No menu items!

சிறுகதை: ஆனைச் சத்தம் – இரா.முருகன்

சிறுகதை: ஆனைச் சத்தம் – இரா.முருகன்

era murugan

சிணுங்கிய மொபைல் ஃபோனைப் பார்த்தான் ரமணன். குறுஞ்செய்தி எதுவும் வந்திருக்கவில்லை. வாட்ஸப்பில் நுழைந்து விரலைக் கீழே வழுக்கி வந்தபோது எதிர்பார்த்தபடி படம் வந்திருந்தது. உயர்ந்தோங்கி நிற்கும் யானையின் படம். நான்கு நாளாக தினம் அவனுக்கு யானைப் படத்தை யாரோ அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே யானை இல்லை. ஒவ்வொரு நாளும் ஒன்று. கம்பீரமாக தும்பிக்கையைச் சுழற்றி மேல்நோக்கி வைத்தபடி ஒரு யானை இன்று வந்திருக்கிறது.

யானை என்ற வார்த்தையே புதுசாகக் கேட்கிறது. அது ஆனை தான். சரியாகச் சொன்னால் ஆன. பிறந்ததில் இருந்து அது அப்படித்தான் சொல்லிப் பழக்கம். பள்ளிக்கூடத்தில் அரிச்சுவடி கற்பித்தபோது அ அம்ம, ஆ ஆன என்று கூடவே வந்துவிடும் ஆனை. யானை என்று கூப்பிட்டால் அது சினத்தோடு பிளிறும்.

அனுப்பியவரின் மொபைல் எண் வினோதமாக பதினாறு எண்ணில் இருக்க, ஆனை உயிர்த் துடிப்போடு தும்பிக்கை உயர்த்தி நிற்கிறது. அசையும் ஆனையாக வீடியோ படம் எதுவும் அனுப்புவதில்லை. புகைப்படம் அல்லது ஓவியம் மட்டும்தான் வருகிறது. பதில் அனுப்பலாம், அனுப்பி யாரென்று விசாரிக்கலாம் என்று பார்த்தால் படத்தை க்ளிக் செய்தாலும், கீழே ஸ்க்ரோல் செய்தாலும் பதில் அனுப்பும் ஜன்னல் திரையில் திறக்க மாட்டேனென்கிறது. அதோடு படத்தை நீக்கவும் முடியவில்லை. தினம் கொஞ்சம் இடத்தை அடைத்து இன்னும் ஒரு மாதத்தில் இயங்க முடியாமல் செய்து விடலாம். அதுதான் ஆனைப்படம் அனுப்புகிறவரின் உத்தேசமா?

ரமணனுக்கு முன்னால் இருந்த கம்ப்யூட்டர் டெர்மினல் மெல்ல சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. அவசரமாக ஹெட்போனை எடுத்து மாட்டிக் கொண்டு திரையில் நகர்ந்து போகும் தகவலில் ஒர் சிறு துண்டைத் தேர்ந்தெடுக்க, கம்ப்யூட்டரோடு இணைந்த தொலைபேசி அந்த மொபைல் ஃபோன் எண்ணைக் கூப்பிடத் தொடங்கியது.

ரமணன் வேலை பார்ப்பது பேங்கில் என்று சொல்லிக் கொண்டாலும், பேங்க் இல்லை அது. நீளவாட்டில் இருபது மேஜை, நாற்காலி இரண்டு வரிசையாகப் போட்டு நடுவிலே ஒருத்தர் ஒரு நேரத்தில் நடக்க வசதி செய்யும் கீகடமான அறை அந்த ஆபீஸ். இரண்டு வரிசை நாற்காலிகளும் முடிவடைவது கொஞ்சம் பெரிய மேஜையும் அதில் இரண்டு திரைகளோடு கம்ப்யூட்டரும் வைத்த சூப்ரவைசர் இருப்பிடம்.

