ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் போன்ற போட்டிகளில் இந்தியாவுக்காக களத்தில் நின்று போராடிய மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் இப்போது தங்களுக்காக டெல்லி சாலையில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். சாக்ஷி மாலிக், வினேஷ் போபட், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட இந்தியாநேற்று காலையில் தொடங்கிய அவர்களின் போராட்டம் இரவு முழுதும் நீடித்து இன்றும் தொடர்கிறது. விளையாட்டு உலகில் இந்த போராட்டம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மல்யுத்த வீரர்களின் இந்த போராட்டத்துக்கு காரணம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங். தான் பதவியில் இருந்த காலத்தில் அவர் வீராங்கனைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டியிருக்கிறார்கள் வீராங்கனைகள். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிதான் இந்த போராட்டம்.
கோண்டா தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் எம்பிதான் பிரிஜ் பூஷன் சரண் சிங். தன் இளமைக் காலத்தில் மல்யுத்த வீரராக இருந்த சரண் சிங், அதன் பிறகு அரசியலில் ஆர்வம் காட்டினார். ராமர் கோயில் விவகாரத்தில்தான் முதல் முறையாக இவரது பெயர் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதற்காக பல போராட்டங்களில் ஈடுபட்ட அவர் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி சமஜ்வாதி கட்சியில் சேர்ந்த சரண் சிங் கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகுதான் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். பல முறை கட்சி மாறினாலும் எம்பியாகவே தொடர்ந்தார்.
ஒரு பதவியைப் பெற்றால் மேலும் புதிய பதவிகளுக்கு ஆசைப்படுவது சில அரசியல்வாதிகளின் வழக்கம். அந்த வகையில் பிரிஜ் பூஷனும் புதிய பதவிகளைத் தேடினார். இந்த நேரத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவி அவரது கண்களை உறுத்தியது. சிறுவயதில் மல்யுத்த வீரரான இருந்த ஒரே தகுதியை வைத்து அந்த பதவியைப் பிடித்தார். 2011-ம் ஆண்டுமுதல் அப்பதவியில் பெவிகால் போட்டு ஒட்டிக்கொண்டார்.
ஆனால் பதவி வந்த பிறகும் பணிவு வராததால் அவருக்கு சிக்கல் எழுந்தது. போட்டிகளில் தோற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை கண்ணியக் குறைவான வார்த்தைகளால் அவர் விமர்சித்ததாக புகார் எழுந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக மல்யுத்த வீராங்கனைகளிடம் தவறாக நடக்க முயன்றதாக அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
7 மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸில் புகார் செய்தனர். ஆனால் அவர் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபமான மல்யுத்த வீரர்கள் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மல்யுத்த வீரர்களின் போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து இவ்விஷயத்தில் தலையிட்ட மத்திய அரசு, வீராங்கனைகளின் புகார் குறித்து விசாரிக்க, மேரி கோம் தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டியை நியமித்தது. பிர்ஜ் பூஷனும் தாற்காலிகமாக பதவி விலகினார். ஆனால் அதன் பிறகு அந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.