No menu items!

சிறுகதை: மகாநதி – ஜி.ஆர். சுரேந்தர்நாத்

சிறுகதை: மகாநதி – ஜி.ஆர். சுரேந்தர்நாத்

நான் மொபைல் யூட்யூப் வீடியோவில் பார்த்துக்கொண்டிருந்த அந்த சோகமான மலையாளப் பாடல்,

காத்திருன்னு… காத்திருன்னு…
புழ மெலிஞ்சு கடவொழிஞ்சு
காலவும் கடன்னு போய்…
வேனலில் தளங்கள் போல்
வளைகலூர்ன்னு போயி…

என்று முடிய… என் கண்ணோரம் நீர் கசிந்தது.

அப்பாடல் அந்தியிருட்டில் ஆற்றில் படகு செல்லும் காட்சியுடன் முடிந்தது. நாங்களும் காவிரி ஆற்றுப் படித்துறையில்தான் அமர்ந்திருந்தோம். இரவு பத்து மணி இருட்டில், நிலவு வெளிச்சம் ஆற்றுநீரில் பளபளத்துக் கொண்டிருக்க… யாருமற்ற அரசமரத்தடி படித்துறையில் நானும் ராஜாவும் அமர்ந்து சரக்கடித்துக் கொண்டிருந்தோம். படிகளில் ஆற்றுநீர் லேசாக மோதி “க்ளக்… க்ளக்” என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் என்பதால் இரண்டு கரையையும் தொட்டுக்கொண்டு காவிரி ஓடிக்கொண்டிருந்தது. மேட்டூர் அணை திறந்த அன்றுதான் நான் ஜெயிலிலிருந்து விடுதலையானேன்.

சிகரெட்டை இழுத்து புகையை விட்டபடி, “இந்தப் பாட்டு எந்தப் படத்துல வருது?” என்றேன்.

“என்னு நிண்ட மொய்தீன்”

“அந்த நடிகை யாரு?”

“பார்வதி… மலையாளத்துல ரொம்ப ஃபேமஸ்…”

“ம்… ஜெயில்ல இருந்ததால எல்லாம் டச் விட்டுப் போச்சு. சினிமாலதான் காதலிங்க எத்தனை வருஷம் ஆனாலும் காத்திருப்பாங்கள்ல?”

“அது நிஜக் கதை. கேரளா, முக்கத்துல இருக்கிற காஞ்சனமாலாவோட கதை.”

“அப்படியா?” என்று ஒரு மடக்கு பிராந்தியை அருந்தி, “ஆனா என்னோட சுதாவால காத்திருக்க முடியலல்ல?” என்ற எனக்கு தொண்டை அடைத்தது. க்ளாஸில் மிச்சமிருந்த பிராந்தியை ஒரே மடக்காக குடித்துவிட்டு நான், “அவளுக்காகத்தான் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போனேன். எப்படிரா அவளால இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்க முடியுது? எப்படிரா அவன் கூட படுத்து எந்திரிச்சு புள்ள பெத்துக்க முடியுது? எப்படிரா சிரிச்சுகிட்டு கார்ல போக முடியுது?”

“சுதாவப் பாத்தியா?”

“ம்… இன்னைக்கி திருச்சி ரோட்டுல நானும் தம்பியும் பைக்ல போனப்ப, எதிர கார்ல குழந்தைங்களோட போனா. என்னால தாங்கிக்கவே முடியல ராஜா. அதனாலதான் தண்ணியடிக்க கூப்பிட்டேன். சுதா இங்கதான் இருக்காளா? பேங்ளுர்ல இல்லையா?”

“பேங்ளுர்லதான் இருக்கா. அடுத்த மாசம் அவளோட தம்பி கல்யாணம். அதுக்கு லீவ் போட்டுட்டு வந்துருப்பா…”

“பிள்ளைங்க என்ன படிக்குது?”

“ஏதோ எல்கேஜி, ப்ரீ கேஜின்னு கேள்விப்பட்டேன்.”

“கார்ல பிள்ளைங்களோட ஏதோ பேசி சிரிச்சுசிட்டு போனா. என்னை கவனிக்கல” என்று சிகரெட் புகையை இழுத்துவிட்டேன்.

சில வினாடிகள் அமைதிக்குப் பிறகு நான், “நான் ஜெயிலுக்கு போனப்புறம், இன்னைய வரைக்கும் எங்க வீட்டுல அந்த பழைய சிரிப்புச் சத்தம் கேக்கவே இல்ல ராஜா. எங்கப்பா அவரோட ரிட்டயர்மென்ட் பணத்தை எல்லாம் ஹைகோர்ட் வரைக்கும் என் கேஸ்ல செலவழிச்சுட்டாரு. என்னைப் பத்தின கவலைலயே அம்மா செத்துட்டாங்க. தம்பிக்கு படிக்கப் பிடிக்காம அரிசி மில்லுல வேலைக்குச் சேர்ந்துட்டான். என்னோட காதலால என் குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோஷமும் நாசமாயிடுச்சு. ஆனா சுதா?” என்ற எனக்கு சட்டென்று அழுகை பொங்கிக்கொண்டு வர… குரல் தளுதளுத்தது.

“டேய்… நந்தா… என்னடா இது?”

