No menu items!

சிங்கப்பூர் அதிபரான தமிழர்: மும்முனை தேர்தலில் வெற்றி

சிங்கப்பூர் அதிபரான தமிழர்: மும்முனை தேர்தலில் வெற்றி

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து சிங்கப்பூரில் 9ஆவது அதிபராக விரைவில் தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி

சிங்கப்பூரில் அதிபரின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். இதன்படி தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் பதவி காலம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று (01-09-23) நடைபெற்றது. முன்னதாக அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்றது. தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (வயது 66) மற்றும் இங் கொக் சொங் (வயது 76), டான் கின் லியான் (வயது 75) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மூவரும் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டது.

சிங்கப்பூர் மக்கள் தொகையில் நான்கில் 3 பகுதியினர் சீனர்கள். எஞ்சியவர்கள் மலாய், இந்தியா, யுராஷியன் வம்சாவளியினர். ஆனாலும், மூவரில் தர்மன் சண்முகரத்னத்துக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தொடக்கத்தில் இருந்தே கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. சீன இனத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டாலும், சீனர்களில் பெரும்பகுதியினர் தர்மன் சண்முகரத்னத்தையே விரும்பியது குறிப்பிடத்தக்கது. மேலும், சிங்கப்பூரின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியின் ஆதரவு பெற்றவர் என்பதால், சிங்கப்பூரின் அடுத்த அதிபராக தர்மன் சண்முகரத்னமே  தேர்வுசெய்யப்படுவார் என்றே ஊடகங்கள் குறிப்பிட்டு வந்தன. மற்ற இரு வேட்பாளர்களும் சுயேச்சையாக களமிறங்கி இருந்தனர்.

யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?

தர்மன் சண்முகரத்னம், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2001ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியிலிருந்து எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இந்தத் தொகுதியிலிருந்து நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தனது 22 ஆண்டுகள் கால அரசியல் பயணத்தில் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். மிகச் சிறந்த பொருளாதார வல்லுநர். சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் நெருங்கிய நண்பர்.

இவரது மனைவி ஜேன் யுமிகோ இட்டோகி. ஜப்பான் வம்சாவளியைச் சேர்ந்தவர்.

2019இல் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த தர்மன், பொருளியல் கொள்கைகள் வகுப்பதில் பிரதமருக்கு ஆலோசனைகளையும் வழங்கி வந்தார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இப்போது நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததை தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியில் இருந்தும் மக்கள் செயல் கட்சியில் இருந்தும் விலகினார். அதோடு, தான் வகித்துவந்த அனைத்துப் பொறுப்புகளையும் துறந்தார்.

மற்ற இரு வேட்பாளர்களில், இங் கொக் சொங், 1970ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசின் நிதியமைச்சக முதலீட்டு ஆய்வாளராகப் பணியைத் தொடங்கினார். 2007ஆம் ஆண்டில் ஜிஐசி என்றழைக்கப்படும் சிங்கப்பூர் அரசின் முதலீட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகப் பதவியேற்றார். 2013ஆம் ஆண்டு ஓய்வுபெறும் வரை அந்தப் பதவியை வகித்தார். இவரும் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் நெருங்கிய நண்பர்.

மற்றொரு வேட்பாளரான டான் கின் லியான் சுமார் 30 ஆண்டுகள் என்டியுசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவிவகித்தார். தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய டான் கின் லியான், “அதிபர் தேர்தலில் முன்னாள் அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தான் எனக்கு ஒரு கடுமையான போட்டியாளராக விளங்குவார். தர்மன் சண்முகரத்னம் போன்ற மூத்த அதிகாரிகளுடன் போட்டியிடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தர்மன் சண்முகரத்னத்தின்  அபார வெற்றி

தேர்தல் பிரச்சாரம் நேற்று முன் தினம் (30-08-23) நிறைவுபெற்ற நிலையில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் முதல்முறையாக வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 10 நகரங்களில் வசிக்கும் சிங்கப்பூர் மக்களும் இந்த தேர்தலில் வாக்களித்தனர். சுமார் 27 லட்சம் மக்கள் வரை வாக்களித்த நிலையில் நேற்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.

இதில் தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றார். அதிபர் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முக ரத்னம் அபார வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து சிங்கப்பூரில் 9ஆவது அதிபராக விரைவில் தர்மன் சண்முகரத்னம் பதவியேற்க உள்ளார்.

இதற்கு முன்பு, இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பேர் சிங்கப்பூருக்கு அதிபராக பதவி வகித்துள்ளனர். சிங்கப்பூரின் மூன்றாவது அதிபரான தேவன் நாயர் 4 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தார். இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். எஸ்.ஆர். நாதன் என அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன், 2009ஆம் ஆண்டு அதிபராக தேர்வானார். இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்.

இப்போது தர்மன் சண்முகரத்னம் 9ஆவது சிங்கப்பூர் அதிபராகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...