மொத்தம் நாலு வங்கிகளுக்கு கிரடிட் அட்டை விற்க மேலும் கேட்டுப் பார்க்க வாடிக்கையாளர் தொடர்பு உண்டாக்கித் தரும் கம்பெனி ரமணன் வேலை பார்ப்பது. நாலு மெல்லிசு ப்ளைவுட் தடுப்புகளுக்குப் பின்னால் ரமணனும் சகாக்களும் ஒரு நாளுக்கு ஒரு வங்கிக்கான அழைப்பாளராக உத்தியோகம் பார்க்கிறார்கள். தினசரி எந்த பேங்குக்காக மன்றாடுகிறோம் என்பதை நினைவு வைக்க வேண்டும். பெயரும் ஒவ்வொரு வங்கிக்கு ஒரு மாதிரி ரமணன், ராம்ஜி, ரகு, ரமண் என்று மாறும். இதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும் சாயந்திரம் வரைக்கும். இல்லாவிட்டாலும் திரையில் வரும்.

ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மேஜைக் கம்ப்யூட்டரும் உண்டு. பேங்கின் கிரடிட் கார்ட் அட்டைகளை புது வாடிக்கையாளர்களாக தேடித்தேடிப்போய் விற்பனை செய்யும் நிறுவனம் அவன் வேலை பார்ப்பது.

சன்னமான விசில் சத்தம். ரமணன் ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டான் என்பதை கம்ப்யூட்டர் சொல்வதே அந்தச் சத்தம். இதையும் அவனுடைய கீ போர்டில் எந்த விசையும் அழுத்தப்படாமல், மைக் இயங்காமல் எவ்வளவு நேரம் கடந்து போனது என்று அளந்து சொல்லிவிடும் மென்பொருள் எல்லா கம்ப்யூட்டர்களிலும் உண்டு. அந்த இடைவேளை மூன்று நிமிடமாக இருந்தால் கம்ப்யூட்டர் மெல்ல ஒலியெழுப்பும். ஐந்து நிமிடம் என்றால் கொஞ்சம் கூச்சலாக அது சத்தமிடும். பத்து நிமிடம் ஆகும்போது சூபர்வைசர் அருகே இரண்டாம் திரையில் அபாய அறிவிப்பாக அந்த சத்தம் எதிரொலிக்க, ரமணன் என்ற பெயருக்கு நேரே சிவப்பு விளக்கு எரியும்.

டயல் செய்த எண் மினுமினுப்பாக மாற, அந்த முனையில் டெலிபோன் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கம்ப்யூட்டர் தெரிவித்தது. ரமணன் உன்னிப்பாக தன் காலை வணக்கத்தைச் சொல்லும் போது எதிர்க்குரல் ஆணா, பெண்ணா, உத்தேசமாகக் குரலிலிருந்து ஊகிக்கும் வயது – இதெல்லாம் மனதில் முடிவு செய்து உரையாட ஆரம்பிக்க வேண்டும்.

“வணக்கம் சார், பேங்கிலே இருந்து கூப்பிடறேன்”.

இதைக் கேட்டதும் வரும் பதில் மேற்கொண்டு எப்படி அந்த உரையாடல் போகுமென்பதை முடிவு செய்யும்.

“என்ன வேணும்?”

அவசரமான, அலுப்போடு கூடிய பதில். கொஞ்சம் போல் கூடுதல் முயற்சி செய்யலாம்.

“சார், பேங்கிலே ரொம்ப நம்பிக்கையான, முக்கியமான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த கோல்ட் கிரடிட் கார்ட் திட்டம் அறிமுகப்படுத்தியிருக்கு.”

இங்கே ஒரு செகண்ட் நிறுத்த, கெட்ட வார்த்தை சொல்லி ஃபோன் இணைப்பைத் துண்டிப்பவர்கள் உண்டு. எதுவும் சொல்லாமல் ஃபோனை வைக்கிறவர்களும் உண்டு. என்னை தொந்தரவு படுத்தாதே என்று கூச்சலோடு முடித்துக் கொள்கிறவர்களும் உண்டு. இதில் என்ன மாதிரி நபரோடு பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரிய, அதற்கப்புறம் நீண்டு போகும் உரையாடல் அவ்வப்போது ஏற்படும்.

