No menu items!

சிறுகதை: சர்ச்சிலுக்குத் தெரிந்திருக்குமா? – ஜெயந்தி சங்கர்

சிறுகதை: சர்ச்சிலுக்குத் தெரிந்திருக்குமா? – ஜெயந்தி சங்கர்

தொலைதூர வனங்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஜாக் சட்டென்று திரும்பினான். வீட்டுக்குச் சென்று உடைமாற்ற வேண்டித் துரிதமாகப் படிகளில் ஏறிய பாலாவிடம், “இந்தப் பகுதியில் இந்த மாதங்களில் அட்டைகள் தென்படுதுண்டா?” எனக் கேட்டான்.உயரமான மெலிந்த உடல்வாகு கொண்ட பாலா, ஒரு கணம் நின்று திரும்பி சற்றே விரிந்த புன்னகையுடன், “இல்ல சார். மழைக் காலத்திலுமேகூட மிஞ்சிப் போனா ரெண்டு அட்டைகள் வரும். நகருக்குள்ள பெரும்பாலும் அட்டைகள் இருக்கறதில்லை”, என்று சொல்லிவிட்டு விரைந்து உள்ளே சென்றான்.

வீட்டுக்கு வெளியே வாடகை வாகனத்தின் அருகில், ஜாக் அனிச்சையாக அருகிலிருந்த புதர்களைப் பார்த்தவாறே நின்றிருந்தான். சுற்றிலுமிருந்த பசுமையின் ஈர மணம் பெருகி வியாபித்திருந்தது. வனத்தின் இப்பகுதிகளில் வாழும் அட்டைகளின் தோற்றமும் புழக்கமும் எப்படியிருக்கும் என்று அவன் யோசித்தான்.

முற்பகலின் வெம்மையை ரசித்து அனுபவித்த அந்நேரத்தில், ஜாக்கின் முகம் கனிந்த தக்காளிப்பழ நிறத்தை அடைந்திருந்தது. சிறிய, தளர்ந்த, சாம்பல் நிற மேகத் திரட்சி ஒன்று தூறலைத் தெளித்தது. துரிதமாக, இறகைப் போல லேசாக, பொழிந்து அவன் உணரும் முன்பே நின்றும் விட்டது.

இரு நண்பர்கள், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, ஆழ்ந்து விவாதித்தபடி, இலகுவாகக் கடந்து சென்றனர். அனேகமாக யாரையோ கடுமையாக வைதபடி நடந்த அவர்களின் ஆழமற்ற பார்வை ஜாக் மீது சில நொடிகளே நிலைத்தது.

பாலாவின் சிறிய, எளிய வீட்டை அடுத்திருந்த அறை, அதன் செங்கற்கள் வெளித்தெரிய, பெரும்பாலும் ஒரு சமையலறையை ஒத்த தோற்றத்துடன் வெளிப்பூச்சு ஏதுமற்று இருந்தது. அவர்கள் வீட்டின் பின்புறம் செழிப்பான ஒரு வாழை மரமும் பலாமரம் போலத் தோன்றிய பெரிய இன்னொரு மரமும் நின்றன.

பாலாவின் மனைவி சாளரத்தின் வழியாகப் பார்த்து, “சாயா எடுக்கட்டே முத்தாஷா?” என்று கேட்டாள். அங்கே இருந்த முதியவர், தன் உறுதியான, துருத்திக் கொண்டிருந்த, முதிய எலும்புகளுக்கு மேலாகக் கருங்காலி மரம் போன்ற சருமம் மின்ன, தன் கரத்தை மென்மையாக வீசி, தலையை இடவலமாக அசைத்து மறுத்தார். அவள் அவரது குவளையை திரும்ப வைத்துவிட்டுத் தன் குவளையில் மட்டும் தேநீர் ஊற்றிக் கொண்டாள். இறுக்கமான தன் பச்சை நிற ரவிக்கை மேல் ஒரு மெல்லிய குத்தாலம் துண்டு கிடக்க, ஒரு தனித்த புன்னகையுடன் முன்பறமாகக் குனிந்து சாளரத்தின் வழியாக வெளியே பார்த்தாள்.

