No menu items!

சிறுகதை: நினைத்தாலே கசக்கும் – ரவிபிரகாஷ்

சிறுகதை: நினைத்தாலே கசக்கும் – ரவிபிரகாஷ்

‘நியூவேவ் அட்வைர்டைஸிங்’ என ஆங்கில நியான் எழுத்துகள், எட்டு மாடிக் கட்டடம் ஒன்றின் நெற்றியில் சதா காலமும் ஓடிக்கொண்டிருப்பதை, சென்னை அண்ணாசாலைப் பக்கம் வந்திருந்தால் கட்டாயம் கவனித்திருப்பீர்கள். ஆமாம்… அந்தக் கட்டடத்தின் உச்சித் தளம் பூராவையும் ஆக்கிரமித்திருக்கும் விளம்பர நிறுவனம்தான் அது.

‘இன்ன டீயைக் குடியுங்கள்…’, ‘இன்ன சோப்புப் போட்டுக் குளியுங்கள்…’ என்று, தனியார் தொலைக்காட்சிகளின் அழுகை சீரியல்களுக்கிடையே நுழைந்து, உங்களை வழிநடத்தும் பெரும்பாலான கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் விளம்பரங்கள், இந்த நிறுவனம் தயாரித்தவைதான். மட்டுமல்ல… நாளேடுகள், மாத, வாரப் பத்திரிகைகளில் வரும் பலப்பல விளம்பரங்களும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள்தான்.

‘நியூவேவ் அட்வைர்டைஸிங்’ தயாரித்த விளம்பரங்கள் பெரும்பாலானவற்றில் மாதுரி தீட்சித்துக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் சவால் விடும்படியான பேரழகி ஒருத்தி அடிக்கடி இடம்பெறுவதை ரசனையுள்ளவர்கள் கவனித்திருக்கலாம், அவள் பெயர் வர்ஷினி.

மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனால், மத்திய தரக் குடும்பங்களிடையேயும் இரு பிரிவுகள் உண்டாமே?! அப்பர் மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸ். இவற்றில் இரண்டாவது வகையைச் சேர்ந்தவள் வர்ஷினி.

முதன்முதலில், துணி வெளுக்கும் சவுக்காரக் கட்டி விளம்பரத்தில்தான் தோன்றினாள். வர்ஷினியின் நேரமோ என்னவோ, ஜனங்கள் எல்லாம் அந்தக் குறிப்பிட்ட சவுக்காரக் கட்டி இருக்கிறதா என்று கேட்டு அண்ணாச்சி கடைகளையும் ஷாப்பிங் மால்களையும் படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். துணிக்கு அடுத்து உடம்பைத்தானே வெளுக்க வேண்டும்? கமகமக்கும் பரிமள சுகந்த சோப்பு ஒன்றைத் தேய்த்துக் குளித்ததுதான் தன் அழகின் ரகசியம் என்று சின்ன, பெரிய திரைகளில் தோன்றிக் கூசாமல் பொய் சொன்னாள் வர்ஷினி. அதை நம்பி, இனி குளித்தால் அவள் பரிந்துரைத்த அந்தக் குறிப்பிட்ட சோப்பைத்தான் தேய்த்துக் குளிப்பது என்று கொள்கை முடிவே எடுத்துவிட்டார்கள் கோடிக்கணக்கான தாய், தந்தைக் குலங்கள். ஆக, வர்ஷினி காட்டில் அடைமழை!

இதற்கெல்லாம் காரணம் அஷ்வின். ‘நியூவேவ் அட்வைர்டைசிங்’கின் க்ரியேட்டிவ் ஹெட்.

அவன்தான் வர்ஷினியை விளம்பர மாடலாகத் தமிழ்கூறு நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தினான். நுகர்வோர் பொருள்கள் தொடர்பான விளம்பரங்கள் அனைத்திலும் அவளை நுழைத்து, பிரபல நடிகைக்குண்டான அந்தஸ்தையும் இமேஜையும் அவளுக்கு ஏற்படுத்தித் தந்தவன் அவன்தான்.

