No menu items!

எடிட்டர் எஸ்.ஏ.பி. – அந்த அரசு பதில்கள்!

எடிட்டர் எஸ்.ஏ.பி. – அந்த அரசு பதில்கள்!

ஒரு நள்ளிரவு.

குமுதம் இதழ் நிறைவுப் பணிகள் வேகமாக நடந்துக் கொண்டிருந்தன. என் பொறுப்பில் மூன்றாவது இதழ். இன்னும் இரண்டு பகுதிகள் வர வேண்டும். அரசு பதில்கள், வாசகர் கடிதங்கள். இரண்டும் எடிட்டர் எஸ்.ஏ.பி.யிடமிருந்து வர வேண்டும்.

இவை குமுதத்தின் இறுதி 16 பக்க ஃபார்மில் கடைசி நிமிடப் பகுதிகள். எடிட்டரிடமிருந்து இவை வந்து அச்சிலேறிவிட்டால் அந்த வார இதழ் பணி இனிதே முடிந்தது. இதழ் பொறுப்பாளருக்கு நிம்மதி.

அரசு பதில்கள் எடிட்டரால் எழுதப்பட்டு நள்ளிரவு 12 மணி போல் அலுவலகத்துக்கு வரும். 13 அல்லது 14 கேள்வி பதில்கள் இருக்கும். மூன்று பக்கங்களைத் தாண்டாது. மிக மிக அரிதான சந்தர்ப்பங்களில் 4 பக்கங்கள்.

வாசகர்கள் கேள்விகள் அடங்கிய அஞ்சலட்டைகள், இன்லாண்ட் கடிதங்களை காலையிலேயே எடிட்டர் இல்லத்துக்கு அனுப்பட்டிருக்கும்.

வாசகரின் கேள்வி வந்த போஸ்ட் கார்டிலே சில நேரங்கள் பதில்கள் எழுதப்பட்டிருக்கும். சில சமயம் தனித் தாளில். சிறு சிறு வார்த்தைகளில் தாளுக்கு வலிக்கக் கூடாது என்று அழுத்தாத எழுத்தில் பதில்கள் இருக்கும்.
பதில்களுடன் படக் குறிப்புகளும் தோராயமான லே அவுட் டிசைனையும் எடிட்டர் அனுப்பி வைப்பார்.

படங்களைத் தேடி, லே அவுட் செய்து, அச்சுக் கோர்த்து, ப்ரூஃப் பார்த்து அச்செடுத்து எடிட்டரின் ஹண்டர்ஸ் சாலை பங்களாவுக்கு அனுப்பும்போது இரவு இரண்டு மணி ஆகிவிடும். அவர் அதை படித்து, திருத்தி மீண்டும் அலுவலகம் அனுப்புவதற்கு விடியற்காலை நான்கு மணி ஆகும்.

பதில்களுடனே தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர் கடிதங்களும் எடிட்டரிடமிருந்து வந்திருக்கும்.

அன்றும் அப்படிதான் அரசு பதில்களும் வாசகர் கடிதங்களும் இரவு 12 மணி போல் வந்தன. பரபரப்பாக வேலைகள் தொடங்கின. லே அவுட் முடிந்து கம்போஸ் செய்து ப்ரூஃப் படித்து எடிட்டருக்கு அனுப்புகையில் மணி இரண்டு.

அடுத்த இரண்டு மணி நேரம் ஓய்வு. காலை நான்கு மணிக்குதான் அவரிடமிருந்து திரும்ப வரும் என்பதால் ஒரு ஓரமாய் படுத்துக் கொள்ளலாம் அல்லது புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் நடக்கலாம். எல்லாம் முடிந்து விட்டது என்ற நிம்மதி மனதில் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருக்கும்.

காலை நான்கு மணிக்கு எடிட்டரிமிருந்து அரசு பதில்கள் வரவில்லை. தொலைபேசியில் அவருடைய அழைப்புதான் வந்தது.

“இந்த அரசு பதில்களை பயன்படுத்த வேண்டாம்” என்றார் மிக மெல்லிய குரலில். எப்போதுமே அவர் அதிர்ந்து பேச மாட்டார். அவர் குரலில் அன்பு இருக்கும், அளவான வார்த்தைகள் இருக்கும். அதிகாரம் இருக்காது.

அவர் அதிராமல் சொன்னது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. அரசு பதில்கள் வேண்டாம் என்றால் அந்த மூன்று பக்கங்களுக்கு என்ன செய்வது. ஆறு மணிக்கு 16 பக்கம் அச்சுக்கு போயாக வேண்டும். வேறு என்ன தயாராக இருக்கிறது… இப்படி பதற்றமான யோசனைகள்.