பாலா குதித்தபடி திரும்ப வந்தபோது திடீரென ஜாக், “போன வருஷம் கனடாலருந்து வந்த இளைஞர்கள் சுற்றுலா குழுவ நீங்க சந்திச்சிருக்க வாய்ப்புண்டா, பாலா? என் ஆனியும் வந்திருந்தா. நானுமே அவங்களோட வந்திருக்க வேண்டியது. ஆனா, என் அம்மாவுக்கு அறுவை சிகிச்சை இருந்துச்சி, அதான் என்னால வர முடியாமப் போனது.”

பாலா தலையைத் திருப்பி தன் மனைவிக்கு கையசைத்து விட்டு, “தினமும் நெறைய பேரு வராங்க, சார். முகங்களே நெனப்புல இருக்காது, இதுல பேரெல்லாம் எப்டி ஞாபகம் வெச்சிருக்க முடியும்?” என்று பதிலளித்தான்.

“என் வயதிருக்கும். ரெண்டு ஆண்களும் மூணு பெண்களும்.”

கண்ணைச் சுருக்கிக்கொண்டு மேலும் கீழும் பார்த்தபடி பாலா நினைவுகூர முயன்றான். “ஜூலை மாசத்துல எப்பவுமே மழை அதிகமிருக்கும். அவங்க மலை ஏறிகளா?”

“மலைகள ரொம்பவே நேசிக்கறவங்க, பாலா. நான் உங்ககிட்ட கேக்கணும்னு இருந்தேன்; ஆமா, அட்டை நம்ம தோல கடிச்சா நமக்கு உறைக்கவே உறைக்காதுன்றது உண்மையா?”

“அதனாலதானே சார் அட்டைனாவே ரொம்ப ஆபத்தாயிருக்கு.”

“அதுசரி நாம இன்னிக்கி எங்க போறோம்?”

“வேகப்படகு சவாரி போகலாம். மூணு நாள் முன்னகூட நீங்க அந்த மலையோட அழகை மறுபடியும் பாக்கணும்னு சொன்னீங்களே.”

“ம், யோசிப்போம். அவர் எப்பவுமே இப்டிதான் வீட்டுக்கு முன்பக்கம் நாற்காலில உக்கார்ந்திருப்பாரா?” அங்கே இருந்த முதியவரைச் சுட்டிக் கேட்டான் ஜாக்.

“ஜீப் ஏதாச்சும் இந்தப் பக்கமாக போவுதா என்று பார்த்துகிட்ருப்பாரு சார். கண்ணன்-தேவன் தேயிலைத் தோட்ட மண்டல அலுவலகத்துக்குப் போவாரு. முன்ன அது டாடா கம்பனியோடதா இருந்திச்சு, உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அந்தப் பக்கமாப் போறப்ப சிலசமயம் நானும் அவர டிராப் பண்றதுண்டு.”

“அவருக்கு நண்பர்கள் இருக்காங்களோ அங்க?”

“இல்ல சார். பழைய விஷயங்களையெல்லாம் அசைபோடதான் போவாரு. இந்தியாவோட முதல் மோனோ ரயில் அங்கதான் ஓடிச்சி. ஆனா, இருபத்து ரெண்டு வருஷம் ஓடினப்புறம் அது வெள்ளத்தில அடிச்சிக்கிட்டுப் போயிடிச்சு. ஆபிசுக்கு முன்பக்கம் இப்ப இருக்கிற ரோடு அந்த ரயில் தண்டவாளம் இருந்த இடத்தில போட்டதுதான், சார்.”

கடந்து சொல்கையில் கிழவர் ஜாக்கை ஒருமுறை நிமிர்ந்து பார்த்து விட்டு, டாக்சியில் ஏறினார்.

அவரது கண்களைப் உற்றுப் பார்த்து புன்னகைத்து, “நல்லாருக்கீங்களா?” என்றான் ஜாக்.

முன் பக்கக் கதவைத் திறந்து விட்டு, “பதுக்கே முத்தஷா,” என்ற பாலா தோள் தாங்கி அவர் ஏறுவதற்கு உதவினான்.

இரைப்பு மிகுந்த அவரது இருமல் சத்தம் கேட்டு, ஜாக் பாலாவிடம், “பாவம் பெரியவர் அங்கே உக்காந்து இளமைப் பருவ நினைவுகளை யோசிப்பாரா இருக்கும், அப்படித்தானே?” என்றான்.