வர்ஷினி தோன்றிய மூன்றாவது விளம்பரத்திலேயே அவள் ‘செலிபிரிட்டி’ அந்தஸ்து பெற்றுவிட்டாள். ‘உங்க டூத் பேஸ்ட்ல உமிக்கரி இருக்கா?’ என்று அவள் தினமும் காலையும் இரவும் சின்னத் திரைகளில் தோன்றிக் கேட்க, ‘ஐயையோ… இல்லையே! இது தெய்வ குத்தம் ஆகிவிடுமா?’ என்று பதறியடித்து ஜனங்கள் அவள் பரிந்துரைத்த அந்த டூத்பேஸ்ட்டையே வாங்கிப் பல் துலக்குவதென்று ஏகமனதாகத் தீர்மானித்தார்கள். ‘வர்ஷினி ஃபேன்ஸ்’, ‘வர்ஷினி ஆர்மி’ என்றெல்லாம் சோஷியல் மீடியாக்களில் குழுமங்கள் தொடங்கிக் கூட்டம் சேர்த்துக் கொண்டாடினார்கள்; கும்மியடித்தார்கள்!

வர்ஷினியின் கிராஃப் கிடுகிடுவென்று வளர்ந்தது. அவளைக் கதாநாயகியாகப் போட்டுப் படம் எடுக்க பிரபல புரொடியூஸர்கள் முன்வந்தார்கள்; முன்னணிக் கதாநாயகர்கள் அவளைப் பரிந்துரைத்தார்கள்; துடிப்பான இயக்குநர்கள் ஆர்வத்தோடு அணுகினார்கள். வர்ஷினி அவசரப்படவில்லை. நிதானம் காத்தாள்.

துறை புதிது. நல்ல தயாரிப்புக் கம்பெனியா, சிறந்த இயக்குநரா, நல்ல கதையா… தெரிய வேண்டும். அப்புறம் சம்பளம்! சில நிமிடங்கள் தோன்றும் விளம்பரங்களுக்கே லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. ஒரு படம் முழுக்க நடிப்பது என்றால், அதை எடுத்து முடிக்க எத்தனை காலம் ஆகுமோ? தன் சம்பளம் எவ்வளவென்று நிர்ணயிப்பது? அக்ரிமென்ட் விஷயங்கள் வேறு இருக்கின்றன. தேர்ந்த அனுபவசாலி ஒருவரின் உதவி தேவை.

விளம்பரங்களில் கொடி கட்டிப் பறந்தாலும், வர்ஷினி நன்றி மறக்கவில்லை. தன்னை அறிமுகப்படுத்திய அஷ்வினுக்கே முன்னுரிமை கொடுத்தாள். அவனுக்கு மிக விசுவாசமாக இருந்தாள். அவனிடம் ஆலோசனைகள் கேட்டாள். அவனும் அவளிடம் கூடுதல் சலுகைகளும் உரிமைகளும் எடுத்துக்கொண்டான். அவள் மறுக்கவில்லை; தடுக்கவில்லை.

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சாதகமாக ஒத்துழைத்தது ஒரு நாள். உறங்கிக் கிடந்த ஆதி இயற்கை உணர்வுகள் வன்மையாகப் பீறிட்டெழ, அதன் முன் அவர்கள் இருவருமே தோற்றுப் போனார்கள். செம்புலப் பெயல் நீர் போல – அன்புடை நெஞ்சங்கள் அல்ல; ஆவேச உடல்கள் தாம் கலந்தனவே!

அழகு என்பதற்கான இலக்கணம் ஆளுக்காள் வேறுபடும். கண்ணே அழகு, பல்லே அழகு, உதடே அழகு, முகமே அழகு என்பதையெல்லாம் தாண்டி, சிரிப்பே அழகு, குரலே அழகு, பேச்சே அழகு, பழகும் விதமே அழகு என்பனவற்றையும் கடந்து, குணமே அழகு, கொள்ளும் அக்கறையே அழகு, செலுத்தும் அன்பே அழகு என அழகின் சித்தாந்தங்கள் நீண்டுகொண்டே போகும். வர்ஷினி பேரழகியாக விளம்பர உலகில் நிலைபெற்றதில் அஷ்வினுக்கே கொஞ்சம் ஆச்சரியம்தான்! நேரில் அவளொன்றும் அப்படி ரதியல்ல; தனது கேமரா கோணங்களும், ஒப்பனையாளரின் உபயமும், காஸ்ட்யூம் டிசைனரின் கைவண்ணமும் சேர்ந்து அவளை உச்சத்தில் ஏற்றிவிட்டன என்பதே அவன் கணிப்பு.