இந்த அறையில் பெண்கள் யாரும் இல்லை என்பதால் போன் செய்தவர் கெட்ட வார்த்தை சொல்லியிருந்தால் அது உரக்கப் பகிர்ந்து கொள்ளப்பட்டு சிரிப்பு உயரும். அவரவர் அழைப்பில் மூழ்கி இருந்தாலும், சில வினாடிகள் சிரித்து வேலையைத் தொடர்வது சகஜம்.

ரமணனுக்கு இரண்டு நாற்காலி முன்னால் இருந்தது போன மாதம் வரை அய்யாகண்ணு. அய்க்கண் என்று தொலைபேசும்போது சொல்லிக் கொள்வான்.

அறையில் யாருக்கோ மிக மோசமான வசவு கிடைத்து பகிர்ந்து கொள்ளப்பட, சிரித்தபடி அய்யாக்கண்ணு தன்னை மறந்து அந்த வார்த்தையோடு தான் அழைத்த வாடிக்கையாளரை எதிர்கொள்ள, அடுத்த ஒரு மணி நேரம் அங்கே ஒரு நெருக்கடியான நரகம் உருவாகி நின்றது. அய்யாக்கண்ணு வேலையை விட்டுப் போனதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை தான்.

கடகடவென்று அந்தப் பக்கத்தோடு உரையாடல் தொடர, ரமணனுக்குப் புரிந்து போனது – இந்த வாடிக்கையாளர் நாக்கைப் பிடுங்குவது போல் நாலு வார்த்தை சொல்லி இனிமேல் இந்த நம்பருக்கு தொலைபேசவே கூடாதென்று முடிவு செய்து ‘கூப்பிடக் கூடாது’ பட்டியலில் சேர்த்து விட வேண்டி இருக்கும்.

“கிரடிக் கார்ட் வாங்கறது ரொம்ப ஈசிங்க” ரமணன் குரலில் வரவழைத்துக் கொண்ட உத்தேசத்தோடு தொடர, “எப்படி ஈசிங்க? என்னங்க பண்ணனும்” என்று பதில்.

“டெலிவிஷன் இருக்கற கிரெடிட் கார்ட் இருக்குங்களா?” அந்தப் பக்கத்தில் இருந்து குரல்.

“இல்லேங்க, அதெல்லாம் கிடையாது”.

“அப்ப ஆர்டினரி கார்டை எடுத்து..”

“அது ஆர்டினரி இல்லீங்க சார், மதிப்பு மூணு லட்சம் வரை போகும்”.

“சரி அப்படியா அந்த கார்டை எடுத்து…’

கொஞ்சம் நிறுத்தினார் எதிர்த் தரப்புப் பேச்சாளர்.

“சொல்லுங்க சார்”.

“அந்த கார்டை எடுத்து உங்க பின்னஞ்சந்துலே சரக்குனு சொருகிக்குங்க.”

நாலைந்து பேர் ஓவென்று சிரிக்கும் சத்தம். போன் அமைதியானது. சட்டென்று சிரித்துவிட்டான் ரமணன். வந்த புதிதில் எல்லாம் சாக்கடையில் தூக்கி வீசியது போல், இதற்கு மேல் அவமானம் இருக்காது என்பது போல் தோன்றக் கூனிக் குறுகிப் போவான் அவன். உடனுக்குடன் பகிர்ந்து சிரிப்பது அந்த அவமானத்தைச் சில்லுச் சில்லாகச் சிதறியோடச் செய்யும். இப்போதும் சிதறி உடைந்து கலைந்து போனது அந்த உணர்ச்சி.