“ஆமா சார். கூலியாளா வேல பாத்தவரு அவங்கப்பா. ரயில் தண்டவாளத்த இழுத்துக் கிட்டுப்போன வெள்ளம் அவரையும் சேத்தே அடிச்சிகிட்டுப் போய்டுச்சி. சின்ன வயசுல தினமும் அப்பா வர்ற வரைக்கும் ரயில்வே ஸ்டேஷன்லேயே நிப்பாராம்.”

“மறக்குமுன்ன சொல்லிர்றேன் பாலா. வர்ற ஞாயித்துக் கெழமை எனக்கு இருபத்தாறாவது பிறந்த நாள். உண்மைல எனக்கு இதுல கொஞ்சங்கூட மனசே இல்ல, ஆனா ரொம்ப அன்பா சொன்னாங்களேனு ஒத்துகிட்டேன். ஹோட்டல் பணியாளர்களும் நானும் மட்டும்தான். எளிமையான கொண்டாட்டம்தான். நீங்களும் வந்து கலந்துக்கணும், பாலா.” ஜாக் பின் இருக்கையில் அமர்ந்தபடியே கூறினான். அவனது முழங்கால்கள் முன் இருக்கை இரண்டுக்கும் நடுவே துருத்திக் கொண்டிருந்தன.

“தொண்ணுத் தொம்போது” என்றார் முதியவர்.

“என்னால வர முடியும்னு தெர்ல சார்,” என்றான் பாலா தயங்கிக் கொண்டே பணிவான குரலில். “சவாரி இருக்கும்.”

“சவாரிக்கு நடுல ஒருநட எட்டிப் பார்த்துட்டுப் போங்க, பாலா.”

“தொண்ணுத் தொம்போது” என்றார் முதியவர், மீண்டும்.

“அவரு என்ன சொல்றாரு, பாலா?”

 “நைன்டி நைன்.”

“ஓ. அவருக்கு ஆங்கிலம் புரியுமா? அவருக்குத் தொண்ணுத்து ஒன்பது வயசாகுதா?”

“அவரப் பார்க்கவேணா உம்மணா மூஞ்சிபோல தெரியலாம். ஆனா சின்னவயசுலயே இங்கிலீஷ் தொரையோட தேயிலத் தோட்டத்துல வேல செஞ்சவரு. இங்கிலீஷ் ரொம்ப நல்லாவே தெரியும். இன்னும் அஞ்சாறு வருஷத்துல நூறு வயசு நெறஞ்சிடும் சார், இவருக்கு.”

“சரி, ஏன் தொண்ணூற்று ஒன்பதுனு முணுமுணுக்கறாரு?”

“மலையாள பஞ்சாங்கப்படி 1099லதான் அந்த பெரிய பிரளய வெள்ளம் ஏற்பட்டுச்சு. பெரும்பாலான நேரத்துல அவரு அந்தக் காலத்துலயேதான் வாழ்ந்துட்ருக்காரு.”

“மலையாளத்துக்குனு தனி காலண்டரா?” வாய் பிளந்தபடி கேட்டான் ஜாக். “அமேசிங்!”

“ஆமா. 1099னா, ம் இங்கிலீஷ்ல கணக்குப் போட்டுப் பாக்கறேன்.”

“இருபத்துநாலு.”

“இது1190. அப்டினா சரிதான்.”

“கொல்லம் இருபத்தி நாலு.”

“அவருக்கு நெனப்பிருக்கு. ஆங்கில காலண்டர்படி வெள்ளம் வந்தது 1924லாம் வருஷம்.”

வாகன ஓட்டத்தில் அமர்ந்த நிலையில் லேசாக ஆடிய கிழவரின் முதுகை கண்கள் அகலப் பார்த்தான் ஜாக். அவர் அணிந்திருந்த கருப்பு சாம்பல் நிற கோட் பல இடங்களில் ஓட்டை விழுந்து புராதனச் சின்னம் போலத் தோற்றமளித்தது.

“கருந்திரில பயங்கர நிலச்சரிவால சாலைகள் சேதமாய்டுச்சு. ஏழு வருஷம் கழிச்சி அப்போ போட்ட ரோடுதான் இப்ப இருக்கறது. சர்ச்ல எல்லா ரெஜிஸ்டரும் அழிஞ்சு போயிடுச்சு சார். ஒரு டாகுமெண்ட் கூட மிஞ்சல. இப்ப இருக்குற ரெஜிஸ்டர் எல்லாமே அதுக்கு அப்புறம் உருவானது. எங்க முன்னோர் விவரங்கள் எதுவுமே இப்ப என்கிட்ட இல்ல சார்.”