அவளைத் திருமணம் செய்துகொள்கிற உத்தேசமெல்லாம் அவனுக்கில்லை. கல்யாணம் என்பது கால்களில் மாட்டப்படுகிற தளை, கைகளில் போடப்படுகிற விலங்கு என்பது அவன் எண்ணம். அன்றைய தினம் நிகழ்ந்தது ஆசையின் சங்கமம் அல்ல; எதிர்பாராத விபத்து! அது ஒரு கெட்ட கனவாக இருந்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று எண்ணினான் அஷ்வின். மறக்க முயன்றான். அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

வர்ஷினிக்குப் பதிலாக வேறு ஒரு தர்ஷினியைத் தனது விளம்பரங்களில் புகுத்தினான். இரண்டொரு முறை வர்ஷினி அவனை மொபைலில் தொடர்புகொள்ள முயன்றபோது, இணைப்பைத் துண்டித்தான். மற்றுமொரு முறை தான் ரொம்ப பிசியாக இருப்பதாகவும், பின்னர் தொடர்புகொள்வதாகவும் சொன்னான். வேறொரு முறை, டிரைவிங்கில் இருப்பதாகப் புளுகினான். அவளாகவே புரிந்துகொண்டு விலகிவிடட்டும் என்று எதிர்பார்த்தான்.

அன்று காலை, மொபைலில் தொடர்புகொண்ட அவள், அவன் வழக்கம்போல் ஏதோ சாக்குப்போக்குகள் சொல்லி இணைப்பைத் துண்டிப்பதற்கு முன், “கொஞ்சம் இரு அஷ்வின்… நான் சொல்றதைக் கேளு. உன்னை நேர்ல பார்த்துச் சில விஷயங்கள் பேசணும். எப்போ பார்க்கலாம்?” என்றாள்.

“விளம்பர வாய்ப்புதானே…? உனக்கில்லாததா…? கண்டிப்பா தரேன். நீ எப்பவும் என் ஞாபகத்துல இருக்கே டியர்! அவ்வளவு சுலபத்துல உன்னை மறந்துடுவேனா…? நல்ல கம்பெனியா வந்தா சொல்லலாம்னுதான் காத்துட்டிருக்கேன். புது புராஜெக்ட் கைக்கு வர்றப்ப அவசியம் உன்னை கான்டேக்ட் பண்றேன் வர்ஷினி” என்றான் அஷ்வின்.

“அதில்லை அஷ்வின்… விளம்பர வாய்ப்புகள் குவிஞ்சுக்கிட்டுதான் இருக்கு. இன் ஃபாக்ட், நேரம் ஒதுக்கித் தர முடியாம நானே பல ஆஃபர்களை அவாய்டு பண்ணிட்டிருக்கேன். பெரிய கம்பெனி விளம்பரங்களை மட்டும்தான் ஒப்புக்கறேன். ஸோ, உன்கிட்ட சான்ஸ் கேக்கறதுக்காக இப்ப நான் ‘கால்’ பண்ணலை. வேற ஒரு முக்கியமான விஷயம் பேசணும். எப்போ நீ ஃப்ரீயா இருப்பே? எப்போ மீட் பண்ணலாம்?”

‘அது’ நடந்து ஒரு மாதம் இருக்குமா…? மேலேயே இருக்கும். அது போன ஐந்தாம் தேதி. இந்த ஐந்தாம் தேதியோடு முப்பது நாள். இன்று தேதி 16. ஆக, நாற்பத்தொரு நாள். சரிதான். தான் யூகித்தது சரியாய்ப் போயிற்று. தான் பயந்தது நடந்துவிட்டது. ஒன்றும் ஒன்றும் இணைந்து புதிய ஒன்று உருவாகிவிட்டதோ?! ஆம்… அவள் சொல்கிற முக்கிய விஷயம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். அதைக் காரணம் காட்டித் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தப் போகிறாளோ? அதற்காகத்தான் தன்னைச் சந்திக்க விழைகிறாளோ?  

“என்ன அப்படி முக்கியமான விஷயம் வர்ஷினி…?” என்றான் அஷ்வின், வயிற்றுக்குள் கவலைப் பந்து உருள்வதை மறைத்துக்கொண்டு.