இந்த அழைப்புகள் எல்லாம் ஒலிப்பதிவு செய்யப்பட்டாலும், வாடிக்கையாளர் வசவு எல்லாம் அந்தப் பதிப்பில் அப்படியே இருந்தாலும், எந்த கிரடிட் கார்ட் விற்கும் கம்பெனியும் நடவடிக்கை எடுக்க எல்லாம் செய்வதில்லை. ஆனால், கார்ட் விற்கும் ஆணோ பெண்ணோ அவமரியாதையாகப் பேசியதாக யாராவது புகார் கொடுத்தால் அப்படி இல்லை என்று நிரூபித்து சிக்கலைத் தீர்த்து வைக்க அவ்வப்போது பயன்படுவதுண்டு. அய்யாக்கண்ணு அப்படியான ஒரு நிரூபித்தலோடு போய்ச் சேர்ந்தான். அது போன மாதம்.

சட்டைப்பையில் அதிர்வும், ஒளியும். இன்னொரு ஆனை வந்து இறங்கியிருக்கிறது. பார்க்காமலேயே ரமணனால் சொல்ல முடியும்.

இதை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு இனம் புரியாத பயம் அவ்வப்போது எழுவதைக் குறைக்க முடிந்தால் எப்படி இருக்கும்? இது யார் வேலையாக இருக்கும்? ரமணனுக்குத் தோன்றிய ஒரு தீர்வு இப்படி இருந்தது யாரோ யாருக்கோ தினம் ஆனைப் படம் அனுப்ப ஏற்பாடு செய்தோ, ஒருத்தர் மட்டும் முடிவு செய்தோ தீர்மானித்திருக்கிறார்கள். இரண்டு பேரும் ஆனைக் கம்பக்காரர் என்று மலையாளத்தில் சொல்லப்படும் ஆனை விரும்பிகள். இவர்கள் ஒரே குடும்பத்து மனுஷர்களோ, நண்பர்களோ, உறவினர்களோ, காதலர்களோ ஆக இருக்கலாம். விடிந்து ஆனை முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம் என்று நம்பிக்கை வைத்தவர்களோ என்னமோ. அனுப்பிப் போய்ச் சேர வேண்டிய தொலைபேசியாக எப்படியோ ரமணனின் மொபைல் அவர்களிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. ஒரு வாரமாக பத்து, பதினைந்து ஆனைகளை அனுப்பியும் அவை போய்ச் சேராத, தவறான நம்பருக்குப் போய்ச் சேர்ந்த விவரம் இன்னும் அவர்களுக்குத் தெரியவில்லை.

ரமணனின் கம்ப்யூட்டர் திரை ஒளிர்கிறது. மூன்று நிமிடம் ரமணன் சும்மா இருந்து விட்டான் என்று புகார் சொல்கிறது அது. அவசரமாக ஹெட் ஃபோனை மாட்டிக் கொண்டு குட் மார்னிங் மேடம் என்கிறான் அவன். ராஜசுலோசனா கம்பன் எப்படி இருப்பார்? சினிமா நடிகை மாதிரி?

இலக்கியத்தில் வருகிற மாதிரி, சொல்லியிருப்பதாக ரமணன் அறிந்தபடி, கச்சு அணிந்து குத்து விளக்கை ஏற்றுகிறவளாக இருப்பாரா?

“ஹை நீங்கள் சுலோவின் கோட்டைக்கு வந்திருக்கீங்க. நான் இப்போ பிசி. இன்னொரு சமயம் பார்க்கலாம். வாழ்த்துகள்”. அந்தப்பக்க ஃபோன் சொன்னது.

பாத்ரூம் போய்விட்டு வரலாம் என்று உடம்பு கெஞ்சுகிறது. எழுந்தபோது சூபர்வைசர் வந்து கொண்டிருந்ததைப் பார்த்து மறுபடி உட்கார்ந்தான். சும்மா வெட்டியாக இருக்கிறதாக கம்ப்யூட்டர் புகார் சொல்லியிருக்கும். இல்லாமல் இருந்தாலும் பார்க்கும்போதே தெரிகிறது தானே.

