இயக்குநர்கள் நடிகராவது, நடிகர்கள் இயக்குநராவது எல்லாமே இந்த சினிமா உலகத்தில் ஆர்வக்கோளாறால் நடக்கும், ஆனால் தங்களது முயற்சியில் தீவிரமாக இறங்கி ஜெயித்தவர்களும் இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் நடிகைகளும் அடக்கம்தான், உதாரணத்திற்கு, ரேவதி.
சமீப காலமாக நடிகைகள் இயக்குநராவது தமிழ் சினிமாவில் இல்லாமலே போய்விட்டது.
இந்த குறையைத் தீர்க்க வந்துவிட்டார் சாய் பல்லவி.
இவர் வெகுவிரைவிலேயே இயக்குநராகப் போகிறாராம். ஹிந்திப் படத்தில் நடித்து கொண்டிருக்கும் சாய் பல்லவி, அமீர் கானின் மகனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கு அடுத்து, ஹிந்தியில் தயாராக இருக்கும் ‘ராமாயணம்’ படத்தில் சீதையாகவும் நடிக்க இருக்கிறாராம்.
இதனால் அடுத்த ஒருவருடம் சாய் பல்லவி ரொம்பவே பிஸியாம்.
இதற்கு அடுத்து என்னப் பண்ணுவது என்று யோசித்தவர், இப்போது இயக்குநராகும் எண்ணத்தில் இருக்கிறாராம்.
கதை, திரைக்கதை எழுதும் வேலைகளில் இப்போது சாய் பல்லவி கவனம் செலுத்தி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
சாய் பல்லவிக்கு வழக்கமான ஆக்ஷன், கமர்ஷியல் வகை படங்கள் மீது ஆர்வம் இல்லை என்பதால் அவருடைய கதையும் அவரது விருப்பத்திற்கேற்ற வகையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
அநேகமாக அடுத்த வருடம் சாய் பல்லவியின் இயக்குநர் அவதாரம் நிச்சயமாகாலாம்.
புஷ்பா 2-ல் சமந்தாவுக்கு முக்கியத்துவம்
புஷ்பா படம் கொடுத்த வெற்றியினால், புஷ்பா 2-வை எடுப்பதில் ரொம்பவே தாராளம் காட்டி வருகிறார்கள்.
’புஷ்பா’வில் சமந்தா ஆடிய அந்த ஆட்டம் படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைந்தது நினைவிலிருக்கலாம்.
ஒரே பாடலுக்கு மட்டும் சமந்தா ஆடியிருப்பார். மற்றப்படி கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்கும், சமந்தாவுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.
ஆனால் இப்போது சமந்தாவுக்கு ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, புஷ்பா -2 படத்தில் நுழைக்கும் வேலைகள் நடந்து வருகிறதாம்.
சமந்தா கதாபாத்திரத்தை வைத்து ஐந்து காட்சிகளை முடித்துவிடும் எண்ணத்தில் இயக்குநர் சுகுமார் இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கு காரணம் சென்டிமெண்ட். புஷ்பாவின் பெரும் வெற்றிக்கு சமந்தாவின் ஆட்டமும் ஒரு காரணம் என அப்பட இயக்குநர் சுகுமார் நினைக்கிறாராம்.
இதனால்தான் இப்போது சமந்தாவுக்கு அந்த கதாபாத்திரத்தை விரிவுப்படுத்தி, திரைக்கதையில் நுழைப்பதற்கான யோசனை எழுந்திருக்கிறதாம்.
புஷ்பாவில் சமந்தா ஆடியது போல், புஷ்பா 2 படத்தில் ஸ்ரீதேவியின் மூத்த வாரிசு ஜான்வி கபூர் ஒரு கவர்ச்சி ஆட்டம் ஆட இருக்கிறாராம்.