“போன்ல சொல்ற விஷயமில்லை. நேர்ல பேசுவோம். எப்போ வரட்டும்?” என்றாள் வர்ஷினி. தொடர்ந்து, “உன் ஆபீஸ் சரிப்படாது. வீட்டுக்கு வரவா? வீட்டுல எப்ப இருப்பே சொல்லு?” என்றாள்.

“இல்லையில்லை… அது வேண்டாம்! வெளியில, ஒரு பொது இடத்துல மீட் பண்றதுல உனக்கு ஏதாவது ஆட்சேபனையா வர்ஷினி?” என்று கேட்டான் அஷ்வின்.

“நத்திங். நீயே சொல்லு, எங்கே மீட் பண்ணலாம்? ஆனா, உடனே, இப்பவே, இந்த க்ஷணமே உன்னைப் பார்க்கணும், பேசணும். ரொம்ப அர்ஜென்ட். தள்ளிப்போட முடியாது!”

“ரொம்பப் புதிர் போடறே வர்ஷினி. என்ன அப்படி அர்ஜென்ட்டுன்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறே? என்னதான் விஷயம், சொல்லேன்?”

“நாள் தள்ளிப் போயிருக்கு அஷ்வின்!” என்றாள் வர்ஷினி. ‘நினைச்சேன்’ என்றான் மனசுக்குள்.

“என்ன நாள் தள்ளிப் போயிருக்கு…? புரியலை. தெளிவா சொல்லு?”

“உங்களை மாதிரி ஆம்பிளைங்களுக்கு இதெல்லாம் புரியாது; மத்ததெல்லாம் தெளிவா தெரியும். அப்படித்தானே?” என்றாள் வர்ஷினி. குரலில் எரிச்சல்.

“ப்ளீஸ் வர்ஷினி, நானே ஏகப்பட்ட வேலைகளைத் தலையில போட்டுக்கிட்டு, எப்படா முடிப்போம்னு தெரியாம திண்டாடிக்கிட்டு இருக்கேன். சொல்ல வந்ததை ஸ்ட்ரெயிட்டா சொல்லு!” என்றான் அஷ்வின், குரலில் கடுமை கலந்து. அவனுக்குப் புரியாமலெல்லாம் இல்லை. இப்பவே அவள் நேரடியாக விஷயத்துக்கு வந்துவிட்டால், பட்டென்று பேசி, தொலைத்தொடர்பை மட்டுமல்ல, அவளுடனான தொடர்பையும் அறவே துண்டித்துவிடலாம் என்பது அவன் திட்டம்.

“ஓகே அஷ்வின்… ஸ்ட்ரெயிட்டாவே வரேன். நான் கன்சீவா இருக்கேன். நீ ஒரு குழந்தைக்குத் தகப்பனாகப் போறே! அது தொடர்பாதான் உன்னோட பேசணும்; நம்மோட ஃப்யூச்சரைப் பத்திப் பேசி உடனடியா ஒரு முடிவெடுக்கணும். இன்னிக்குச் சாயந்திரம் எங்கே, எத்தனை மணிக்கு உன்னைச் சந்திக்கலாம்கிறதை மட்டும் சொல்லிட்டு, நீ உன் வேலையைப் பாரு!” என்றாள் வர்ஷினி.

“என்னது… கன்சீவா இருக்கியா?! மை காட்… மை காட்…!” என்றான் அஷ்வின்.

“ரொம்பப் பதறாதே! நானே நிதானமாத்தான் இருக்கேன். எங்கே சந்திக்கலாம்கிறதை மட்டும் டிசைட் பண்ணிச் சொல்லு!” என்றாள் வர்ஷினி.

“ஓகே! ஈவ்னிங் செவன் தர்ட்டிக்கு ஃபீனிக்ஸ் மால்ல மீட் பண்ணுவோம்! ரூம் புக் பண்ணிட்டு உனக்கு மெசேஜ் பண்றேன்” என்றான் அஷ்வின்.

“ஃபீனிக்ஸ்! உயிர்த்தெழும் சாகசப் பறவை! நல்ல தேர்வு!” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தாள் வர்ஷினி.

அவள் குரலில் இருந்தது நம்பிக்கையா, வருத்தமா, கேலியா என்று புரியவில்லை அஷ்வினுக்கு.

