No menu items!

சிறுகதை: சொத்து – ஜி.ஏ. பிரபா

சிறுகதை: சொத்து – ஜி.ஏ. பிரபா

“நான் உனக்கு எதுவுமே செய்யலை.”

அப்பா மெல்லிய குரலில் முணுமுணுத்தார்.

கதிர் பதில் சொல்லாமல் அவரை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான். இரவு முழுவதும் சிறிது, சிறிதாக சிறுநீர் கழித்திருந்த பெட் பேனை எடுத்துச் சென்று கொட்டி, சிறிது டெட்டால், பினாயில் போட்டுக் கழுவி வைத்தான். அப்பாவின் உடலைச் சுத்தம் செய்து, வேறு வேஷ்டி உடுத்தி, அப்பாவின் நெற்றியில் விபூதிப் பட்டை இட்டான். பனியனை மாற்றி, வேறு பனியன் போட்டான். படுக்கையின் விரிப்புகளை மாற்றினான்.

எல்லாம் சலவைக்குப் போட்டு மொடமொட வென்று இருந்தது, வாசனையும்.

“சென்ட் போட்டுக்கறியா?” – கதிர்

“படுக்கையோட கிடக்கேன். எனக்கு எதுக்கு சென்ட்?”

“கமகமன்னு இரேன்.”

“அமெரிக்காலேர்ந்து வாங்கிண்டு வந்தியா?”

“ஆமாம்.”

கதிர் அப்பாவின் மீது சென்ட் ஸ்பிரே செய்தான்.

“உனக்கு இப்போ இட்லி, சாம்பார்” என்றான் கதிர்.

“வேண்டாமேடா. நல்லா பழைய சாதத்துல மோர் ஊத்தி, பச்சை மிளகாய் வச்சுக் கொடேன்.” அப்பா கெஞ்சினார்.

“மூச்.” கதிர் மிரட்டினான்.

“உனக்கு நல்லா உடம்பு வாசி ஆகற வரைக்கும் நோ மோர் சாதம், இட்லிதான். உடம்புல கொஞ்சமாவா சக்கரை வச்சிருக்கே. சுகர் பேக்டரிக்கு மூட்டை, மூட்டையா சப்ளை பண்ணலாம்.”

“இட்லிக்கு தொட்டுக்க என்ன?”

“வெங்காய சாம்பார், சட்னி.”

“அப்ப சரி.”

“நல்லா நாக்கை வளர்த்து வச்சிருக்கே.”

“அதைத் தவிர வேறு என்ன வேலைடா எனக்கு?”

கதிர், டிபனை எடுத்து வந்தான். தட்டில் இருந்ததை எடுத்து ஸ்பூனால் அப்பா வாயில் ஊட்ட ஆரம்பித்தான்.

நாலு வாய் சாப்பிட்டதும் அப்பா அவன் கையை பிடித்துக்கொண்டார்.

“நான் உனக்கு சொத்துன்னு எதுவும் தரலை. படிக்கக்கூட எதுவும் செய்யலை. நீயா படிச்சே, வேலைக்குப் போனே. அமெரிக்கா போனே. நான் உனக்குன்னு ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடலை. ஆனா இன்னைக்கு நீ என்னை கண்ணும் கருத்துமா பாக்கறே.”

“ஏன் சொத்து கொடுத்தாத்தான் பெத்தவங்களைக் கவனிக்கணுமா?”

“கொடுத்தாக்கூட கவனிக்கறதில்லையே?”

கதிர் எதுவும் பேசவில்லை. அப்பாவை மெதுவாக எழுப்பி கட்டிலில் சாய்த்து உட்கார வைத்தான். டிவியைப் போட்டுவிட்டு சேரை இழுத்து அருகில் போட்டுக்கொண்டான்.

எதோ சேனலில் பழைய படம், அப்பா அதில் ஒன்றிவிட்டார்.

“இந்தப் படம் வந்தப்ப, நீ அம்மா வயித்துல. நாங்க ரெண்டு பெரும் சைக்கிள்ல கணபதி பாளையம் டூரிங் டாக்கீஸ் போவோம்.”

அவன் கவனம் கிடைத்ததில் அப்பா தன் மலரும் நினைவுகளில் மூழ்கிப் போனார். கதிர் கனிவுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அம்மா போன பிறகு அப்பா தனக்குள் மூழ்கிப் போனார். வயதானவர்களுக்கே உண்டான் ஒரு வெறுமை, இனி என்ன என்ற வெறுமை, அக்கா கல்யாணம் ஆகி, கதிர் அமெரிக்கா போகும்வரை எதோ ஒரு ஓட்டம் இருந்தது. இது செய்யணும், அந்த வேலை என்று கவனம் ஓட்டத்தில் இருந்தது. கதிர் திருமணம் முடிந்து, அவனும் அமெரிக்கா போய், அம்மாவும் காலமான பிறகு அப்பாவை தனிமை பற்றிக்கொண்டது.

