No menu items!

நியூஸ் அப்டேட்: ரனில் இலங்கை பிரதமராக வாய்ப்பு

நியூஸ் அப்டேட்: ரனில் இலங்கை பிரதமராக வாய்ப்பு

இலங்கையில் பிரதமரும் அதிபரும் பதவி விலகக் கோரி அமைதியாக நடந்து வந்த ‘கோட்டா கோ கம’ போராட்டத்தில் கடந்த 9-ந்தேதி வன்முறை வெடித்தது. இதன் காரணமாக ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதனையடுத்து பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் கோத்தபய விடுத்த கோரிக்கையை அவர் ஏற்க மறுத்து விட்டார். இது தொடர்பாக சஜித் பிரேமதாசா கூறும்போது, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால்தான் பிரதமர் பதவியை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால், இலங்கையில் புதிய பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரனில் விக்ரமசிங்கேவை நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளன் விடுதலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்தி வைப்பு

இந்திய உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நேற்று முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். முன்னதாக, “இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகள் சட்டம், ஒழுங்கு சார்ந்த வழக்குகள். இதில், மாநில அரசுக்குத்தான் முக்கியத்துவம் உள்ளது’ என்று நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில்

தீர்ப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவார் என்கிற நம்பிக்கை இருப்பதாக பேரறிவாளன் தரப்பு வழக்குரைஞர் சே. பிரபு தெரிவித்துள்ளார். பேரறிவாளன் தற்போது பிணையில் உள்ளார்.

ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வுக்கு அதிமுக கண்டனம்: ஓ.பி.எஸ். அறிக்கை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது” எனத் தேர்தலில் வாக்களித்த திமுக கொரோனாவின் தாக்கம் முடிவடையாத நிலையில், ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் சொத்து வரியை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் மன்றத் தீர்மானங்கள் மூலம் மாநகராட்சிகள், நகராட்சிகள் சொத்து வரியை உயர்த்திக்கொள்ள வழிவகை செய்யும் சட்ட முன்வடிவினை நிறைவேற்றியிருப்பது `வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்` உள்ளது. மேற்படி சட்ட முன்வடிவு இயற்றப்பட்டதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

8-ம் வகுப்பு மாணவியை கட்டிப்போட்டு உடன் படிக்கும் 4 மாணவர்கள் பாலியல் தொல்லை

சென்னை காசிமேட்டில் 8-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து கட்டிப்போட்டு 4 மாணவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் தொல்லைக்குள்ளான காசிமேடு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மாணவியின் வீட்டுக்கு சென்று படிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்த நிலையில் 4 மாணவர்களும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீடு புகுந்து கதவை பூட்டிக்கொண்டு மாணவியை கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தாய் ராயபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் 4 மாணவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

அரசின் உத்தரவுகளை செயல்படுத்துவதில்லை: உ.பி. போலீஸ் டிஜிபியை நீக்கிய யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச போலீஸ் டிஜிபியாக கடந்த 2021-ம் ஆண்டு பதவியேற்றவர் முகுல் கோயல். முன்னதாக, எஸ்.பியாக தான் பணிபுரிந்த மாவட்டங்கள் அனைத்திலும் ரவுடியிஸம், கட்டப் பஞ்சாயத்துகளை ஒழித்தவர் என்ற பெயர் முகுல் கோயலுக்கு உண்டு. இதனிடையே, உத்தரபிரதேச டிஜிபியாக முகுல் கோயல் பொறுப்பேற்றது முதலாகவே அவருக்கும், அமைச்சர்கள் பலருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. சில நேரங்களில் முதல்வரின் உத்தரவுகளுக்கு கூட அவர் பணிவதில்லை என்றும் தகவல்கள் வெளியானது. இதன் உச்சக்கட்டமாக, கடந்த வாரம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற சட்டம் – ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை டிஜிபி முகுல் கோயல் புறக்கணித்தார். இந்நிலையில், டிஜிபி முகுல் கோயல் டிஜிபி பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவர் ஊர்க் காவல் படை இயக்குநராக மாற்றப்படுவதாகவும் உத்தரபிரதேச உள்துறை அமைச்சகம் நேற்று இரவு உத்தரவிட்டது. அரசின் உத்தரவுகளை செயல்படுத்தாமல் இருந்தது; பணியில் ஆர்வம் இல்லாமல் இருந்தது போன்ற காரணங்களுக்காக அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அந்த உத்தரவில் உ.பி. அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...