No menu items!

சிறுகதை: இந்தியன் ரெஸ்டாறெண்ட் – சரவணன் சந்திரன்

சிறுகதை: இந்தியன் ரெஸ்டாறெண்ட் – சரவணன் சந்திரன்

என்னுடைய பத்தொன்பது வயதில், கப்பலில் இந்தத் துறைமுக நகரத்தில் எந்தவித தலைச் சுமைகளும் இல்லாமல் வந்து இறங்கினேன். அது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த காவலர்களும் பணிபுரியும் ஐக்கிய நாடுகள் சபை காவல்பிரிவு பயணம் செய்த சரக்குக் கப்பல். அந்தமானில் உணவகம் ஒன்றில் சமையல் உதவியாளராக இருந்தேன். எனக்கே பல பதார்த்தங்களைத் தனியாகச் செய்யத் தெரியும்.

அந்தத் தைரியத்தில்தான் இந்தப் புதிய நட்புக்களின் பேச்சை நம்பி இந்தத் தீவு தேசத்திற்கு வந்தேன். எதையாவது நம்பித்தான் ஆக வேண்டும் என்கிற புள்ளியில் அப்போது நின்றேன். கப்பலில் இருந்து இறங்கி, ஐ.நா. சபை காவலர்கள் மிடுக்காக நடந்து போகையில், பின்னாலேயே நானும் அவ்வாறே போனேன். அடிப்படை ஆவணங்களை முன்கூட்டியே தந்துவிட்டதால், யாரும் யாரையும் அங்கு பரிசோதிக்கவே இல்லை. ஒருவேளை விமானத்தில் போயிருந்தால் விட்டு வைத்திருக்க மாட்டார்கள் என்று எண்ணினேன். கனத்த உருவத்தில் துப்பாக்கி ஏந்தி நின்ற ஒருத்தன் என்னை அச்சமூட்டினான். காவல் காப்பவனுக்கு இருக்கிற கண்கள் அவனுக்கு இல்லை. அவனெல்லாம் வெங்காயம் உரிக்கத்தான் லாயக்கு.

அந்தச் சின்னத் துறைமுகத்தை விட்டு வெளியே வந்ததும் மக்கள் நடமாட்டமிக்க விரிந்த கடற்கரை கண்ணுக்குப் புலப்பட்டது. பாதிக்கும் மேல் சீனத் தலைகளாகத் தெரிந்தன. மிச்சசொச்சம் இருந்த எல்லா நாட்டு முகங்களையும் வாட்டி வதக்கியது வெயில். நடைபாதையில் மீன்களை வெயிலில் போட்டு, விரைத்துப் போன நிலையில் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அதில் ஒன்றுகூட வாய்க்கு ருசியானது இல்லை. இதை வைத்துக் கொண்டு எதிர்காலத்தை எப்படிக் கடக்கப் போகிறேனோ? எனச் சலித்தும் கொண்டேன்.

அந்தத் துப்பாக்கி ஏந்திய கூட்டத்தோடு நடந்து போன போது மிகப் பாதுகாப்பாக உணர்ந்தேன். நகருக்குள் பிரவேசித்ததுமே எனக்கு நன்றாகத் தெரிந்த மரங்கள் நாலைந்து தென்பட்டன. வானத்தில் மேகம்கூட எங்களது ஊரைப் போலத்தான் இருந்தது. மனிதர்களுமே என்னுடைய முகத்தைக் கொல்லனிடம் கொடுத்து, கொஞ்சம் மெதுவாக நசுக்கிக் கொடுக்கச் சொன்னால், எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தார்கள். எடுத்த எடுப்பிலேயே சிநேக பாவத்தை நன்றாக வீசத் தெரிந்தவர்களாக இருந்தார்கள். ஏனோ என் வாழ்நாளில் அதற்கு முன் அறிந்தே இராத உளநிலை வாய்த்தது. நிலத்தில் இருந்து ஒரு அங்குலத்திற்கு மேல் பறந்தபடி நடந்து போவதைப் போல இருந்தது அவ்வுணர்வு. அறியாத நிலத்தின் இயல்போ அது? நிலம் அன்னிய கால்கள் மண்ணைத் தொட்டதும் சிலிர்த்துக் கொள்கிறதோ?