கடந்த கால நினைவுகளில் மூழ்கிய போதுதான் பெற்ற பிள்ளைகளுக்கு எந்தச் சொத்தும் சேர்க்கவில்லை, அவர்களின் படிப்பு, வாழ்க்கையில் எந்த அக்கறையும் காட்டவில்லை என்ற உண்மை தாக்கியது. அந்தக் குற்ற உணர்ச்சியில் அவர் தனக்குள் குழிந்து போனார். பையன், பெண்ணை அவர்கள் உதவியை எதிர்பார்க்கக் கூசியது.

அப்பா வயல் கூலிதான். அம்மாவும் கூலிதான். கூலி வாங்கி, பிள்ளைகளைப் படிக்க வைத்து, கல்யாணம் செய்தது எல்லாம் எதோ தெய்வ அனுக்கிரகம் போலதான்.

G.A. Prabha
ஜி.ஏ. பிரபா

அப்பா உத்தமர். நேர்மையானவர். வயல் வேலைக்குச் சென்ற நேரம் தவிர கோவில் உழவாரப் பணி, தேவைப்பட்டவர்களுக்கு உதவி என்று போய் விடுவார். படிக்கவில்லை. கை நாட்டுதான். பிள்ளைகளிடம் கூட அதிகம் உட்கார்ந்து பேச மாட்டார். ஆனால், என்ன தேவை என்றாலும் அம்மா மூலம் வந்து விடும். பெண், பையன் படிக்க விரும்பியதைப் படிக்க வைத்தார்.

அம்மாவின் வைத்தியம், பிள்ளைகள் படிப்பு என்று வாழ்க்கை அவரைப் பிழிந்து எடுத்தபோது கூட முகம் சுளிக்கவில்லை. யார் எந்த வேலை சொன்னாலும் முகம் சுளிக்காமல் செய்வார். எதற்கும் ஒரு புன்சிரிப்புதான் அவரிடம் இருக்கும். அம்மா இறந்து, பிள்ளைகள் எல்லாம் வெளியூர், வெளிநாடு என்று போனாலும் யாரிடமும் எந்த உதவியும் கேட்டதில்லை. இன்னமும் வேலைக்குப் போனார்.

அப்பாவிடம், பணிவு, நேர்மை, சத்தியம் இருந்தது. அன்பு முழுவதும் இருந்தது. அதனாலேயே அவருக்கான உதவிகள் தானாகக் கிடைத்தது. பெண்ணுக்கு நல்ல இடத்தில் திருமணம் ஆனது. கதிர் படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி வெளிநாடு போனான். திருமணம் ஆனது. அப்பாவுக்கு வீடு கட்டிக் கொடுத்தான். மாதம் ஒரு தொகை வருமாறு பணம் டெபாசிட் செய்தான்.

சமீபத்தில் ஒரு விபத்தில் இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது என்று கூறியதும் ஓடி வந்தான். ஆபரேஷன் முடிந்து ஒரு வாரமாகப் படுக்கையில் இருக்கும் அவருக்கு வேண்டிய அனைத்தையும் கண்ணும் கருத்துமாகச் செய்கிறான்.

அது அப்பாவுக்கு உறுத்தலாக இருக்கிறது.

“நீ இப்ப என்கிட்டே காட்டற அன்பையும் அக்கறையும் நான் உன்கிட்ட காட்டினதில்லை.”

“- – – – – – – – “

“உனக்கு நான் பாரமா இருக்கேன்.”

“சரி என்ன பண்ணலாம்.”

“எதோ ஹோம், இல்லம்னு சொல்றாங்களே. அங்க கொண்டுபோய் விடேன்.”

“நாங்க சின்னவங்களா இருந்தப்போ எங்களை வளர்க்க எத்தனை சிரமப் பட்டே. அப்போ எங்களை ஏன் அநாதை இல்லத்துல விடலை?

“- – – – -“

கதிர் டீ போட்டு கொண்டு வந்து தந்தான். அருகில் அமர்ந்து அவர் கையைப் பிடித்துக்கொண்டான்.