“முடியலடா…… அந்த அருண் செத்த நிமிஷத்துலருந்து என் வாழ்க்கைல எல்லாம் போயிடுச்சு” என்ற நான் சட்டென்று முற்றிலும் உடைந்துபோய் ராஜாவின் மடியில் படுத்துக்கொண்டு அழ… அவன் ஆறுதலாக என் தோளைத் தட்டிக்கொடுத்தான். ஆற்றின் எதிர்கரையிலிருந்து மூங்கில் மரங்கள் காற்றில் ஆடும் சத்தமும் என் அழுகைச் சத்தமும் ஆற்றில் களகளவென்று நீர் ஓடும் சத்தமும் மட்டும் கேட்க… இரண்டு நிமிடங்கள் அழுத பிறகுதான் அழுகை ஓய்ந்தது.

எழுந்து ஒரு மடக்கு பிராந்தியைக் குடித்துவிட்டு, “போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு அருண் பாடிய வாங்க அருணோட அம்மாப்பா ஹாஸ்பிட்டல் வந்திருந்தாங்க. அப்ப நானும் செக்அப்க்காக அந்த ஆஸ்பத்திரிலதான் இருந்தேன். அப்ப அவங்கம்மா, ‘அருண்…’ன்னு அலறின சத்தம் இப்பக் கூட என் காதுல கேட்டுகிட்டேயிருக்குடா… ஜெயில்ல ரொம்ப நாள் வரைக்கும் ராத்திரி தூங்கினன்னா, திடீர்னு “அருண்…’ன்னு அவங்கம்மா அலறின சத்தம் கேட்டு முழிச்சுக்குவேன். அப்புறம் விடியற வரைக்கும் தூக்கமே வராது. ஒரு வருஷம் வரைக்கும் அப்படித்தான் இருந்தேன். அருண் செத்த கவலைல, சேதுவோட அப்பாவும் செத்துப்போயிட்டாரு. இதையெல்லாம் பத்தி கவலைப்படாம சுதாவால எப்படிரா வாழமுடியுது?”

“பொம்பளைங்க அப்படித்தான்டா… அவங்க பாத்திரத்துல ஊத்துற தண்ணி மாதிரி. பாத்திரத்துக்கு தகுந்த மாதிரி உடனே மாத்திக்குவாங்க… நீயும் பழசையே நினைச்சுட்டிருக்காம உன்னை மாத்திக்கணும்”.

“முடியலையே… அம்மா இறந்ததுலருந்து அப்பா இடிஞ்சு போயி உக்காந்துட்டாரு. லாஸ்ட் ரெண்டு வருஷமா அவர் என்னை ஜெயிலுக்கு வந்து பாக்கிறதக் கூட நிறுத்திட்டாரு. நீயும் என் தம்பியும்தான் கடைசி வரைக்கும் வந்தீங்க. வீட்டுல அவரப் பாக்குறப்பல்லாம் நெஞ்சுல யாரோ முள்ளால குத்துற மாதிரியே இருக்குடா. நான் கேம்பஸ்ல செலக்ட் ஆனப்ப, சொந்தக்காரங்க அத்தனை பேருக்கும் ஃபோன போட்டு, “என் பையனுக்கு இன்ஃபோஸிஸ்ல வேலை கிடைச்சுருச்சு…… இன்ஃபோஸிஸ்ல வேலை கிடைச்சுருச்சு”ன்னு சந்தோஷமா சொல்லிட்டிருந்தாரு. சொன்ன ஆறாம் மாசம் ஜெயிலுக்குப் போய்ட்டேன். பாரதியார் பாஞ்சாலி சபதத்துல எழுதியிருப்பாரு…” என்ற நான் கண்ணோரம் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு, “பொக்கென ஓர் கணத்தே எல்லாம் போகத் தொலைத்துவிட்டேன்”

“பழற நினைச்சுட்டிருக்கிறதால எதுவும் மாறப்போறதில்ல நந்தா…”

“முடியலைடா… நான் மறக்க நினைச்சாலும் மத்தவங்க விடமாட்டாங்கடா. ஜெயில்லருந்து வந்து இத்தனை நாளாவுது. இன்னும் தெருவுல இறங்கினா ஒவ்வொருத்தனும் எப்படி பாக்குறான் தெரியுமா? அட் எ டைம்ல பத்துக் கொலை செஞ்சவனப் பாக்குற மாதிரி பாக்குறாங்க. தெரிஞ்சவங்க ரெண்டு வார்த்தை கடனேன்னு பேசுறாங்க. அது கூட தூரத்துலருந்து… அந்த பேச்சுல துளி கூட நட்போ பிரியமோ இல்லடா…” என்ற என் தோளில் ஆதவராக கை வைத்த ராஜா, “எல்லாம் கொஞ்சம் நாள்ல சரியாகிடும்…” என்றான்.

நான் விரக்தியாக சிரித்தபடி ஓடும் ஆற்று நீரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

து போல் காவிரி முழுவதும் நீர் ஓடிக்கொண்டிருந்த ஒரு ஆகஸ்ட் மாதத்தில்தான் சுதாவுடன் பரிச்சயமானது. சுதா எங்கள் ஊர்தான் என்றாலும், பள்ளிக் காலத்தில் ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்ததால் பெரிய அறிமுகம் இல்லை. ப்ளஸ் டு முடித்தவுடன் இருவரும் திருச்சியில் ஒரே கல்லூரியில் பிஇ சேர்ந்தோம். கிராமமும் இல்லாத, நகரமும் இல்லாத எங்கள் சிற்றூரிலிருந்து தினமும் கல்லூரி பஸ்சில் காலேஜ்க்குச் சென்று வருவோம். மூன்று மாதங்கள் வரை சும்மா பார்வை… பேச்சு… என்று ஓடியது.