ஆர்த்தடாக்ஸ் குடும்பத்தில் பிறந்தவள் வர்ஷினி. அவளின் தாய்க்கும் தகப்பனாருக்கும் அவள் மாடலிங் செய்வதில் ஆரம்பத்தில் விருப்பம் இல்லை. அஷ்வின்தான் அவளின் வீட்டுக்கே போய், அவர்களிடம் பேசி கன்வின்ஸ் செய்து, அவளை முதலில் பத்திரிகை விளம்பரங்களுக்கு போஸ் கொடுக்க வைத்தான். இரண்டொரு முன்னணிப் பத்திரிகைகளின் அட்டையிலும் இடம்பெறச் செய்தான். பின்னர் விளம்பரப் படங்களில் நடிக்க வைத்தான். கற்பூரம் பற்றியது மாதிரி அவளின்மீது புகழ் வெளிச்சம் பற்றி, கிடுகிடுவென்று பரவியது. பணமும் புகழும் சேரச் சேர, அவளின் பெற்றோர் பிடிவாதம் தளர்ந்தனர். நாளடைவில், ‘இன்னிக்கு என்ன கம்பெனிக்கு சைன் பண்ணியிருக்கே வர்ஷின்?’ என்று ஆர்வத்தோடு விசாரிக்கவும் தொடங்கிவிட்டனர்.

அஷ்வின் மீது அவர்களுக்கும் ஒரு கண். வர்ஷினியின் இந்த வளர்ச்சிக்கு வித்திட்டவன் அவன். அவளை முழுமையாகப் புரிந்துகொண்டவன். அவன் வர்ஷினியைத் திருமணம் செய்துகொண்டால், அவர்களின் இல்லறம் செழிக்கும்; எதிர்காலம் சிறக்கும் என்பது வர்ஷினியின் பெற்றோர் கணக்கு.

ஆனால், அவன் கணக்கு வேறாக இருந்தது. அவன் இயக்கும் விளம்பரங்களின் ‘ரீச்’ அதிகமாக இருந்ததில் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் மாத்திரமல்ல; பெரிய பெரிய நட்சத்திரங்களும் அவன் இயக்கும் விளம்பரங்களில் அவனுக்காக நடிக்க ஒப்புக்கொண்டார்கள். விரைவில் அமிதாப் பச்சனை வைத்து ஒரு கார் விளம்பரம் இயக்கப் போகிறான். கத்ரீனா கைஃப் தேதி கொடுத்திருக்கிறார். இன்னும் சில பிரபலங்கள் வரிசையில் இருக்கிறார்கள். விரைவில் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்துக்காக, மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்கவும் தயாராக இருக்கிறான்.

இந்த நிலையில், தெலுங்கிலும் தமிழிலும் ஏற்கெனவே உச்ச நட்சத்திரமாகக் கொடி கட்டிப் பறந்துகொண்டிருக்கும் – நிறத்தின் பெயரையும் இனிப்பின் பெயரையும் ஒருங்கே தன் பெயரில் கொண்ட நடிகை, முதலாவது நட்சத்திரத்தின் பெயர் கொண்ட விளம்பர இயக்குநரோடு நெருங்கின தொடர்பில் இருப்பதாகப் பிரபல வார இதழ் ஒன்று கிசுகிசு வெளியிட்டது. வம்புக்கென்றே அலையும் சில யூடியூபாளர்கள் இதை உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகத் தத்தம் பாணியில் இணைய உலகில் பரப்பிச் சேவை செய்தார்கள்.

இரு தரப்பிலிருந்தும் எந்த மறுப்பும் இதுவரை வரவில்லை. காரணம், அந்தச் செய்தி ஓரளவு உண்மைதான்.

கை வசம் இருக்கும் மெகா பட்ஜெட் படங்கள் இரண்டையும் முடித்துக் கொடுத்துவிட்டால், அடுத்து திருப்பதியில் ‘டும்டும்’தான் என்று அஷ்வினிடம் உறுதியாகச் சொல்லியிருக்கிறாள் அந்த டோலிவுட் நடிகை. செல்வம், புகழ், அந்தஸ்து என அனைத்திலும் சிறந்த ஒரு பொக்கிஷமே தனக்காகக் காத்திருக்கும்போது, வர்ஷினியெல்லாம் எந்த மூலை?