“அப்டினா, உங்க குடும்ப மரக்கிளைகள் இவர்கிட்டருந்துதான் துளிர் விடுதுனு சொல்றீங்க, இல்லையா?”

“அவரோடயே முடிஞ்சும் போய்டும்னு சொல்லலாம். அவருதான் கல்யாணமே கட்டலயே. எங்கம்மா, பாட்டி ரெண்டு பேருமே தேயிலத் தோட்டத் தொழிலாளிங்க. ரெண்டு பேருமே கர்ப்பப் பை கோளாறாலதான் சார் செத்துப் போனாங்க. தேயிலத் தோட்டத்துல வேலை செய்ற பொம்பளைங்களுக்கு அதான் ரொம்பப் பெரிய சுகாதாரப் பிரச்சினை இப்பவுமேகூட.”

“ஓ, அப்டியா,” என்பதுபோல தலையை ஆட்டினான் ஜாக். கார் சன்னல் வழியே செங்குத்தான மலைகளை ஒட்டிய பள்ளத்தாக்குகளையும் தேயிலைத் தோட்டங்களையும் வேடிக்கை பார்த்தான். வெவ்வேறு உயரத்துடன் தொடுவானம் வரை நெடிதுயர்ந்த மலைகள் மனத்தை மயக்கின.

“தாத்தா எப்போதும் மௌனமாகவே இருப்பார். ஆனா, ஒரு சின்னத் தூறல் போதும் அவரப் படுக்கைல முடக்கிரும். மழை வலுத்தா கேக்கவே வேணாம். அவர யாரும் கட்டுப்படுத்தவே முடியாது. அமைதில்லாம மழைலயே தோட்ட மண்டல அலுவலகத்த நோக்கி சாமி வந்தவரு மாதிரி நடக்கத் தொடங்கிருவாரு.”

“ஒரு வேள, உடல் நூற்றாண்டை எட்டினாலும் அவரோட மனசு மட்டும் அதே இடத்தில் அப்டியே உறைஞ்சி போய்டிச்சோ?”

செங்குத்தான, குறுகலான மோசமான சாலைகளில் எப்படி இந்த ஓட்டுநர்கள் அற்புத லாவகத்தோடு வண்டியைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்து ஓட்டுகிறார்கள் என நூறாவது முறையாக வியந்தான் ஜாக். “இயல்பான திறனும் நீண்ட கால அனுபவமுமே காரணமாக இருக்க வேண்டும்,” என முணுமுணுத்தான். பின்புலம் காட்டும் கண்ணாடி வழியே குழப்பத்துடன் பார்த்த பாலா, ஓர் அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.

மூணார்-உடுமலைப்பேட்டை சாலை வழியாக வண்டி நகருக்குள் நுழைந்தபோது, ரம்யமான மலை எழிலுக்கும் நகரின் நெரிசலுக்குமிடையேயான வேறுபாட்டைத் துல்லியமாய் உணர்ந்தான் ஜாக். நகரின் சிறிய அளவுக்கு அதன் அசுத்தம் மிக அதிகம் எனப்பட்டது.

டாக்சி ஸ்டாண்டை கடந்தபோது மலைமேலே கத்தோலிக்க தேவாலயத்தில் சிலையாய் நின்ற போப்பாண்டவர் பெனடிக்ட் XVI, நகரின் எல்லா நடவடிக்கைகளையும் சற்றே முன்புறம் குனிந்து, கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதுபோலப் பட்டது.

தேங்காய் எண்ணையில் நேந்திரங்காய் வறுபடும் மணம் மூக்கைத் துளைத்தது. வார இறுதியில் விரிக்கும் தெருவோரக் கடைக்காரர்கள் வராததால் சாலைகள் வெறிச்சிட்டுக் கிடந்தன.

