வார். அப்போது அங்கே ஒருவன் நின்றுகொண்டு, “சாமி இலையை கீழே போட்டுவிடாதீர்கள். என் கையில கொடுங்கள்” என்பான். “ஏண்டா கையில கொடுக்க சொல்ற” என்று இவர் கேட்பார். “கீழே போட்டிங்கன்னா, அதுக்காக இங்க காத்திருக்கு பாருங்க இந்த நாயுடன் நான் சண்டை போடணும். கையில கொடுத்தீங்கன்னா நான் சாப்பிட்டுவிடுவேன்” என்பான். இவர் அதிர்ச்சியாகி, “ஏண்டா இப்படி இருக்க… அறுப்பு வேலைக்கு போகக்கூடாதா” என்பார். “அறுப்பு வருஷத்துல எல்லா நாளும் இருக்குமா? மீதி நாள்ல சில நாள் நடவு வேலைக்கு போகலாம். அதற்குப் பிறகு…” என்பான்.

தி. ஜானகிராமனின் ஒரு சிறுகதை. திருச்சியில் ஒருவர் ரயில் ஏறுகிறார். அவருடன் ஒரு பையன் இருக்கிறான். அதே ரயிலில் ஒரு பெண் வருகிறார். அவருடன் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அந்த பெண் குழந்தைக்கு எட்டு வயது இருக்கலாம். இப்போது பயணங்களிலும் மொபைலை பார்த்துக் கொண்டே செல்வது போல் அப்போது இல்லை. சக பயணிகளுடன் பேசுவார்கள். அதன்படி அந்த பெண்ணிடம் இந்த ஆண் பேச்சுக் கொடுக்கிறார். அவர்களைப் பற்றி விசாரிக்கிறார்.

“இந்த குழந்தை இங்கே ஒரு ஜட்ஜ் ஐயா வீட்டில் வேலை செய்கிறாள். ஜட்ஜ் ஐயா சகலை கல்கத்தாவில் ஒரு பெரிய கம்பெனியின் மேனஜராக இருக்கிறார். அவர் வீட்டுக்கு இவள் வேலைக்கு போகிறாள்”  என்கிறார் அந்த பெண். இவர் அந்த குழந்தையிடம், “நீ என்னன்ன வேலையெல்லாம் பார்ப்பம்மா” என்று கேட்கிறார். “எல்லா வேலையும் செய்வேன். துணி துவைப்பேன். பாத்திரம் கழுவேன். சமைப்பேன்” என்கிறாள்.

“காலையில் சாப்பிட்டியா?”

“ஆமா பழையது சாப்பிட்டேன்.”

“அங்க யாரெல்லாம் பழையது சாப்பிடுவாங்க?”

“நான் மட்டும்தான் சாப்பிடுவேன். வேறு யாரும் சாப்பிட மாட்டாங்க.”

“ஏன் நீ பள்ளிக்கூடத்துக்கு போகலை?”

“எங்க அப்பா சம்பளம் எங்க குடும்பத்துல எல்லாருக்கும் மத்தியான சாப்பாட்டுக்கே பத்தலை” என்கிறாள். சாப்பாட்டுக்கு வழியில்லாததால் எட்டு வயது பெண் வேலைக்கு போக வேண்டிய நிலை.

பட்டினி காரணமாக ஒரு பெண் சோரம் போகிறாள், ஒருவன் நாயுடன் சண்டை போடுகிறான், எட்டு வயது பெண் அவள் சக்திக்கு மீறிய வேலைக்குப் போகிறாள். அதுவும் குடும்பத்திடம் பிரிந்து தஞ்சாவூரில் இருந்து கல்கத்தா போகிறாள். இப்படி நமது சமூகத்தின் மிகப்பெரிய அவலமாக ஒரு காலத்தில் பட்டினி  இருந்தது.


கலைஞர் கருணாநிதியிடம் ஒருமுறை, “நமது வரலாற்றில் உங்களுக்கு மிகப் பிடித்தது எது” என்று கேட்கும்போது, “மணிமேகலையின் கையில் இருந்ததாக சொல்லப்படும் அட்சயப் பாத்திரம்தான் எனக்கு மிகவும் பிடித்தது” என்று சொல்கிறார். அட்சயப் பாத்திரம் இருந்தால் இந்த சமுதாயத்தின் பட்டினி பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என அவர் கண்ட கனவை, அரசின் அதிகாரம் அவர் கையில் வரும்போது சாதித்து காட்டியது நம் சமுதாயத்தில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டது.”   

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...