“லியோ பற்றி நான் பேசின வீடியோவை இதுவரை 4 கோடி பேர் பார்த்திருக்காங்க. ஒரே நாளில் வேர்ல்ட் ஃபேமஸ் ஆகிட்டேன். 25 சேனல்கள்ல இண்டர்வியூ கேட்டிருக்காங்க. இன்னைக்கு 10 மணி வரைக்கும் பேட்டி இருக்கு. ராத்திரி 11 மணில இருந்து காலையில 5 மணி வரை மட்டும்தான் ஃப்ரி. உங்களுக்கு இன்னைக்கே பேட்டி வேணும்னா அப்ப வச்சிக்கலாமா?”
“என்னை ஒரு பேட்டி எடுங்க” என பார்க்கும் பத்திரிகையாளர்களை எல்லாம் துரத்திய சத்யேந்திராவை பேட்டி கேட்டு இப்போது பத்திரிகைகாரர்கள் துரத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆம், சத்யேந்திரா இப்போ பயங்கர பிஸி. காரணம், விஜய்யின் ‘லியோ’ பற்றி பப்ளிக் ரிவ்யூவ்வில் அவர் பேசிய விஷயங்கள்.
கலைந்த தலைமுடி, பல மாத தாடி, தோள்பட்டையோடு எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கிற பை, ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் அலையும் கண்கள் இவைதான் சத்யேந்திராவின் பிரத்தியேக அடையாளங்கள். சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் ‘பிச்சைக்காரன்’ வேடங்களில் தலைகாட்டியுள்ளார்.
ஆனால், சராசரி மனிதர்களின் பிரதிநிதியாகத் தோற்றம் கொண்டிருக்கும் இவருக்குள் இன்னொரு உலகம் இயங்குகிறது. உலக இலக்கியம், மொழியியல், உலக சினிமா போன்றவற்றில் சத்யேந்திராவின் ஆர்வமும் அறிவும் தீவிரமானது.
“என்னால் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கையாள முடியும்” என்று சத்யேந்திரா சொல்வதை நம்புவது கஷ்டம். ஆனாலும் உண்மை. கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களை பிரஞ்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், டச்சு மற்றும் இந்திய மொழிகள் என பல மொழிகளும் பயில்வதில் செலவழித்துள்ளார்.
இத்தனை மொழிகள் தெரிந்த சத்யேந்திராவின் தாய் மொழி தெலுங்கு. பூர்வீகம் ஆந்திரா. ஆனால், பிறந்தது வளர்ந்தது எல்லாம் கர்நாடகாவில். “சுதந்திர இந்தியாவின் முதல் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் எங்க அப்பாதான்; அவர் கர்நாடகாவில் வேலை பார்த்ததால் எங்கள் குடும்பம் கர்நாடகாவில் இருந்தது. என்னுடன் பிறந்தவர்கள் எட்டு பேர்; நான் கடைசிக் குழந்தை. அப்பா அரசு வேலையில் இருந்ததால் நாங்கள் வசதியாகத்தான் இருந்தோம்” என்கிறார் சத்யேந்திரா.
ஆனால், இவரது பதினான்காவது வயதிலேயே அப்பா இறந்துவிட, குடும்பம் உப்பு வாங்கக்கூட காசில்லாத நிலைமைக்குத் தள்ளப்பட்டது. சம்பாத்தியத்துக்காக சத்யேந்திரா நவீன உலகக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து கன்னடத்தில் மொழிபெயர்த்தார். குடும்பத்துக்குப் போக மீந்ததில் பி.ஏ. (ஹானர்ஸ்), எம்.ஏ. (கன்னடம்), எம்.ஏ. (தத்துவம்), பி.ஏ. (நாடகம்); பிரெஞ்ச் மொழி ஆகியவற்றைக் சுற்றார். ‘அந்தக் காலங்களில் அநேக நாட்கள் நண்பர்கள் வாங்கிக் கொடுத்த தேநீர், சாப்பாடு, பன்களில்தான் கழிந்தன” என்கிறார் சத்யேந்திரா. மேலும் சத்யேந்திரா நன்கு படிக்கும் மாணவர் என்பதால் ஸ்காலர்ஷிப்பும் கிடைத்தது.