அந்த மென்பொருள் இருக்கே, அது என்ன எல்லாம் செய்யும். நாள் முழுக்க ஒரு கார்ட் கூட விற்க தொடர்பு ஏற்படுத்த முடியாமல் போனால், சாயந்திரம் ஷட் டவுன் செய்யும்போது இன்னிக்கு என்ன ஆச்சு என்று துக்கம் விசாரிக்கும் தகவல், கம்பெனி உரிமையாளரிடமிருந்து வந்து விடும்.

இரண்டு நாள் தொடர்ந்து அப்படி ஆனால், விற்பனையாளரின் பேச்சுத் திறமை குறைந்து அடியோடு இல்லாமல் போனதால், அதை உடனே நேராக்க வேண்டும் என்றும் இன்னும் இரண்டு நாளில் கார்ட் விற்க லீட் கொடுக்காமல் போனால், அடுத்த வாரம் முதல் உத்தியோகம் பரிசீலனையில் வைக்கப்படும் என்று இரக்கமே இல்லாமல் சொல்லும் கடிதம் வந்து சேரும். அதற்கு அப்புறம் என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ள இங்கே தொடர்ந்து வேலையில் இருக்க மாட்டார்கள் அப்படி துரதிருஷ்டம் வரப்பெற்றவர்கள்.

ஒரே நாளில் ஐந்தோ அதற்கு மேலுமோ அட்டைகள் விற்கத் தொடர்பு ஏற்படுத்தித் தந்தால், பாராட்டுக் கடிதமும், தினசரி போனஸ் ஆக நூறு ரூபாயும் உடனடியாகக் கிடைக்கும். இதுவே பத்து அட்டைகளோ அதற்கு மேலுமோ என்றால் இருநூறு ரூபாய் போனஸ். எல்லாம் கம்ப்யூட்டர் நிர்ணயிப்பது. முதலாளிகள் உடனே நடப்பிலாக்குவது. இருநூறு ரூபாய் எல்லாம் கனவு தான். நூறு ரூபாயே மாதம் ஒருத்தர் வாங்கினால் பெரிது.

“இன்னிக்கு என்ன ஒருத்தர் கூட விக்கெட் எடுக்கலே. என்ன ஆச்சு?”

 சூபர்வைசர் குரலை உயர்த்திக் கேட்கிறான்.

இந்த மாதிரி அழைக்காத விருந்தாளியாக யார் ஃபோன் நம்பருக்கோ அழைப்பு விடுத்து, கிரடிட் கார்ட் வாங்குவீர் என்று கெஞ்சுவதை – cold call என்பார்கள் இதை – இங்கே எல்லோரும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனினும் ஒருத்தருக்கும் காலை வணக்கத்துக்கு அப்பால் உரையாடல் வளருவதாக, மேலே போவதாகத் தெரியவில்லை. யாரும் இன்றைக்கு எழுந்தவுடன் கிரடிட் கார்ட் வாங்கப் போகிறதா மனதில் நிச்சயப்படுத்திக் கொள்ளவில்லை. அப்படி எல்லாம் தீர்மானிப்பார்களா?

அடுத்த டெலிபோன் நம்பர் திரையில் ஒளிராமல் அதிசயத்தில் அதிசயமாக கம்ப்யூட்டரோடு இணைந்த தொலைபேசிக்கு வெளியே இருந்து அழைப்பு வருகிறது. சொந்த அழைப்புகள் எதுவும் வராத எண் அது. அதில் இருந்து அழைத்து அந்தப்பக்கம் எடுக்காமல் போய் அப்புறம் மிஸ்ட் கால் விவரம் பார்த்து திரும்பக் கூப்பிட்டால், இந்த எண்ணுக்கு அழைப்பு அனுப்ப முடியாது என்று வந்து விடும். அதையும் மீறி யார் அழைப்பது?

“ரமணன் சார், நல்லா இருக்கீங்களா?”