பறந்து வந்து கொண்டிருந்த நான் திடுக்கிட்டு விழித்து நின்ற இடம், இந்தியன் ரெஸ்டாறெண்ட். வாசலில் அங்குராஜா அண்ணன், வாய்கொள்ளா சிரிப்புடன் எங்களை எல்லாம் வரவேற்றார். அவர்தான் அந்த ஹோட்டலின் உரிமையாளர் என்பது எடுத்த எடுப்பிலேயே தெரிந்துவிட்டது.

அந்தச் சிரிக்கிற கண்கள் என்னை இழுத்து அந்த உணவகத்தினுள் போட்டுக் கொண்டது. மலேசியக் காவலர் ஒருத்தர் எனக்காக அங்குராஜா அண்ணனிடம் சிபாரிசு செய்தார். “சின்னச் சின்ன கைவேலை தெரிஞ்சா போதும் பெரிய சமையல்காரனா ஆக்கிப் போடுவேன். இல்லாட்டி தட்டுதான் கழுவணும். ஏன் கழுவுனா தப்பா என்ன?” என்றார்.

“ஹோட்டல்ல எல்லா வேலையுமே ஒசத்திதான முதலாளி” என்றேன். “அப்படிப் போடு அருவாளை. முதலாளி. இந்த வார்த்தையைக் கேட்டு எவ்ளோ நாளாச்சு. ஒருகாலத்தில நாள்பூரா இந்த வார்த்தையை மத்தவங்களைப் பார்த்து சொல்லிக்கிட்டே கிடப்பேன். நம்ம காதுலயும் அது வந்து சேரணும்ங்கறதுக்காகத்தான் இப்படி கடல் கடந்து ஓடி வந்ததே. சீக்கிரம் போய் காது குளுரக் கேட்கணும்” என்றார் என்னுடைய தோள்பற்றி.

அவ்வார்த்தை அவருக்கு கடுகு தாளித்ததைப் போல உணர்வைத் தந்து விட்டது என்பதை உணர்ந்தேன். கடைசி வரைக்கும் எனக்கு முதலாளி அவர்தான் என அந்த நேரத்தில் முடிவு செய்தேன். எந்தக் கேள்வியும் இல்லாமல் என்னை வேலைக்கு எடுத்துக் கொண்டார். வேலையில் இணைவதற்கு உண்டான அரசு அனுமதி போன்றவற்றை ஒரு மணி நேரத்தில் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார் முதலாளி.

ஏனெனில், நகரிலேயே புகழ்பெற்றது இந்தியன் ரெண்டாறெண்ட். எங்களைப் போலவே பத்துப் பதினைந்து பேர் உணவகம் நடத்துகிறார்கள் அங்கே. குஜராத்தி ஒருத்தர் எங்களை மாதிரியே பதார்த்தங்களைச் செய்கிறார் என்றாலும் எங்களுடையது சிறந்ததாக இருப்பதற்கு மேலும் சில காரணங்கள் உண்டு.

அரசின் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கிறது எங்களுடையது. இங்கே ஒரு பிண்டாங் பியர் வாங்கிக்கொண்டு அமர்ந்தால், நகரின் முக்கியமானவர்கள் அனைவரும் கடந்து செல்வதைப் பார்க்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் பெரிய இடத்து பியர் துணைகூட வாய்க்கலாம். தூதரகங்களில் வேலை பார்க்கும் அழகிய பெண்கள் அவ்வப்போது வந்து, புரோட்டா வாங்கி வெறுமனே அதை ரொட்டி மாதிரிப் பிய்த்துத் தின்று கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்ப்பதற்காகவே ஒருகூட்டம் தனியாக வரும்.

எங்களுடைய முதலாளியைப் பொறுத்தவரை எதையுமே இல்லை எனச் சொல்லவே மாட்டார். பாஸ்தா கேட்டால், பீட்சா உளதே என்பார். “சேர்மானத்தை சரியா கணிச்சிட்டாலே சமைக்கிறதில பாதி வேலை முடிஞ்சிரும். அப்புறம் ஏசுவோட அப்பத்தையே ஈஸியா சுட்டு எடுத்திடலாம்” என்றார். எங்களுடைய முதலாளி எதையும் இப்படித்தான் குறிப்பால் மட்டுமே உணர்த்துவார். அதற்கு முன்னே சமையல் எனக்குத் தெரியும் என்ற இறுமாப்பில் இருந்தேன். கிடைத்தவைகளை மட்டும் வைத்துக் கொண்டு ராஜ போஜனத்தை உருவாக்குகிறவனே மிகச் சிறந்த நளராஜன் என்பதை அவருடன் இருக்கையில் உணர்ந்தேன்.

