அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் அடைப்புகள் இருந்ததால் நேற்று காலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 5 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 மணி நேரத்துக்கு செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருந்தார். அதன் பிறகு அவருக்கு மயக்கம் தெளிந்தது. இந்தநிலையில் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், ‘அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது” என்றார்.
இதனிடையே காவேரி மருத்துவமனை தரப்பில், ‘செந்தில் பாலாஜி டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரத்திற்கு பின் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார். அதன் பின்னர் நீராகாரம் மூலம் உணவு வழங்கப்பட உள்ளது. இதயத்தில் அடைப்பு அகற்றப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியின் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு இயல்பாக இருக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து அதிமுக வழக்கு
அமைச்சர் செந்தில் பாலாஜியை சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்து வந்த மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை ஆகிய துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜி இலகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆன பிறகும் தமிழக அரசு செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என அரசாணை வெளியிட்டது.
இந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் “செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை ஆளுநர் அங்கீகரிக்கவில்லை. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதால் அரசு பணம் வீணாகிறது” என குறிப்பிட்டுள்ளனர்.
ஜோ பைடனுக்கு சந்தனப் பெட்டி, அவரது மனைவிக்கு வைரக்கல்; பரிசு வழங்கிய மோடி
அமெரிக்காவிற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபருக்கும் அவரது மனைவிக்கும் பல பரிசுகளை வழங்கி நட்பு பாராட்டினார். அமெரிக்க அதிபர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற மோடி, ஜோ பைடனுக்கு சந்தனப் பெட்டியையும் அவரது மனைவி ஜில் பைடனுக்கு வைரக்கல் ஒன்றையும் பரிசளித்தார்.
இதற்கு முன்னதாக நேற்றைய தினம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் பல்வேறு நாட்டின் பிரதிநிதிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.வரும் 24ஆம் தேதி வரை மோடி அமெரிக்காவில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை பரிசீலிக்க அமெரிக்க செனட் குழு முடிவு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை இன்று (ஜூன் 21) பரிசீலிக்க அமெரிக்க செனட் குழு முடிவு செய்துள்ளது. இந்திய – சீன எல்லையில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியை மாற்ற சீனா, ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது, ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றை இந்தத் தீர்மானம் கண்டிக்கிறது.
அதோடு, இந்திய எல்லையை ஒட்டிய கிராமங்களில் குடியிருப்புகளை அதிகரிக்கச் செய்வது, கட்டுமானங்களை அதிகரிப்பது, அருணாச்சலப் பிரதேசத்தின் நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களை மாண்டரின் மொழி பெயர்களுடன் வரைபடங்கள் வெளியிடுவது, பூடானை உரிமை கோருவது ஆகிய சீன நடவடிக்கைகளை தீர்மானம் கண்டிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.