கூப்பிட்ட குரல் மனுஷக் குரலாகவே இல்லை. கம்ப்யூட்டர் பேசுகிறதுபோல் எழுதியதை மென்பொருளால் படிக்க வைத்து சத்தம் உண்டாக்குவதாக இருந்தது. இல்லை, குரலே இப்படித்தானா?

“யார் பேசறது?”

“என் படத்தை ஒரு மணி நேரம் முந்திக்கூட அனுப்பியிருக்கேனே. பார்க்கலியா?”

சொல்லி முடித்து வந்த சத்தம் யானை பிளிறுவது போல இருந்தது. போல என்ன, ஆனையே தான்.

புத்தி கலங்கிக் கொண்டிருக்கிறது. ரமணன் அவசரமாக இணைப்பைத் துண்டித்தான். அழைப்பு வெற்றியா என்று வழக்கம்போல் கம்ப்யூட்டரில் தகவல் பதிய வேண்டும். அந்தத் திரையே வரவில்லை.

ரமணனுக்குத் தடதடவென்று உடம்பு நடுங்கியது. பாத்ரூம் போய் முகத்தைக் கழுவிக் கொண்டு வரவேண்டும் என்று அவசரம். முடிந்தால் பிற்பகலுக்கான பத்து நிமிட இடைவேளையை இப்போதே எடுத்து வெளியே போய் ஒரு சிகரெட் பிடித்தபடி டீ குடித்து வரவேண்டும்.

எழுந்தபோது திரும்ப கம்ப்யூட்டர் அழைத்தது. இதை அலட்சியமும் செய்ய முடியாது. இதற்கு முந்திய அழைப்பு அசாதாரணம் என்ற முத்திரையோடு திரையின் கீழ்ப் பகுதியில் ஒளிர்ந்து கொண்டிருந்ததையும் அவன் கண்டான்.

அவசரமாக ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஹலோ குட் மார்னிங் சார் என்றான். சந்தோஷமும் குறும்புமாக உடனே சப்த ரூபமாகப் பதிலாக ஆனையின் பிளிறல். மழலையாக இன்னொரு ஆனை. அப்பாவும் மகனுமாக. இருக்காது. அம்மாவும் மகனுமாக இரண்டு ஆனைகள் எப்படியோ எங்கிருந்தோ அழைக்கிற சத்தம் அது.

“ரமணன் சார், கிரடிட் கார்ட் அவசரமா வேண்டியிருக்கு. நம்புங்க. நான் ஒழுங்கா பணம் கட்டிடுவேன் மாதாமாதம்.”

“யார் பேசறதுங்க? மிமிக்ரி ஆர்ட்டிஸ்டா?”

“இல்லீங்க, யானைதான். உங்களுக்குப் பிடித்தமானதா சொல்லணும்னா ஆனை”

“எங்க சட்ட விதிகளின் படி நிலையான வருமானம் வர்ற இந்திய நாட்டு பிரஜைகளுக்கு அவங்க கிரடிட் ரேட்டிங் பார்த்து, கார்ட் தர பேச்சு வார்த்தைக்கு நான் ஏற்பாடு செய்வேன். இதிலே மனுஷர்களுக்குத்தான் தரலாம். பிரஜை என்றால் மனுஷர்கள் மட்டும் தான்”.

அந்தப் பக்கத்தில் சத்தம் இல்லாமல் ஒரு முழு நிமிடம் போக, எழுபது வினாடி உரையாடல் நடப்பதாக கம்ப்யூட்டர் அறிவித்துக் கொண்டிருந்தது. இன்னும் புத்திசாலியான கம்ப்யூட்டர்கள் உரையாடல் எப்படிப் போகிறது என்று கூட ஒலியை அலசி ஆய்ந்து சொல்லி விடும்.