முதல் செமஸ்டரின் முடிவில் அது காதலானது. அதன் பிறகு மூன்றரை ஆண்டுகள் திகட்ட திகட்டக் காதல். எங்கள் ஊரில் சுதாவின் தோழி சரண்யா, ராஜாவைத் தவிர வேறு ஒரு ஜீவனுக்கும் எங்கள் காதல் பற்றித் தெரியாது. பேசுவது… ஊர் சுற்றுவது… எல்லாம் திருச்சியில்தான். எங்கள் ஊரில் யாரோ போலத்தான் இருப்போம்.

நான்காம் ஆண்டு தேர்வு முடிந்து, ரிசல்ட் வந்து, இன்ஃபோஸிஸிலிருந்து ஆஃபர் லெட்டருக்காக நான் காத்துக் கொண்டிருந்த தருணம். மார்க்‌ஷீட் வாங்குவதற்காக காலேஜ் சென்றபோது சுதா என்னிடம், “நந்தா… ஒரு பிரச்ன… டென்ஷன் இல்லாம கேளு… எங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா ஒருத்தன் குடி வந்துருக்கான். அருண்ன்னு பேரு” என்றாள்.

“தெரியும். எந்நேரமும் வடிவேலு டீக்கடைல உக்காந்திருப்பான். பாக்கவே பொறுக்கி மாதிரி இருப்பான்.”

“அவன்தான். அவங்கப்பாவுக்கு நம்மூரு பஞ்சாயத்து ஆபிஸ்க்கு ட்ரான்ஸ்ஃபராகி இங்க வந்துருக்காங்க. திருச்சில ஏதோ காலேஜ்ல படிக்கிறான். அங்க குடிச்சுட்டு ஏதோ தகராறு பண்ணி, சஸ்பெண்ட் பண்ணி வச்சிருக்காங்க. நான் வீட்ட விட்டு இறங்கினா போதும். எங்க பெரியம்மா வீடு, கோயில், கடைத்தெருன்னு எங்க போனாலும் பின்னாடியே வந்துடுறான்…” என்று சொல்ல சொல்ல… என் ரத்தம் கொதித்தது.

“அவங்கம்மா ரொம்ப நல்ல டைப். எங்க கூட நல்லா பழகுறாங்க. அதனால பிரச்னை வேண்டாம்ன்னு கண்டுக்காம இருந்தேன். எப்படியோ என் மொபைல் நம்பர தெரிஞ்சுகிட்டு போன வாரம் திடீர்னு ஐ லவ் யூன்னு மெசேஜ் அனுப்பினான். அப்பக் கூட நான் கோபப்படாம அவன நேர்ல பாத்து, என் கூட காலேஜ்ல படிக்கிற பையன் ஒருத்தன லவ் பண்றேன்… இனிமே என் பின்னாடி சுத்தாதன்னு சொன்னேன். ஆனா அதுக்கப்புறம்தான் அவன் தொல்லை ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. அடிக்கடி என் தம்பிகிட்ட பேசுற மாதிரி எங்க வீட்டுக்கு வர்றது… அடிக்கடி மெசேஜ் அனுப்புறது… நேத்து நடுராத்திரி திடீர்னு ஃபோனடிக்கிறான். நான் ராங் நம்பர்ன்னு வச்சுட்டேன். ஆனாலும் எங்கம்மாவுக்கு சந்தேகம்.”

“எவ்ளோ நாளா இதெல்லாம் நடக்குது?”

“மூணு மாசமா… காலேஜ் லீவ் விட்டதிலருந்து’ என்றவுடன் கடுப்பான நான், “ஏன்டி… அறிவுல்ல? மூணு மாசமா ஒருத்தன் டார்ச்சர் பண்ணிகிட்டிருக்கான். ஒரு வார்த்தச் சொன்னியா என்கிட்ட? சரி விடு… நான் அவன்கிட்ட பேசுறேன்.”

மறுநாள் மக்கள் நடமாட்டமில்லாத மாந்தோப்புத் தெருவில் அருணைப் பார்த்தேன். அப்போது அருண் நல்ல குடிபோதையில் இருந்தான். முதலில் கோபமின்றி சமாதானமாகத்தான் பேசினேன். நான்தான் சுதாவின் காதலன் என்று சொன்ன பிறகும், விடாமல் தான் சுதாவை உயிருக்குயிராக நேசிப்பதாக சொன்னான். ஒரு கட்டத்தில் நான் கோபமாகப் பேச… இரண்டு பேருக்கும் வார்த்தைகள் தடித்தது.

அருண், “பரவால்ல மச்சான். ரெண்டு பேரும் சுதாவக் கல்யாணம் பண்ணிக்கலாம். நீ திங்கள்கிழமை, நான் செவ்வாய்கிழமைன்னு ஒரு நாள் விட்டு ஒருநாள் முறை வச்சு…” என்று சொன்ன அடுத்த வினாடி ஓங்கி அவன் முகத்தில் அறைந்தேன். அவன் திருப்பி அடிக்க… பெரும் அடிதடியானது.

நான் அவனை தெருமுனை வரை அடித்துக்கொண்டே சென்று ஓங்கி அவன் வயிற்றில் ஒரு உதை உதைத்தேன். அப்போது திடீரென்று தெருமுனையில் திரும்பிய ஒரு பைக்கின் மீது அருண் மோதி… தடுமாறி… அருகிலிருந்த ஒரு கருங்கல்லின் மீது விழுந்தான். அவன் தலை வேகமாக கருங்கல்லில் மோதியபோது, “அம்மா…” என்று சத்தம் எழுப்பினான். அதுதான் அவன் வாழ்க்கையில் கடைசியாக எழுப்பிய சத்தம். நானும் பைக்காரரும் அருகில் சென்று பார்த்தபோது தலையில் அடிபட்டு அருண் மிகவும் சீக்கிரமாக இறந்திருந்தான்.