“அப்பா இன்னைக்கு நானும் ஒரு தகப்பன். அவனுடைய வலி என்னங்கிறது எனக்குத் தெரியும். அம்மா பத்து மாசம்தான் சுமக்கிறா, தகப்பன் வாழ்க்கை முழுக்கச் சுமக்கிறான். தன் மனசுல. அவன் உழைப்பு முழுக்க, பெத்த பிள்ளைகளுக்காக, அன்பை மனசுல வச்சுகிட்டு வெளில சொல்லாம தன் அக்கறை மூலம் காட்டறவன். எங்களுக்காக நீ தன்னிலை மறந்து ஓடியதை நாங்க அறிவோம் அப்பா. நீ பணம் தேடலை. சிரிக்கத் தெரியாதவன் அல்ல, நடிக்கத் தெரியாதவன். நீ எங்களுக்கு என்ன சொத்து சேர்த்து வச்சிருக்கேன்னு உனக்குத் தெரியலைப்பா.”

கதிர் அவர் கையை தடவிக் கொடுத்தான்.

“மெதுவா எழுந்திரு. வாக்கர் வச்சு நடக்கலாம்.”

“இன்னும் எத்தனை நாளைக்கு நீ கூட இருக்கப் போறே கதிரு?” பக்கத்து வீட்டு வடிவேலு கையில் சூப்புடன் வந்தார்.

“அப்பாவை விடு. நீ இருக்கற வரைக்கும் சரி, அப்பால யார் கவனிப்பாங்க.”

கதிர் அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. எல்லோரும் கேட்பதுதான். நீ கிளம்பிப் போனா அப்புறம் யார்?

மனிதர்கள் தாங்களாகவே ஒரு கேள்வியை முன் வைத்து பதிலையும் அவர்களே சொல்லிக்கொள்கிறார்கள். அம்மா இல்லை; அக்கா திருமணமாகி வெளியூரில், கதிர் அமெரிக்காவில். கேள்விகள் நியாயம்தான். ஆனால், எல்லோருக்கும் வாழ ஒரு வழி இருக்கிறது.

அப்பா முகம் சுருங்கியது.

“என்னப்பா?” கதிர் புரிந்து கொண்டான். அப்பாவை மலம் கழிக்க வைத்து, அந்த பிளாஸ்டிக் பேனை சுத்தம் செய்தான்.

“மாமு நீ ரொம்ப புண்ணியம் செஞ்சிருக்கே” என்றார் வடிவேலு.

“என்ன செய்யப் போறே கதிரு?”- மீண்டும் கேள்வி

“இதுல என்ன சந்தேகம் மாமா. எங்க அத்தை ஒருத்தி ஆதரவு இல்லாம இருக்கு. அதைக் கொண்டு வந்து இங்க வச்சிட்டு, அக்கா மாசம் ஒருக்கா வரும். எனக்கு ரெண்டு வருஷம் காண்ட்ராக்ட். வந்துட்டா, நான் அப்பாவை கூட்டிட்டுப் போயிடுவேன்.”

“அமெரிக்காவை விட்டு வரியா?”  வடிவேலு ஆச்சர்யமாகப் பார்த்தார்.

“வாழ்க்கை டாலர்கள்ல இல்லை மாமா. வாழ்வது, இனிமைங்கறது பெத்தவங்களை மனசு சந்தோஷமா வச்சுக்கறதுல இருக்கு. நம்மை இடைஞ்சலா அவங்க நினைக்கலையே. நான் எப்படி இருக்கேனோ அப்படி என் பிள்ளை இருப்பான்.”

வடிவேலு கண் கலங்கியது. அவரின் பிள்ளை டெல்லியில் இருக்கிறான். ஆறு வருஷமாகிறது. எந்த உதவியும் இல்லை. வந்து பார்ப்பதும் இல்லை. வடிவேலுவும் அவர் மனைவியும் இன்னமும் கூலி வேலைக்குப் போகிறார்கள். அதில் கதிர் அப்பாவுக்குச் செய்வது அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“கதிரு நீ நல்லா இருப்பே கண்ணு. பெத்தவங்க பிள்ளைகளுக்கு சேர்த்துத தர வேண்டிய சொத்தே இந்தப் பாசம், அன்பு, கருணை, மனிதாபிமானம்தான். உங்கப்பன் உனக்கு அதை அள்ளிக் கொடுத்து வளர்த்திருக்கான்.” உணர்ச்சியுடன் பேசினார் வடிவேலு.

“எனக்கு என்ன சொத்து தந்திருக்கேன்னு தெரியுதா?” கதிர் புன்னகையுடன் கேட்டான் அப்பாவை.

துளிர்த்த கண்ணீரை அப்பா மறைத்துக்கொண்டார்.

ஓவியம்: அச்சுதன் ரவி

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...