ரமணனுக்கு அந்தப் பக்கம் காட்டிய மௌனம் சங்கடமானதாக இருந்தது. அது மிமிக்ரி கலைஞர் அல்லது சிறு வயதுப் பையன் அதுவும் இல்லாவிட்டால் சற்றே மனநிலை பிறழ்ந்தவர் இப்படி யாரோ பேசுகிறார்கள். முடித்து ஃபோனை வைக்கச் செய்ய வேண்டும். இதைத் தகவலாக மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாமா என்று பிறகு யோசிக்கலாம் என்றது மனது.

“சார் நீங்க மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்தா கிரடிட் கார்ட் கிடைக்காதுன்னு யாரோ சொல்லியிருக்காங்க போல இருக்கு. அது உண்மையில்லே. உங்க பேரு, தொழில் சொல்லுங்க. விலாசம் கூட இப்போ வேண்டாம். நான் பேங்குலே உங்களைக் கூப்பிடச் சொல்றேன்”.

அடுத்த பிளிறல். பொறுமை இழந்ததாக வந்தது அது. குட்டி ஆனை குரல் கூட ஒலிக்கவில்லை. மூன்று நிமிடங்களுக்கு மேலே நடக்கும் உரையாடல் என்று கம்ப்யூட்டர் சொல்லி ஒரு பூச்செண்டை வரைந்து காட்டியது.

“என் பேரு வள்ளி. தேக்கடியிலே இருந்து பேசறேன்”.

திரை ஒளிர்ந்தது. குரல் தெளிவின்றி இயந்திரத்தனமாக வர, எழுத்துகள் ஊர்ந்து போயின. ரமணனுக்கு எப்போதோ போய் உட்கார்ந்த ஆவிகளோடு பேசும் கூட்டம் நினைவு வந்தது. சியான்ஸ் பாதி நடந்து இறங்கி வந்த ஆவிகள் புழுத்து நாறும் கெட்ட வார்த்தை வசைகளைப் பொழிந்தபோது இருட்டு அறைக் கதவை அவசரமாகத் திறந்து வெளியே ஓடி வந்தான் ரமணன். இதுவும் சியான்ஸ் தானா?

“நான் தேக்கடியிலே இருந்து வள்ளி கூப்பிடறேன். ஆனை. வயசு பதினஞ்சு. போன மாசம் பிரசவமாச்சு. கணேஷ் என் பிள்ளை பெயர். அதுக்குள்ளே பிளிறல் வந்துடுத்து. சத்தம் போடக்கூடாதுன்னு ஓரமா படுக்க வச்சிருக்கேன்”.

“எதுக்கு எனக்கு ஆனைப் படம் அனுப்பறீங்க, தினம்?”

ரமணன் கேட்டபோது தான் நினைவு வந்தது.

“முதல்லே எப்படி என் மொபைல் நம்பர் கிடச்சுதுன்னு சொல்லுங்க சார். நீங்க பெண் குரல்லே பேசினாலும், ஆனை மாதிரி அச்சு அசலாக பிளிறினாலும் நீங்க மிமிக்ரி கலைஞர்னு சுலபமா தெரியறது சார். ப்ளீஸ், கெஞ்சிக் கேட்டுக்கறேன். தினம் படம் அனுப்பாதீங்க. வேறே யாருக்கோ வேறே டெலிபோன் நம்பருக்கு போக வேண்டியது போல இருக்கு. பார்த்துக்குங்க. அப்புறம் உங்க பெயரை சொல்லுங்க. அதிகாரிகள் கார்ட் பற்றி பேச போன் பண்ணுவாங்க. ரெண்டு நாள்லே எல்லாம் சரியாக இருந்தால் கார்ட் வந்துடும். தேக்கடியிலே இருக்கற பேங்குலே இருந்து கார்ட் கிடைக்க வழி செய்வாங்க. சரியா சார்.”

இப்போது இரண்டு ஆனைகள் பிளிறும் சத்தம்.