போலீஸ் ‘ஐபிஸி 302’ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்தது. ஃபாஸ்ட் ட்ராக் கோர்ட்டில் என் வழக்கு வேகமாக நடந்தது. என் வக்கீல் ஐபிஸி 304ன் கீழ் Culpable homicide with out intention என்று வாதாடினார். இடையில் நான் ஜாமீனில் வெளியே வந்தபோது, சுதா பெங்களுரில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள்.

ஒரு கொலைக் குற்றவாளியான நான் சுதாவை திருமணம் செய்ய நினைப்பது நியாயமில்லை என்பதால் அவளைத் தொடர்புகொள்ளவில்லை. அவளே தொலைபேசியில் தொடர்புகொண்டு, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னபோது, மனதில் லேசாக ஆசை துளிர்விட்டது. ஆனால், வழக்கு விசாரணை ஆரம்பித்த இரண்டே மாதத்தில் நான் நம்பிக்கை இழந்தேன்.

வழக்கில் சுதாவை சாட்சியாக அழைத்தபோது எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கோர்ட்டில் சுதா அவளுடைய பெற்றோரின் நிர்பந்தத்தால் என்னைக் காதலித்ததாகவே சொல்லவில்லை. நான் அவள் க்ளாஸ்மேட்தான் என்றும், சும்மா அருண் பற்றி சொன்னதாகவும், அது இவ்வளவு பெரிய பிரச்னையாகிவிட்டது என்றும் கூறினாள். அவள் என் காதலி என்று சொல்லியிருந்தால், ஜட்ஜ் என் மேல் சற்று இரக்கம் காட்டியிருப்பார். சுதாவின் ஸ்டேட்மென்ட்டால் ஜட்ஜ் என் மீது எந்த அனுதாபமும் இன்றி ஆயுள் தண்டனை கொடுத்தார். ஜாமீன் ரத்தாகி மீண்டும் ஜெயிலுக்குச் சென்றேன்.

பின்னர் ஹைகோர்ட்டில் Culpable homicide with out intention என்ற எனது வக்கீலின் வாதத்தை ஏற்றுக்கொண்டு ஆயுள் தண்டனையை பத்தாண்டு சிறைத் தண்டனையாக குறைத்தார்கள். ஹைகோர்ட்டில் எனது தீர்ப்பு வருவதற்கு ஒரு வாரம் முன்பு சுதாவிற்கு திருமணமானது. சுதா மீது அப்போது ஏற்பட்ட வெறுப்பு, இப்போது அவள் குழந்தைகளுடன் காரில் சென்றதைப் பார்த்த பிறகு உச்சத்திற்கு ஏறிவிட்டது.

“நந்தா… டைமாவுதுடா… போலாமா?” என்று ராஜா கேட்டவுடன் நான் நிகழ்காலத்திற்கு வந்தேன்.

நான் வீட்டுக்கு வந்தபோது நல்ல போதையில் இருந்தேன். நடையில் மெலிதாக தடுமாற்றம். அப்பா வீட்டு வாசலில் வேப்பமரத்திற்கு கீழ் கட்டில் போட்டு படுத்திருந்தார். நான் சத்தமின்றி கட்டிலைக் கடக்க… “நந்தா…” என்றார் அப்பா. எனக்கு பகீரென்றது. “இன்னும் தூங்கலையாப்பா?” என்ற எனது நாக்கு குழறியது.

ஒன்றும் பேசாமல் எழுந்து என் அருகில் வந்த அப்பா என் முகத்தை உற்றுப் பார்த்தார். நாற்றமடிக்காமல் இருப்பதற்காக நான் முகத்தைத் துடைப்பது போல் வாயை மூடிக்கொண்டேன். என்னை சில வினாடிகள் பார்த்த அப்பா, “குடிச்சிருக்கியா?” என்றார்.

நான் பதில் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தேன். அப்பா என் கையை விலக்கினார். குப்பென்று நாற்றமடித்தவுடன் அப்பாவின் முகம் சட்டென்று அழுவது போல் மாறியது. கண்களில் வலியுடன் என்னை சில வினாடிகள் பார்த்தார். அவ்வளவுதான். ஒன்றும் பேசாமல் கட்டிலில் சென்று படுத்துக்கொண்டார். கடந்த பத்து வருடங்களாக அவருக்கு நான் துயரத்தைத் தவிர வேறு ஒன்றுமே தந்ததில்லை.

றுநாள் நான் அரசமரத்தடி படித்துறையைக் கடந்து சாலையில் சென்றபோது, ஆற்றிலிருந்து குழந்தைகள் சத்தம் கேட்க… திரும்பிப் பார்த்தேன். சொரேலென்றது. சுதா குழந்தைகளோடு குளித்துக் கொண்டிருந்தாள். இரண்டு பெண் குழந்தைகளும் படிக்கட்டில் அமர்ந்திருந்தன. அவள் மக்கில் ஆற்று நீரை அள்ளி குழந்தைகள் தலையில் ஊற்ற… குழந்தைகள் சந்தோஷத்திலும் நீரின் ஜில்லிப்பிலும் குதூகலமாக கத்தின. ஒரு குழந்தை ஏதோ சொன்னது. காதில் விழவில்லை. உடனே சுதா நீரில் குதித்து சிறிது தூரம் நீந்திவிட்டு வர… குழந்தைகள் சந்தோஷத்துடன் கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தன. அதற்கு மேல் அக்காட்சியை காணச் சகிக்கவில்லை. கடவுளே… எப்படி சுதா உன்னால் முடிகிறது? உன் நெஞ்சின் அடி ஆழத்தில் ஒரு குற்ற உணர்ச்சி இருந்தால், இப்படி உன்னால் சந்தோஷமாக இருக்கமுடியுமா சுதா? வெறுப்பு உள்ளுக்குள் திகுதிகுவென்று தீயாய் எரிந்தது.