ஆட்டோக்கள், பேருந்துகள், டாக்சி ஓட்டுநர்கள் காதைக் கிழிப்பதுபோல வண்டி ‘ஹாரன்’களை அழுத்தித் தாறுமாறாக ஓட்டினர். வாகன நெருக்கடியிலும் அவர்களுக்கு ஊரின் போக்குவரத்து பற்றிய சரியான புரிதல் இருக்கவே செய்தது. நான்கு வழிகளிலும் அரசாங்கப் பேருந்துகளில் ஏறும் பயணிகள் கம்பளிக் குல்லாய்கள், முகம் முழுதும் மறைக்கும் குரங்குத் தொப்பிகள், காதுகளை மறைக்கும் மூடிகளை அணிந்திருந்தது ஜாக்குக்கு வேடிக்கையாகப் பட்டது.

இடது பக்கம் வாகனத்தைத் திருப்பியபடியே, வலது புறம் தெரிந்த இருப்புப்பாலத்தையும் பாதசாரிகள் பயன்படுத்தும் சிறிய இருப்புப் பாலங்கள் இணையாய் இருப்பதையும் காட்டிய பாலா, “1944இல் கட்டப்பட்டது. பாலத்துக்கு ’சர்ச்சில் பாலம்’னு பேரு,” என்றான்.

“இது அவருக்குத் தெரிஞ்சிருக்க்குமா?”

“யாருக்கு?”

“சர்ச்சிலுக்கு! இதோ இங்க ஒரு சின்னப் பாலம் அவர் பெயர்ல கட்டப்பட்டிருக்கே, அதுபத்தி அவருக்குத் தெரிஞ்சிருக்குமா?”

“அதப்பத்தி எனக்குத் தெரியாது சார்,” லேசாக சிரித்தான் பாலா. “ஆனா, சரித்திர முக்கியத்துவமான இடம்னு சொல்லுவாங்க.”

“ஓஹோ.”

“அதோட, அப்போ இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசின் பிரதம மந்திரியாக இருந்தவர் சர்ச்சில்.”

“தப்பா நெனைக்கலைன்னா, ஒண்ணு கேக்கணுமே, பாலா. ஆமா, நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?”

“மூணு தடவை ஃபெயிலாகி, அதுக்கப்புறம்தான் ஒருவழியா ஹிஸ்ட்ரில பிஏ பட்டம் வாங்குனேன், சார்.” சொல்லிவிட்டு சற்றே உரக்க சிரித்தான் பாலா.

பின்புலம் காட்டும் கண்ணாடியில் பாலத்தைப் பார்த்தபடியே ஜாக் முகம் மலரப் புன்னகைத்தான்.

“சில வருடம் முன்பு வரைக்கும், சர்ச்சில் காலத்து ஒற்றைப் பாலம்மட்டும்தான் இருந்திச்சி. நதியைக் கடக்க மக்கள் ரெண்டுபக்கமும் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டி இருந்ததால அதுக்கு இணையாக புதுசா இந்தப் பாலத்தைக் கட்னாங்க.”

“இந்தியாவையும் இந்தியர்களையும் அவர் ரொம்பவே வெறுத்தார்னு தெரியுமா?”

 “யாரு?”

“ம்,.. ஒண்ணுமில்ல, விடுங்க.”

“இந்த ரெண்டு பாலத்துக்கும் அப்பால, கொஞ்ச தூரத்துலயே அருள்ஜோதினு இன்னொரு பாலத்தையும் கட்னாங்க. ஆனா, மூணார ஒட்டி தேசிய நெடுஞ்சாலைக்காக அப்புறம் அத இடிச்சிட்டாங்க. மூணார்னா மூணு ஆறுகள் சங்கமிக்கிற இடம். அந்த சங்கமத்துக்கு மேலேதான் இந்த ஊரே இருக்குது சார்.”

“பாலா, நாளைக்கு மறுபடி என்னோட வர நேரம் இருக்குமா உங்களுக்கு?”

“நாளைக்கி மதியம் அடிமாலில ஒருத்தருக்கு சவாரி ஓட்டணும். நீங்க அதிர்ஷ்டவசமா மழை நின்னப்புறம் வந்திருக்கீங்க. மலை ஏறிகள் சில பேரு, எதப்பத்தியும் கவலப்படாம சரியான திட்டமும் போடாம, மழக் காலத்துல வந்து நிப்பாங்க. ‘கைட்’ ஆளுங்களுக்கும் வழி காட்டுறத்துக்கு அவங்க கூடப் போகும்போது, மலைப் பாதை எல்லாம் காட்றதத் தவிர, வேற பெரிசா எதுவுமே உதவி செய்ய முடியறதில்ல.”