இந்நிலையில் சத்யேந்திராவுக்கு, பிரபல கன்னட நாடக இயக்குநர் பி.வி. காரந்தின் தொடர்பு கிடைத்தது. அவரது நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரது நடிப்புத் திறமையைப் பார்த்த பி.வி. காரந்தின் நண்பர், ‘நாகபர்ணா’ என்ற அவரது முதல் படத்தில் சத்யேந்திராவை நடிக்கச் செய்தார். அந்தப் படம் தேசிய திரைப்பட விருது, சர்வதேச திரைப்பட விழாக்கள் விருது என விருதுகளை வாங்கிக் குவித்தது. எனவே, தொடர்ந்து சத்யேந்திராவுக்கு சினிமா, தொலைக்காட்சி தொடர் வாய்ப்புகள் வரத் தொடங்கின.
தமிழில் ஹரிஹரன் இயக்கிய ‘ஏழாவது மனிதன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் சத்யேந்திரா, இனிமேல் நம் ஊர் சென்னைதான் என்று முடிவு செய்துவிட்டு தன்னிடம் மிஞ்சியிருந்த ஒரே சைக்கிளையும் தூக்கி பஸ்ஸில் போட்டுக்கொண்டு சென்னை வந்துவிட்டார். 23 வயதில் சென்னை வந்தார். இப்போது சத்யேந்திராவுக்கு 63 வயது; 40 வருடங்கள் ஓடிவிட்டன.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாசர், மறைந்த ரகுவரன், கேமிரா மேன் பி.சி. ஸ்ரீராம், இயக்குநர் சந்தானபாரதி உட்பட இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பலர் சத்யேந்திரா சென்னை வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் நெருக்கமான நண்பர்கள். ‘ஏழாவது மனிதன்’ படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில், ரகுவரனை அழைத்துசென்று, இயக்குநர் ஹரிஹரனிடம் அறிமுகப்படுத்தி வாய்ப்பு வாங்கிக்கொடுத்தவர் இவர்தான்.
“ரஜினியை எனக்கு பெங்களுருவிலேயே தெரியும். அப்போது ரஜினி தனது முதல் படத்தில் நடித்து முடித்திருந்தார். பதினைந்து நாள் அவருடன் நான் தங்கி இருந்தேன். அனைவரும் சேர்ந்து 10 காசு, 15 காசு போட்டு இரண்டு மூன்று பீடி கட்டு வாங்கி பகிர்ந்துகொள்வோம். மிகவும் நாகரிகமாக என்னோடு பழகினார். உங்கள் முகத்தில் நல்ல கலை உள்ளது; சென்னைக்கு வாருங்கள் என்று என்னை அழைத்தார். அவரை சிறந்த நடிகர் என்று சொல்ல மாட்டேன். ஆனால், அவர் மிக சிறந்த மனிதர். அவர் சூப்பர் ஸ்டார் ஆன பின்னர் ஒரு முறை 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தற்செயலாக சந்தித்தேன். அன்றும் என்னை ஞாபகம் வைத்து நலம் விசாரித்தார். வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.
அதுபோல் கமல்ஹாசனையும் ஒரு இசை நிகழ்ச்சியில் தற்செயலாக பார்த்தேன். ஞாபகம் வைத்திருந்து, “எப்படி இருக்கீங்க” என்று விசாரித்தார்” என்கிறார் சத்யேந்திரா.
‘ஏழாவது மனிதன்’ படம் எதிர்பார்த்தபடி போகாததால் சத்யேந்திரா சினிமாக் கனவு ஆரம்ப நிலையிலேயே நிர்மூலமானது. தொடர்ந்து பெரும் வாய்ப்புகள் எதுவும் அவரைத் தேடி வரவில்லை. வந்தவை குறும்படங்களில் நடிப்பதற்கான சிறு சிறு வாய்ப்புகள் மட்டுமே!