முதலாளி சேர்மானங்களின் எல்லா ருசிகளையும் தனித்தனியாக அறிந்தவர். அவர் சும்மா இருக்கும் சமயங்களில் எதையாவது எடுத்து நுகர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார். உணவகத்தில் மூக்கில் கைவைத்து அவர் அலைகிற காட்சியே அவர்குறித்த என்னுடைய சித்திரமாக நிலைத்து நிற்கிறது. அவர் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் வாசனையும் இங்கே எங்களுடையதில், அப்படியே அச்சு அசலாகக் கொண்டு வந்துவிடுவார். அதனாலேயே எங்களை நோக்கிப் பல்வேறு நாட்டினர் ஈக்கள் மாதிரி மொய்த்தனர்.

முதலாளி நான் போய்ச் சேர்ந்த சில வருடங்களிலேயே மேலும் இரு கடைகளைப் போட்டார். அந்த இரண்டும் உள்ளூர் மக்களுக்கானது. கொஞ்சூண்டு சோறு, ஒரு கீரைக்கூட்டு, வேக வைத்த கோழி ஒரு துண்டு, மசாலா போடாமல் ரொட்டியைப் போல வறுத்த முட்டை, காரமான ஊறுகாய்க் கலவை ஆகியவை எல்லாம் சேர்த்து ஒன்றரை டாலர். “அவனை பஞ்ச பராரின்னு நெனைச்சு அப்டீயே விட்டிரக் கூடாது. அவனையும் வாங்கப் பழக்கணும். யானையைக் கூட வந்து வாங்க பழக்கத் தெரிஞ்சிருக்கணும். அதாம் ஏவாரம்” என்றார் அப்போது.

இப்படியெல்லாம் கருத்தாகப் பேச முதலாளி எங்கே கற்றுக் கொண்டார்? என நிறையத் தடவை யோசித்திருக்கிறேன். அவர் சொன்ன பலவற்றை மனப்பாடமாக உருப்போட்டு வைத்திருக்கிறேன். முதலாளிக்கு ஊர் பட்டுக்கோட்டை பக்கம். அங்கே அவருக்கு மனைவியும் பெண் பிள்ளைகள் இருவரும் இருக்கிறார்கள்.

அவர்களிடம் அவர் தொலைபேசியில் பேசுவதைப் பார்த்து இருக்கிறேன். வெண்ணைக் கட்டி வாணலியில் உருகுவதைப் போல நெக்குருகுவார். முதல் பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். இரண்டாவது பிள்ளைக்கு வரன் பார்ப்பதாக, ஒருநாள் குடித்திருந்த போது என்னிடம் சொன்னார். மற்றபடி அவர்கள் எங்கே குடியிருக்கிறார்கள்? எத்தனை பேர் கொண்ட குடும்பம்? என்பது போன்ற விபரங்களை எங்களிடம் சொன்னதே இல்லை.

முதலாளியைப் பொறுத்தவரை தகவல்கள் எல்லாம் உப்பு மாதிரி. தேவைக்கேற்பத்தான் எதற்குமே பயன்படுத்த வேண்டும். அதிகம் ஆகி விட்டாலோ, குறைந்தாலோ, எவ்வளவு விலைகூடினதாக இருந்தாலும் குப்பைக்கே. இந்த உதாரணத்தை முதலாளி பேச்சிலும் நடத்தையிலும் காண்பிப்பார்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர் ஊருக்குப் போகப் போகிறார் என்கிற விஷயமே எங்களுக்கு எல்லாம் தெரிய வரும். எப்போது திரும்ப வருவார் என்பது யாருக்குமே தெரியாது. ஊருக்குப் போனால் இருபது நாள் பக்கமாக இருந்து விட்டு வருவார். ஆண்டிற்கு இரண்டு தடவை இப்படிப் போய் விட்டு வருவார்.

போக்கிடம் இல்லாமல் இப்படி நான் விட்டேத்தியாக இருப்பதைச் சொல்லித் தலையில் அடித்துக் கொள்வார். “பெறக்கறப்ப தனியாத்தான் பெறக்கறோம். ஆனா பெறந்த பெறகு கூட்டத்தில போயி ஒட்டிக்கிரோம்ல. காத்துல கீழ விழுந்திடாம பிடிச்சுக்க ஒரு சின்ன வேராவது மனுஷனுக்கு இருக்கணும். அதெல்லாம் கொஞ்ச நாள் ஆனா புரியும். உடம்பில எங்க முதல்ல முடி நரைக்கும்ணு எவனுக்கு தெரியும்” என்பார். “அதான் நீங்க இருக்கீங்கள்ள முதலாளி” என்ற போது நரைத்த மீசையை நீவிச் சிரித்துக் கொண்டார்.