“வழுக்குற மலைமேல் ஏறும் சவாலை சிலர் விரும்பியே ஏற்பாங்க, தெரியுமா? என் அன்பு ஆனி கூட அது போல ஒரு வீராங்கனைதான். அவளுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது.”

“உண்மைல மலை வழுக்குறது அவ்ளோ பெரிய சவாலே இல்ல சார். மழக்காலத்துல அட்டைங்க இருக்கு பாருங்க, அதான் ரொம்ப ஆபத்தானது.”

“அட்டைகளால ஊடுருவ முடியாத காலுறைகள் இப்ப என்கிட்ட இருக்கு. ஒரு வேள நா மலை ஏற விரும்பினா பயன்படும். போன வருஷம் மழைக் காலத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டிகளா கூடப்போன ஆட்கள் யார்னு உனக்குத் தெரியுமா?”

“அக்கம் பக்கத்துல விசாரிச்சிப் பாக்கலாம், கண்டுபிடிக்கலாம், சார்.”

“கடைசி நாட்கள்ல மலை ஏறியும் நடந்தும் ஆனி சென்ற பாதைகள்ல நானும் நடக்க விரும்பறேன். யார் வழிகாட்டியாக கூட போனவங்கனு என் நண்பர்களுக்கு விவரம் சொல்லத் தெர்ல. ஒரேயொரு புகைப்படம் இருக்கு. அதுல தெரியற அவங்க முகம் உதவலாம். பொது மருத்துவமனைல விசாரிச்சா ஏதாச்சும் தகவல் கிடைக்குமா? ஆனியோட இறுதி கணங்கள் எப்டி இருந்திச்சுனு என்னால விவரமாத் தெரிஞ்சிக்க முடியுமா?”

பின்புலம் காட்டும் கண்ணாடியில் பாலா ஒருமுறை ஜாக்கைப் பார்த்துக் கொண்டான்.

“என் ஆனியில்லாமல் ரொம்பவே தவிக்கிறேன்,” ஜாக் தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டான். “பட்ஜெட் பயணம் செய்ய விரும்பின அவங்ககிட்ட அதிக பணவோட்டமும் இருக்கல. கனடிய தூதரகத்தை அணுகதான் செஞ்சிருக்காங்க. என்ன ஆனதோ ஏதானதோ, நா இந்தியாவுக்குப் பறந்து வர ஏற்பாடுகள செய்றதுக்கு முன்னாடியே அவளோட உடல் எரியூட்டப்பட்டு விட்டது.

டொரோண்டோல அநாதை விடுதில வளர்ந்தவ ஆனி. அவளுக்கு என்னைத் தவிர உறவுனு யாருமே இல்ல. உயர்நிலைப் பள்ளிக் காலத்திலிருந்தே அவள எனக்குத் தெரியும். ஒரு வருஷத்துக்கு மேல ஆன பிறகும் என்னால சோகத்திலருந்து வெளிவரவே முடில. அவளோட உடலக் கூட பாக்க முடியாமப் போச்சி, பாலா, எனக்கு.”

“கேக்கவே ரொம்ப வருத்தமா இருக்கு, சார்.”

“சரி அத விட்ருவோம். இதுபோல ஒரு மலைத் தொடர்ல பெருவெள்ளம் ஏற்பட்டதுன்றதக் கேட்கவே ரொம்ப வியப்பா இருக்கு எனக்கு.”

“மூணு வாரம் விடாம வானமே பொத்துகிட்டு கொட்டிருக்கு மழை. 485 செண்டி மீட்டர்னாப் பாத்துக்கோங்க.”

“ஐயோ! கற்பனையே செய்ய முடியாத பேரிடராக இருந்திருக்கணுமே.”

“பெரியவர் ‘ஓல்ட் ஸ்டேஷன்’ல உக்காந்து பொழுதன்னைக்கும் என்ன செய்வார்?”

“ஒண்ணுமே பேசாம வேடிக்க பாத்துகிட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்திருப்பாரு சார். எல்லாருக்குமே அவரைத் தெரியும்.”

“பாவம்!”

