No menu items!

சிறுகதை: ஒரு சிட்டிகை  – காஞ்சனா ஜெயதிலகர்

சிறுகதை: ஒரு சிட்டிகை  – காஞ்சனா ஜெயதிலகர்

kanchana jeyathilagar

சுதர்ஸனின் பார்வை தன் 50 வயது மனைவியை ஆராய்ந்தது. மூத்த மகனின் திருமணத்தைத் துவங்கியதில் இருந்தே அவளில் மாற்றமும் ஆரம்பமாகியிருந்தது. பிறர் பார்வைக்குத் தெரியாது; ஆனால், கட்டியவன் கண்களுக்குத் தப்பாத சின்ன மாற்றங்கள்.

மூத்தவனின் வாழ்வை நல்ல படி அமைத்துத் தந்த பெருமிதமா?

பொதுவான மாமியார் தோரணையா?

வந்த புதுப் பெண்ணுடன் போட்டியிடும் ஆயத்தமா?

அல்லது வெட்டி ஜம்பந்தானா?

டாக்ஸியில் ஏறிய ஜெயந்தியை குழப்பமாய் பார்த்தார். இதுவரை ஆலங்குளத்தில் இருந்து, மகனை பார்த்து வர இவர்கள் மதுரை போனதெல்லாம் பேருந்தில் தான். மொத்த பயண செலவு சில நூறுகளில் முடிந்துவிடும். சின்ன பெரிய டப்பாக்களில் நிரம்பிய பலகாரங்களை எடுத்து போவதால் பஸ்ஸில் விச்ராந்தியாய் உட்கார முடியாது. கொக்கு போல ஒற்றை காலை மாற்றி அடுத்ததிற்கு இடம் தரும் சமாளிப்பு தான்.

பயண முடிவில் முதுகு நோக “பன்” போல உப்பிய பாதங்களோடான வாத்து நடையில் மகனை போய் பார்ப்பார்கள்.

போன தரம் அங்கே விட்டு வந்த பாத்திரங்களை எடுத்துக்கொண்டு –

“லேய் – வச்சு சாப்பிடு – என்ன? வர்வனுக்கெல்லாம் எடுத்து நீட்டினா ரெண்டு வாரத்துக்குக் காணாது” என்ற செல்ல மிரட்டலுடன் விடைபெறும் அம்மாக்காரி, இன்று, “டாக்ஸி வேணும் – வசதியாய் போவணும்” என்று சொல்லி விட்டாள்.

எந்தப் பலகாரமும் உடன் வரவில்லை.

“என்ன ஜெயா – ஏதும் செஞ்சு எடுத்துக்கல?”

“இப்பதான் அவனுக்குன்னு வீடு வந்திருச்சே, விதவிதமா சமைச்சிருவான் அவன்.”

சுதர்ஸன் யோசனையுடன் தலையாட்டினார்.

சிறு பிராயத்திலிருந்தே தாயை ஒட்டித் திரிந்த மூத்தவனுக்கு வீட்டு வேலைகளோடு, சமையலும் பரிட்சயம். விடுதியில் அவனது கூண்டு போலான அறை அத்தனை கச்சிதமாய் இருக்கும். அதை கர்வத்துடன் நோட்டமிடும் தாயின் முகம் சற்று வீங்கித்தான் விடும்!

“எங்கிட்ட எடுத்துகிட்டது போதாதுன்னு, ராஜீவு, கேக் புட்டிங்னு கத்துகிட்டாங்க… கில்லாடி…”

ஜெயத்தியின் கண்களின் பளபளப்பில் இவருக்கு மேலும் தெளிவுபட்டது.

“வீட்டை இந்த ஒரு மாசத்துல பக்காவா ஸெட் செஞ்சு, வெணிலா மணக்குற ஸ்வீட்டெல்லாஞ் செஞ்சு பரப்பியிருப்பான் பாருங்க. வந்தவ யோகக்காரி.”

“சின்னவன் அடுப்படியில நிக்கறவனில்ல…”

“ அவனுக்கு சதா மெஷினுகளைக் குடையனும். அவனுக்கு சாமார்த்தியக்காரியாப் பொண்ணு தேடணும்.”

“ரஜீவுக்கு வாய்ச்ச பொண்ணும் பதணமானவதான. பணபாப் பேசி பழகுதா. வேலையிலும் தேறிடுவா.”

“ரஜீவு இருக்க குறையென்ன?”

சுதர்ஸன் புன்னகைத்தார்.

ஆக தாயார்காரி மிக சமத்காரமாய் தன் மகனை திருமண விழாவிற்கு தயார் செய்து விட்ட பூரிப்பில் இருக்கிறாள்… என்ற புரிதலில்.

மேல் படிப்பும் வேலையும் வடக்கே வாய்க்க, இளையவன் ஆலங்குளம் வருவது அரிது.