சத்யேந்திராவின் ஆரம்ப கால நண்பர்கள் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வளர்ந்த நிலையிலும் வாய்ப்பு தேடி அவர்களை அனுகவில்லை. “எந்த நடிகரிடமும் நடிக்க சான்ஸ் கேட்டு போக கூடாது என்று எனக்குன்னு ஒரு பிலாசபி இருந்தது. அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். நான் தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைத்தேன்” என்கிறார்.
கிடைத்தவை சிறுசிறு ரோல்கள் தான் என்றாலும் தொழில் நேர்த்தியோடும் திறமையோடும் தான் அவர் அவற்றைச் செய்திருக்கிறார். லெனின் இயக்கிய ‘நாக்-அவுட்’ குறும்படத்தில் பிணமாக நடித்ததற்காகப் பெற்ற தேசிய விருது தொடங்கி பல தேசிய விருதுகள் பெற்றுள்ளார். அமெரிக்காவில் வெளியாகும் ‘ஸ்பான்’ பத்திரிகையில் வெளியான இரண்டாவது இந்திய நடிகர் பேட்டி சத்யேந்திராவுடையதுதான். முதல் பேட்டி அமிதாப்பச்சன்.
வாய்ப்புகள் இல்லாமல் தினச் சாப்பாட்டுக்கு வழியில்லை என்றானபோது சத்யேந்திரா சினிமாவில் இருந்து விலகி மறுபடியும் மொழிபெயர்ப்பு, மொழி கற்றுக்கொடுப்பது என்று நகர்ந்து விட்டார். “I am a very good teacher” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார். ஒரு காலகட்டத்தில், அதிகாலையில் நான்கு மணிக்கு ஒருவருக்கு ஜெர்மன் வகுப்பு, ஏழு மணிக்கு இன்னொருவருக்கு பிரெஞ்சு வகுப்பு, பத்து மணிக்கு ஸ்பானிஷ் வகுப்பு என்று இரவு ஒன்பது மணிவரை பிஸியான ஒரு டீச்சராக இருந்திருக்கிறார். அக்காலகட்டத்தில் பயங்கரமாக சம்பாதித்தாலும் எதையும் சேமிக்கவில்லை. சேமிப்பு, எதிர்காலத்துக்கு திட்டமிடல் என்பது எல்லாம் அவர் அகராதியிலேயே கிடையாது. நண்பர்களை அழைத்துக்கொண்டு ஸ்டார் ஹோட்டல், பப் என சுற்றியுள்ளார்.
தினம் நாற்பது பேருக்கு டீ வாங்கிக் கொடுத்தவர் ஒரு டீக்கு கூட காசில்லாமல் நின்ற நாளும் வந்தது. இன்று வரை அது தொடர்கிறது. ஆனால், “ஒரு பன்கூட இல்லாமல் டீயை மட்டும் குடித்துக்கொண்டு ஐந்து நாட்கள் வரை என்னால் இருக்க முடியும். இது இறைவன் எனக்குக் கொடுத்த வரம்” என்று புன்னகைக்கிறார் சத்யேந்திரா.
அவரது இந்தப் புன்னகைக்கும் அடர்ந்த தாடிக்கும் பின்னால் துக்கத்தின் ஓர் இழை ஓடிக்கொண்டிருக்கிறது. அது தன் மீது அன்பையும் அக்கறையையும் கொண்ட மனைவி, குழந்தைகள் இல்லை என்பதுதான். அவரது வாழ்வில் நிறைய பெண்கள் வந்து போயிருக்கிறார்கள். ஒருவர்கூடத் தங்கவில்லை. தன்னைப் போன்ற விசித்திரமான ஆளுமைகளும் திறமையும் கொண்ட ஒரு மனிதனுக்கு “இப்படி இல்லாமல் வேறு எப்படியும் நடக்க சாத்தியமில்லை” என்கிற சமாதானமும் சத்யேந்திராவிடம் இருக்கிறது.
“கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்தால் நான் ஒரு சந்தோஷமான மனிதன்தான்” என்கிறார்.
‘லியோ’ வீடியோ வைரல் ஆகியுள்ளதால் தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறார் சத்யேந்திரா. அப்படி கிடைத்தால், இந்த முறை இயக்குநராகி நடிகர் நாகேஷ் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்.
கனவு நனவாக வாழ்த்துகள் சத்யேந்திரா.