“மொதல்ல உங்கள ஹொட்டல்ல விட்டப்புறம் நா அவரக் கொண்டு போய் அங்க விட்ருவேன். தன் அப்பாவோட உடலைப் பார்க்க முடியாமப் போன ஏக்கம்தான் அவர இன்னங்கூட வாட்டுது. இந்த மலைகளைத் தாண்டி அவர் வேற எங்கேயுமே போனதில்ல. சமவெளினு ஒண்ணு இருக்கறதோ அங்க இருக்கிற ஊருங்களப் பத்தியோ அவருக்குத் தெரியக்கூட தெரியாது, சார்.”

“மழைக் காலத்துல எப்படி தேயிலைத் துளிர்களை சேகரிக்கப் போவாங்க?”

“ஆங்கிலேயர் காலத்துல மழைலகூட தேயிலை சேகரிப்ப நிறுத்தின மாதிரி தகவல் இல்ல சார். அந்த மாதிரி நாட்கள்ள தேயிலைப் பெட்டிகள, தலைக்கு மேலே போற இரும்புக் கம்பி வடத்தில கொக்கி போட்டு மாட்டி அஞ்சு கிலோ மீட்டர் தூரம் கூட அனுப்புவாங்க சார். டாப் ஸ்டேஷன் குனாடலா இருக்கில்ல அதுலே இருந்து கோத்தகுடி வரைக்கும் சார்.”

“பாட்டம் ஸ்டேஷன்.”

“பெரியவரு என்ன சொல்லுறாரு?”

“கோத்தகுடிக்கி அந்த நாள்ல பாட்டம் ஸ்டேஷன்னு பேரு. அங்கே இருந்து பெட்டிங்கள மாட்டு வண்டிகள்ல ஏத்திட்டு போடிநாயக்கனூர் வரைக்கும் கொண்டு போவாங்களாம் சார். அங்கருந்து இங்கிலாந்துக்குப் போற கப்பல்ல ஏத்தறத்துக்காக துறைமுகத்துக்கு அனுப்ப ரயில்ல ஏத்திகிட்டுப் போவாங்க.”

“யானை மாதிரி என்ன ஞாபக சக்தி பெரியவருக்கு!” மனத்தை மயக்கும் பள்ளத்தாக்குகளில் கவனத்தை வைத்தபடி தன் எண்ணங்களில் மூழ்கிய ஜாக் வியப்புடன் முணுமுணுத்தான்.

“நீங்க தப்பா நெனைக்கல்லன்னா உங்களோட அவங்க எப்டி இறந்தாங்கனு கேக்கலாமா சார்?” பாலா தயங்கித் தடுமாறிக் கேட்டான்.

அவனை ஒரு கணம் வெறித்துப் பார்த்த பின், “அதுவா… ஆனி அதிக உதிரப் போக்கால இறந்து போனா. அட்டை கடிதான். அட்டைகள் அவளுடைய பிறப்புறுப்புவழியா நுழைஞ்சி, தாண்டி உள்ளே போய், கருப்பையையும் இன்னும் பல உட்பாகங்களையும் குடைஞ்சி குதறிக் கிழிச்சிகிட்டு மறுபுறம் துளைச்சிகிட்டு விலாவுல வெளிய வந்திருக்கு,” என்றான் ஜாக்.

“கேக்கறத்துக்கே ரொம்ப மனசுக்குக் கஷ்டமா இருக்கு சார். டாப் ஸ்டேஷன் போகணுமா சார்?”

“முடிஞ்சா நாளைக் காலைல போலாம் பாலா. முதல்ல காலைல நா சீக்கிரமா கண் முழிக்கிறேனானு பாப்போம்,” என்று மெலிதான சிரிப்புடன் ஜாக் வண்டியை விட்டுக் கீழே இறங்கினான்.

பெரியவர் திக்கில்லாமல் வான்வெளியை வெறித்தபடி சமைந்திருந்தார்.

பாதித் திறந்திருந்த கார் முன்சன்னல் வழியே அவரை லேசாகத் தொட்டு விடைபெறக் குனிந்த ஜாக், அவரது தோள்கள் நடுங்குவதை உணர்ந்து சரேலென அதிர்ந்தான். சற்றே நிமிர்ந்த அவரது முகத்தைக் கண்டான். சுருக்கங்களுடன் உலர்ந்திருந்த அவரது இரு கன்னங்களிலும் புத்தம் புதிதாய் வடிந்து வெயிலில் பளீரென மின்னிய ஈரக் கோடுகள்.

ஓவியம்: பி.ஆர். ராஜன்

jeyanthi Shankar
ஜெயந்தி சங்கர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...