மூன்று உணவங்களிலுமே நன்றாக உலை கொதித்தது. முதலாளி தனக்குத் தெரிந்த தடத்தில், சிறுதடுக்கல்கூட இல்லாமல் நடை போட்டார். அங்கே ஒரு டாலர், இரண்டு, ஐந்து டாலர் நோட்டுக்கள் போலியானவை என்பதால், ஐம்பது மற்றும் நூறு டாலர் நோட்டுக்களாகத் தேடி அலைந்து மாற்றுவோம். அந்தக் காலத்து கருப்புக் கல்லா பெட்டி. முதலாளியின் கொள்ளுத் தாத்தா பர்மாவில் இருந்து கடைசியாய் கொண்டு வந்தது இந்த காலியான கல்லா பெட்டியைத்தான் என ஒருதடவை விரக்தியாய்ச் சிரித்தார்.

அதை நினைத்தபடி முதலாளியை நிமிர்ந்து பார்த்தேன். பணத்தை எண்ணிக் கட்டிக் கொண்டிருந்த என்னையே குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்தார். “என்னல. கொஞ்சம்கூட ஆசை வரீலியா” என்றார். “முதலாளி உங்க முகத்தை பாத்துதான் இந்த கோவிலுக்குள்ள காலடி எடுத்து வச்சேன். ஊரு வேருங்கறதை எல்லாம் உங்ககிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். உங்களுக்கு விரோதமா எனக்கு ஆசை வர்ற அன்னைக்கு இங்க நான் இருக்கவே மாட்டேன்” என்றேன்.

என்ன நினைத்தாரோ நூறு டாலர் நோட்டை எடுத்துக் கையில் திணித்த போது, வாங்க மறுத்தேன். “சும்மா கருவேப்பிலை மாதிரி கொடுக்கலை. பிள்ளைக காரியம் முடிஞ்சதும் ஊருக்கு திரும்பிப் போயி முதலாளியா உக்காருவோம். இது என் பக்க கைமுதலு. உம்பக்கத்தில் இருந்து முடிஞ்சதை கொடு. இனிமே உனக்கு நான் பொறுப்பு” என்றார்.

நான் வெட்கத்துடன் பத்து டாலர் நோட்டு ஒன்றை எடுத்து நீட்டினேன். பயபக்தியோடு வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொண்டார். அன்றைய இரவில் மனம்நிறைந்து தூங்கினேன். சாகிற வரை எந்தச் சூழல் வந்தாலும் முதலாளி என்று மட்டுமே அழைக்க வேண்டுமென சபதம் பூண்டேன். விடிகாலையில் முகமே பொலிவாக இருந்தது எனக்கு.

உணவகத்தில் மற்றவர்களிடம் மிடுக்கான உடல் தோற்றத்தைக் காட்டி விடக் கூடாது என்கிற கவனம் என்னுடனேயே அலைந்தது. அண்ணாச்சி வெளியூர்க் குருவிகள் மூலம் பணத்தைக் கொடுத்து அனுப்பும் போது நானும் உடனிருந்தேன். முதலாளியும் அனுப்பிய பணத்தை விரட்டிப் பின்னாலேயே விமானத்தில் பறந்தார்.

சின்னப் பிள்ளைக்கு மாப்பிள்ளை திகைந்து வந்து விட்டதாகத் தொலைபேசியில் பேசும் போது சொன்னார். முதலாளி இல்லாத சமயத்தில் நகரத்தில் உள்ளூர் மக்களிடையே கலவரம் மூண்டது. வெளி ஆட்களின் கடையாகத் தேடிப் பிடித்துக் கல்லெறிந்தார்கள் என்பதால் மூன்று கடைகளையுமே மூட வேண்டியதாகப் போயிற்று.