அதற்கு மேல் தாங்கமுடியாமல் நேராக டாஸ்மாக் கடைக்குச் சென்றேன். மார்பீஸ் ப்ளு வாங்கி குவார்ட்டர் அடித்த பிறகுதான் தீ அணைந்தது. ஆனால், மறுநாள் சுதாவைப் பற்றி மீண்டும் நினைக்க… மீண்டும் எரிந்தது. மீண்டும் குடி. மீண்டும் தீ. மீண்டும் குடி… ஜெயிலில் நான் செய்த வேலைகளுக்காக கிடைத்த பணம் கையில் இருந்தது. தினந்தோறும் குடிக்க ஆரம்பித்தேன்.

ராஜாவுக்கு திருச்சியில் வேலை. அவன் தினமும் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு தாமதமாகத்தான் வருவான். எனவே, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் என்னைச் சந்திப்பான். நான் தனியாகவே தினமும் குடித்தேன். தினமும் இரவு சரக்கை வாங்கிக்கொண்டு அரசமரத்தடி படித்துறைக்குச் சென்றுவிடுவேன். யாருமற்ற படித்துறையில் குடித்துக்கொண்டே மொபைலில் பழைய பாடல்களாக கேட்டுக்கொண்டிருப்பேன்.

நான் தினமும் குடித்துவிட்டு வருவது தெரிந்தும் அப்பா ஒன்றும் சொல்வதில்லை. தம்பிதான் தினமும் புத்தி சொல்வான். ‘இன்னையோட நிறுத்திடுறேன்…’ என்று சொல்வேன். ஆனால், மறுநாள் மீண்டும் குடி.

நாளாக, நாளாக குடி அதிகரித்தது. குவார்ட்டரிலிருந்து இப்போது ஆஃப் அடித்தால்தான் மனதில் எரியும் தீ அணைந்தது. குடி அதிகமாக அதிகமாக… மனதில் விபரீத சிந்தனைகள் முளைத்தன. நம் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டு சுதா பிள்ளைகளோடு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள்? பெங்களூரில் புருஷனுடனும் இப்படித்தானே இருப்பாள்… ஏதாவது செய்து அவள் சந்தோஷத்தை காலி செய்யலாமா என்று அடிக்கடித் தோன்றியது.

அவள் புருஷன் யார் என்று விசாரித்து அவனிடம் பேசலாமா? அவள் உடம்பில் எங்கெல்லாம் மச்சம் இருக்கிறது என்று சொல்லலாமா? இல்லை… அவள் வீட்டிற்குச் சென்று கலாட்டா பண்ணலாமா? இல்லை… கத்தியால் ஒரே குத்தாக குத்திவிடலாமா? என்றெல்லாம் தோன்றும். ஆனால், இது குறித்தெல்லாம் நான் ராஜாவிடம் பேசுவதில்லை. நாளுக்கு நாள் சினிமாத்தனமான பழிவாங்கும் எண்ணங்கள் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.

வியாழக்கிழமை இரவு. நான் ஆற்றங்கரையில் குடித்துவிட்டு ஊருக்குள் நுழைந்தபோது ஊரே ஓய்ந்திருந்தது. கடைத்தெருவில் யாரும் இல்லை. நான் மட்டும் நடுரோட்டில் போதையில் நடை தடுமாற வந்துகொண்டிருந்தேன். அப்போது எதிரில் பைக்கில் திருச்சியிலிருந்து வந்த ராஜா என்னைப் பார்த்துவிட்டு பைக்கை நிறுத்தினான். நான் அவனைப் பார்த்தவுடன் நல்ல போதையில் உற்சாகத்துடன், “நண்பா…” என்று கத்தியபோது என் வேட்டி அவிழ்ந்து விழுந்தது.

பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திய ராஜா வேகமாக ஓடி வந்து என் வேட்டியைக் கட்டி விட்டபடி, “என்னடா நந்தா இதெல்லாம்?” என்றான். அவன் குரல் தளும்பியது. உடனே நான் சத்தமாக ‘மகாநதி’ திரைப்படப் பாடலை பாடிக்கொண்டே கைகளை உயர்த்தி தட்டியபடி ராஜாவை சுற்றி சுற்றி வந்தேன்.

எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்…

அம்மாடி வந்ததென்ன என் வாழ்க்கை ஓடம்தான்…

காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி…

காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி…

என்று பாட… “டேய்…” என்று என் தோளைப் பிடித்து நிறுத்திய ராஜா, “தினம் குடிச்சு குடிச்சு செத்துடாத நாயே… நீ வண்டில உட்காரு…” என்று என்னை வண்டியில் உட்கார வைத்தான். நான் சரிந்து கீழே விழுந்தேன். வேட்டி மீண்டும் அவிழ்ந்து விழுந்தது. சலிப்புடன் ராஜா எனக்கு வேட்டியை கட்டிவிட முயற்சித்தபோதுதான் கவனித்தேன்.

தூரத்தில் தெரு விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் சுதா மட்டும் நின்றிருப்பது தெரிந்தது. அவள் எங்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான், “ஹை… சுதாடா…” என்று ராஜாவிடம் கூறிவிட்டு, வேட்டியை நெஞ்சு வரை ஏற்றி கட்டிக்கொண்டே, “சுதா மேடம்… வணக்கம் மேடம்…” என்றேன் சத்தமாக.