மாலில், மாலையில் தன்னைப் பார்த்து அழுது மாய்மாலம் செய்வாள்; பிரெக்னென்ட்டாக இருப்பதைச் சொல்லி பிளாக்மெயில் செய்யப் பார்ப்பாள். கூடுமானவரை பேசிப் புரிய வைக்க முயல வேண்டும்; எக்காரணம் கொண்டும் அவளைத் தன்னால் திருமணம் செய்துகொள்ள இயலாது என்பதை அழுத்தமாகப் புரிய வைக்க வேண்டும். அதற்கு இணங்கி வரவில்லையென்றால், அடுத்து அதிரடிதான்! பார்க்கலாம், எந்த எல்லை வரை போகிறாள் என்று!

இன்றோடு இவளின் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுவது என்று தீர்மானித்துக்கொண்டான் அஷ்வின்.

ஃபீனிக்ஸ் மால். தனியறையில் காத்திருந்தான் அஷ்வின். வழக்கமாகவே சரியான நேரத்துக்கு வந்துவிடுபவள் வர்ஷினி. அவள் வந்தால் என்ன பேசுவாள், என்ன கேட்பாள், பதிலுக்கு தான் என்ன சொல்ல வேண்டும், அவளை எப்படி கன்வின்ஸ் செய்ய வேண்டும் என ஒத்திகை பார்த்துக்கொண்டான்.

தனக்கும் அவளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது, தனது தகுதிக்கும் திறமைக்கும் அவள் கிட்டத்திலும் வர மாட்டாள் என்பதை அவள் புத்தியில் உறைக்கும் விதமாக, அதே சமயம் அவள் மனம் நோகாமல் நாசூக்கான வார்த்தைகளில் எப்படிச் சொல்வது என மனசுக்குள் வாக்கியங்களை அமைத்து ஒழுங்குபடுத்திக் கொண்டான்.

மின்சார அழைப்பு மணி சங்கீதம் இசைக்க, ‘யெஸ்… கமின்’ என்று குரல் கொடுத்தான். ஜாஸ்மின் மணம் கமழ உள்ளே நுழைந்தாள் வர்ஷினி. மெதுவாக நடந்து வந்து அவன் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள். அழைப்பு மணியை அழுத்தி, ரூம் அட்டெண்டரை வரவழைத்து, இரண்டு ஃபலூடா கொண்டு வரச் சொன்னான் அஷ்வின்.

“ம்… சொல்லு வர்ஷினி! கன்சீவா இருக்கிறதா சொன்னே. ஷாக்கிங்கான நியூஸ்தான். ஆனா, எதிர்பார்க்காதது இல்லே. சரி, இப்ப என்ன செய்யலாம், சொல்லு?” என்று அஷ்வினே உரையாடலைத் தொடங்கி வைத்தான்.

“எனக்கு இது ஒரு வாரத்துக்கு முன்னேயே தெரியும் அஷ்வின். அப்போலேர்ந்தே உன்னைப் பிடிக்க ட்ரை பண்ணிட்டிருந்தேன். முடியலை…” என்றாள் வர்ஷினி.

“சரி, இப்பத்தான் பிடிச்சிட்டியே, அப்புறம் என்ன? சொல்லு!” என்றான் அஷ்வின்.

“நீ இந்த ஃபீல்டுல பெரிய டைரக்டர். அமீர்கான், ஷாரூக்கானையெல்லாம் வெச்சுக்கூட விளம்பரப் படங்கள் டைரக்ட் பண்ணப் போறதா கேள்விப்பட்டேன்…”

“உண்மைதான். விஷயத்துக்கு வா!”

“அத… அத… எப்படி உங்கிட்ட சொல்றதுன்னு தெரியலை. அதே சமயம், இந்த நிலைமையில எனக்கு வேற வழியும் தெரியலே! தள்ளிப் போடவும் முடியலே. அதான், உடனே உன்னைப் பார்த்துப் பேசிடலாம்னு…” என்று தயக்கத்துடன் தலை குனிந்து விரல் நகப் பூச்சுகளைப் பார்த்தாள் வர்ஷினி.

ரூம் சர்வீஸ் பையன் ட்வின் டவர் மாதிரி இரண்டு உயர கண்ணாடிக் கோப்பைகளில் ஃபலூடா கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனான்.