அதைக் கேட்டு அங்கிருந்த முதலாளி கொதித்துப் போனார். திருமணத் தேதியும் பக்கத்தில்தான் இருந்தது. “வந்திட்டுக்கூட அப்புறம் வாழ்த்திக்கலாம். தொழில் முக்கியம் இல்லையா” என சொந்தங்கள் சொன்னதைக் கூறிவிட்டு, “காசு வந்தா போதும். அதோட மட்டுமே வாழப் பழகிட்டாங்க. இனிமே மனுஷங்க தேவையிருக்காது” என்றார். தொழிலும் முக்கியம்தானே முதலாளி என அவரது பேச்சை மாற்றினேன்.

முதலாளியே கல்லெறி வீச்சுக்களைக் கடந்துதான் ஹோட்டல் படியேறி வந்தார். அவரை இழுத்துப் போட்டுக் கதவைச் சாத்திக் கொண்டோம். இரவுகளில் மூர்க்கமாக இடைவிடாமல் கல்லெறிந்து கொண்டிருப்பார்கள். அதிகாலை விலகிப் போய் விடுவார்கள்.

காலையில் ஒன்றுமே செய்யாதவர்களைப் போலக் குறுகுறுவெனப் பார்த்தபடி அவர்கள் கடையைக் கடந்து போவதைச் சன்னல் வழியாக நிதானமாகப் பார்த்திருக்கிறேன். இடை இடையே சில கண்களை நெருக்கமாக உற்று நோக்கியும் இருக்கிறேன். கறிக்குழம்பில் போடுகிற வெந்தயம் அளவிற்குக்கூட குற்றவுணர்வு இல்லை அதில். அவர்கள் நாடு இதுவென அறைகூவல் விடுக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்.

இரண்டொரு நாளில் முதலாளி சுமூகமான அந்த முடிவை எடுத்தார். ஆனால், எனக்குள்தான் மிளகாய் வற்றலை முதலில், கொதிக்கிற காய்ந்த எண்ணையில் போட்ட மாதிரிக் காரம்கூடிப் பற்றி எரிந்தது. அவருடன் முகம் கொடுத்தே அதற்கடுத்து அதிகமும் பேசிக் கொள்ளவில்லை.

முதலாளி தேத்தும் மொழி பேசுகிற உள்ளூர் இளம் பெண் ஒருத்தியை மணந்து கொண்டார். இன்னொரு பெரிய உணவகத்தில் வேலை பார்த்தவள் அவள். அவளுக்கு ஒரு அண்ணனும் உண்டு. இருவரும் சில நாட்கள் கடை வாசலில் நின்று இருளை நோக்கி வினோதமான சத்தம் கொடுத்தார்கள். கல்லெறி சுத்தமாக நின்று போனது.

முதலாளியை உள்ளூர் மாப்பிள்ளை என இருளிற்குள் கல்லோடு நின்றவர்கள் ஒத்துக் கொண்டார்கள். அந்தப் பெண்ணும் அவளது அண்ணனும் கடை வியாபாரத்தில் எந்தத் தலையீடுகளும் செய்யவில்லை. முதலாளி அப்படி உத்தரவிட்டிருப்பார் போல? என்றாவது அந்தப் பெண் இரவில் கடைக்குப் பின்புறமாக நின்று மால்பரோ சிகரெட் குடித்துக் கொண்டிருப்பாள். முதலாளி பிண்டாங் பியர் அரைப் போத்தலை எடுத்துக் கொண்டு ஓடுவார். வேண்டாத வெங்காயத் தாளைப் போலத் தெரிவார் எனக்கு அப்போது. ஏவார தர்மத்தின்படி, சீக்கிரமே ஏதாவது பெரிய தொகை கொடுத்து அவள் சங்காத்தத்தை அத்து விட்டு விடுவார் என்றே எல்லோரிடமும் நம்பிக்கையாகச் சொன்னேன்.

அந்த வருடம் ஊருக்குப் போவது பற்றிய பேச்சே இல்லாமல் இருந்தார். இடையில் அதுகுறித்து நினைவுபடுத்தி கேட்கவும் செய்தேன். “பெரியவ பேத்திக்கு மொட்டைக்கு ஒரேடியாய் சேத்து வந்திருங்கண்ணு சொன்னாங்க” என்றார். நான் தயங்கித் தயங்கி, “முதலாளி ரெட்டை மாட்டு வண்டி ஒத்து வருமா” என்றேன்.