ராஜா, “சுதா… நீ போ… அவன் குடிச்சிருக்கான். நீ எங்க இந்நேரத்துல வந்த?” என்றான்.

“உடம்பு சரியில்லன்னு டாக்டர்கிட்ட காமிக்க வந்தேன்.”

“சரி… நீ போ…” என்று ராஜா கூற… சில வினாடிகள் என்னை உற்றுப் பார்த்த சுதாவின் முகத்தில் தெரிந்த உணர்வுகள் அந்த அரைகுறை வெளிச்சத்தில் தெரியவில்லை. சுதா திரும்பிப்போவது தெரிந்தது.

றுநாள் இரவு. வழக்கம்போல் தன்னந்தனியாக நான் அரசமரத்தடி படித்துறையில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தேன். பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் காவிரி நீர் பளபளவென்று ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு பெக் உள்ளே போக… மெலிதான போதையுடன் சறுக்குமரச் சுவரில் சாய்ந்து கண்களை மூடினேன்.

திடீரென்று, “நந்தா…” என்று குரல் கேட்க… கண்களைத் திறந்த நான் அதிர்ந்தேன். எதிரே கைகளை கட்டியபடி சுதா நின்றுகொண்டிருந்தாள். மனதிற்குள் பெரிய அலையடிப்பது போல் இருந்தது. நெஞ்சு படபடவென்று அடித்துக்கொள்ள… சுதாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். “சுதா…” என்று அழைக்க முற்பட்டபோது தொண்டை அடைத்து எனக்கு பேச்சே வரவில்லை. சுதாவை அவ்வளவு அருகில் பார்த்தவுடன் அந்த பழைய கோபம் எங்கே சென்றது என்றே தெரியவில்லை.

கடந்த மூன்று முறையும் சுதாவை தூரத்திலிருந்து பார்த்ததால் தெளிவாக அவளைப் பார்க்க முடியவில்லை. இப்போதுதான் பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் சுதாவின் முகத்தைத் தெளிவாக பார்க்கிறேன். சுதாவிற்கு இப்போது 32 வயதுதான். அதற்குள் நாற்பது வயது தோற்றம். கண்களுக்கு கீழ் குழிவிழுந்து, குழிவிழுந்த இடத்தில் கரு வளையங்கள். அப்போதெல்லாம் அவள் கண்களில் தெரியும் பிரகாசமான ஒளி இப்போது சுத்தமாக இல்லை. ஏன் இப்படி பொலிவிழந்துவிட்டாள்? சரி… காதலிகள் எப்போதுமே அழகாக இருக்கவேண்டுமா என்ன? என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன்.

“எப்படியிருக்க நந்தா?” என்ற சுதாவின் தொண்டை அடைத்து குரல் கம்மியது.

“ம்… இருக்கேன். நீ?” என்றேன்.

சில வினாடிகள் யோசனைக்குப் பிறகு சுதா, “அதே பதில்தான். இருக்கேன். வாழ்றது வேற… இருக்கிறது வேற இல்லையா?” என்றதற்கு நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

தொடர்ந்து சுதா, “என் கூட பேசினதுக்கு தேங்க்ஸ் நந்தா… என்னைப் பாத்தவுடனே கோபத்துல நீ எதுவும் பேசாம போயிடுவன்னு நினைச்சேன்…”

“அப்படிதான் நினைச்சேன். ஆனா… ஏன்னு தெரியல. முடியல…”

“நீ கோபப்பட்டாலும் தப்பில்ல நந்தா. இன்னும் சொல்லப்போனா நீ என்னைத் திட்டு… அடி… கொல்லு… எதாச்சும் பண்ணுடா… அப்பதான் என் மனசு ஆறும்” என்றவளின் குரல் உடைந்தது.

“பழைய பேச்சை விடு… நீ குழந்தை குட்டியோட சந்தோஷமா இருக்கீல்ல?”

“குழந்தை குட்டியோட இருக்கேன். அவ்வளவுதான். ஆனா சந்தோஷமா இல்ல.”

“ஏன்? உன் ஹஸ்பென்ட் கூட ஏதாச்சும்…” என்று இழுத்தேன்.

“ஹஸ்பென்ட் கூட பெருசா ஒண்ணும் பிரச்னையில்ல. எல்லா மனுஷங்களையும் மாதிரி கொஞ்சம் நல்லவர்… கொஞ்சம் கெட்டவர்… மத்தபடி எல்லா குடும்பத்துலயும் வர்ற சராசரி பிரச்னைங்கதான்.”

“அப்புறம் என்ன பிரச்னை?”

சில வினாடிகள் என்னை உற்றுப் பார்த்த சுதா என்னருகில் படிக்கட்டில் நெருக்கமாக அமர்ந்தபடி, ”என்ன பிரச்னையா? என்னை உயிருக்குயிரா காதலிச்ச நீ என்னால ஒரு கொலைய பண்ணிட்டு ஜெயில்ல இருக்க… எங்கப்பா மரணப் படுக்கைல கேட்டாருன்னு மனசாட்சிய தூக்கி ஓரமா வச்சுட்டு இன்னொருத்தனக் கல்யாணம் பண்ணியிருக்கேன். எப்படிரா என்னால நிம்மதியா இருக்கமுடியும்?” என்றவளின் தொண்டை அடைக்க… கண்கள் கலங்கியது.