அண்ணன் திருமணத்திற்காய் வந்தவனை இரண்டு வாரங்கள் சீராட்டி அனுப்பி விட்டு, கல்யாண அசதி தீரவும் மூத்தவன் குடித்தனத்தைப் பார்க்கக் கிளம்பியாயிற்று.

மாமியாருக்கு புது மருமகளை நோட்டமிடும் வேகமென்று எண்ண, இது தன் வார்ப்பை வந்தவளிடம் காட்டும் ஜம்பம் எனப்பட்டது.

போக்கறியாத புது நாடகத்தை காணும் சுவாரஸ்யத்துடன் போனது அப்பயணம்…

அடுக்கு மாடியின் மூன்றாம் தளத்திலிருந்த ரஜீவனின் வீடு அமர்க்களமாய்த்தான் இருந்தது. மதுரையின் வெக்கையைத் தணிக்குமளவில் வெளிர் வண்ணங்களும் மெலிய திரைச்சீலைகளுமாய்.

“கெட்டிக்காரன்டா…” பூரித்த தாயின் வாய்க்கு விதவிதமான உணவு படைக்கப்பட்டது.

“இதென்ன சதுரம்டா…? வாயில பஞ்சாக் கரையுது?”

“டோக்ளாம்மா…”

“இது யாரு கத்துத் தந்தா?”

“எல்லாம் ஆன்-லைன்தான். விவரத்தோட செஞ்சால் போதும்” என்ற மகனின் முகத்திலும் பெருமிதப் பிரகாசம்!

மதியத்திற்கு மேலேதான் புதுப் பெண்ணின் முகம் அதற்காண பூரிப்புடனில்லை என்பது சற்று மந்தமான இவர் புத்திக்கு புரிந்தது. முதன் முதலில் மாமி, மாமனார் தன் வீட்டிற்கு வரும் பதட்டமோ?

இக்கால பெண்களுக்கு அதெல்லாம் ஏது? பயல்களுந்தான் அதற்கேற்ப வந்தவளைத் தாங்குகிறார்களே.

தன் காலத் தாம்பத்தியம் மனதுள் முட்ட, சுதர்ஸன் சற்று அசெளகர்யமாய் நெளிந்தார்! தம்பதி சேர்ந்து நிற்கும் நிமிர்வு அன்று சொற்பம். அது இழுக்கு என்ற அறியாமை, இன்றும் இவரைக் கூச வைத்தது.

பிள்ளைகளை வளர்த்தெடுத்து அனுப்பிய பின்பு தான் பாசமும் புரிதலும் இங்கே வளர்ந்தன…

அதில் மனைவியின் போக்கை போலவே, புதுப்பெண்ணின் பதட்டமும் இவரை நெருடியது.

 அன்று மாலை வெளியே உலாவி வீடு திரும்பியவர் கையில் செண்டாட்டம் கட்டிய மல்லிச்சரமும் பூந்தியும் இருந்தன.

“நீ எங்களின் பிரிய மகளம்மா” எனக் காட்டும் முயற்சி. ஜெயந்தி கைவீசிக் கொண்டு வந்துவிட்டாளே…

இங்கிருந்த இருபது குடித்தனங்களும் வெளியே காவலாளி நின்ற தெம்பில் – மாலைக் காற்றுக்கு வாசற்கதவுகளை விரிய விட்டுருந்தன.

வாசலின் இரும்பு அடுக்கில் செருப்பை விட்டவர், நுழைய, உள்ளே பரவிக் கிடந்த சிரிப்பு இதமாய் இருந்தது.

“நல்ல கலரத்தை… சேலம் பட்டுன்னு கேள்வி பட்டிருக்கேன்… என்னா மிருது ?”

“கட்ட சுகமாயிருக்கும்.”

ஆக மிருது பட்டு வந்திருக்கிறதா? சுதர்ஸ்னத்தின் முகம் திருப்தியானது.

“நானும் உங்களுக்கு தக்காளி ஜாம் பிடிக்கும்னு ரஜீவ் சொல்ல, நல்ல பழமாய் பொறுக்கி வாங்கி…”

“அடடா.. உனக்கென்ன பிடிக்கும்னு சொல்லு…”

ஜெயந்தி மகன்களிடம் இத்தொனியில் பேசுவதில்லை – தோழிகள் போல இருவரும் பேசிய பாங்கு அழகுதான்.

“நானும் ஒரளவு சுமைப்பேன் அத்தை. ஜாம் தயார் பண்ணிட்டேன். டேஸ்ட் பார்த்தவர் அதுக்கு ஃபெயில் மார்க் போட்டுட்டாரு.”

“என்னவாம்?”

“பதம் கொஞ்சும் இறுக, சுக்கு பொடி இல்லாத சப்புனு போயிடுச்சுன்னார்.”