“எடுத்துக்கோ வர்ஷினி! எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லு! நீ கன்சீவ் ஆகியிருக்கிற விஷயத்தில் என்னோட தப்பு மட்டுமில்லே; உன்னோட சம்மதமும் சேர்ந்திருக்கு. அதை மனசுல வெச்சுக்கிட்டுப் பேசுவேனு நம்பறேன்!” என்றான் அஷ்வின்.

“கரெக்ட்! நான் ஒப்புக்கறேன் அஷ்வின். இருந்தாலும் உன்னையும் ஒரு வார்த்தை கேக்கணுமில்லையா? உன்னாலதான் நான் இந்த அளவுக்கு உயரே வந்தேன். ஓஎம்மார்ல எண்பது லட்சத்துல ஒரு லக்ஸுரி ஃப்ளாட் வாங்கியிருக்கேன்னா அது நீ போட்ட பிச்சை. நான் மறுக்கலே; மறக்கவும் இல்லே! என் பேரன்ட்ஸுக்கு உன்னை ரொம்பவும் பிடிச்சிருக்கு. நம்ம கல்யாணத்தை சீக்கிரமே நடத்திப் பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. எனக்குமேகூட…”

“ஸ்டாப் இட்… ஸ்டாப் இட் ஐ ஸே!” என்றான் அஷ்வின். குரல் கடுமையாக இருந்தது. வர்ஷினி ஒரு சின்ன திடுக்கிடலோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“அஷ்வின்….” என்றாள்.

“ஸாரி… உங்கிட்டக் குரல் உயர்த்திக் கடுமையா பேசிடக் கூடாதுன்னு நினைச்சிட்டுதான் வந்தேன். அப்படி என்னைப் பேச வெச்சுடாதே!” என்றான் அஷ்வின்.

“ஸாரி, நான் இப்ப என்ன தப்பா கேட்டுட்டேன்னு…” என்று இழுத்தாள் வர்ஷினி.

“இல்ல வர்ஷினி… நீ கன்சீவா இருக்கலாம். நடந்தது ஒரு விபத்து. ஜஸ்ட் அன் ஆக்ஸிடென்ட்! அதைக் காரணம் காட்டி என்னைத் திருமணம் செஞ்சுக்கச் சொல்லிக் கேட்காதே! தெரியாம பண்ணின ஆக்ஸிடென்ட்டுக்கு நஷ்ட ஈடு வேணா தரலாம்; ஆயுள் தண்டனை அனுபவிக்க முடியாது! காட் இட்?” என்றான் அஷ்வின்.

“அஷ்வின்… நீ என்ன சொல்றே? அப்ப என்னோட கர்ப்பம்…? நம்மோட குழந்தை…?” என்றாள் வர்ஷினி.

“ஈஸி! அபார்ட் பண்ணிடு!” என்றான் அஷ்வின்.

“நெஜம்மாவா சொல்றே அஷ்வின்…?” என்றாள் வர்ஷினி வியப்பு அகலாமல்.

“ஆமாம். அதான் உனக்கும் நல்லது; எனக்கும் நல்லது! நான் உனக்கு எவ்வளவோ ஹெல்ப் பண்ணியிருக்கலாம். அதுக்கான நன்றி விசுவாசம் உனக்கும் என் மேல இருக்கலாம். ஆனா, அதையெல்லாம் காட்டுற இடம் இதில்ல! பிரதியுபகாரம் பண்ற விஷயமல்ல கல்யாணம். ஸாரி… சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே! உனக்கும் எனக்கும் செட்டாகாது!” என்றான் அஷ்வின்.

சொல்லி முடித்ததும், அவள் கண் கலங்குவாள்; ‘என்னையே உன்னிடம் ஒப்படைத்தேனே… இப்படி ஏமாற்றிவிட்டாயே?’ என்று கதறுவாள்; எப்படிப் பேசி அவளைத் தணிய வைப்பது என்று அஷ்வின் யோசனை செய்துகொண்டிருக்க…

சந்தோஷக் குரலில் கீச்சிட்டாள் வர்ஷினி.

