ரஜினியின் ‘வேட்டையன்’ ஷுட்டிங் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இதற்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் பெயரை வருகிற ஏப்ரல் 22-ம் தேதி அறிவிக்க இருக்கிறார்கள்.
திரைக்கதையின் எழுத்து வேலை முடிந்துவிட்டாலும், அதை செம்மைப்படுத்தும் வேலைகள் இன்னும் தொடர்கிறதாம். இதில் ஏற்படும் ஒவ்வொரும் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ரஜினி ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொள்கிறாராம்.
இது தங்க கடத்தல் மாஃபியா பற்றிய பின்னணியில் ரஜினி கொஞ்சம் வில்லத்தனமாக கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன,
இதற்கிடையில் ரஜினியுடன் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மைக் மோகனை ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்கும் திட்டமும் இருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது. இதற்கிடையில் இப்படம் பற்றிய மற்றுமொரு தகவல் கசிந்திருக்கிறது.
இப்படத்தை பான் – இந்தியா படமாக எடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிடுகிறாராம். ரஜினிக்கும் இதில் ஒரு லேசான விருப்பம் இருக்கிறதாம். இதனால் பட்ஜெட்டை பற்றி கவலைப் பட வேண்டாம் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெம்பு கொடுத்திருக்கிறதாம்.
இந்த சிக்னல் கிடைத்ததும், லோகேஷ் கனகராஜ் செய்த முதல் காரியம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை இப்படத்தில் நடிக்க வைக்கலாமா என்று அதற்கான வேலைகளில் இறங்கி விட்டாராம்.
இதன் தொடர்ச்சியாக, ஷாரூக்கானிடம் கதையைச் சொல்ல லோகேஷ் கனகராஜ், நேரம் கேட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். ’பதான்’ படத்தில் ஷாரூக்கானுடன் சல்மான் கானும், விக்ரமில் கமலுடன் சூர்யாவும் நடித்தது போல ஷாரூக்கானை சிறப்புத்தோற்றத்தில் நடிக்கதான் இப்போது லோகேஷ் தரப்பு ஷாரூக்கானை அணுகியிருப்பதாக தெரிகிறது.
ரஜினிக்காக ஷாரூக்கான் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விடை ஏப்ரல் 22-ம் தேதி தெரிய வாய்ப்பிருக்கிறது.
விஜய் 69- பின்வாங்கிய தயாரிப்பாளர்
விஜய் அரசியலுக்குள் நுழைந்து முழுமையாக ஒரு அரசியல்வாதியாக களமாட இருப்பதால், அவர் இனி நடிக்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த முடிவு எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது விஜய்க்கும் தெரியாது. நமக்கும் தெரியாது.
இதற்கிடையில் விஜய் நடிக்கவிருக்கும் 69-வது படத்தை, ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தைத் தயாரித்த டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், விஜய் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க அந்நிறுவனம் தயாராக இருப்பதாகவும் தகவல் கசிந்தது.
விஜயின் ‘வாரிசு’ படத்தை தயாரித்தவர் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ. தனுஷின் ‘வாத்தியார்’ படத்தை எடுத்ததும். அடுத்து அஜித் நடிக்கவிருக்கும் பட த்தைத் தயாரிக்க இருப்பதும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள்தான். இப்படி வரிசையாக தெலுங்கு தயாரிப்பாளர்கள் தங்களது மார்கெட்டை விரிவுப்படுத்த இங்கே தமிழில் படமெடுக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் விஜயின் படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்கும் என்று நம்பப்பட்டது.
ஆனால் இப்போது இந்நிறுவனம் விஜய் 69-வது படத்தை தயாரிக்க தயாராக இல்லை என்று கூறுகிறார்கள். விஜயின் சம்பளம், யார் இயக்குநர், அரசியல் கதைக்களம் என இந்த மூன்று விஷயங்களிலும் டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு மாறுபட்ட கருத்து இருக்கிறதாம். இதனால் நாசூக்காக இந்த போட்டியில் இருந்து கழன்று கொண்டிருக்கிறது.