“நான் படிச்சது இல்லே. ஆனா சம்பாதிக்கறேன். தினம் பசங்களை மேலே ஏத்திக்கிட்டு சவாரி செய்ய வச்சுப் போறேன். பாகன் பணம் வாங்கிக்கறான். எனக்கு வாழைப்பழம் தருவாங்க. இனிமேல் வாழைப்பழம் வேண்டாம், பாகனுக்குக் கொடுத்ததில் பாதி எனக்கு வரணும்னு சொல்லியிருக்கேன்”.

“யார் கிட்ட?”

“உன்னை மாதிரி பத்து பேரை ஆனைப் படம் அனுப்பி நட்பிலே வச்சிருக்கேன். அதிலே ஒரு ரிடயர்ட் தாய்லாந்து நாட்டு கவர்மெண்ட் அதிகாரி. அவர் கிட்டே சொல்லி இங்கே ஒருத்தர் கிட்டே பேசச் சொல்லியிருக்கேன். இவங்க எல்லாம் ஆனையா இருந்தா சுலபமா வேலை முடிஞ்சிருக்கும்”.

“சரி உனக்கு என்ன வேணும்?”

“பெரிசா ஒண்ணும் வேணாம். சின்னதா கிரடிட் கார்ட் போதும். என் பிள்ளைக்கு பிஸ்கட்டும் கூல் ட்ரிங்கும் வாங்கித்தர, எனக்கு சமோசா, சாண்ட்விச் வாங்கிச் சாப்பிட, உடம்புக்கு வந்தா மருந்துக்கு, வெட்டினரி டாக்டர் கிட்டே ஊசி குத்திக்க அப்பப்போ யூஸ் பண்ணிக்கறேன். நான் யார் கையையும் எதிர்பார்த்து இருக்க மாட்டேன். கிரடிட் கார்ட் செலவுக்கு பாகன் நிலுவை தொகை கட்டுவான். அவன் கிட்டே இருக்கப்பட்ட என் பணம் நிலுவைத் தொகை கட்ட என்கிட்டே வராட்ட நான் தேக்கடி டூரிஸ்டுகளுக்கு சவாரிக்கு போக மாட்டேன். முதலுக்கே மோசமாகிடும். அந்தாள் கிட்டே கறாரா சொல்லிடு. எனக்கு மாதம் லட்ச ரூபா வருமானம் இருக்கும். நிஜமாத்தான். நம்பு.”

மாத வருமானமாக ஒரு லட்ச ரூபாயைப் பதிந்தான் ரமணன். மறுபடியும் இரண்டு ஆனைகள் சேர்ந்து பிளிறும் சத்தம். கம்ப்யூட்டர் அந்த அழைப்பு முடிந்ததாக அறிவித்து, நான்கு கிரடிக் கார்ட் கம்பெனிகள் இந்த வாடிக்கையாளருக்கு கார்ட் தரத் தயாராக இருக்கிறதாகக் கூறின.

ரமணன் பிளிறிக்கொண்டு வெளியே ஓடினான்.

ஓவியம்: சாய்குமார்

3 COMMENTS

  1. வணக்கம். 2011ல் இப்படியான நெருக்கடி மிகுந்த வேலையில் இருந்த போது, ஏற்பட்டு மறைந்த மன அழுத்தம் அத்தனையும் ஒன்றாய் வந்து அமர்ந்துக்கொண்டது. இன்று அமைதியற்ற நாள்.

  2. Indian education creates lakhs of students to become clerical staff either in government job or in private job. It’s easy to get it if you could have focused to certain extent to find a job and get retirement at 58. By rank promotions you may retiring as gazetted rank in government job and GM in private job easily and safely. If you specialize something you can become a freelancer and earn as long as not become a victim of social buff, Apart from this only studying and running behind academics by parents, peers compulsion end with this type of tuff marketing job that may not be suitable to individual nature. The person or group runs these types of centres again minting money like real estate professional. Therefore don’t be worried about your situations, understand the ground reality and catch a bandwagon to pass the time.. That’s what everyone does here.. Trust you agree with me. Please take care.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...