தொடர்ந்து சுதா, “நீ ஜெயிலுக்கு போன பிறகு கிட்டத்தட்ட ரெண்டு வருஷம்… ஒரு நிமிஷம் கூடத் தூங்காம விடிய விடிய முழிச்சுகிட்டேயிருப்பேன் நந்தா. விடியறப்ப லேசா கண் அசரும். அப்ப ஒரு ஒரு மணி நேரம் என்னை மறந்து தூங்குவேன். அவ்வளவுதான் தூக்கம். அப்புறம் ஒரு ப்ராஜக்ட்டுக்காக கனடா போய் ரெண்டு வருஷம் இருந்தேன். அது ஒரு மாத்தமா இருந்துச்சு. அப்புறம்… அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு திரும்பி வந்தேன். அப்பா கம்பெல் பண்ணி இந்தக் கல்யாணத்தப் பண்ணி வச்சுட்டு செத்துப் போயிட்டாரு…” என்றவளின் தொண்டை நரம்புகள் துக்கத்தில் ஏறி இறங்க… பேச்சை நிறுத்தினாள்.

சில வினாடிகள் அமைதிக்கு பிறகு தொடர்ந்து, “கல்யாணத்துக்கு பிறகு குற்ற உணர்ச்சி ரொம்ப அதிகமாயிடுச்சு. கொஞ்சம் நாள் அவர நான் தொடக் கூட விடல. அவரு எதாச்சும் பிரச்சனையான்னு நோண்டித் துருவ ஆரம்பிச்சுட்டாரு. அப்புறம் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டப் போய் பாத்தேன். மாத்திரை சாப்பிட ஆரம்பிச்சப்புறம் கொஞ்சம் பரவாயில்ல. அதுலதான் ரெண்டு பிள்ளைங்க. ரொம்ப நாள் மாத்திரை எடுத்துகிட்டவுடனே நிறைய சைட் எஃபெக்ட்ஸ். அதனால மாத்திரைய நிறுத்தினேன். மறுபடியும் பிரச்னை. மறுபடியும் மாத்திரை. மறுபடியும் சைட் எஃபெக்ட்… இப்படியே ஓடிட்டிருக்கு…“ என்று சுதா சொல்ல சொல்ல… அவள் மீதிருந்த கோபம், வெறுப்பெல்லாம் மறைந்து மனதிற்குள் அனுதாபம் பெருக்கெடுத்து ஓடியது.

ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை, அவள் சந்தோஷமாக வாழ்வதை நினைத்து குமுறிக்கொண்டிருந்தேன். இப்போது அவள் சொல்வதையெல்லாம் கேட்க… கேட்க… உண்மையிலேயே மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் வைர மோதிரம் போல் பத்திரமாக வைத்துக்கொள்ள நினைத்த பெண், இப்படி கவரிங் மோதிரம் போல் சீரழிவதை என்னால் தாங்க முடியவில்லை.

தொடர்ந்து சுதா, “பாக்குறவங்களுக்கு சொந்த வீடு, காரு, ரெண்டு குழந்தைங்கன்னு சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியும். ஆனா அதெல்லாம் வெளிவேஷம் நந்தா. உள்ளுக்குள்ள தினம் தினம் அழுதுகிட்டிருக்கேன். உன்னை நினைச்சு நான் அழாத ஒரு ராத்திரி கூட கிடையாது. நீ உன் தண்டனைய அனுபவிச்சுட்டு வந்துட்ட. ஆனா நான் அனுபவிக்கிற தண்டனை, சாகுற வரைக்கும் இருக்கும்.”

“சுதா… எதுக்கு நீ உன்னைப் போட்டு வருத்திக்கிற? நடந்தது எதையும் மாத்தவே முடியாது.”

“அய்யோ நந்தா… இந்த மாதிரி ஆயிரம் வார்த்தைங்க அந்த சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் சொல்லியிருக்காரு. பத்து நிமிஷம் பேசுறதுக்கு ஐநூறு ரூபா பீஸ். ஒரு தடவை ரெண்டு மணி நேரம் பேசி ஆறாயிரம் ரூபாய் ஃபீஸ்ல்லாம் கொடுத்திருக்கேன். கேக்குறப்ப எல்லாம் சரியாயிடுற மாதிரியே இருக்கும். ஆனா அன்னைக்கி ராத்திரியே மறுபடியும் ஆரம்பிச்சிடும்”

“ஏன்?”

“ஏன்னா உன்னை அவ்ளோ லவ் பண்ணியிருக்கேன்டா… என் குழந்தைங்கள நேசிக்கிறத விட ஆயிரம் மடங்கு அதிகமா உன்னை நேசிச்சிருக்கேன். எவ்ளோ பேசியிருக்கோம்… எவ்ளோ சிரிச்சிருக்கோம்… எவ்ளோ கனவுகள்… எவ்ளோ கற்பனைகள்… எவ்ளோ ஏக்கம்… எவ்ளோ தவிப்பு… மூணு வருஷமும் சும்மா காத்துல மிதந்துட்டிருந்த மாதிரி அவ்வளவு அற்புதமா இருந்துச்சுரா.

அதெல்லாத்தையும் விட நம்ம காதலால நீ ஜெயிலுக்கு போன… அதுக்கு பிறகு நீ என் மனசுக்குள்ள ஆணியடிச்ச மாதிரி இறங்கிட்ட. என்ன நினைச்சாலும் அங்கருந்து உன்னை இறக்கவே முடியலடா… மனசுங்கிறது இருக்கிற வரைக்கும் என்னோட துயரம் இருந்துகிட்டே இருக்கும்…” என்று சுதா கண் கலங்க சொல்ல… என் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது.