யோசனையுடன் நிமிர்ந்து பார்த்த அவர், “பக்கத்து வீட்டு மாட்டையே ஒத்தாசைக்குகூட நம்ம தொழுவத்தில கட்டிப் போட மாட்டாங்க. இதை ஒத்துக்குவாங்களா? எதையாவது ஒண்ணை வெட்டிப் போடணும் சீக்கிரம். குண்டூசியைக் குத்திக்கிட்டே வாழக்கூடாது. இது சம்பந்தமா நீ இனிமே யோசிக்கறதை நிறுத்து. உனக்கு நான் குருநாதர். என்னை எந்நேரமும் எடை போட்டுக்கிட்டே திரியாத” என்றார்.

கூர்மையாகக் கண்களில் எந்த உணர்வையும் காட்டாமல் அப்போது அதைச் சொன்னார். நான் பிறகு அவரது கண்களைச் சந்திக்காமல் அலையத் துவங்கினேன். அதை அறிந்த அவரும் அப்படி அலைய அனுமதிக்கவே செய்தார். கலவரம் முற்றிலும் எல்லா பக்கமும் ஓய்ந்த பிறகு அரசாங்கத்தில் மேல் மட்டத்தில் நிறைய மாற்றங்கள். அதுவரை அதிகாரத்தில் இருந்தவர்கள் தலைகுப்புற விழுந்தார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த எல்லா அலுவலகர்களும் விரைவிலேயே நாட்டை விட்டுப் போகப் போவதாகச் செய்தி எங்களை எட்டியது. அன்றைக்கு முதலாளி நீண்ட நேரமாக நாற்காலியில் யோசனையுடன் அமர்ந்திருந்தார். இவ்வாறு கப்பல் கவிழ்ந்தவனைப் போல அவர் ஒருநாளும் அமர்ந்திருந்ததே இல்லை.

ஐ நா.சபை அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிளம்பிப் போனால், இந்தியன் ரெஸ்டாறெண்ட் வியாபாரம் படுத்துவிடும் என்பது உண்மைதான். ஆனால், உள்ளூர் மக்களுக்கான உணவகம் இரண்டும் நன்றாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. கைக்கு அடக்கமாய் இந்தியன் ரெஸ்டாறென்றை வேறுமாதிரி எடுத்து நடத்த முடியும் என்றெல்லாம் நான் சிந்தனை செய்து கொண்டிருந்த போது, யாரோ உற்றுப் பார்ப்பதைப் போல உணர்ந்தேன்.

முதலாளி சரக்கு வைப்பறையில் இருந்து என்னையே குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்தார். சில மாதங்கள் இந்த ஆடுபுலியாட்டம் எனக்கும் அவருக்கும் இடையில் தொடர்ந்தது. அவரது விட்டேத்தித்தனம் சாம்பாரில் மிதக்கிற சின்ன வெங்காயம் போல துருத்திக் கொண்டு தெரியத் துவங்கியது. முதலாளியின் உள்ளூர் சம்சாரம் கடைப் பக்கமே வரவில்லை. முதலாளிக்கு பிள்ளை பிறக்கப் போவதாக ஹோட்டலில் இருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.

நாட்டின் சிறப்பான சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, முதலாளி உணவகத்தின் ஒவ்வொரு செங்கலாக உருவத் துவங்கினார். பல ஆண்டுகள் அவரிடம் வேலை பார்த்தவர்களைப் பணம் கொடுத்து ஊருக்குக் கிளப்பி விட்டார். போக மறுத்த ஒருத்தனை மிரட்டியதைக்கூடப் பார்த்தேன்.

“எனக்கு தெரியாம பின்னாலயே இந்த நாட்டில கால்வச்சுரலாம்ணு பாக்காதீங்க. அங்கயே பிடிச்சு திருப்பி அனுப்பிடுவேன். வர்ற பயணக் காசெல்லாம் ஒண்ணும் இல்லாம போயிடும்” என்றார். முதலாளியா இது? அவர் குறித்து அறிந்தவர்கள் எல்லோரையுமே துண்டித்துக் கொள்கிற முனைப்பில் இருந்தார்.

இந்தியன் ரெஸ்டாறெண்டை என்ன செய்யப் போகிறார்? எனச் சுற்றிச் சுற்றி யோசித்தேன். அவரிடமே போய்க் கேட்டு விடலாம் என இரண்டொரு தடவை போய் நின்று விட்டு, எதுவும் பேசாமல் திரும்பி வந்தேன். அதையும் அவர் நோட்டம் விட்டுக் கொண்டுதான் இருந்தார்.