“ஏன்… சார்?”

“அது சரியாக இல்லை. நான் வேறு தருகிறேன்” என்றார்.

“சார், நன்றாகதானே இருந்தது” என்றேன். நான் அப்போது மிக மிக ஜூனியர். அவர் இந்தியாவின் அதிகமாய் விற்பனை ஆகும் இதழின் நிறுவனர், ஆசிரியர். முதலாளி.

“சீக்கிரம் புதிதாக அனுப்பிவிடுகிறேன். இன்னும் கொஞ்சம் வாசகர் கேள்விகளை அனுப்புங்கள்” என்று போனை வைத்துவிட்டார்.

அலுவலகம் பதற்றமடைந்தது.

”எடிட்டர் அரசு பதில்கள் அனுப்பலையா? என்ன செய்யப் போறிங்க?”

பிரஸ்ஸிலிருந்து கேள்விகள். நான் இளையவன் என்பதால் அதிகமாய் ஓட்டினார்கள்.

“புதுசா அனுப்புறேன்னு சொல்லியிருக்கார்.”

“6 மணிக்கு மெஷின் ஓடலைனா மத்தியானம் பார்சல் ரெடியாகாது ரயிலை பிடிக்க முடியாது” பதற்ற குரல்கள்.

எல்லோருக்கும் தெரியும் எடிட்டர் முடிவுக்கு எதிர் பேச்சு இல்லை என்று. ஆனாலும் பதற்றம்.

ஆறரை மணிக்கு எடிட்டரிடமிருந்து புதிய கேள்வி பதில்கள், இன்னும் சிறப்பாக.

இதழ் தாமதமாகதான் அச்சுக்குப் போனது. பார்சல் மற்றும் சர்குலேஷன் பிரிவுகள் துரிதமாக செயல்பட்டு அந்தத் தாமதத்தை வாசகர்கள் உணராதவாறு சரியான நேரத்தில் கொண்டு சேர்த்து விட்டார்கள்.

காலை அலுவலகம் வந்த எடிட்டர்… “என்னால் தாமதமாகிவிட்டதா?” என்று கேட்டார்.

அவர் என்னிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற தகவல்கள் அவருக்கு சென்றுகொண்டுதான் இருக்கும். ஆனாலும் என்னை சமாதானப்படுத்துவதற்காக அந்தக் கேள்வி.

“அந்த அரசு பதில்களும் நல்லாதான் சார் இருந்தது” என்று மெல்ல சொன்னேன்.

“எனக்கு அவ்வளவா திருப்தியா இல்லை” என்று பதிலளித்தார்.

அவர்தான் முதலாளி. அவர்தான் ஆசிரியர். அவர் எழுதியதை யாரும் மறுக்க மாட்டார்கள். குறை கூற மாட்டார்கள். அந்த பதில்களும் சிறப்பாகவே இருந்தன. ஆனாலும் அவருக்கு திருப்தி இல்லை. அரசு பதில்கள் வாரம் வாரம் எழுதப்படும் பகுதி. இந்த வாரம் அத்தனை திருப்தியில்லை, அடுத்த வாரம் சரி செய்துக் கொள்ளலாம் என்று அவரால் இருந்திருக்க முடியும்.

யாரும் கேட்கப் போவதில்லை. ஆனால், ஒரு நாள் முழுவதும் எடுத்துக்கொண்ட உழைப்பை வேண்டாம் என்று அவர் தள்ளி வைக்க ஒரே காரணம் அவருக்கிருந்த அர்ப்பணிப்பு உணர்வு. வாசகனுக்கு அவர் கொடுத்த மதிப்பு. தன்னைப் படிக்க வாசகன் கொடுக்கும் நேரத்துக்கும் பணத்துக்கும் அவர் கொடுத்த மரியாதை.

குமுதத்தில் அரசு பதில்கள் எத்தனை பிரபலம் என்பது எல்லோருக்கும் தெரியும். குறும்பு, குதர்க்கம், அரசியல், ஆன்மீகம், சினிமா, சிரிப்பு என அனைத்து உணர்ச்சிகளும் அந்த மூன்று பக்கங்களில் இருக்கும். அந்த மூன்று பக்கங்களுக்கு பின்னால் எடிட்டர் எஸ்.ஏ.பி.யின் இந்த உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தன.

அரசு பதில்கள் மட்டுமல்ல, அவர் ஆசிரியராக இருந்தபோது குமுதத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இந்த உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தது.