சுதா கண்களைத் துடைத்துக்கொண்டு, “என் கதைய விடு, கண்ணு தெரியாதவன் இருட்டோட வாழ பழகிக்கிற மாதிரி நான் கஷ்டத்தோட வாழ பழகிகிட்டேன்… நீ ஏன்டா இப்ப இப்படி இருக்க?”

“எப்படி இருக்கன்?”

“அதான் நேத்து பாத்தேனே… இன்னைக்கி காலைல ராஜாவப் பாத்து பேசினேன். என்னைப் பாத்ததுலருந்து நீ தினம் குடிக்கிறியாமே? நீ என்னை நினைச்சு குடிச்சு உன் வாழ்க்கைய அழிச்சுக்கிற அளவுக்கு நான் ஒர்த் இல்லடா…உன் வாழ்க்கைய நாசமாக்கிட்டு போனவ. என்னால மறுபடியும் உன்னை அழிச்சுக்காத… மறுபடியும் உன் வாழ்க்கை அழியுறதுக்கு நான் காரணமா இருந்தா என்னால தாங்கிக்க முடியாதுடா… தாங்கிக்க முடியாது” என்று சத்தமாக அழுத சுதா அப்படியே என் மடியில் படுத்து கதறி கதறி அழ… நான் அவள் கூந்தலை ஆதரவாகக் கோதிவிட்டேன். அப்போது திடீரென்று வானம் கறுத்து, லேசாக தூற ஆரம்பிக்க… மழைத் துளிகள் ஆற்று நீரில் விழுந்தது.

சில நிமிட அழுகைக்கு பிறகு நிமிர்ந்த சுதா, “நந்தா… ப்ளீஸ்… இனிமேலாச்சும் நல்லபடியா இருடா…” என்றபடி என் தோளில் சாய்ந்து மீண்டும் அழ… நான் ஆறுதலாக அவள் தோளை இறுக அணைத்துக்கொண்டேன். முதுகு குலுங்க குலுங்க அழுதுகொண்டேயிருந்தாள் சுதா.

சில நிமிடங்களுக்குப் பிறகு அவள் முகத்தை நிமிர்த்திய நான் அவள் கண்களைத் துடைத்தேன். பாதிக்கு மேல் குடிக்காமலிருந்த மார்பிஸ் ப்ளு பிராந்தி பாட்டிலை சில வினாடிகள் பார்த்தேன். பின்னர் அதைத் தூக்கி ஆற்றில் வீசிவிட்டு, ‘போதுமா?” என்றவுடன் சட்டென்று சுதாவின் அழுகை நின்றது.

இப்போது முகத்தில் மெலிதாக புன்னகை பரவ.. ‘ம்…” என்ற சுதா என்னிடமிருந்து விலகிக்கொண்டாள். “உன்கிட்ட இன்னொரு ரிக்கொயஸ்ட் நந்தா… நீ கல்யாணம் பண்ணிக்கணும்?”

“சரி… முதல்ல நான் ஒரு வேலைல சேர்றேன்… அப்புறம்… என்னைப் பத்தியெல்லாம் தெரிஞ்சு யாராச்சும் பொண்ணு கொடுத்தா பாக்கலாம்.”

“அப்புறம் ஒரு ஃபைனல் ரிக்கொயஸ்ட்…” என்ற சுதாவின் குரல் தழுதழுக்க, “எந்த காலத்திலயும் என்ன வெறுத்துடாதடா… யாரு என்னை வெறுத்தாலும் தாங்கிக்குவேன். ஆனா நீ வெறுக்கிறத மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது. சொல்லு… என்னை வெறுக்கலல்ல நீ?”

“இல்ல…” என்றேன்.

“சத்தியமா?” என்று கையை நீட்டினாள்.

“சத்தியமா…” என்று நான் அவள் ஈரக்கையில் அடித்தபோது மழை வலுக்க ஆரம்பித்தது.

நான், “சரி… நீ கிளம்பு. மழை பெருசாகுது. இந்நேரத்துல நம்மள யாராச்சும் இங்க பாத்தா வம்பு…” என்று கூற…சுதா எழுந்தாள்.

எழுந்து நின்றவள் என் முகத்தையே உற்றுப் பார்த்தாள். சட்டென்று அவள் கண்களில் நாங்கள் காதலித்த காலத்தில் இருந்த அதே ஒளி… அதே காதல்… அதே பிரியம்… முகத்தில் ஒரு பரிபூர்ண பிரகாசம். எங்கள் காதலால் மட்டுமே உயிர்த்தெழும் பிரகாசம் அது. சுதாவின் முகத்தில் மழைத்துளிகள் விழ… பத்தாண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே காதல் பார்வையுடன் என்னை பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

நான் தாங்கமுடியாமல், “கடவுளே…” என்று முகத்தைத் திருப்பியபடி, “அப்படி பாக்காத சுதா… போ…” என்றேன்.

“ம்…பை… டேக் கேர் நந்தா…” என்ற சுதா என்னைத் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே படிகளில் ஏறிச் சென்றாள்.

இத்தனை நாட்களாக அடிமனதில் எரிந்துகொண்டிருந்த தீ இப்போது முற்றிலுமாக அணைந்திருந்தது. சுதா பார்வையிலிருந்து மறைந்தவுடன் திரும்பி காவிரியைப் பார்த்தேன். எதிர்கரையில் மூங்கில் மரங்கள் நனைய… ஆறு முழுவதும் வேகமாக மழைத்துளிகள் சுள் சுள்ளென்று விழ… மழைநீர், ஆற்றுநீரை நனைத்துக் கொண்டிருந்தது.

G.r. Surendarnath
ஜி.ஆர். சுரேந்தர்நாத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...