“எடு… பார்ப்பம்…”

“பயந்து அக்கம் பக்கத்து பிள்ளைக்குத் தந்து முடிச்சுட்டேன்..”

“ஓஹோ? காலியாயிருக்கும்…”

“ஆமா அத்தை. நாலு நாள் முன்னே இவர் ஆபீஸ் கொலீக்ஸ் வர, பழ கேக் செய்தேன்… அவங்க எதிர்கவே​​​ – ‘ஐய, இதென்ன வெளேர்னு இருக்குது? சீனியைக் கருக விட்டு மாவுல சேர்க்கலையா?’ன்னு கிண்டல்.”

“ம்…”

“முட்டைய வேக விடக் கூட இப்ப எனக்கு யோசனையாயிடுது. வீடு வந்த முத நாளு நா செய்த பாயாசம் கூட அவருக்கு பிடிக்கலை.”

‘இனிப்புல சீனியக் கொட்டினாப் போதாது. ஒரு சிட்டிகை உப்பிட்டாத் தான் எடுத்துத் தரும்’னு பாடம் ஆரம்பிச்சது…

“ஜெயா…” குரல் தந்தபடி சமையல் கட்டுள் போனவர், தனக்கொரு குவளை நீர் எடுத்துக்கொண்டு, வாங்கி வந்ததை இளையவளிடம் தந்தார்.

“தாங்கஸ் மாமா…” மடியில் மரகத் பச்சை நிறப் புது புடவையை விரித்துப் போட்டிருந்த சின்னவளின் முகம் சற்று ஆசுவாசப்பட்டிருக்க மூத்தவளின் முகம் வற்றியிருந்தது.

“எப்பேர்பட்ட பயலை தயார் பண்ணித் தந்திருக்கேன் நான்!’ என்ற பூரிப்பு ‘பொட்’டென வெடித்து விட்ட வாட்டம்.

மறுநாள் மாலை,

“புது ஃபோனு வாங்கனும்டே – வா” என்று கிளம்பிய சுதர்ஸன், வேலை, விலைவாசி , உலக நடப்பு என்று சுற்றி, வேண்டிய விவரத்திற்குள் வந்து விட்டார்.

“பாராட்டுங்கறது ஒரு நாகரீக வாழ்வுக்கான நயம்டா. ஆப்ரஹாம் லிங்கனு , தான் எதிர்கட்சி ஆட்களைப் பாராட்டுறதுக்கு காரணம்னு சொல்றது, “குறை  சொல்லாட்டி அவன் எனக்கு நண்பன்னாயிடறான்னு. எப்படி?”

அதிகம் பேசாத தகப்பன், மேற்கோளெல்லாம் எடுத்து விட, மகன் அவரை கிடைத்த எளிய டீக்கடைக்குள் கூட்டிப் போய் உட்கார வைத்தான்.

“என்னப்பா?”

“பொண்டாட்டிய எதிர் கட்சி ஆக்கிக்க கூடாதுல்ல – பாராட்டிப் பதமா வெச்சிக்கிடனும்.”

மேலும் விளக்கம் வர ரஜீவ் சிரித்தான்.

“அவ நல்லதுக்குத்தானப்பா… அம்மா போல இவளும் எக்ஸ்பர்ட் ஆக வேணாமா?”

“சமையலுக்கு மார்க் போடவாடா சம்சாரம்? சஞ்சலமில்லாத வாழ. 34 வருஷம் முன்னே உங்கம்மா, அரிசி களையத் தடுமாறுவா… ஆறு வருஷம் பிள்ளையுமில்ல.. அவ சோர்ந்துடக் கூடாதுன்னு நான் பாராட்டிப் போற்றினதுல, வந்தது இந்த ஆர்வம்.”

நம்பவா வேண்டாமா என்பதாய் உருண்டன ரஜீவனின் கண்கள்.

“தம்பதி பிரியம்… பிசாசு போலலே! பலரும் அது பற்றி பேசினாலும், கண்டது சிலருதான் ! வந்தவ சந்தோஷப் பட்டா அந்த காதல் பிசாசு உங்கண்ணுக்குத் தெரியும்… கடிஞ்சு கசந்தால் போச்சுப் போ!”

இப்போ இளையவனின் கண்களில் மிரட்சி தெரிந்தது.

“நீ பேசற நாலு நல்ல வார்த்தை தான், உவ்வாழ்க்கைக்கான உப்பு… அதை சேர்க்காம எப்படி… ம்ம்?”

“டீ பிரமாதம்ணே” என்றபடி எழுந்த ரஜீவ் சிரித்தான்.

இப்போது பெற்றவரின் முகம் பெருமிதத்துடன் பளபளத்தது.

ஓவியம்: பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...