வாசகர் கடிதம் ஒரு பக்கம்தான். ஆனால், அதற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் மிக அதிகம். பிரசுரமாகும் வாசகர் கடிதங்களுக்கென்று சில விதிகள் வைத்திருந்தார்.

விமர்சித்து வரும் கடிதங்களுக்கு முன்னுரிமை. கடுமையாக விமர்சித்தால் அதிக முன்னுரிமை. தலைப்பு.

சென்னைக்கு 2 கடிதங்கள். தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு ஒவ்வொரு கடிதம். ஒரே மாவட்டத்தை சேர்ந்த இரண்டு கடிதங்கள் பிரசுரிக்கக் கூடாது.

இந்த வாரம் பிரசுரிக்கப்பட்ட மாவட்டங்கள், ஊர்களை அடுத்த வாரம் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

கடந்த வாரம் விடுபட்ட மாவட்டங்களை இந்த வாரம் சேர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஒரு இஸ்லாமியர், ஒரு கிறித்துவரின் கடிதம் நிச்சயம் இடம் பெற வேண்டும்.

வாசகர் கடிதங்களை எடிட் செய்து சுருக்கலாம். ஆனால், புதிய வார்த்தைகளை சேர்க்கக் கூடாது.

500 வாசகர் கடிதங்கள் வந்திருந்தாலும் அனைத்தையும் படித்து அவரே தேர்ந்தெடுப்பார்.

வாசகர் கடிதங்கள் எந்த வரிசையில் பிரசுரம் ஆக வேண்டும் என்பதையும் அவரே எண்களால் குறிப்பிட்டிருப்பார். (இது போன்ற வரிசையை அவர் அரசு பதில்களுக்கும் கொடுப்பார். குமுதத்தில் வெளியாகும் கட்டுரைகள், கதைகளுக்கும் இந்த வரிசை உண்டு – அவர் காலத்தில்)

ஒரே ஒரு பக்கம்தான்; ஆனால், இத்தனை அம்சங்கள், இத்தனை விதிகள்.

குமுதத்தை சினிமா, கிசுகிசு, ஆபாசம், வம்பு என்று விமர்சனம் கூறி ஒதுக்குபவர்கள் உண்டு. ஆனால், எஸ்.ஏ.பி. ஆசிரியராக இருந்த போது குமுதத்தின் 96 பக்கங்களில் மிக அதிகபட்சமாய் 6 பக்கங்கள்தாம் சினிமா செய்திகள் இருக்கும். மற்ற 90 பக்கங்கள் வாசகர்களின் மற்ற ஆர்வங்களை பூர்த்தி செய்வதாகவே இருக்கும். ஒவ்வொரு பக்கத்தையும் சாமானிய வாசகனின் பார்வையிலிருந்துதான் பார்ப்பார்.

வாசகனின் பார்வையை அவர் எப்படி அறிந்துகொள்வார் என்ற கேள்வி எழலாம். இன்று டிரெண்டிங் என்று ஒரு கான்சப்ட் இருக்கிறது. ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களைத் திறந்தால் மக்களும் அரசியல் கட்சிகளும் எதை பேசுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

அன்று ட்விட்டர் இல்லை ஆனால், ரயில், பஸ் இருந்தது. பங்களாவில் வசித்தாலும் பல்லவன் டிரான்ஸ்போர்ட்டிலும் லோக்கல் ரயிலிலும்தான் அவர் பயணம். மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள், எதை ரசிக்கிறார்கள், எதை வெறுக்கிறார்கள் என்பதை அறிய அவர் வைத்திருந்த வழி இதுதான். இந்த பயணங்களுக்காகவே தன் முகத்தை வெளியுலகத்துக்கு காட்டாமலே இருந்தார்.

ஒரு முறை ஒரு பூங்கா நடைபயிற்சியில் கவிஞர் வைரமுத்து அவரை அடையாளம் கண்டுகொண்டார் என்பதற்காக நடைபயிற்சியை வேறு பூங்காவுக்கு மாற்றிக் கொண்டவர்.

அவர் ஆசிரியராக இருந்தபோது குமுதம் வாரம் தோறும் ஆறரை லட்சம் பிரதிகள் மேல் விற்றது. இந்தியாவிலேயே அதிகம் விற்கும் வாரப் பத்திரிகையாக உயர்ந்தது. அந்த வெற்றிக்கு காரணம் எடிட்டர் எஸ்.ஏ.பி.யின் இந்த அர்ப்பணிப்பு. அயராத உழைப்பு.

ஏப்ரல் 17 எடிட்டர் எஸ்.ஏ.பி.யின் நினைவு தினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...