அதிகாலை ஒன்றில் மகிழ்ச்சியான சத்தங்கள் உணவகத்திற்கு வெளியே கேட்டன. முகத்தைக் கழுவி வெளியே வந்த போது, பனித்தூறலைப் போல மழைச் சாரல் விழுந்து கொண்டிருந்தது. முதலாளியின் உள்ளூர் சம்சாரம் ஆண் பிள்ளை ஒன்றோடு நின்றாள். சீனிச்சேவு மாதிரி வெள்ளையாய் இருந்தது அக்குழந்தையின் பிறப்புறுப்பு. அவர்கள் இருவருக்கும் உள்ளூர் சாங்கியங்களை முதிய பெண்கள் செய்தார்கள். “சாதிச்சுட்டீயே” என்கிற மாதிரி முதியவள் ஒருத்தி முதலாளியின் கன்னத்தைக் கிள்ளினாள்.

முதலாளி வெட்கப்பட்டுச் சிரித்த போது, எச்சில் கடவாயோரம் விந்துத் துளி நீர்த்துப் போனதைப் போல ஒழுகியது. முதலாளியின் சிரிப்பு வேறு ஆட்களுக்கு உரித்தானது என்பதை உணர்ந்துகொண்டேன். என்னுடைய கண்களைச் சந்திப்பதை அவர் அப்போதும் தவிர்த்தார்.

அன்றைய இரவு அவரை எதிர்பார்த்து அந்தப் பழைய இரும்புக் கல்லா பெட்டிக்கு அருகில் போய் அமர்ந்து காத்திருந்தேன். முதுகிற்குப் பின்னால் இருந்து இருமல் சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்க்காமலேயே பெட்டிச் சாவியை இடுப்பில் இருந்து எடுத்து அவரிடம் கொடுத்தேன்.

நூறு ரூபாய் டாலர் கட்டுகள் சிலவற்றை எடுத்து என் முன்னே வைத்துவிட்டு, “கால்ல குத்துன முள்ளோடு என்னால இனிமே நடக்க முடியாது. என்னோட ஒடம்பில இருக்க தழும்பு மாதிரி நீ. நீ அப்படி நினைச்சுக்கறது எனக்கு தொயரம். தயவுசெஞ்சி என்னை இறக்கி வச்சிரு. இது என் வாழ்க்கை” என்றார் தீர்க்கமான குரலில். தெரியும் என்பதைப் போலத் தலையாட்டி விட்டு பெட்டிக்குள் கைவிட்டு, பத்து டாலர் நோட்டொன்றை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேற ஆயத்தங்கள் செய்தேன்.

என்னிடம் அது இல்லாமலேயே வழிச் செலவுக்குப் பணம் இருந்தது. முதலாளியை நோக்கி, “என் கைமுதலை எடுத்துக்கிட்டேன்” என்றேன் ஒற்றை வரியில் சுருக்கென. பின்னர் அவரது கைமுதலை மேசையில் வைத்தேன். காற்றில் படபடத்தது அந்த நோட்டு.

கிளம்பும் முன்னர், “ரெண்டு பேத்துக்குமே வயித்தில இல்லை, முட்டீல பசி. ஆனாலும் மனுஷ உணர்ச்சிக்கு முன்னால எந்த ஏவார தர்மமும் போட்டி போட்டு நிக்க முடியாது. என்னைக்காவது எங்கயாச்சு ஆதாரமா வேர் பிடிச்சு நிக்கறப்ப என்னை நினைச்சுக்குவ” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தார்.

அந்த வழிப் பயணத்தில் அந்தப் பத்து டாலர் நோட்டு கனமாகவே இருந்தது எனக்கு. ரகசியமாய் அந்த நோட்டை பையில் இருந்து எடுத்து அடிக்கடி நுகர்ந்து பார்த்துக்கொண்டேன். அவரது உள்ளங்கை மணம் அதற்கு என்னை மறந்து கடைசியாய் ஒருதடவை உச்சரித்தேன். “முதலாளி”. உணவுத் தட்டில் இருந்து கடுகொன்று என் மீது விழுந்து தழுவி ஓடியது அப்போது!

ஓவியம்: அ. செல்வம்

Saravanan Chandran
சரவணன் சந்திரன்

5 COMMENTS

  1. நாடி நரம்பு ரத்தம் சதை, புத்தி எல்லாத்துலயும் சமையல்காரனா மாறின ஒருத்தன் எழுதுன கதை போல…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...