“கை கொடு, அஷ்வின்! தேங்க் யூ… தேங்க் யூ வெரி மச்! உன் கிட்டே இதை எப்படி எடுத்துச் சொல்றது, நீ சம்மதிப்பியோ மாட்டியோன்னு ரொம்பவும் தயக்கத்தோடதான் நான் இங்கே வந்தேன். என் வேலையை நீ சுலபமாக்கிட்டே!” என்றாள் வர்ஷினி.

அஷ்வின் குழம்பினான். “வர்ஷினி… உனக்கு என் மேல கோபமில்லையா?” என்று கேட்டான்.

“இல்லவே இல்லை. சத்தியமா இல்லை. உனக்கு லக்ஷ்மண் முகர்ஜியைத் தெரியும்தானே…?”

“தெரியாம என்ன… இந்தியில மாஸ் புரொடியூஸர். ஏழு படம் எடுத்திருக்கார். எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்! அவருக்கென்ன…?” என்றான் அஷ்வின். சில இந்திப் பிரபலங்களின் உதவியோடு அவரைச் சந்திக்க இரண்டு மூன்று முறை முயன்றும் அப்பாயின்ட்மென்ட் கிடைத்திருக்கவில்லை அவனுக்கு.

“அவரேதான்! அடுத்த படத்துல ஹீரோயினா என்னை கமிட் பண்ணியிருக்கார். வர வெள்ளிக்கிழமை பூஜை. ரன்வீர்சிங்தான் ஹீரோ. அது மட்டுமில்லே அஷ்வின்… அந்தப் பட பூஜையின்போது எங்க திருமணம் பத்தியும் மீடியாவுக்கு அறிவிக்கிறதா இருக்கார் மிஸ்டர் லக்ஷ்மண். எனக்காக ‘பாந்த்ரா’வுல ஒரு பெரிய பங்களாவே வாங்கியிருக்கார். ஸோ, ஐ’ம் டு பி வெல் செட்டில்டு! அபார்ஷன் பண்ணிக்கிட்டு, மும்பையிலேயே செட்டில் ஆகறதா இருக்கேன். இதைச் சொல்லிட்டுப் போகத்தான் நான் வந்தேன். எங்கே என்னைத் தப்பா நினைச்சுப்பியோ, நன்றி கெட்டவள்னு கோபப்படுவியோ, எப்படி உன்னைக் கன்வின்ஸ் பண்றதுன்னு ரொம்பக் கவலையோட வந்தேன். உனக்கு என் மேல எந்த வருத்தமும் இல்லேன்னு தெரிஞ்சதுல, ஐ’ம் வெரி ஹேப்பி! நான் கிளம்பறேன். நைட் எனக்கு ஃப்ளைட்! வரட்டுமா? டச்லேயே இரு, என்ன?” என்று எழுந்து, உற்சாகத் துள்ளலுடன் வெளியேறினாள் வர்ஷினி.

சற்று நேரம் அயர்ந்து அமர்ந்திருந்த அஷ்வின் பின்னர் சுதாரித்து எழுந்து வெளியே வந்து, கண்ணாடிச் சுவர் வழியே கீழே பார்த்தான். தரைப் பகுதியில் வர்ஷினி வருவதும், அவள் அருகில் பளபளக்கும் கருநீல நிற ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்று வந்து நிற்பதும், தங்கப் பொத்தான்கள் வைத்த வெள்ளை யூனிஃபார்ம் அணிந்த டிரைவர் இறங்கி வந்து பணிவுடன் கதவைத் திறந்துவிட, வர்ஷினி ஏறி அமர்ந்துகொள்ள, கார் புறப்பட்டுச் செல்வதும் தெரிந்தது.

லக்ஷ்மண் முகர்ஜியின் அன்பளிப்போ?!

அடுத்து எதுவும் யோசிக்கத் தோன்றாமல், செய்யத் தோன்றாமல், விக்கித்து நின்றிருந்தான் அஷ்வின்.

ஓவியம்: அச்சுதன் ரவி

raviprakash
ரவிபிரகாஷ்

4 COMMENTS

  1. அற்புதம். இன்று ஒருவரை ஏமாற்றினால் நாள நாம் ஏமாந்து போவோம். அருமையான நடை. இயல்பான உரையாடல். நச் முடிவு.

  2. அருமை! கதையின் ‘twist’ ஓரலவுக்கு யூகிக்க முடிந்தாலும், கதையின் சுவாரசியம் குறையவில்லை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...